சுகப் பிரசவத்துக்கு உதவும் மருந்து


ஆக்சிடோசின்.

இது பெண்களுக்குச் சுரக்கும் முக்கியமான ஹார்மோன் என்று சொல்வதைவிட, பால் சுரப்பதை அதிகப்படுத்த கறவை மாடுகளுக்குப் போடப்படும் ஊசி மருந்து என்று சொன்னால் பலருக்கும் புரியும். அந்த அளவுக்கு இந்தியாவில் இந்த அரிய மருந்து தவறாகப் பயன்
படுகிறது.

இது பெண்களின் மூளைக்குள் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் பின்பகுதியிலிருந்து சுரக்கிறது. முக்கியமாக, குழந்தை பிரசவமாகும்போதும், தாய்ப்பால் குடிக்கும்போதும் இது அதிக அளவில் சுரக்கிறது. தாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு இது அளவோடு சுரந்து, உறவை இனிமையாக்குகிறது. பிரசவ நேரத்தில் இது சரியாகச் சுரந்து, கர்ப்பப்பைத் தசைகளைச் சுருங்க வைத்து, சுகப் பிரசவத்துக்கு வழி செய்கிறது.

எனவே இதை ‘அதிவேக பிரசவ ஹார்மோன்’ (Rapid birth hormone) என்கிறார்கள். பிரசவத்தின்போது தாயின் பிறப்புறுப்பில் அதிக ரத்தப்போக்கு ஏற்படாமல் தடுப்பதும் இதுதான். பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கத் தொடங்கும்போது, தாயின் மார்பில் பாலைச் சுரக்கச்செய்வதும் இதுதான். பிரசவத்துக்கும் ஆக்சிடோசின் ஹார்மோனுக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், இயற்கைப் பிரசவம் எப்படி நிகழ்கிறது என்
பதைப் பார்த்துவிடலாம்.

கர்ப்பம் தரித்துள்ள ஒரு தாயின் கர்ப்பப்பை குறிப்பிட்ட நாளில் சுருங்கி குழந்தை பிறப்பதை சுகப் பிரசவம் என்கிறோம். சாதாரணமாக மனித கர்ப்பம் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் நீடிக்கும். ஒரு கர்ப்பிணிக்கு 37 வாரங்கள் முடிந்து விட்டாலே, அவர் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டார் என்றுதான் கருத வேண்டும். கர்ப்பிணியும் ஆரோக்கியமாக இருந்து, குழந்தையின் வளர்ச்சியும் சரியாக இருந்தால், எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ, பின்பாகவோ குழந்தை பிறப்பது இயல்பானது. இந்தக் காலகட்டத்தில் பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். அவற்றைத் தெரிந்துகொண்டு கர்ப்பிணிகள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

கர்ப்பப்பை சுருங்கி விரியும்போது ஒரு வித வலி சீரான இடைவெளியில் உண்டாகும். இதுதான் பிரசவ வலி. இது இடுப்பு வலியாகவோ, மாதவிலக்கு காலங்களில் ஏற்படுகிற தீவிர வலி போலவோ உணரப்படலாம்.

நேரம் ஆக ஆக இந்த வலி ஏற்படும் கால இடைவெளிகள் குறைந்து, வலி தீவிரமாகும். இந்த சமயத்தில் கர்ப்பப்பையின் வாய் முதலில் மெலிதாகும்; பிறகு சிறிது சிறிதாக விரிவடையும். பிரசவ வலி அதிகரிக்க அதிகரிக்க, கர்ப்பப்பையின் வாய் வேகமாகவும் அதிகமாகவும் விரிவடையும். அது முழுவதுமாக விரிந்து திறந்ததும் கர்ப்பப்பையில் உள்ள குழந்தை பிறப்புப் பாதைக்குச் செல்லத் தொடங்கும்.

இப்போது கர்ப்பிணியின் பிறப்புறுப்பு வழியாக லேசான ரத்தக்கசிவு வெளிப்படும். இதைத் தொடர்ந்து குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடம் உடைந்து, கர்ப்பிணியின் பிறப்புறுப்பிலிருந்து தண்ணீர் போன்ற திரவம் வெளிவரும். இப்போது கர்ப்பிணி மூச்சை நன்கு உள்வாங்கிக்கொண்டு, பலம் கொண்ட மட்டும் முக்கினால் குழந்தை பிறந்துவிடும். இதற்குப் பிறகு குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து நஞ்சுக்கொடி பிரித்து எடுக்கப்படும். இதுதான் சுகப் பிரசவம்.

கர்ப்பப்பையில் குழந்தை முழுமையாக வளர்ந்ததும் இயற்கையாகவே பெண்களின் உடலில் ஆக்சிடோசின் சுரக்கிறது. இதுதான் கர்ப்பப்பையைச் சுருங்க வைத்து, பிரசவம் ஏற்பட வழிசெய்கிறது.

இந்தச் செயல் தாமதமாகும்போது செயற்கையாக பிரசவ வலியைத் தூண்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உலகெங்கிலும் பிரசவ வலியைத் தூண்டுவதற்கு ஆக்சிடோசின் மருந்துதான் கைகொடுக்கிறது. இதை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி பிரசவம் நடப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக இந்த மருந்தைக் குறைந்த அளவில் கொடுக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரித்து, கருப்பை நன்றாக விரிந்து சுருங்கும் வரை கொடுப்பார்கள். அதேவேளையில் கர்ப்பப்பை அதிகமாகச் சுருங்கி விடாமலும் இந்த மருந்தின் அளவைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். உலகெங்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்படுவதற்கு மிகவும் உதவுகின்ற இந்த ஹார்மோன் மருந்தை யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

1906ல் இந்த ஹார்மோன் கண்டுபிடிப்புக்கு ஆரம்ப விதை போட்டவர் இங்கிலாந்து உடல் செயலியலாளர் சர் ஹென்றி டேல் என்பவர். அவர் ஒருமுறை எருதுகளின் பின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து ஒரு திரவத்தைப் பிழிந்து எடுத்து, கர்ப்பமான பூனைகளுக்கும் நாய்களுக்கும் செலுத்திப் பார்த்தார். கடினமான பிரசவம் என்று கருதப்பட்ட இவ்வின விலங்குகள் பல மிக எளிதாக பிரசவித்தன.

அதற்குக் காரணத்தைத் தேடினார். கர்ப்பமான கர்ப்பப்பையைச் சுருங்க வைக்கும் தன்மை இந்தத் திரவத்துக்கு உள்ளது என்று தெரிந்துகொண்டார். ஆனால், இதைச் சுத்தப்படுத்த வழி தெரியாத காரணத்தால் அவரால் இதை கர்ப்பிணிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை.

இவரைத் தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் பிளேர் பெல் என்பவர் இந்தத் திரவத்துக்குத் தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கும் குணமும் உள்ளது என்று கண்டுபிடித்து, ‘இன்ஃபன்டிபுலின்’ என்று ஒரு பெயரும் வைத்தார். ஆனால் இவராலும் இதை மனிதர்களுக்குப் பயன்படுத்த முடியவில்லை. 1928ல் ஆலிவர் காம் என்பவர்தான் முதன்முதலில் இதைச் சுத்தப்படுத்தி மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். இதற்கு ‘ஆக்சிடோசின்’ என்ற பெயரும் இட்டார்.

1950ல் வின்சன்ட் டு விக்னியாட் எனும் அமெரிக்க உயிர்வேதியிலாளர் இதன் வேதிக்கட்டமைப்பைக் கண்டுபிடித்தார். இது ஒன்பது அமினோ அமிலக்கூறுகளால் ஆனது என்றும், பாலிபெப்டைடு எனும் வேதி அமைப்பில் உருவாகிறது என்றும் கண்டுபிடித்தார். 1953ல் இவரே இந்த ஹார்மோனை செயற்கையாகத் தயாரிக்கவும் முன்வந்தார்.

‘உலகில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாலிபெப்டைடுகளால் ஆன முதல் ஹார்மோன் மருந்து இதுதான்’ என்ற சிறப்பையும் பெற்றது. 1955ல் இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இவர் தயாரிப்பில் உருவான ஆக்சிடோசின் மருந்துதான் இன்றைக்கும் பல கோடி கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்பட வழிசெய்கிறது.


Similar Threads: