குளிர்காலத்தில் சருமம் அழகாக ஜொலிப்பதற்கான சில அழகு இரகசியங்கள்!!!

பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகப்படியான சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அதிலும் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் மிகவும் கடுமையான சரும பிரச்சனைகளை சந்திப்போம். அதில் குறிப்பாக சரும வறட்சி, சரும வெடிப்புகள் மற்றும் இதுப்போன்று பல பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கவை.

இப்படி சரும வறட்சி ஏற்படும் போது, அவற்றை மறைப்பதற்கு, நிறைய மேக் அப்புகளை பலர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தினால் தான், சரும வறட்சி தான் இன்னும் அதிகரிக்கும்.

மேலும் சிலருக்கு சருமத்தின் நிறம் மாற்றம் அடைய ஆரம்பிக்கும். அதற்கு காரணம் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் தான். அப்படி சருமத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலோ அல்லது சருமம் அதிகம் வறட்சி அடைய ஆரம்பித்தாலோ, சருமத்திற்கு அதிகப்படியான கவனம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து, அதனை தவறாமல் பின்பற்றி, குளிர்காலத்திலும் அழகாக ஜொலியுங்கள். குறிப்பாக இந்த டிப்ஸ்கள் இளம் தலைமுறையினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

மாய்ஸ்சுரைஸ் செய்யுங்கள்
குளிர்காலத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தவறாமல் வெளியே செல்லும் போது மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன், சருமத்திற்கு எண்ணெய் மசாய் செய்து வர வேண்டும். இதனால் சருமமானது வறட்சியில்லாமல் இருப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.

தண்ணீரை அதிகம் குடிக்கவும்
சரும வறட்சியை தடுக்க ஒரு சிறந்த வழியென்றால், அது தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் அதிகம் குடிக்கின்றோமோ, அதற்கேற்றாற் போல் சருமம் வறட்சியின்றி மின்னும்.

சுடுநீர் குளியல் வேண்டாம்
பொதுவாக குளிர்காலத்தில் அனைவரும் மிகவும் சூடான நீரில் குளிப்பார்கள். ஆனால் அப்படி அளவுக்கு அதிகமான சூட்டில் உள்ள நீரில் குளித்தால், சருமத்தில் வறட்சி அதிகரித்து, வெடிப்புகள் தான் அதிகரிக்கும். எனவே சூடான தண்ணீர் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் சிகிச்சை வேண்டாம்
அழகுப் பொருட்கள் பலவற்றில் ஆல்கஹால் அதிகம் உள்ளது. அத்தகைய பொருட்களை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் ஆல்கஹாலானது சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தும்.

உதடு பராமரிப்பு
குளிர்காலத்தில் குறிப்பாக உதடுகளில் தான் வறட்சி அதிகம் இருக்கும். அப்படி உதடுகளில் வறட்சி ஏற்படாமல், உதடுகள் அழகாக மென்மையாக இருக்க வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டிற்கு சிறிது வெண்ணெய் தடவிக் கொண்டு தூங்கினால், வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மூக்கு வெடிப்பு
சிலருக்கு மூக்கைச் சுற்றி வெடிப்புகள் காணப்படும். அத்தகையவர்கள் தினமும் காலையில் எழுந்ததும், மூக்கைச் சுற்றி ஷியா வெண்ணெய் தடவிக் கொண்டு நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும்.

மேக்-அப் போடும் போது..
குளிர்காலத்தில் மேக் அப் போதுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அதனை எளிதாக்க வேண்டுமானால், மேக் அப் போடும் முன், சிறிது கோல்ட் க்ரீமை முகத்திற்கு தடவிக் கொண்டு பின் மேக் அப் போட்டால், சருமம் வறட்சியில்லாமல் ஈரப்பசையுடன் இருக்கும்.

ஃபேஸ் பேக்
சருமத்தை மேலும் பொலிவாக்க நினைத்தால், முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுங்கள். அதிலும் பழங்களைக் கொண்டு மட்டும் ஃபேஸ் பேக் போடுவது, சரும அழகை அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளைப் போக்கும்.

ஸ்கரப்
சிலர், சருமத்தில் உள்ள சொசொரப்பை போக்க ஸ்கரப் செய்வார்கள். ஆனால் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஸ்கரப் செய்வதாக இருந்தால், பேக்கிங் உப்பு மற்றும் உப்பு கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.

குறிப்பிட்ட பொருட்களை தவிர்க்கவும்
பொதுவாக தேன் சருமத்தின் அழகை அதிகரிக்கும் பொருட்களில் ஒன்று. ஆனால் இந்த பொருளை குளிர்காலத்தில் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் தேனானது சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முகப்பரு இருந்தால்..
முகப்பருவுடன், சரும வறட்சியால் அவஸ்தைப்படுபவர்களாக இருந்தால், தினமும் வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவி வர வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை தவிர்க்கலாம்.

சில காய்கறிகளை தவிர்க்கவும்
காய்கறிகள் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் சில காய்கறியான அஸ்பாரகஸை சாப்பிட்டால், சருமத்தில் வறட்சியைத் தான் அதிகரிக்கும். எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.