இன்று உங்கள் மனைவியை அவசியம் பாராட்டுங்கள்!

இன்னைக்கு மனைவியை பாராட்டும் தினம் பாஸ். அதற்காக, 'சோறு வெந்துருக்கு, குழம்பு நல்லாருக்கு'னு பாராட்டிட்டு விட்றாதீங்க. நீங்க நல்ல கணவன்னு அவங்ககிட்ட பாராட்டு வாங்குறதுதான் அவங்களுக்கு நீங்க கொடுக்குற மிகப்பெரிய பாராட்டு. அதுக்கு நீங்க என்ன பண்ணணும், பண்ணக் கூடாதுன்னா....

காலையில் நீங்கள் லேட்டா எழுந்திருச்சு உங்க மனைவியை அவசரப்'படுத்தாதீங்க'. அஞ்சு அலாரம் வெச்சும் எழுந்திருக்காமல் தூங்கினது நம்ம தப்புதானே...

வேலைக்குக் கிளம்பும்போது உங்க மனைவிகிட்ட 'ரொமாண்டிக்'கா ஏதாவது பேசிட்டு புறப்படுங்க. அது உங்களுக்கும் ஒரு நல்ல உனர்வை கொடுக்கும் கணவர்களே...

ஆஃபிஸ்ல இருக்கும்போது வேலையிலேயே மூழ்கி முங்கு நீச்சல் அடிக்காம, அவ்வப்போது மனைவிக்கும் கால் பண்ணி பேசுங்க.

இல்லனா 'ஐ லவ் யு'னு ஒரே ஒரு மெசேஜை போட்டுவிடுங்க. அதைப் பார்க்கும்போது அவங்களுக்கு மனசுக்குள்ள லட்சம் பட்டாம்பூச்சி சிறகடிக்கும்.

உங்களுக்கு ஊரையே உளுத்தம்பருப்பாய் ஊறப்போட்டு கலாய்க்கிற அளவு திறமை இருந்தாலும், மத்தவங்க முன்னால உங்க மனைவியை கலாய்க்காதீங்க. ரொம்ப வருத்தப்படுவாங்க.

உப்புமாவில் புளியையே கரைச்சு ஊத்தியிருந்தாலும். ' உப்புமாவில் புளி சேர்க்கிறது ரொம்ப தப்புமா'னு பொறுமையா எடுத்து சொல்லுங்க புது மாப்பிளைஸ்.

முடிந்தளவிற்கு, வேலையை சீக்கிரமாகவே முடித்து வீட்டிற்கு கிளம்பிடுங்க. தாமதமாகும்னு தெரிந்தால் போன் பண்ணி சொல்லிடுங்க. குடி குடியைக்கெடுக்கும்.

உங்கள் சுண்டுவிரலில் சின்ன அடிபட்டாலும் அவங்க எப்படித் துடிச்சுப் போயிடுறாங்க... அவங்களையும் நீங்க கண்ணும் கருத்துமா ஆரோக்கியமா பார்த்துக்கோங்க.

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான தேதிகளை மறந்துடாதீங்க. முக்கியமா, உங்க கல்யாண நாளையும், அவங்க பிறந்தநாளையும் மறந்துடவே மறந்துடாதீங்க.
கிச்சன்ல சமைக்கும்போது கூடமாட உதவி செய்யுங்க. மணிரத்னம் படங்களெல்லாம் நீங்க பார்த்திருக்கீங்களா? இல்லையா?

அடிக்கடி 'பூ' வாங்கி கொடுங்க. அதற்காக எருக்கலம் பூ, ஊமத்தம் பூனு குதர்க்கமா யோசிக்காதீங்க. மல்லிப்பூ, பிச்சிப்பூ, அப்பிடி...

குடும்ப விஷயங்கள் பற்றி அவங்ககிட்டேயும் ஒப்பினியன் கேளுங்க . 'நீ பேசி என்ன ஆகப்போகுது?'னு மட்டம் தட்டிடாதீங்க.

அடிக்கடி சர்ப்ரைஸ்ன்ற பெயர்ல கடைக்கு கூட்டிப் போய் சிக்கன் ரைஸாவது வாங்கிக் கொடுங்க.

அவங்களை நிறைய சிரிக்கவைங்க, புதுசா ஜோக் யோசிக்க தோணலைனா வடிவேலு காமெடியை அதே மாடுலேஷனில் பேசி சிரிக்க வைங்க சார்.... அது போதும்!


-ப.சூரியராஜ்