நீங்க ...புதிதாக திருமணமான மணப்பெண்ணா?விரைவில் மனவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் பெண்ணா? இதோ உங்களுக்கான சில குறிப்புகள்..


1. புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.


அதனால், என்ன சமையல் செய்தாலும் முதலிலேயே சமையல் குறிப்பை மனப்பாடம் செய்துடுங்க.


உதாரணத்திற்க்கு, சாம்பார் செய்யனும்னா, அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா?


[காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் பாடம் புரிஞ்சாப் பாடிச்சோம், மாங்கு மாங்குன்னு மனனம் செய்திட்டு எக்ஸாம் பேப்பர்ல கொட்டிட்டு, பாஸ் ஆகிடலியா - அது மாதிரிதான்]


சமையல் உங்களுக்கு அத்துப்பிடின்னு ஆக்ட் விடனும்னா இப்படி மனப்பாடம் செய்துட்டு சமையலறையில் கலக்குங்க.


உங்கள் கணவரும்," எவ்வளவு சுறுசுறுப்பா சமையல் புக் எதுவும் பார்க்காம சமைக்கிறா, நல்லா சமைப்பா போலிருக்கு" அப்படின்னு நினைச்சுட்டே சாப்பிட உட்காருவாரு. அப்போ உங்க சமையல் சொதப்பலா இருந்தாலும் ரொம்ப பாதிக்காது.


அப்படியே கொஞ்சம் புளி , உப்பு, காரம் ஏதாவது குறை சொன்னா, " ஸாரிங்க, 'எப்பவுமே' இந்த சாம்பார்ல உப்பு மட்டும் எனக்கு தகராராவே இருக்கு" அப்படின்னு 'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.


2. உங்கள் கணவருக்கு ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு இருந்தால், நீங்களும் அவர் விரும்பும் விளையாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லீனா அவரோட விருப்பமான ஸ்போர்ட்ஸ் பத்தி அவரு உங்ககிட்ட பேசினா, 'பே'ன்னு நீங்க முழிச்சுக்கிட்டு இருக்கனும். கொஞ்சம் அது பத்தி தெரிஞ்சு வைச்சுக்கிட்டா 'நல்லா' தெரிஞ்ச மாதிரி ஆக்ட் விட்டுக்க வசதியாயிருக்கும்.


3. கணவனுக்கு எது பிடிக்கும், அவருடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதை செய்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்றெல்லாம் மட்டும் தெரிந்து வைத்திருப்பது போதாது.


அவருக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷய்ங்களை வெறுக்கிறார், எதை செய்யும் போது அவருடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயம்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


4. திருமணம் ஆனவுடனே, உங்கள் கணவர் தன் நண்பர்களை விட்டு முழுவதுமாய் பிரிந்துவிட வேண்டும் என் எதிர்பார்க்கக் கூடாது. பேச்சுலர் லைஃபிலிருந்து அவர் மனநிலை புதிய திருமண பந்ததிற்க்கு வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.


அவருடைய நண்பர்களை பற்றி அவர் உங்களிடம் பேசினால், அலட்ச்சியப்படுத்தாமல் கேளுங்கள். அவர் நண்பர்களும் அவருடைய வாழ்க்கையின் ஒரு பங்குதான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.


இதில் நீங்கள் தன்னலத்துடன் நடக்க முயற்ச்சிக்க கூடாது, அதே வேளையில் உங்கள் இடத்தையும் விட்டுதரக் கூடாது.


5. உங்களுடன் ஷாப்பிங் செல்வதற்க்கு உங்கள் கணவருக்குச் சலிப்பு ஏற்படுகின்றதென்றால், உங்கள் தோழிகளுடன் ஷாப்பிங் சென்று நீங்களே உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா? உங்க கூட வரனும்னு அவசியமில்லையே!


6. நீங்க ரொம்ப 'சென்டிமென்டல்' டைப்பாக இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயற்ச்சியுங்கள், முடியவில்லையென்றால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமலாவது இருங்கள்.


ஏனென்றால், 'சென்டி','எமோஷனல்' அழுமூஞ்சி மனைவியினால் கணவனின் மனதை கொள்ளையடிப்பது கடினம்.


உணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


6. சொன்ன நேரத்திற்க்கு வீட்டிற்க்கு வந்து, அவரால் உங்களை வெளியில் அழைத்துச்செல்ல முடியவில்லையென்றாலோ, உங்கள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களை நினைவில் வைத்துக்கொள்ள அவர் தவறினாலோ, கத்தி ஆர்பாட்டம் பண்ணாமல் அமைதியாக பொறுமையுடன் இருங்கள்.


நீங்கள் சண்டைபோட்டு, அமர்க்களம் பண்ணினாலும் அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பது சாத்தியமில்லை.


'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.


வீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்!


சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்!


7. அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.


உங்கள் கணவரிடம் அவருடைய அம்மா, மற்றும் குடும்பத்தாரை அவ்வப்போது மனதார பாராட்டுங்கள்,


பாராட்டுக்களுக்கு நடுவே உங்கள் புகார்களை தொடுத்தால், தாக்கம் அதிகமில்லாமல் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்புண்டு.


8. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,


'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால்,
ஏமாற்றங்களை, தவிர்க்கலாம்!!!'


Similar Threads: