சப்புச்சுவை காய்கள் உடல்நலத்திற்கு இனிப்பான பயன்களைத் தருகின்றன. அந்த வகையில் `கோவைக்காய்' முதலிடம் வகிக்கிறது என்று சொல்லலாம். இத்தாவரத்தின் ஆங்கிலப்பெயர் `பிம்பி'. (Bimbi) தாவரஇயல் பெயர் ``காக்சீனியா இண்டிகா'' (Coccinia Indica) கோவை காய்க்கு, தமிழில் விம்பம், தாண்டை, தொவ்வை, விம்பி என்று வேறு பெயர்களும் உண்டு.


இதன் காய்கள் பச்சையாகவும், பழம் நல்ல சிவப்பு நிறமாகவும் இருக்கும். பசுமையான கோவைக்காய் பலவகைகளில் சமையலுக்கு பயன்படுவதன்றி, இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பயிரிடப்படும் ஒரு காய்கறிப் பயிர்.


பழைமை வாய்ந்த காய்
கோவைக்காயின் தாயகம் இந்தியா ஆகும். இதன் தாவர இயல் பெயரான, ``காக்சீனியா இண்டிகா'' என்பதே இதற்குச் சான்று. இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக கோவைக்காய் பலவகைகளில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் உண்ணும் 100 கிராம் கோவைக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன.
புரதம் 2 கிராம் கொழுப்பு 0.2கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப் பொருட்கள் 3.2 கிராம், கால்சியம் 40 மில்லிகிராம், பாஸ்பரஸ் 32 மி.கி., இரும்புச்சத்து 1.4 மி.கி., ரைஃபோஃபிளேவின் 0.1மி.கி, நியாசின் 0.7 மி.கி., தயாமின் 0.09மி.கி., வைட்டமின் `சி' 17 மி.கி., ஃபோலிக் அமிலம் 60 மைக்ரோகிராம், கரோட்டின் 158 மைக்ரோகிராம், சக்தி 21 கலோரிகள் உள்ளன.


மருத்துவப் பயன்கள்:

மிதமான மணமும், ருசியுமுள்ள கோவைக்காய் பலவழிகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும் மலிவான காய். ஆரம்ப நிலை ஆஸ்துமாவைக் குணமாக்கும். குஷ்ட நோயின் தன்மையைக் குறைக்கும் வல்லமை உடையது.


இதன் இளங்காயை மென்றுதின்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடித்துவர, வாய்ப்புண், குடல்புண் குணமாகும். இதன் சாறைப் பருகிவர, சிறுநீர் கோளாறுகள் நீங்கும்.


கோவைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொண்டால், வாய்வுத்தொல்லை விலகும். மலச்சிக்கல் ஏற்படாது காக்கும். குடல்அழற்சிக்கு எளிய மருந்து.


இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. பிறருக்கு எலும்புகளை வலுப்படுத்தும். வயோதிகர்களுக்கு ஏற்ற, எளிதில் சீரணமாகும் சிறந்த காய் கோவைக்காயே.


சரும நோய் வராது காப்பதோடு, உடம்பு பளபளப்பாகத் திகழச் செய்யும்.

கோவைக்காயுடன் சிறிது வெள்ளைப்பூண்டு வைத்து மைய்யாக அரைத்து, படர்தாமரை மீது பூசி வர, தோல் இயல்பு நிலைபெறும்.


கோவைக்காயை சிறிதாக நறுக்கிவிட்டு, சின்னவெங்காயம், சீரகம், பூண்டு, கொத்துமல்லி விதை, சேர்த்து கஷாயம் செய்து, தினம் இருவேளை குடித்துவர, சொறி, சிரங்கு குணமாகும். பக்கவிளைவில்லாத பாதுகாப்பான இயற்கை மருந்து இது.


நீளமாக நறுக்கிய கோவைக்காயுடன், சிறிது மிளகுத்தூள், உப்புதூவி மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.


மாவுப்பொருட்கள் குறைவாகவும், தாதுப்பொருட்களும், வைட்டமின் `ஏ', `பி', `சி', யும் அடங்கி இருப்பதால், கோவைக்காய் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டது என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி தொவிக்கின்றது. எனவே, ஜெர்மனி மருத்துவர்கள் கோவைக்காயை ஒரு மூலிகைக்காய் என்று சிறப்பாகச் சொல்கிறார்கள்.


கோவைக்காயை மென்று தின்று, ஒரு தம்ளர் மோர் குடித்தால், மூத்திரைதாரை எரிச்சல், மூத்திரச் சூடு நீங்கும். சிறுப் நீர் பிரியாது அவதிப்படுவோர்க்கு, இம்மருத்துவம் சிறுநீர் நன்கு பிரியச் செய்து நலன் பயக்கும்.

Similar Threads: