கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவிக்குச் சில ஆலோசனைகள்

-காயத்ரி வெங்கட்(tamiloviyam)

என்ன தான் சொக்குபொடி போட்டார்களோ தலையணை மந்திரம் போட்டார்களோ தெரியலையே அந்த மனுஷன் இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறாரே. எத்தனை பெண்களின் ஆதங்கம்?நிறைய பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணைவனின் மனதைக் கொள்ளையடிக்கத் தெரிந்திருக்காது. அதற்கு சில ஆலோசனைகள்:
1. சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளும் செய்து முடிக்கும் நேரத்தை நிர்வாகம் செய்யும் திறன் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் கணவரிடம் எரிந்து விழுவது, பதட்டப்படுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

2. வேலைக்குச் செல்லும் கணவனுக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும். குறிப்பாக சிடு சிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டும் புலம்பிக் கொண்டும் சமைக்கவோ வேலைகள் செய்யவோ கூடாது.

3. பிடிக்காத சமையலைத் தான் செய்வேன் என்று அடம் பிடிக்கக் கூடாது. பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்திட வேண்டும். சமையலில் அசத்திட வேண்டும்.

4. புலம்பல்கள் கணவன்மார்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதற்குப் பதில் அக்கறையுடனும் அன்புடனும் நேரம் பார்த்து பக்குவமாகப் பேசினால் நினைத்த காரியங்களைச் சாதிக்கலாம்.

5. சில பெண்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். இதே தங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறுவார்கள். அங்கே தான் தவறு செய்கிறார்கள். வீட்டு வேலைகளை வியர்வை வடிய செய்து விட்டு அழுக்கு மூட்டையாய் அழுக்கு நைட்டியுடன் பக்கத்து வீட்டினருடன் வம்பு பேசிக் கொண்டோ நெடுந்தொடர்கள் பார்த்துக் கொண்டோ குழந்தைகளைத் திட்டிக் கொண்டோ இருக்கும் மனைவியைக் கணவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அதற்குப் பதில் மதியம் கணவர் வேலைக்குப் போயிருக்கும் நேரத்தில் குறட்டை விட்டு தூங்கவோ அரட்டை அடித்துக் கொள்ளவோ செய்து தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். மாலையிலும் குளித்து பூ முடித்து திருத்தமாக உடையணிந்து விளக்கேற்றி வைத்து கணவர் வரும் போது புத்துணர்ச்சியுடன் வரவேற்றாலே கணவனின் மனது குதூகலிக்கும். எங்கேயாவது போயிட்டு வரலாமா என்று பார்க்கிற்கும் பீச்சிற்கும் மனைவியை அழைத்துப் போகச் செய்யும்.

6. கணவரின் வீட்டாரைப் பற்றி அதிகமாக வம்பு பேசக் கூடாது. இப்படி பேசும் மனைவிமாரைப் பார்த்தாலே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கணவனுக்கு ஓடத் தோன்றும்.

7. கணவரின் முகக்குறிப்பு, மனக்குறிப்பறிந்து மனைவியின் செயல் இருக்க வேண்டும்.

8. மாமனார், மாமியாரையும் அன்பாகக் கவனித்தால் கணவருக்கு மனைவியின் பெற்றோரையும் தன் பெற்றோராகப் பாவிக்கும் எண்ணம் வரும்.

9. பக்கத்து வீட்டு வாழ்க்கையையோ சொந்த பந்தங்களின் சொகுசு வாழ்க்கையையோ பார்த்து பொறாமைப்பட்டு கணவரை நச்சரித்து கடன் வாங்கச் சொல்லவோ துன்புறுத்தவோ கூடாது. கணவன் என்ன விக்ரமன் பட ஹீரோவா என்ன? ஒரே இரவில் முன்னேறி பணக்காரர் ஆக. பணத்தை வைத்து அன்பு பாராட்டக் கூடாது. அன்பு மனம் சம்பந்தப்பட்டது. இருக்கும் வாழ்க்கையைத் திருப்தியாக வாழ வேண்டும்.

10. கணவர் மனைவி பிரச்சினைகளை நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஊரைக் கூட்டி அப்பாவி கணவரை அசிங்கப்படுத்தக் கூடாது.

11. தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று உலகத்தில் எதுவுமில்லை. பிரச்சினைகளை வளர விடக் கூடாது, பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.

12. இப்படித் தான் நடக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய அன்பைச் செலுத்தாதீர்கள். அது நடிப்பாகி விடும். கணவர் சொல்வதை சொல்ல வரும் கருத்தினைக் கருத்துடன் கவனிக்க வேண்டும். உங்களின் செயல் அவரை மீறி இருக்காது என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

13. அவ்வப்போது ஐ லவ் யூ அல்லது உங்களுக்கு இந்த உடை நன்றாக இருக்கிறது, இன்று நீங்கள் ரொம்ப அழகா இருக்கேங்களே என்று உண்மையாகப் பாராட்டுங்கள்.

14. கணவர் வேலைக்குச் சென்றவுடன் ஒழிந்தார் இனி நிம்மதி என்ற ரீதியில் இருக்காமல் அலுவலகம் சென்றாரா? சாப்பிட்டாரா? எப்பொழுது வருவார் என்பதை அக்கறையுடனும் அன்புடனும் விசாரியுங்கள். அதுவும் அளவுடன் இருக்கட்டும். அதிகமாக அன்பு காட்டி விசாரித்து அவரை வேலை செய்ய விடாமல் இம்சிக்க வேண்டாம்.

15. கணவரின் பிறந்த நாட்களுக்கு அன்புப் பரிசு வழங்குங்கள்.

16. உடல் நிலை சரியில்லை என்றால் கணவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்கும் தான் உடம்பு நோகுது என்றோ என்னை எங்காச்சும் கூட்டிகிட்டுப் போகணும்னா சாருக்கு வியாதி வந்துடுமே என்றோ திட்டி திட்டி சேவை செய்யாதீர்கள்.அன்புடன் நீங்கள் கவனிக்கும் கவனிப்பு உங்களைக் கவனிக்க வைக்கும்.

17. கணவரின் மனதிற்குப் பிடித்த வகையில் படுக்கையறையிலே நடந்து கொள்ளுங்கள். ஒரு பார்வை, சில வார்த்தைகள், கண்களில் காதல் என்று செயல்களாலே படுக்கையறையை மகிழ்ச்சியறையாக்குங்கள். அதை விட்டு விட்டு படுக்கையறையில் கண்டதைப் பேசி யுத்த அறையாகாதீர்கள். முடிந்த போது அவரை தொட்டு பேசுங்கள்.

18. கணவருடன் ஊர் சுற்றினாலோ பீச் பார்க் சுற்றினாலோ தான் சந்தோஷம் என்றில்லை. வீட்டிலேயே ருசியாக சமைத்து அன்புடன் பரிமாறி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாகப் பாடல்கள் கேளுங்கள். அதுவே சொர்க்கம்.

19. வேலைக்குச் சென்று சோர்வாக வரும் கணவனிடத்தில் மாமியார், நாத்தனார், மைத்துனன் குற்றப்பட்டியல்களைப் படிக்காதீர்கள். அதே போல் தான் சாப்பிடும் போதும். மனிதன் நிம்மதியாகச் சாப்பிட்டுப் போகட்டுமே.

20. பிரச்சினைகள் அல்லாத விஷயங்களைப் பெரிதாக்கி நீங்களும் நிம்மதியில்லாமல் கணவனையும் நிம்மதியில்லாமல் ஆக்காதீர்கள்.

21. கணவரின் நிதி நிலைமையை உணர்ந்து குடும்ப வரவு செலவு விஷயங்களை அறிந்து சிக்கனமாகக் குடித்தனம் நடத்துங்கள். சேமிக்கும் பெண்மணியைத் தான் எந்தக் கணவனுக்கும் பிடிக்கும்.

22. கல்யாணத்தில் பார்த்தது போல இளமையாக இருக்கிறீர்கள். அதே குறும்பு, அதே சிரிப்பு கொஞ்சம் கூட மாறலையே என்று ஐஸ் வையுங்கள். உருகாதார் உள்ளத்தையும் உருக வைக்கும் இந்தக் குளிர்ச்சிப் பாடல்.கணவர் 'ஜோக்'கடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக சிரித்து வையுங்கள், கணவரின் மனம் குழந்தை மனம் போல் தான். அன்பிற்கும் பாராட்டிற்கும் ஏங்கும்.அவரைக் குழந்தையாகப் பாவியுங்கள்.

23. அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்துருக்குது என்று கணவரைப் பிள்ளைகள் முன்பு விட்டுக் கொடுக்காதீர்கள். அதற்குப் பதில் கணவனின் நல்ல செயல்களைக் கூறி குழந்தைகள் மனதில் கணவரை ஹீரோ ஆக்குங்கள்.

24. கணவரைப் பற்றி உங்கள் வீட்டில் குறை கூறாதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கணவரை விட்டுக் கொடுக்காதீர்கள்.

25. நான் பெரிதா? நீ பெரிதா என்ற ஈகோவை விட்டு விட வேண்டும். அவரே பேசட்டும் என்று மெளனமாக சந்தோஷ நேரங்களை வீணடிக்கக் கூடாது.

கணவரிடம் எந்த ஈகோவும் பார்க்கத் தேவையில்லை.

கணவரின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவர் மனதைப் புரிந்து நடந்து கொண்டாலே மனைவியின் பேச்சையும் கணவர் செவி கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே கணவரின் மனதில் குடிபுக விரும்புவர்கள் மேற்கூறிய ஆலோசனைகளைச் செயல்படுத்தி பாருங்கள். வெற்றி நிச்சயம்.

Similar Threads: