வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை
பொதுவில் அன்றாடம் மனிதனுக்கு சிறிதளவு காற்று வெளியேறுவது இயற்கைதான். உணவுப் பாதையில் இரு விதத்தில் காற்று சேருகின்றது. உணவு உண்ணும் பொழுதும், ஏதாவது குடிக்கும் பொழுதும் சிறிதளவு காற்றும் உள் செல்லும். எனவே தான் பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது.

உணவு செரிக்கும் பொழுதும் ஹைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் குடலில் சேரும். செரிமானமான உணவுகள் குடலில் சற்று புளித்து விடுவதால் காற்று ஏற்படுகின்றது. மேலும் குடலில், மீதமுள்ள உணவு, சில வகை மருந்துகள் குடலில் உள்ள பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றம், குடலில் மாவு சத்து முறையாக உறிஞ்சப்படாமல் இருப்பது, மலச்சிக்கல் போன்ற காரணங்களினாலும் காற்று உருவாகின்றது. இதை வாயு தொல்லை என்கிறோம். மேற்கூறிய அனைத்தும் பொதுவான காரணங்களே.

* அதிக காற்று, உப்புசம் இவை குடலில் ஏற்படுவதை தடுக்க பீன்ஸ் பட்டாணி, பருப்பு வகைகள், ப்ரோகலி, காலிபிளவர், வெங்காயம், காளான், பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

* அதிக கொழுப்பு சத்து உணவு தவிர்க்கப்படவேண்டும்.

* அதிக நார்சத்தினை சிறிது காலம் தவிர்த்திட வேண்டும்.

* பொறுமையாக சாப்பிட வேண்டும். அவசரம் என்ற பெயரில் அள்ளி விழுங்குவது தவறு.

* உணவு உண்ட பின் சிறிது நேரம் நடக்க வேண்டும்.

* பழச்சாறுகள் கூட சிலருக்கு இப்பாதிப்பினை ஏற்படுத்தலாம். எனவே அதனை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.

வயிற்றில் காற்று - மருத்துவ காரணங்கள் :

மேற்கூறிய சிறிய காரணங்கள் மட்டுமல்லாமல் மருத்துவ காரணங்களும் உண்டு. மலச்சிக்கல் (கடுமையான பாதிப்பு) குடல் வீக்கம், செரிமான பிரச்சினை ஆகியவைகளும் வயிறு உப்புசம், காற்று அதிகம் வெளியேறுதல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.

மலச்சிக்கலுக்கு எளிதான சில தீர்வு முறைகள்:

* முழு தானிய உணவு மிக அவசியம். காலை உணவாக இதனை உட்கொள்வது மிகவும் நல்லது. இதோடு தினமும் சிறிதளவு பார்லியினை எந்த விதத்திலாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* நாள் ஒன்றுக்கு 5 முறை பழம், காய்கறிகள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்பிள் எப்பொழுதும் உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக் கொண்டால் நல்லது. இரண்டு வேளை உணவுக்கு நடுவே வாழைப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பச்சை வாழைப்பழத்தை தவிர்த்திருங்கள்.

* ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சையை சாப்பாட்டிற்கு பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.

* பச்சரிசி, சிப்ஸ், மைதாவை தவிர்த்திடுங்கள்.

* நாள் ஒன்றுக்கு 20 முதல் 35 கிராம் வரை உணவில் நார்சத்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அசைவ உணவில் நார்சத்து இருப்பதில்லை. நார்சத்தினை தனியாகக் கூட மருந்து கடைகளில் கொடுக்கின்றனர். நார்சத்தும், நல்ல அளவு தண்ணீரும் எடுத்துக் கொள்வது பிரச்சினையை தீர்க்கின்றது.

* சர்க்கரை நோய் பாதிப்பு இல்லையென்றால் நாள் ஒன்றுக்கு மூன்று முறை சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தலாம்.

* காலையில் ஒரு கப் காபி குடலை இயக்கி கழிவுப் பொருட்களை வெளியேற்றும்.

* எள் மூலம் செய்த சிற்றுண்டிகளை உண்பது நல்லது.

* 2-3 டீஸ்பூன் எண்ணையை உணவில் சேர்ப்பது நல்லது. சுறுசுறுப்பாய் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். பல் தேய்த்தல், குளித்தல் என முறையான பழக்கங்களை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நன்கு நீர் குடியுங்கள்.

* சூயிங்கம் மென்று கொண்டே இருப்பதை தவிருங்கள்.

* அதிக உணவை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* அதிக இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள்.

வயிற்றில் காற்று அதிகம் இருந்தால் :

* அதிக காற்று வெளிப்போக்கு இருக்கும்.

* ஏப்பம் அதிகம் இருக்கும்.

* வயிற்றில் ஏதோ இழுத்து பிடித்தது போல் இருக்கும்.

* அதிகவலி வயிற்றின் எப்பகுதியிலும் மாறி மாறி இருக்கும்.

* வயிற்று வீக்கமும், இறுக்கமும் இருக்கும். பலர் இதை

* இருதய பாதிப்பு

* பித்தப்பை கல்

* குடல் வால் நோய் இவற்றில் ஏதாவது இருக்கின்றதா என்றும் பரிசோதனை செய்வர்.

உணவை எப்படி மெல்ல வேண்டும் :

நீங்கள் சற்று முன்பு உணவு உண்ட பொழுது எத்தனை முறை அதனை மென்று விழுங்கினீர்கள் என்று உங்களால் உறுதியாய் சொல்ல முடியுமா? மென்று தின்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்தால் ஓடிக் கொண்டும், பரபரத்துக் கொண்டும் உணவை அப்படியே விழுங்குவதை விட்டு விடுவோம்.

* மென்று விழுங்கும் போது உங்கள் உணவு மிகமெல்லியதாக உடைவதால் ஜீரணம் நடைபெறுவது எளிதாகிறது. இதனால் குடலுக்கு சத்துக்களை உறிஞ்சுவது எளிதாகின்றது. செரிமானமாகாதவை ரத்தத்தில் கலப்பது தவிர்க்கப்படுகின்றது.

* அதிக நேரம் மென்று விழுங்கும் போது குறைவான அளவே உட்கொள்ள முடியும் என்பதால் எடை நன்கு குறையும்.

* உணவு வாயில் நன்கு மெல்லப்படும் போது வாயில் உமிழ் நீரில் நன்கு கலக்கின்றது. இதனால் வயிற்றின் வேலை சுமை குறைகின்றது. உமிழ் நீரில் உள்ள என்சைம்கள் கொழுப்பினை நன்கு உடைத்து விடும். உணவு விழுங்குவதும் எளிதாகின்றது.

* உணவை மெல்லுவதால் பற்கள் பலம் பெறுகின்றன.

* மெல்லப்படாத உணவு வயிற்றில் அதிக பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றன. இதுவே குடல் வீக்கம், வலி, காற்று இவற்றிற்கு காரணமாகின்றது.

* மென்று தின்னும் பொழுதே உணவை சுவைக்க முடிகின்றது.

* எனவே சிறிய அளவில் உணவினை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

* நிதானமாய் நன்கு மெல்லுங்கள்.

* வாயில் உணவு மிக மென்மையாய் இருக்க வேண்டும்.

* நன்கு விழுங்கிய பிறகே நீர் குடிக்க வேண்டும். இதுவே முறையாக உணவு உண்ணும் வகை ஆகும்.