உள்ளளவும் நினை

உப்பு

`உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்கிற பழமொழி முதல் `உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா?’ என்கிற பாடல் வரை உப்பின் பெருமை பேச எத்தனையோ உண்டு. ஒரு கல் உப்பு அதிகமானாலோ, குறைந்தாலோ ஒருவாய் சாப்பாடுகூட உள்ளே இறங்காதவர்கள் எத்தனையோ பேர். உண்மையில் சர்க்கரையைவிட பயங்கரமானது உப்பு என்பது பலருக்கும் தெரிவதில்லை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல... உப்பும் விஷமே! நமது உணவில் எந்த அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்? உப்பு அதிகமானாலோ குறைந்தாலோ வரக்கூடிய நோய்கள்? உப்பு எப்போது உயிரைக் கொல்கிறது? கேள்விகளை நிபுணர்களிடம் முன்வைத்தோம்...

``பண்டைய காலத்தில் உணவுப்பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க மட்டுமே உப்பை பயன்படுத்தினார்கள். உப்புக்காக போர் நடந்த வரலாறும் உண்டு. சில உணவுகளை பதப்படுத்தி பல நாட்கள் பயன்படுத்து வதற்கு உப்பு அவசியம். உப்பு இருக்கும் இடத்தில் நுண்ணுயிர்கள் வளராது. உடலுக்கும் உப்பு அவசியம். ஒவ்வொரு செல்லுக்கும் வெளியே எக்ஸ்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட் என்கிற திரவம் உள்ளது.

இதில் சோடியம் அதிக அளவு உள்ளது. சோடியம் இந்தத் திரவத்தில் போதுமான அளவு இருந்தால்தான் செல்கள் உயிர்ப்போடு இயங்க முடியும். உணவில் போதுமான அளவு உப்பை சேர்த்துக்கொண்டால் எக்ஸ்ட்ரா செல்லுலார் திரவத்திற்கு தேவையான சோடியம் கிடைத்துவிடும். செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். குடலில் சேரும்உப்பே குளுக்கோஸ், அமினோ அமிலங்கள் ஆகியவற்றை உடல் கிரகிக்க உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைசீர்படுத்தும் பணியையும் உப்பு செய்கிறது.

அதிக அளவில் உப்பானது உடலில் சேரும் போது, சிறுநீரகங்கள் தேவைக்கு அதிகமான உப்பை சிறுநீரில் வெளியேற்றி விடும். உடலில் உப்பு குறைவாக உள்ள போது உடலுக்கு தேவையான உப்பை சிறுநீரகங்கள் வழங்குகின்றன. இவ்வாறு உடலில் உள்ள உப்பை சமப்படுத்தும் பணியை சரியான முறையில் இயங்கும் சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆரோக்கியமுள்ள ஒரு நபர் தினம் 4 கிராம் முதல் 6 கிராம் வரை உப்பு எடுத்துக்கொண்டால் போதும்.

முதியவர்கள் 2.5 கிராம் முதல் 4 கிராம் வரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக உப்பு சேர்ப்பவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான அபாயம் அதிகம். மேற்கத்திய நாடுகளின் பாரம்பரிய உணவுகளில் மிகக் குறைவான அளவே உப்பு சேர்க்கிறார்கள். நமது இந்திய உணவுகளில் அதிகமான மசாலாக்களையும் சுவையூட்டுவதற்காக அதிக அளவு உப்பையும் பயன்படுத்துகிறோம். அரிசியை வேக வைக்கும் போது கூட விரைவாக வேக உப்பை சேர்க்கிறோம். சாப்பிடும் போது சுவை போதவில்லை என மேலும் சேர்ப்போம். இயற்கையாகவே உப்பு அதிகமுள்ள உணவுகளையும் விரும்பி சாப்பிடுகிறோம்.

ஊறுகாய், மீனில் உப்பை அதிகம் கொட்டி பதப்படுத்தி தயாரிக்கும் கருவாடு, ஆட்டு இறைச்சியில் உப்பு சேர்த்து பல மாதங்கள் உலர வைத்து தயாரிக்கும் உப்புக்கண்டம், அப்பளம், வடகம், ஜங்க் உணவுகளான பீட்சா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற உணவுப்பொருட்களில் அதிக அளவு உப்பு உள்ளது.

இவ்வகை அதிக உப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பும் மூளைத்தாக்கு நோயும் ஏற்படும் ஆபத்தும் உண்டு. அதிக உப்பானது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி சிறுநீரகச் செயலிழப்பையும் உண்டாக்கக்கூடும்.

உணவில் குறைந்த அளவில் உப்பை பயன்படுத்துபவர்களுக்கு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு. டின்னிலும் பாக்கெட்டிலும் அடைத்து வரும் உணவுப்பொருட்களிலும் உப்பு அதிகமாக இருக்கும். அவற்றையும் தவிர்த்துவிடுவது நல்லது.

உப்பு இரு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. கடல் நீரில் இருந்து ஆவியாக்கி பெறப்படும் உப்பானது ஒரு வகை. கனிமப் பாறைகளில் இருந்து வெட்டியெடுத்து, சோடியம் குளோரைடை மட்டும் தனியாக பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் உப்பு இன்னொரு வகை. கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் உப்பே அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

பாறைகளில் இருந்து தயாரிக்கப்படும் உப்பில் ‘ரெட்ராக் சால்ட்’ என்ற வகையை வெளிநாட்டு ஹோட்டல்களில் சுவையூட்டியாக பயன்படுத்துகிறார்கள். நம் நாட்டில் ஹிமாலயன் சால்ட் என்னும் வகையுள்ளது. இமயமலைப் பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. இதை ‘காலா நமக்’ என்றும் அழைப்பார்கள். இதில் சோடியம் குளோரைடு தவிர வேறு சில கனிமங்களும் அடங்கியுள்ளன. விருந்துகளில் சிறப்புச் சுவைக்காக இந்த உப்பை பயன்படுத்துகிறார்கள்.

அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை மட்டுமே விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. அயோடின் குறைவால் வரும் காய்டர் என்னும் கழுத்துக்கழலை நோயை தடுப்பதற்கு அரசு இந்த முடிவை எடுத்தது. இரும்புச்சத்து குறைவு உள்ளவர்கள் அதிகமுள்ள கிராமங்களுக்கு அயோடின் உப்போடு இரும்புச்சத்தும் சரிவிகிதமாக கலந்து கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு ‘லோ சோடியம் சால்ட்’ என்கிற உப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் சோடியத்தின் அளவு குறைவாகவும் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். ஆனால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால், அவர்களின் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகி ஆபத்து ஏற்படும். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே லோ சோடியம் சால்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வயதானவர்கள் திடீரென்று உப்பு எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது. உடலில் உப்பின் அளவானது மிகவும் குறைந்தால் ‘ஹைபோநட்ரிமியா’ (Hyponatremia) பிரச்னையை உருவாக்கி மயங்கி விழச் செய்யும்.அதிக உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் உருவாகலாம். எலும்பு திசுக்களின் அடர்த்தியை குறைத்து எலும்புகளை வலுவிழக்கச் செய்து ஆஸ்டியோபொரோசிஸ் நோயும் ஏற்படக்கூடும்.

பெண்களுக்குஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு அதிக அளவு உப்பை உணவில் எடுத்துக்கொள்வதே முக்கிய காரணம். அதிக உப்பானது சிறுநீரகத்தில் கற்களையும் ஏற்படுத்தும். தேவைக்கு மட்டுமான உப்பை எடுத்து வந்தால் நோய்களை தவிர்த்து நலமுடன் வாழலாம்’’ என்கிறார் சிறுநீரக நோய் நிபுணர் டாக்டர் எஸ்.ஜெயலட்சுமி
டாக்டர் ஆர்.சிவக்குமார், இதய நோய் நிபுணர்...‘‘உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியமான ஒருவருக்கு 5 கிராம் உப்பு போதுமானது என்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் 2.3 கிராம் உப்பே ஒரு நாளைக்குப் போதும் என்கிறது.

பின்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட இதையே பின்பற்ற ஆரம்பித்துள்ளன. இதனால் இந்த நாடுகளில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டிலோ 10 முதல் 15 கிராம் வரை அன்றாடம் பயன்படுத்துகிறோம். அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயத்தில் உள்ள ரத்தநாளங்களை தடிமனாக்கி ரத்தக் குழாய்களில் அடைப்பையும் ஏற்படுத்திவிடும். பருமன் நோயையும் ஏற்படுத்தும்.

ஹோட்டல் உணவுகளில் சுவை நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அதிக அளவு உப்பு சேர்ப்பார்கள். ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடு பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். முடிந்த வரை வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலம் பயக்கும். சோடியம் குளோரைடு உப்புக்குப் பதிலாக பொட்டாசியம் குளோரைடு அதிகமுள்ள உப்பை பயன்படுத்தலாம். தேவைக்கு அதிகமான சோடியம் குளோரைடானது உடலில் சேராமல் பார்த்துக் கொண்டாலே உயர் ரத்த அழுத்தம் வராமல் தப்பிக்கலாம்.

க்ரில் மற்றும் தந்தூரி வகையில் தயாரிக்கப்படும் மாமிச உணவுகளிலும் சுவைக்காக சிறப்பு வகை உப்பை நிறைய பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்த்து, பழங்கள், பச்சைக் காய்கறிகள், கோதுமை, பிரெட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதயம் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் 2 கிராமுக்கு குறைவான உப்பை மட்டும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் வராமல் இருக்க உணவில் உப்பைக் குறைத்தால் மட்டும் போதாது. மன இறுக்கம் இல்லாத வாழ்க்கை முறையைப் பழக வேண்டும். தினமும் போதுமான உடற்பயிற்சியையும் நடைப்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். 8 மணி நேரத் தூக்கமும் ஒரு வரின் இதய நலத்துக்கு அவசியம்...’’அதிக உப்பு சேர்த்துக்கொள்பவர்களுக்கு வயிற்றில்புற்றுநோய் உருவாகலாம்.எலும்பு திசுக்களின் அடர்த்தியை குறைத்து எலும்புகளைவலுவிழக்கச் செய்து ஆஸ்டியோபொரோசிஸ் நோயும் ஏற்படக்கூடும்.


Similar Threads: