சர்க்கரை நோயை தணிக்கும் சீந்தில்சீந்தில் கொடி மிகவும் உயரமாக வளரக்கூடியது. இலைகள் இதய வடிவில் மெல்லியதாக இருக்கும். சாலை ஓரங்களில் மரங்களை பற்றி வளரும் கொடி. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, உன்னதமான மருந்தாகிறது. இதன் தண்டு பகுதியில் நீர்சத்து மிகுந்து இருக்கும். சீந்தில் இலையை பயன்படுத்தி நெஞ்சக சளி, காய்ச்சலை தணிக்கும் தேனீர் தயாரிக்கலாம். இலை சாறு 20 மில்லி எடுத்து கொள்ளவும். 5 முதல் 10 திப்லியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி சரியாகும். சீந்தில் கொடியில் கிடைக்கும் சர்க்கரையில் இருந்து மருந்து தயாரிக்கலாம். சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு கிராம் வரை சீந்தில் சர்க்கரை எடுத்துக்கொள்ளவும். இதனுடன், சம அளவு அமுக்ரா கிழங்கு சூரணம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி சிறிது காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் தணியும். பால்வினை நோய்க்கு மருந்தாகிறது. சொரியாசிஸ், மூட்டுவலி உள்ளவர்களுக்கு ஏற்படும் அரிப்பு, வலி குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் சோர்வு, உடல் எடை குறைவது சரியாகும். இந்த தேனீருடன் சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க கூடாது.
சீந்தில் இலைகளை பயன்படுத்தி வலி, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு தட்டில் சிறிது விளக்கெண்ணெய் தடவி அதன்மீது இலைகளை வைத்து சூடுபடுத்தவும். இலைகள் கருகாமல் பார்த்துக்கொள்ளவும். பின்னர் இலைகளை எடுத்து வலி, வீக்கம் உள்ள இடங்களில் ஒட்டி வைக்கவும். அரைமணி நேரம் வைத்திருந்தால் வலி, வீக்கம் குறையும். பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய சீந்திலானது சர்க்கரை நோயை தணிப்பதில் முதலிடம் வகிக்கிறது.

சிறுநீரை வெளித்தள்ளும் மருந்தாகிறது. மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்ட இது, ஈரலை பலப்படுத்துவதாக அமைகிறது. தேவையற்ற சுரபிகளை சீர்செய்ய கூடியதாக விளங்கும் சீந்தில் வயது மூப்பை குறைப்பதாக விளங்குகிறது. உடலுக்கு பலத்தை தரக்கூடிய டானிக்காகிறது. எலும்புகளுக்கு உன்னதமான பலத்தை தரக்கூடியதாகிறது. வலி நிவாரணியாக பயன்படுவதுடன், உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. ஈரல்களில் ஏற்படும் கோளாறுகளை போக்கும். ஹெபடிடிஸ்க்கு மருந்தாகிறது. காசநோய்க்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது.