சாப்பிடுவது எப்படி?

பேலன்ஸ்டு டயட்

"ஒரு சமையல் நன்றாக வர வேண்டும் என்றால் உப்பு, புளி, காரம் என்று அறுசுவையும் சரியான விகிதத்தில் அமைய வேண்டும் என்று நமக்குத் தெரியும். அதேபோல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின், தாது என எல்லா சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டும்.

இந்த சரிவிகித உணவையே ஆங்கிலத்தில் Balanced diet என்கிறோம்’’ என்று எளிமையாக அறிமுகம் கொடுக்கிறார் உணவியல் நிபுணரான கோமதி கௌதமன். சர்வ சாதாரணமாக நம்மிடம் புழங்கும் வார்த்தையான `பேலன்ஸ்டு டயட்’ பற்றி விரிவாக விளக்குகிறார் இங்கே...

பேலன்ஸ்டு டயட் இருக்க விரும்புபவர் முதலில் என்ன செய்ய வேண்டும்?‘‘ஏற்கெனவே பின்பற்றி வரும் உணவு முறையில் இருக்கும் தவறுகளை முதலில் சரி செய்ய வேண்டும். அதன்பிறகு, அவர்களது உயரம் மற்றும் எடையைப் பொறுத்து பி.எம்.ஐ. அளவுக்கேற்ற டயட்டை பின்பற்ற வேண்டும்.

ஒருவரது வயது, தொழில், ஆணா, பெண்ணா, திருமணம் ஆனவரா, பாதிப்பு ஏதேனும் உள்ளவரா போன்ற பல விஷயங்களை கவனத்தில் கொண்டே ஒருவருக்கான டயட்டை வடிவமைக்க முடியும். ஒவ்வொருவரின் உடல்நிலையும் வேறுவேறு என்பதால் பொதுவாக சொல்ல முடியாது’’ என்கிற கோமதி, சில
வழிமுறைகளைக் கூறுகிறார்...

‘‘சராசரியாக நமக்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரிகள் தேவை. சாதம், சாம்பார், கீரை, கூட்டு, தயிர் என்று நம் பாரம்பரிய உணவின்படி கலந்து சாப்பிடும்போது பலவிதமான சத்துகள் தேவையான விகிதத்தில்கிடைக்கும்.சாப்பிடும்போது மட்டும் அல்ல... சமைக்கும்போதும் இந்த சரிவிகிதவிஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருநாள் கத்தரிக்காய், அடுத்த நாள் முள்ளங்கி என்று குழம்பு வைக்கும்போது வெரைட்டியாக காய்களைப் பயன் படுத்துவதுபோல, பருப்பு வகைகளையும் மாற்றிப் பயன்படுத்துவது நல்லது.

ஒரு நாளுக்கு துவரம் பருப்பு பயன்படுத்தினால், அடுத்த நாளுக்குப் பாசிப் பருப்பு பயன்படுத்தலாம். கீரைகளுக்கும் இதே வழிமுறைதான். ஒரு நாள் முருங்கைக் கீரை என்றால், அடுத்த நாள் அகத்திக் கீரை. வைட்டமின்களும் தாதுக்களும் கொண்ட கீரைகளை வாரம் மூன்று நாட்களாவது சேர்த்துக் கொண்டால்தான் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்கள் வராமல் தடுக்க முடியும். அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் நாட்டுக்கோழி, மீன், முட்டை போன்றவற்றை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. அந்தந்த பருவங்களில் கிடைக்கிற பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கும் நல்லது. விலையும் குறைவாகக் கிடைக்கும். குறிப்பாக, உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதே சரியான முறை’’ என்கிறார்.

இன்றைய தலைமுறையின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது?‘‘‘வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்று சொல்வார்கள். அந்த பழமொழியை நிஜமாக்கும் விதத்தில் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதையும், குண்டாக இருப்பவர்களிடம் ஹீமோகுளோபின் அளவு பற்றாக்குறையாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. வெளிப்படையாக ஒருவரைப் பார்த்து ஆரோக்கியமானவர் என்று நினைக்க முடிவதில்லை.

பருமனோடு இருக்கிறார்கள் அல்லது சத்துக்குறைபாட்டோடு இருக்கிறார்கள். இவர்களால் எப்படி ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

நம் உடல்நிலைக்கும் பருவநிலைக்கும் பொருந்தாத உணவுகளை சாப்பிடும் பழக்கமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, வெளிநாட்டு உணவுகளை அதிகமாக சாப்பிட ஆரம்பித்தபிறகுதான் நோய்கள் அதிகமாக உருவாக ஆரம்பித்தன. பீட்சா, பர்கர், சாஃப்ட் டிரிங்ஸ் என்று போலியான கௌரவத்துக்காகவும் சுவைக்காகவும் சாப்பிடுகிறார்களே தவிர, ஆரோக்கியத்துக்காக சாப்பிடும் பழக்கம் இப்போது இல்லை.

முன்பு புற்றுநோய் என்பது அபூர்வமான நோயாக இருந்தது. இன்று நம்மில் 10 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறது. ஏழை, பணக்காரர், வயது வித்தியாசம் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் நோய்கள் சாதாரணமாகிவிட்டன.

வெளிநாடுகளில் குளிர் நிறைந்த சூழல் என்பதால் நிறைய கொழுப்பு உணவுகளை சாப்பிடுகிறார்கள். இந்தியாவோ வெப்பம் மிகுந்த நாடு. நமக்கு நிறைய சக்தி தேவை. அதே நேரத்தில் அந்த சக்தி எளிதாக எரிக்கப்படுகிற வகையிலும் இருக்க வேண்டும்.

அதற்கு அரிசியை போன்ற எளிமையான கார்போஹைட்ரேட்உணவுகள்தான் சரியானவை. கடந்த 15 ஆண்டுகளில் நம் வேலை, வாழ்க்கைமுறை நிறைய மாறியிருப்பதால் நம் உடல் உழைப்புக்கேற்றாற்போல கார்போஹைட்ரேட் உணவுகளை அளவோடு பயன்படுத்துவதும், மற்ற சத்துகளை தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதுமே இன்று நம்முடையஅவசியத் தேவை.

வெளிநாட்டு உணவுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்கிறார்கள். பல வேதிப்பொருட்களும், அதிக சர்க்கரையும் நிறைந்த சாஃப்ட் டிரிங்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக இளநீரோ புதினா,எலுமிச்சை, தக்காளி, கிர்ணி என்று ஜூஸ் வகைகளையோ மாற்றாக சாப்பிடமுடியும். தவிர்க்க முடியவில்லை என்பது நம் ஆரோக்கியத்தின் மீது நமக்கே அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது’’ என்கிறவர், உணவில் நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்...

‘‘வேலைக்குச் செல்கிறவர்களில் குறிப்பாகப் பெண்களின் மதிய உணவாக வெரைட்டி ரைஸ், தொட்டுக் கொள்ள சிப்ஸ், அப்பளம் மாதிரி ஏதாவது நொறுக்குத்தீனிதான் இருக்கிறது. இதில் எந்த சத்தும் கிடைக்கப் போவதில்லை.

இரவு உணவின்போது பெரும்பாலும் தவறு நடக்கிறது. அதிக எண்ணெய் உள்ளஉணவுகள், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகள், புரோட்டா, குருமா, பிரியாணி, அசைவ உணவுகள் என்று இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாததையே சாப்பிடுகிறோம். சாப்பிட்ட உடன் பெரிதாக வேலையும் இருக்காது. டி.வி. பார்ப்பது, லேப்டாப், மொபைல், தூக்கம் என்று அந்த சக்திகள் செலவாகவும் வழி இல்லை. உடலின் ஜீரண மண்டலம் சீராக நடைபெறாத பட்சத்தில் ஏப்பம், மந்தத் தன்மை, மலச்சிக்கல், சுறுசுறுப்பின்மை பிரச்னைகள் ஏற்படும்.

எளிதில் ஜீரணமாகும் வகையில் அதிகம் எண்ணெய் இல்லாததாகவே இரவு உணவு இருக்க வேண்டும். ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் அல்லது சப்பாத்தி, சிறுதானிய தோசைகள் சாப்பிடுவது எப்போதும் பாதுகாப்பானது.இரவு உணவுகளில் தவறு நடப்பதுபோல, மாலை 6 மணி முதல் 7 மணி வரை சிக்கலான நேரம். அந்த நேரத்தில் அதிகமாக பசிக்கும், ஆனால், இரவு உணவை சாப்பிடவும் முடியாது. இந்த நேரத்தில்தான் பானி பூரி, சமோசா, பப்ஸ், டீ, காபி என்று சாப்பிட்டு விடுகிறோம்.

கெட்ட கொழுப்பு நம் உடலில் சேர்வதற்கு இந்த மாலை நேர குழப்பமும் முக்கிய காரணம். இதற்கு பதிலாக, புரதச்சத்துகள் நிறைந்த வேக வைத்த சுண்டல், கொழுக்கட்டை, பொட்டுக்கடலை உருண்டை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களில் செய்கிற புட்டு, பழ வகைகளை சாப்பிடலாம். இதன்மூலம் பசி அடங்குவதுடன் உடலுக்குத் தேவையான சத்துகளும் கிடைக்கும்.

நொறுக்குத்தீனிகளால் உண்டாகும் பக்கவிளைவுகளும் இருக்காது. மொத்தத்தில் நம் பாரம்பரிய உணவுகளை முறையாகப் பின்பற்றினாலே போதும். அதற்கு மிஞ்சிய பேலன்ஸ்டு டயட் எதுவும் இல்லை’’ என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் கோமதி கௌதமன்!
வைட்டமின்களும் தாதுக்களும் கொண்ட கீரைகளை வாரம் மூன்று நாட்களாவது சேர்த்துக் கொண்டால்தான் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்கள் வராமல் தடுக்க முடியும்.


Similar Threads: