வெங்காயம்

‘அது என்ன பெரிய வெங்காயம்?’ என்று கேலியாகப் பேசுவது வழக்கம். அதாவது, முடிவில் ஒன்றும் இல்லாதது என்ற பொருளி லேயே இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், உணவுக்கு மணமும் சுவையும் தருவதையும் தாண்டி வெங்காயத்தில் மருத்துவ குணங்கள் பலவும் நிறைந்து உள்ளன.

தாவரவியலில் ‘Allium cepa’ என்று வெங்காயத்தைக் கூறுகிறார்கள். வடமொழியில் ‘பலாண்டு’, ‘துர்கந்த்’ எனவும், தெலுங்கில் ‘எர்ரகட்டா’ என்றும் மலையாளத்தில் ‘ஈருள்ளி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். நாடு முழுவதும் பயிரானாலும், மஹாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் வெங்காயம் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. பொதுவாக, வெங்காயத்தை சிவப்பு, வெள்ளை என இரு பிரிவுகளாகச் சொல்வர்.

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயம் தவிர, ஈர வெங்காயம், நரி வெங்காயம், வெள்ளை வெங்காயம், சாம்பார் வெங்காயம் என்கிற சிறு வெங்காயம் என பல வகைகள் உள்ளன. வெங்காயம் பல வழிகளில் நமக்கு அருமருந்தாக விளங்குகிறது. நரம்புகளில் ஏற்படும் வீக்கங்களைத் தடுக்கக்கூடியது... ரத்தம் உறைவதால் ஏற்படும் அடைப்பைத் தடுப்பது... வீக்கத்தை வற்றச் செய்வது... ஆஸ்துமாவை குணப்படுத்தக்கூடியது...

நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது... வயிற்றில் வாயு சேராவண்ணம் காக்கக்கூடியது... சேர்ந்த வாயுவை வெளியேற்ற வல்லது... வயிற்றுக் கடுப்பைத் தணிக்கக்கூடியது... சிறுநீரை எளிதில் வெளியேற்றக்கூடியது... ரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது... சர்க்கரை நோயைத் தணிக்கவல்லது...

தாம்பத்திய விருப்பத்தைத் தூண்டக்கூடியது... ஆண்மையை அதிகரிக்கக் கூடியது... குடல் நோய்களைப் போக்கக் கூடியது... நாவறட்சியைத் தவிர்க்கக் கூடியது... மூலச்சூட்டைக் குறைக்கக் கூடியது... இப்படி வெங்காயத்தின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜெர்மானிய மருத்துவக்கழகமும் உலக சுகாதார நிறுவனமும், ‘ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கவும், வயது காரணமாக ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் களையவும், பசியின்மையைப் போக்கவும் வெங்காயத்தால் இயலும்’ எனப் பரிந்துரைக்கின்றன. சீன நாட்டில் வெங்காயத்தை இருமலைத் தணிக்கவும், சளியோடு ரத்தம் கலந்து வருவதை சரி செய்யவும், இதய வலியைப் போக்கவும், சீதபேதி நிற்கவும் பயன்படுத்துகிறார்கள்.

வெங்காயத்தில் கலோரி மிகக்குறைவாகவே இருப்பினும், வைட்டமின்கள், தாது உப்புகள், உற்சாகம் தரும் உன்னத சத்துகள்(Antioxidants) ஆகியன அதிகம் அடங்கியுள்ளன. ஒரு கோப்பை துண்டித்த வெங்காயத்தில் சுமார் 64 கலோரி சத்தும், மாவுச்சத்தான கார்போஹைட்ரேட் 15 கிராம் அளவும், நார்ச்சத்து 3 கிராம் அளவும், சர்க்கரைச்சத்து 7 கிராம் அளவும், புரதச்சத்து 2 கிராம் அளவும் 10% அல்லது அதற்கு மேலுமான அளவுக்கு வைட்டமின் சி, வைட்டமின் பி-6 மற்றும் மேங்கனீசு ஆகியவை அடங்கியுள்ளன. வெங்காயத்தில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, ஃபோலேட்,மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புத்துணர்வு தரக்கூடிய Quercetin ஆகியனவும் அடங்கியுள்ளன.

‘வெப்பமூலங்கிரந்தி வீறுரத்த பித்தமுடன் செப்புநா அக்கரந்தீ ராத்தாகம் - வெப்புக் கடுப்பறுமந் தஞ்சந்நி காசம்வயிற்றுப்பல் தடிப்பேறும் வெங்காயத்தால்’ என வெங்காயத்தின் புகழ் பாடுகிறார் அகத்தியர். உடலின் வெப்பம், மூலநோய்கள், கிரந்திப்புண், ரத்தபித்தம், நாக்கு அச்சரம், தீராத நாவறட்சி, உஷ்ணம் மிகுதியால் ஏற்பட்ட வெப்பக்கடுப்பு, வயிற்று மந்தம், காய்ச்சல், காசம் என்னும் என்புறுக்கி நோய், வயிற்று உப்புசம் ஆகியன குணமாகும் என்பது இப்பாடலின் பொருள்.

25 கிராம் முதல் 50 கிராம் வரை பச்சை வெங்காயத்தை அன்றாடம் உணவோடு சேர்த்துக் கொள்வதால் 20 யூனிட் இன்சுலின் மற்றும் 150 மி.கி. ஆஸ்பிரின் ஆகியவற்றுக்கு இணையான மருந்துகள் நமக்குக் கிடைப்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. வெங்காயத்தில் பொதிந்திருக்கும் வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதோடு, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

வெங்காயத்தைப் பச்சையாக உணவில் சேர்ப்பதால் வயிறு மற்றும் ஆசனவாய்ப் புற்றுநோய்கள் தவிர்க்கப்படுகின்றன. வெங்காயத்தில் கலந்திருக்கும் Organic sulfur என்ற வேதிப்பொருள் இப்பணிக்கு உதவுவதாக ஆய்வுகள் விளக்கியிருக்கின்றன. விதைப்பை புற்றுநோய் உண்டாகும் ஆபத்து குறைவதாகவும் ஆய்வுகள் கூறி உள்ளன.

உடலில் Homocysteine எனும் ரசாயனக் கலவையை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படாதபடி வெங்காயம் பாதுகாக்கிறது. நமக்கு நல்ல மனநிலையைத் தருகிற செரட்டோனின், டோபமைன் ஆகிய சுரப்பிகளைத் தடை செய்யாவண்ணம் அருமருந்தாக அமைகிறது ஹோமோசிஸ்டின். இதனால் தடையற்ற உறக்கமும் கிடைக்கிறது.

வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்தானது, கூந்தல், சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கு வகை செய்கிறது. வெங்காயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் பாதரசம், ஈயம் போன்ற கன உலோகப் பொருட்களை சேராவண்ணம் பாதுகாக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கவும், ரத்தம் நீர்மைத் தன்மையோடு இருக்கவும், கொழுப்புச்சத்தின் அளவைக் குறைக்கவும் வெங்காயம் நமக்கு உதவுகிறது.
வெங்காயத்தை மருந்தாக உபயோகிப்பது எப்படி?

வெங்காயச்சாறு, தேன் இவை இரண்டையும் சம அளவு ஒன்று சேர்த்து காலை, மாலை என இரு வேளை 10 மி.லி. சாப்பிட்டு வந்தால் சீதள நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா ஆகியன குணமாகும்.

வெங்காயத்தை நறுக்கி ஐந்தாறு மிளகு சேர்த்து உண்டு வர குளிர் ஜுரம் போகும். வெங்காயத்தை உப்புடன் சேர்த்து உண்ண வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, குருதி அழல் ஆகியன போகும்.

வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி உண்ண உடல் அனல் தணியும். சீதபேதி குணமாவதோடு சீதபேதியின் போது ஏற்பட்ட வயிற்றுக்கடுப்பும் தணியும்.

வெங்காயத்தை நெருப்பிலிட்டு வேகவைத்து அரைத்து நீண்டநாட்களாக உடையாமல் துன்பம் தரும் கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் சீக்கிரத்தில் பழுத்து உடையும்.

வெங்காயத்தைத் துண்டு களாக்கிக் குடிநீராகக் காய்ச்சிக் குடிக்க சிறுநீர்த்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு ஆகியன குணமாகும்.

வெங்காயக்கிழங்கைப் பச்சையாகத் தின்ன அது பெண்களின் சூதகத் தடையைப் போக்கி குருதிச் சிக்கலை அறுத்து மாதவிலக்கைச் சீர் செய்வதோடு சிறுநீரையும் பெருக்கும். வெங்காயத்தைச்சாறு எடுத்து அதை முகர்வதால் மயக்கம் குணமாகும். வெங்காயச்சாற்றை மேல் பூச்சாகப் பூச தேள் கொட்டியதால் ஏற்பட்ட வலி, வண்டுக்கடி மற்றும் பூச்சிக்கடிகளால் ஏற்பட்ட வலி ஆகியன தணியும்.

வெங்காயச்சாற்றைக் கடுகெண்ணெய்உடன் சேர்த்துக் குழைத்து பூசினால் கீல் வாதத்தால் (Rheumatoid arthritis) ஏற்படும் வலியும் வீக்கமும் குணமாகும்.

வெங்காயத்தைக் குறுக்கே சமமாகத் துண்டித்து உப்புத்தூள் தொட்டு தலையில் பூச்சி வெட்டு என்னும் திட்டுத்திட்டாக முடி கொட்டி அங்கங்கே வழுக்கை போல் ஆன இடத்தின் மேல் வைத்துத் தேய்த்துவர விரைவில் முடி கொட்டிய இடங்களில் முடி வளரும்.

இதுபோல எண்ணிலடங்கா மருத்துவ குணம் கொண்ட வெங்காயம், காயம் எனப்படும் நம் உடலுக்கு அருமருந்து என்பதில் ஐயமில்லை!ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கவும், வயது காரணமாக ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் களையவும், பசியின்மையைப் போக்கவும் வெங்காயத்தால் இயலும்!