எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க, குளிக்கும் நீரில்
முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு, நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வந்தால் பிரச்னை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபக சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் 3 வேளை மூன்று தேக்கரண்டி, இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
சீமை அகத்தி: இதன் இலை, வேர், பூ உள்ளிட்ட அனைத்து பகுதியும் மருந்தாக பயன்படுகிறது. படர்தாமரையை குணமாக்குவதில் சிறந்தது. இதன் இலையை அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் சேர்த்து, தோலில் பூசினால் தோல் நோய்கள் குணமடையும். எலுமிச்சை சாறுடனும், இந்த இலையை அரைத்து தடவலாம்.
ஆடாதொடை: வாதம் மற்றும் தீராத சளி, இருமல், உடம்பு இளைத்தல், வாந்தி, விக்கல், உள்ளிட்டவைகளுக்கு உடனடி தீர்வாக இம்மூலிகை பயன்படுகிறது. குரல் ஒலியை மெல்லியதாக்கும் தன்மை கொண்டது. இதன் சாற்றை சிறிதளவு தேனில் கலந்து, அருந்தி வர, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களை முழுமையாக நீக்குகிறது. இருமல், மற்றும் காய்ச்சல் நோயால் இம்மருந்து உண்பவர்கள், அதிகளவு நீர் பருக வேண்டும்.
அமுக்கிரா: அமுக்கிரா கிழங்கு, அசுவகந்தம், மற்றும் இருளிச்செவி உள்ளிட்ட பெயர்களாலும், அமுக்கிரா மூலிகை அழைக்கப்படுகிறது. இக்கிழங்கை பச்சையாகக் கொண்டு, பசுவின் கோமியம் கலந்து அரைத்து, ஓரளவு கொதிக்க வைத்து, சூடாறிய பின்னர், தடவி
வந்தால், கழுத்துக் கழலை மற்றும் வீக்கம் முற்றிலுமாக மறையும். இக்கிழங்கை பாலில் வேகவைத்து கழுவிய பின்னர், நன்றாக உலர்த்தி, பொடி செய்து ஒரு வேளைக்கு, 4 கிராம் அளவு, தேனில் கலந்து உண்டு வர ஊளைச்சதை, உடல் பருமன் குறையும். இவ்வாறு மருந்து உண்ணும்போது, உணவின் அளவையும் கட்டுப்படுத்த வேண்டும். இக்குறிப்புகளை, மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.

Similar Threads: