நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் உடல் வலிக்கு தீர்வு காணலாம். உடல் சோர்வு அடையும்போது, வலி ஏற்படும். நீர் வற்றாமல் பார்த்துக் கொண்டால் உடல் வலியை போக்கலாம். ஓய்வில்லாத உழைப்பு, கிருமிகள் தொற்றால் வரும் காய்ச்சல் போன்றவற்றால் உடல் வலி ஏற்படும். மேலும், தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும் உடல் வலி ஏற்படுகிறது. மஞ்சள் பொடியை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

அரை ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு நேரத்தில் குடித்துவர நல்ல உறக்கம் ஏற்படும். உடல் வலி சரியாகும். மஞ்சள் மகத்தான மருத்துவ குணங்களை பெற்றது. புத்துணர்வு தர கூடியது. மஞ்சள் பொடி வலி நிவாரணியாக விளங்குகிறது.

இஞ்சியை பயன்படுத்தி உடல் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு, இஞ்சி துருவல் சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் மெல்லிய பருத்தி துணியில் கட்டிவைத்து ஒத்தடம் கொடுத்து மசாஜ் செய்தால் உடல் வலி சரியாகும்.இஞ்சி வீக்கத்தை கரைத்து வலியை குறைக்க கூடியது. சுரப்பிகளுக்கு தூண்டுதல் சக்தியாக விளங்குகிறது. இஞ்சி பித்த சமனியாகிறது. உடல் உறுப்புகளை தூண்டி சோர்வை நீக்கி பலத்தை கொடுக்கிறது.

மஞ்சள் பொடியுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பசையாக கலக்கவும். தசையில் வலி இருந்தால் அந்த இடத்தில் பற்றாக போடவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி குறையும். 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை எடுத்து வைத்துக் கொண்டால், வலி இருக்கும்போது மேல் பூச்சாக பயன்படுத்தலாம். மிளகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது. காரத்தன்மை கொண்ட இஞ்சி, மிளகு, சுக்கு போன்றவை உடல் வலிக்கு மருந்தாகிறது.

முகத்தில் ஏற்படும் மாசு, மருக்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.இருசக்கர வாகனத்தில் செல்லும்போது முகத்தில் மாசு படிந்து விடுகிறது. ரோஜா இதழ்களை தேனீராக்கி முகம் கழுவலாம் அல்லது ரோஜாவுடன் சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து முகத்தின் மீது போட்டு கழுவுவதால் மாசு, மருக்கள் மறைந்து முகம் அழகு பெறும்.


Similar Threads: