Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

ஆவாரை


Discussions on "ஆவாரை" in "Nature Cure" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  ஆவாரை

  ஆவாரை


  சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

  அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும்.


  ஆவாரையின் தாவரவியல் பெயர் Cassia Aariculata என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Tanners Cassia என்றும், வடமொழியில் ‘தெலபோதகம்’ என்றும், தெலுங்கில் ‘தங்கேடு’ என்றும் குறிப்பது வழக்கம். இதன் இலை, பூக்கள், பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்துமே மருந்தாகி பயன் தருகின்றன. இதன் அனைத்துப் பகுதி களும் மிக்க துவர்ப்புடையதாக விளங்குகிறது.  ஆவாரையின் அனைத்து பகுதிகளும் மனிதருக்கு மருந்தாவது மட்டுமின்றி பயிர்களுக்கும் சிறந்த உரமாக விளங்கு கிறது. ஆவாரையின் அனைத்துப் பகுதி களுமே காய்ச்சலைப் போக்கும் குணம் உடையது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் தன்மையுடையது.


  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுவது. உடலின் பல பகுதிகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டு பல கேடுகளை உண்டாக்கிப் பின் புற்றுநோய்க்குக் காரணமாக விளங்கும் நச்சுக்களை(Free Radicals) விரைந்து வெளியேற்றும் குணம் கொண்டது. மனிதருக்கு நோய் செய்யும் நுண்கிருமிகள் எதுவாயினும் அழித்து அகற்றும் வல்லமை உடையது.

  ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் பலம் பெறும், பற்கள் கெட்டிப்படும். இது வற்றச்செய்யும் மருத்துவ குணம் உடையது. மேலும், உடலுக்கு டானிக்காக உரம் தரக்கூடியது. ஆவாரையின் விதைகள் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை உடையது, குருதியை நீர்மைப்படுத்தக்கூடியது உடல் தேற்றியாக விளங்கக் கூடியது.

  ஆவாரை நெஞ்செரிச்சல், அமில மேல்வரத்து(Reflex), ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், மலச்சிக்கல், ரத்த மற்றும் சீதபேதி, நீர்க்கசிந்து அரிப்பைத் தரக்கூடிய ‘எக்ஸீமா’ எனும் தோல் நோய், கண்களின் எரிச்சல், புகைச்சல் மற்றும் புளிப்பு உண்டாகுதல், உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்), மூட்டுக்களில் ஏற்படும் வலி, சிறுநீருடன் விந்து கலந்து வெளியேறுதல், வயிற்று வலி, உடலில் ஏற்படும் பலவித வீக்கங்கள், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் தொற்றுக்கள் போன்ற மிக நீண்ட பட்டியலான நோய்களைத் தீர்த்து வைக்கும் திறன் படைத்தது.

  இவற்றை மனதில் கொண்டுதான் ஆவாரையின் ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழி தமிழில் நிலைபெற்றது
  எனலாம்.ஆவாரை பற்றிய அகத்தியர் குணபாடம் ஒன்று :

  ‘தங்கம் எனவே சடத்திற்குக் காந்தி தரும்
  மங்காத நீரை வறட்சிகளை - அங்கத்தாம்
  மாலைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
  பூவைச்சேர் ஆவாரம் பூ’

  ஆவாரம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், சருமம் பொன்னிறமாகி அழகு கூடும், எந்த வீக்கமும் விரைவில் கரைந்து போகும், உடலின் வறண்ட தன்மை மாறும், நாவறட்சி நீங்கும், உடலில் உப்பு போன்ற வெண்மை படிதல் தடுக்கப்பட்டு துர்நாற்றம் தரக்கூடிய கற்றாழை வாடை அகலும் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.

  மேலும், இன்னொரு பாடலில் பல வகைப்பட்ட சிறுநீர் கோளாறுகளை அகற்றும் திறன் கொண்டது ஆவாரை என்று குறிப்பிடுகிறார் அகத்தியர். சிறுநீரோடு சர்க்கரை கலந்து வெளியேறுதலும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலும், சிறுநீர் தொற்றும் ஆவாரையால் ஒழிந்து போகும் என்று பாடியிருக்கிறார். ஆவாரையின் மருத்துவப் பயன்கள் :

  * ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்; பற்கள் பலம் பெறும். இதையே உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும்.

  * ஆவாரை விதையைக் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.

  * ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும்.

  * ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும்.

  * ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும்.

  * ஆவாைரச் செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீேராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும்.

  * ஆவாைர பஞ்சாங்கம் வாங்கி குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின் அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர் சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த உடல் பலம் பெறும். அதிக சிறுநீர் போவது மட்டுப்படும்.

  * ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும் போகும்.

  * ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

  * ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும்.

  * ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.

  * ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.

  * ஆவாைரயின் வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை நோயும் கட்டுக்கடங்கும்.

  * ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும்.

  * ஆவாரையைத் தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும்.

  ஆவாரை சாலை ஓரங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. அதன் மிகப் பெரிய மருத்துவ குணம் தெரிந்து இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம்.ஆவாரையின் மகிமையை மனதில் கொண்டே ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழி தமிழில் நிலைபெற்றது எனலாம்  Sponsored Links
  Last edited by chan; 13th Oct 2016 at 03:05 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter