கசப்பான கஷாயம் இனிக்கும்!

''மழைக்காலம் வந்தாலே, ஜுரமும் ஜலதோஷமும் வரிசைக் கட்டி வர ஆரம்பித்துவிடும். அதுவும் கொஞ்சம் பனி பெய்தாலும் போச்சு. உடனே, 'லொக் லொக்’ இருமலும், 'ஹச்.. ஹச்’ தும்மலும் வீட்டையே ஜுகல்பந்தியாக்கிவிடும். பனியால் ஏற்படும் பிணியைப் போக்க, கஷாயம்தான் கண்கண்ட மருந்து'' என்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் சங்கீதா.


மிளகுக் கஷாயம்
12 மிளகை நன்றாகப் பொடித்து, இரண்டு கப் பாலில் சேர்த்து சுண்ட காய்ச்சவும். இனிப்பு தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

பலன்கள்: தொண்டைக் கரகரப்பு நீங்கும். ஜீரணக்கோளாரைச் சரி செய்யும்.
பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் மசக்கையால் ஏற்படும் வாந்தியை தடுக்கும்.

கிராம்பு கஷாயம்
10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.

பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவ¬ளையம் மறைந்துவிடும்.

சுக்குக் கஷாயம்
அம்மியில் சுக்கை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிக்சியில் சிறிது சுக்கை போட்டு பொடித்துக்கொள்ளவும். இந்த இரண்டுவிதமான பொடியையும் பாத்திரத்தில் போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கப்பாகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டவும். சூடான பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து பருகவும்.

பலன்கள்: வாயுக் கோளாறை நீக்கும். சளித் தொல்லையைப் போக்கும். வாயில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.

இஞ்சிக் கஷாயம்
இஞ்சியை அம்மியில் வைத்து நசுக்கி தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி பனை வெல்லம் சேர்க்கவும்.

பலன்கள்: உடல் வலியைப் போக்கும். இருமல், தும்மல், மூச்சு அடைப்பை நீக்கும். மாதவிடாய் காலங்களில் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி தரும்.

Similar Threads: