Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

How to give Oil Massage & Bathe the New born baby-குழந்தைக்கு ஆயில் மசாஜும், குளி


Discussions on "How to give Oil Massage & Bathe the New born baby-குழந்தைக்கு ஆயில் மசாஜும், குளி" in "Newborn and Infants" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to give Oil Massage & Bathe the New born baby-குழந்தைக்கு ஆயில் மசாஜும், குளி

    பச்சிளம் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ்

    டாக்டர் என். கங்கா




    குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு முன்னால், எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அதற்கான வழிமுறைகள் -

    1. குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
    2. பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.
    3. தினமும் 2 - 3 முறை அல்லது ஒரு முறையாவது தருவது நல்லது.
    4. சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.



    எப்படி மசாஜ் செய்வது?

    1. அறை / இடம் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்.
    2. மசாஜ் செய்பவர்களுக்கு நீண்ட நகங்கள், குழந்தையைக் குத்திக் காயப்படுத்தும்படியான நகைகள் இருக்கக்கூடாது.
    3. மெல்லிய, இனிமையான இசையும் சேர்ந்தால் இன்னும் மகிழ்ச்சிதான்!
    4. மெதுவாக, ஆனால் குழந்தை உணரும் அளவு அழுத்தமாக மசாஜ் செய்யலாம்.
    5. மசாஜ் செய்யும் முன் இரண்டு உள்ளங்கைகளையும் நன்கு தேய்த்து சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்.
    6. இரண்டு மூன்று மாதமே ஆன குழந்தைக்கு மசாஜ் செய்யப்படும் பகுதியைத் தவிர, மற்ற பாகங்களை வெதுவெதுப்பாக மூடி வைக்க வேண்டும்.
    7. கைகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
    8. குழந்தையின் கை கால் அசைவுகளுடன் ஒத்துப்போகுமாறு மசாஜ் செய்ய வேண்டும். அதாவது, குழந்தை கைகளை நீட்டினால் நீட்டிய வாக்கில் மசாஜ் செய்ய வேண்டும். நம் விருப்பப்படி கை கால்களை நீட்டிப் பிடிப்பதை குழந்தை விரும்பாது.
    9. கை, கால் தசைகளை அதிகமாக அழுத்துவது, பிசைவது, முறுக்குவது கூடாது.
    10. நம் கைகள் மிகவும் மென்மையாக குழந்தை மேல் வழுவழுவென்று ஓட வேண்டும்.



    குழந்தை மசாஜை விரும்புகிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

    1. குழந்தை அமைதியாக இருக்கும்.
    2. கண்ணோடு கண் பார்த்து சிரிக்கும்.
    3. பேச ஆரம்பிக்கும்.
    4. கை விரல்களைச் சப்ப ஆரம்பிக்கும்.
    5. மூச்சு சீராகும்.
    6. கைகளை, கால்களைப் பிடித்துக்கொண்டு விளையாடும்.
    7. தூங்க ஆரம்பிக்கலாம்.



    மசாஜ் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டிய தருணங்கள்

    1. அதிகமான அழுகை.
    2. முகத்தில் பய உணர்வு.
    3. தோலின் நிறம் வெளுத்தல் / நீலமாகத் தெரிதல்
    4. கண்ணோடு கண் பார்க்காமல் வெறித்துப் பார்த்தல்.
    5. உடம்பை வளைத்தல் / முறுக்குதல்.
    6. அதிக விக்கல்.
    7. வாந்தி.



    சில ஆராய்ச்சி முடிவுகள்

    1. இளம் வயதில் தொடு உணர்வு அனுபவிக்காத குழதைகளுக்கு உடல் எடை மற்றும் உயரம் குறைவாகவே இருக்கும். நல்ல ஊட்டச் சத்துணவு கிடைத்தாலும் பலன் இருக்காது.
    2. குறைமாத குழந்தைக்கு தினமும் 3 முறை 15 நிமிடங்கள் மசாஜ் செய்தால் எடை வேகமாக அதிகரிக்கிறது.
    3. மருத்துவமனையிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
    4. இந்தக் குழந்தைகளை மூளை மற்றும் நரம்பு மண்டலம் விரைவில் முதிர்ச்சி அடைகிறது.
    5. குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதைவிட எண்ணெய் மசாஜ் செய்யப்பட்ட குழந்தைகள் சீக்கிரம் அமைதியாகத் தூங்குகின்றன.
    6. ஆறு வாரங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் உள்ள எபிநெப்ரின், நார் எபிநெப்ரின் (Epinephrine; non Epinephrine), கார்டிசால் போன்ற மன அழுத்த வேதிப் பொருட்கள் குறைந்து, செரட்டோனில் (Serotonin) என்ற வேதிப்பொருள் அதிகரித்து, குழந்தைக்கு மன அமைதி ஏற்படுகிறது.



    சரியான வழியில் குழந்தையைத் தேய்த்துக் கொடுப்பது (மசாஜ் செய்வது)

    1. முதலில் குழந்தையின் தலையில் சிறு வட்டமாகத் தேய்க்கவும். பிறகு, குழந்தையின் இரு கைகளாலும் நெற்றியின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்புறமாகப் புத்தகத்தைத் திறப்பதுபோல் தேய்க்கவும். குழந்தையின் தாடையில் சிறு வட்டங்களாகத் தேய்க்கவும்.
    2. கையில் இருக்கும் எண்ணெய்யை குழந்தையின் மார்பில் தேய்க்கவும்.
    3. இரண்டு கைகளையும் மேலிருந்து கீழாக நீவி விடவும். கைகளிலுள்ள விரல்களைத் திறந்து மசாஜ் செய்யவும்.
    4. வயிற்றில், வலமிருந்து இடமாக ஒவ்வொரு கையாக மாற்றி மசாஜ் செய்யவும்.
    5. உங்கள் இரண்டு கைகளுக்கும் இடையே குழந்தையின் கால்களைப் பற்றிக்கொண்டு நீவி விடவும். பாதங்கள் இரண்டையும் மசாஜ் செய்யவும்.
    6. முதுகை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் மசாஜ் செய்யவும். தோள் முதல் பாதம் வரை நீவி விடவும். மசாஜை ஒரு முத்தம் கொடுத்து முடிக்கவும்.



    (நன்றி – இந்தியக் குழந்தைகள் நலக்கழகம் வழங்கும் பெற்றோர்களுக்கான கையேடு)

    குழந்தையின் கண்களுக்கு மசாஜ்
    குழந்தையின் மூக்குக்கு அருகில் இரண்டு பக்கமும் உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும். விரல்களை லேசான அழுத்தத்துடன் நகர்த்தி, கண்ணைச் சுற்றி நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்துக்கு வரவும். வலது கண்ணுக்கு நம் இடது ஆள்காட்டி விரலும், இடது கண்ணுக்கு நம் வலது ஆள்காட்டி விரலும் பயன்படுத்தப்பட வேண்டும். இரு கண்களின் இமை மீதும் லேசாக தடவவும்.

    நெற்றிக்கு மசாஜ்
    குழந்தையின் கண்களை மறைக்காமல், நமது இரண்டு கைகளின் விரல்களை நெற்றியில் தலைமுடிக்கு அருகில் வைக்க வேண்டும். லேசான அழுத்தத்துடன் இடதுபுறம், வலதுபுறம் என்று விரல்களை நகர்த்தவும்.

    முதுகுக்கு மசாஜ்
    குழந்தையை அதற்கு வசதியாக குப்புறப் படுக்கவைத்து, நமது இரண்டு உள்ளங்கைகளையும் முதுகில் வைத்து பக்கவாட்டிலும், மேலும் கீழுமாக மசாஜ் செய்யவும். குழந்தையை ஒருவர் தோளில் போட்டுக் கொண்டு, மற்றவர் மசாஜ் செய்யலாம்.

    இப்படி தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது மசாஜ் செய்யப்படும் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, மன முதிர்ச்சி அதிகமாகிறது.
    மசாஜ் செய்யும்போது குழந்தை அமைதியாக இருக்க வேண்டும். மசாஜ் முடிந்தவுடன் உடனே கைகளை எடுக்காதீர்கள். சிறிதுநேரம் தடவிக்கொடுத்து, குழந்தை மேலும் மசாஜ் அல்லது தடவுவதை எதிர்பார்க்கிறதா என்று உணருங்கள்! அமைதியாகத் தூங்கிவிட்டால் அல்லது கை கால்களை உதைத்து விளையாட ஆரம்பித்தால், குழந்தை திருப்தி அடைந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

    குழந்தையின் இடுப்புக்குக் கீழ் தொடைப்பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இரண்டு கட்டை விரல்களும் மேல் பக்கமும் மற்ற விரல்கள் கீழ்ப் பக்கமும் இருக்க வேண்டும். கணுக்காலை நோக்கி லேசாக வட்டமிடுவது போன்று கட்டை விரலைச் சுழற்றவும். இரண்டு கட்டை விரல்களாலும் மாற்றி மாற்றி நிதானமாகச் சுழற்ற வேண்டும். இதே முறையில், முழுங்காலுக்குக் கீழ் ஆடு தசைப் பகுதிகள் செய்யலாம்.

    வயிற்றுப் பகுதிக்கு மசாஜ்
    குழந்தையை மல்லாத்திப் படுக்கவைக்கவும். இடது உள்ளங்கை வயிற்றில் படுமாறு, கட்டை விரல் தொப்புள் அருகில் இருக்குமாறு வைக்க வேண்டும். முழுக் கையையும் தொப்புளைச் சுற்றி மெதுவாக லேசான அழுத்தத்துடன் வலமிருந்து இடமாக நகர்த்தவும். இதேபோல், குழந்தையின் வயிற்றுப் பகுதியின் இடதுபுறம் உங்கள் வலதுகையை வைத்து இடமிருந்து வலமாகச் செய்யவும். இது குழந்தையின் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி சீர் செய்யும்.

    தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதிக்கு மசாஜ்
    குழந்தையை மல்லாத்திப் படுக்கவைக்கவும். வலது உள்ளங்கையை குழந்தையின் மார்பில் இடது பக்கமும், இடது உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வலது பக்கமும் வைக்கவும். கட்டை விரல்களை கீழ்நோக்கி நகர்த்தி ஒரே கோடாக வையுங்கள். இப்போது குழந்தையின் மார்பு உங்கள் கைகளுக்கு நடுவில் ஒரு முக்கோணம்போல் தெரியும். இந்த முக்கோணத்தை கீழிலிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் நிதானமாக லேசான அழுத்தத்துடன் நகர்த்துங்கள். கட்டை விரல்கள் தொப்புள் பகுதியை அடையும் வரை கோணத்தை நகர்த்தவும்.

    தோள்பட்டைக்கு – குழந்தையை மல்லாத்திப் படுக்கவைக்கவும். இரண்டு உள்ளங்கைகளையும் குழந்தையின் மார்பின் இரண்டு பகுதியிலும் வைக்கவும். கைகளை மேல் நோக்கி லேசான அழுத்தத்துடன் நகர்த்தி, அப்படியே தோள்பட்டைகளை அடைந்து புஜங்களை மசாஜ் செய்யவும். குழந்தையின் மணிக்கட்டுவரை மசாஜ் செய்யவும்.

    கைகளுக்கு மசாஜ்
    தொடையைப் பிடித்ததுபோல் உங்களை இரு கைகளாலும் குழந்தையின் தோள்பட்டைகளின் கீழே பிடித்துக்கொள்ளவும். ஒரு கையின் கட்டை விரல் மேல் பாகத்திலும், மற்றொரு கையின் கட்டை விரல் கீழ் பாகத்திலும் இருப்பதுபோல் உங்கள் கைகளால் குழந்தையைப் பிடித்துக்கொள்ளவும். லேசான அழுத்தத்துடன் உங்கள் கைகளை மெதுவாக நகர்த்தி, முழங்கை வரையிலும் பிறகு தொடர்ந்து மணிக்கட்டு வரையிலும் பிடித்து விடுங்கள்.

    உள்ளங்கைக்கும் விரல்களுக்கும் மசாஜ்
    குழந்தையின் உள்ளங்கையை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்துக்கொண்டு, உங்கள் விரல்களால் குழந்தையின் விரல்களில் தொடங்கி உள்ளங்கை மணிக்கட்டுவரை தட்டி, லேசான அழுத்தத்துடன் நீவிவிடவும்.
    தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 27th Sep 2015 at 04:43 PM.
    jv_66 likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சிறு குழந்தைகளைக் குளிப்பாட்டுவது எப்ப&a

    சிறு குழந்தைகளைக் குளிப்பாட்டுவது எப்படி?

    டாக்டர் என்.கங்கா




    குழந்தைக்கு டவல் பாத் தரப்படும் அறை வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். ஏஸி அறையாக இருந்தால், அதை சூடு நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். (Heat Mode). இதமான சூட்டில் (90 – 100 F), ஒரு பெரிய பேஸினில் வெந்நீர், அழுத்தமான மென்மையான 2 துண்டுகள், கண்களைத் துடைக்க பஞ்சு உருண்டைகள் அல்லது மென்மையான சிறு துணிகள், குழந்தைக்கு வேண்டிய உடைகள், குளியலுக்குப் பிறகு போர்த்திவிட தலைக்குல்லாயுடன் கூடிய டவல் (Hooded towel).
    சரிம்மா! எல்லாம் ரெடி! எப்படி டவல் பாத் கொடுப்பது? ஆரம்பிக்கலாம் என்றால் மகள்!

    குழந்தையின் உடைகளை கழற்றிவிடாதே! நன்கு ஒரு அழுத்தமான டவலால் போர்த்தி வைத்துக்கொள்! வைத்திருக்கும் வெந்நீரை உன்னுடைய மணிக்கட்டில் அல்லது உள்ளங்கைப் பகுதியில் ஊற்றிப் பாரு! உனக்கு லேசான சூடுதான் இருக்க வேண்டும்! பஞ்சு உருண்டைகளை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து கண்களின் இமைகளை துடைத்துவிடு! மூக்குப் பகுதியில் ஆரம்பித்து காதை நோக்கி சுத்தம் செய்யம் வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு தனி பஞ்சு உருண்டை அல்லது மெல்லிய பருத்தித் துணி. ஆச்சா! பிறகு, வேறு ஒரு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து, முதலில் மூக்கைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக, லேசான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்! பிறகு, காதின் வெளிப் பகுதியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.

    காதின் உட்பகுதியில் எதுவும் செய்யக்கூடாது. பிறகு இரு கன்னங்கள், வாய்ப்பகுதி, தாடை, கழுத்து ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். செய்தாயா? ஓகே! இப்போது, குழந்தையின் சட்டையை அவிழ்த்துவிட்டு நெஞ்சு, வயிறு ஆகியவற்றை, வெந்நீரில் நனைத்து பிழிந்த வேறொரு சுத்தமான துணியால் சுத்தம் செய்!

    தொப்புள் காயவில்லையென்றால், மிகவும் கவனமாக அந்தப் பகுதியை ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஈரம் பட்டுவிட்டால், உடனடியாக நன்கு உலர்ந்த துணியால் துடைத்துவிட வேண்டும். தொப்புள் அருகிலிருந்து துடைக்க ஆரம்பித்து வெளிப்புறமாகத் தொடர வேண்டும். பிறகு, கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

    கைகளின் அக்குள் மற்றும் கைகளின் மடிப்புகளை கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும். அங்கு கிருமித் தொற்றும் பூசணத் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!

    அம்மா, நீங்க இன்னும் பாப்பாவின் தலையை சுத்தம் செய்வது பற்றிச் சொல்லவில்லையே, பொறுமையிழந்து ஞாபகப்படுத்தினாள் மகள்.
    எனக்கு ஞாபகம் இருக்கே! குழந்தையைக் குளிப்பாட்டுவது பொறுமையாக, படிப்படியாகச் செய்துகொண்டு போக வேண்டும். இது, உன் அவசரத்துக்கெல்லாம் சரிப்பட்டுவராது என்றாள் அம்மா.
    கோபிச்சுக்காதீங்க அம்மா! நீங்க சொல்றபடி பொறுமையா செய்றேன், சொல்லுங்க என்றாள் மகள். அம்மா தொடர்ந்தாள்.

    அடுத்தபடியாக, கழுத்துடன் சேர்த்து தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வெந்நீரில் நனைத்த மெல்லிய காட்டன் துணியால் தலையை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பின்கழுத்து, முதுகு ஆகியவற்றை சுத்தம் செய்து, நன்கு துடைத்து உலர்ந்ததும், மேல் சட்டை, கையுறை எல்லாம் போட்டுவிட வேண்டும்.

    பிறகு, பொறுமையாக குழந்தையின் இடுப்பு துணியை அகற்றி, பிறப்பு உறுப்பு பகுதியை, முன்புறம் தொடங்கி பின்புறமாகச் சுத்தம் செய்ய வேண்டும். இது முக்கியம். தொடைப் பகுதியை மென்மையாக அகட்டி, விரித்து மடிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். வேறு ஒரு துணியால், முதுகின் கீழ்புறம் (buttocks) புட்டப்பகுதி, கால்கள், பாதங்களை சுத்தம் செய்து இடுப்புத் துணி, காலுறை அணிவித்து குழந்தையை துண்டால் நன்றாகச் சுற்ற வேண்டும்.

    செய்யக்கூடாதவை என்னவெல்லாம் தெரியுமா?
    1. குழந்தைக்கு பால் கொடுத்த உடனேயே குளிக்க வைக்கக்கூடாது.
    2. காது, மூக்கு கண்களில் எண்ணெய் போன்றவற்றை ஊற்றக்கூடாது.
    3. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஊதக்கூடாது.
    4. தொண்டையிலிருந்து கையை உள்ளேவிட்டு சளியை எடுக்கக்கூடாது.
    5. தலையில் எண்ணெய் தடவி, கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை தேய்த்துக் குளிக்க வைக்கக்கூடாது.
    6. சாம்பிராணி போடக்கூடாது.
    7. பவுடர் போடக்கூடாது.
    8. கண்களில் மை தடவக்கூடாது.
    9. புருவத்தில் மை தடவக்கூடாது
    10. நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பதைக்கூட தவிர்ப்பது நல்லது.

    பேசினில், குழந்தையைக் கிடத்தி குளிக்க வைப்பதற்கான (Tub Bath) வழிகாட்டி நெறிமுறைகள் -

    பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி உதிர்ந்த பிறகுதான், பேசின் குளியல் செய்யலாம். குழந்தையின் தலையைச் சுத்தம் செய்வதும் அப்புறம்தான். பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைகுளிக்க வைக்கலாம். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்று குளிக்கவைக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தோலின் PH (அமிலத்தன்மை) முதலில் 6.3 ஆக இருந்து பிறகு 4 நாட்களில் அது 4.5 ஆக குறைகிறது. அதாவது, ஒரு அமிலத்தன்மையுடன் தோல் இருப்பதால், இது ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது. இதைப் பாதிக்காத அளவு தோலை சுத்தம் செய்யும் மென்மையான சோப் போன்றவற்றை குழந்தை பிறந்த 4-ம் நாள் முதல் பயன்படுத்தலாம்.

    பேசின் குளியல் முறை
    பேசினில் முக்கால் அளவு இளம் சூட்டில் உள்ள வெந்நீர் நிரப்பவும்.
    குழந்தையின் கழுத்தையும் தலையையும் தாங்கிப் பிடித்தவாறு, கழுத்துக்குக் கீழ் குழந்தையை பேசினில் இருத்தவும். ஒரு முறை தண்ணீரை மாற்றி, குழந்தையை சுத்தம் செய்யவும். தலையை சிறிது மேல் நோக்கிப் பிடித்து, பின்பக்கம் வழியுமாறு நீரை ஊற்றவும். குழந்தையின் முகத்தில் நீர் வழியாதபடி நம் கையை குழந்தையின் நெற்றியில் தடுப்புபோல் வைத்துக்கொள்ளலாம். தலையை மிருதுவான சோப் அல்லது ஷாம்பு போட்டு சுத்தம் செய்யலாம். இரண்டு நாட்கள் விட்டு, மூன்றாம் நாள் தலையை சுத்தம் செய்யலாம். வெய்யில் கடுமையாக இருக்கும் காலங்களில், குழந்தைக்கு நோய் ஏதும் இல்லையெனில், ஒருநாள் விட்டு ஒருநாள் தலைகுளிக்க வைக்கலாம். பேசினில் குழந்தையின் உடல்பகுதி நனையும்வரை மட்டுமே நீர் இருக்க வேண்டும்.

    நமது பாரம்பரிய முறைப்படி குளிக்கவைக்க வழிகாட்டி நெறிகள் –
    1. குளிக்கவைப்பவர், தரையில் இரண்டு கால்களையும் நன்கு நீட்டி உட்கார வேண்டும்.
    2. கணுக்கால் அருகில் கால்களின் இடைவெளியில் குழந்தையின் முகம் இருக்குமாறு குப்புறப் படுக்கவைக்க வேண்டும்.
    3. குழந்தையின் தலையின் பின்பகுதி, கழுத்து, முதுகு, புட்டம் ஆகியவற்றில் நீர் ஊற்றி, சோப் போட்டு சுத்தம் செய்து குளிக்கவைக்கவும்.
    4. குழந்தையை திருப்பி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியை சுத்தம் செய்யவும்.
    5. காதுக்குள் நீர் புகாமல், காதுகளின் பின்புறம், கழுத்து மடிப்பு, அக்குள், கைகளை சுத்தம் செய்யவும்.
    6. இறுதியாக, குழந்தையின் இடுப்பு, பிறப்பு உறுப்பு பகுதி மற்றும் கால்களை சுத்தம் செய்யவும்.
    7. பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்யும்போது, முக்கியமாக பெண் குழந்தைக்கு முன்புறத்திலிருந்து பின்புறமாகச் செல்ல வேண்டும்.
    8. குழந்தையை மிருதுவான காட்டன் துண்டினால் துடைத்து உடனே உடைகளை அணிவிக்கலாம்.
    ரொம்ப முக்கியமாக, வேகமாக அழுத்தித் துடைப்பதை அல்லது தேய்ப்பதைத் தவிர்க்கவும். காரத்தன்மை கொண்ட சோப் வகைகளை தவிர்க்கவும்.



    Last edited by chan; 27th Sep 2015 at 04:48 PM.
    jv_66 likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    குழந்தைகளை குளிப்பாட்டும் கலை

    குழந்தைகளை குளிப்பாட்டும் கலை

    டாக்டர் என். கங்கா



    ‘என்னம்மா நீங்க! எதற்கு எடுத்தாலும் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறீர்களே! குழந்தையைக் குளிக்கவைக்கவும்கூட வழிமுறைகளா? அது ஒரு கலையா?’ என்று அலுத்துக்கொண்டாள், விஞ்ஞானியாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் மகள்.

    ‘உன் அம்மா குழந்தை மருத்துவர் இல்லையா? அவர்கள் சொல்றபடிதான் கேளேன். உங்களுக்குத்தான் வழிகாட்டி நெறிமுறைகளை ரெடியா வைச்சிருக்காங்க’ என்றார், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர், அப்பா மணி!

    ‘சரி, சரி! உங்க பக்குவப் பிரகாரம் சொல்லுங்க! அப்படியே உங்கள் அருமைப் பேத்தியை குளிக்கவைப்போம்’ என்று தங்கவேல் - தங்கலட்சுமி பாணியில் பணிந்தாள் பெண். அம்மாவும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

    சிறு குழந்தையின் தோல் மிகவும் மிருதுவானது. அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். குழந்தையின் தோல் பெரியவர்களின் தோலைவிட பாதிக்குப் பாதி மென்மையானது. அடர்த்தி குறைவானது. உடல் எடைக்கும் தோல் பரப்புக்கும் உள்ள விகிதம் (Body weight: Surface Area of Body) 5 – 7 மடங்கு பெரியவர்களைவிட அதிகம். குழந்தையின் தோலின் மேல் பரப்பில் (Epidermis) நீரும் கொழுப்பும் கலந்த ஒரு பரப்பு (Hydrolipid filling) இருக்கிறது. தோலில் உள்ள சுரப்பிகளால் சீபம் (Sebum) எனப்படும் ஒரு எண்ணெய்ப் பொருள் சுரக்கும். சிறிது வியர்வை இருக்கும். இதனால், தோல் மூலம் வெப்பம் வெளியேறுவது மிகவும் அதிகம். பிறந்த குழந்தையை அதுவும் குறைமாதக் குழந்தையை உடல் சூடு குறையாமல் பாதுகாப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

    குழந்தையைக் குளிக்கவைப்பது என்பது உடலைச் சுத்தப்படுத்துவது மட்டும் இல்லை. குழந்தைக்குத் தொடு உணர்வு மூலம் பலவற்றை மறைமுகமாக நாம் சொல்லிக்கொடுக்கிறோம். கை கால்களை முறையாக மசாஜ் செய்வதும், பிடித்துவிட்டு குளிக்கவைப்பதும், சிறு குழந்தையின் தோலில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு நல்ல வளர்ச்சியை அடைய உதவுகிறது. எடை குறைவுள்ள குழந்தை, பிறந்தவுடன் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தொடு சிகிச்சை (Touch Therapy) கட்டாயம் தேவை.

    உடல் உறுப்புகளில் மிகவும் பெரியது தோல்! ஆமாம்! உடலை மூடுவது மட்டும் தோலில் வேலை இல்லை! மூடுவதினால் உள் உறுப்புகளுக்கு சிறந்த ஒரு பாதுகாப்பு. தோல், உடல் வெப்பத்தைப் பராமரிக்கிறது. தொடு உணர்வால் பற்பல நன்மைகள்! மேலும், கிருமித் தொற்றிலிருந்து உடனடி பாதுகாப்பு. பிறந்த குழந்தையின் தோல் காரத்தன்மை உள்ளது. முதல் வாரத்தில் அது அமிலத்தன்மையாக மாறுகிறது. இது, நோய் எதிர்ப்புக்கு கட்டாயம் தேவை. அமிலத்தன்மை மாறி காரத்தன்மைக்கு அல்லது சம நிலைக்கு வந்துவிட்டால், நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடலிலிருந்து அதிக நீர் வெளியேறவும் ஏதுவாகிறது.

    வெப்ப நாடான இந்தியாவில், அறிவியல்ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் குழந்தைகளைக் குளிக்கவைப்பதற்கு சில நெறிமுறைகளை இந்தியக் குழந்தை மருத்துவக் கூட்டமைப்பு வரையறுத்துள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் சுத்தமான, வெதுவெதுப்பான பருத்தித் துணியில் குழந்தையை மெதுவாகத் துடைத்து, மற்றொரு வெதுவெதுப்பான டவலில் சுற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அழுத்தித் துடைத்து, தோலின் மேல் பூசியதுபோல் இருக்கும் வெண்மையான பிசுபிசுப்பை எடுக்கக்கூடாது. அதுதான் குழந்தையின் தோலுக்குப் பாதுகாப்பு. அந்தப் பிசுபிசுக்கும் பொருள், Vernic Caseosa எனப்படும்.

    மிகவும் எடை குறைந்த, அல்லது குறை மாதக் குழந்தையாக இருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது, முடிந்தால் ஆலிவ் எண்ணெய்யை உடலில் மென்மையாகத் தடவி விடலாம். எண்ணெய்க்கு எறும்புகள் வராமல் பாதுகாப்பது கட்டாயம்!

    குழந்தைக்கு வேறு பிரச்னைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், டவல் (ஸ்பான்ச்) குளியல் தரலாம். தொப்புள் கொடி விழுந்த பிறகு நமது வழக்கப்படியான குளியல் தரலாம்.

    ‘சரிம்மா! டவல் குளியல் எப்படி தர வேண்டும்?’ என்று கேட்டாள் மகள்!
    ‘குழந்தையைக் குளிக்கவைக்கும் முன், உன் கைகளை சோப் மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தமாக, விரல் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். உனக்கு நகம் இருந்தால் அவற்றை வெட்டிவிடு. உன் மோதிரம், வளையல், வாட்ச் போன்றவற்றையும் கழட்டிவிடு. அவை குழந்தையைக் காயப்படுத்தலாம்’ என்றாள் அம்மா.

    ‘என்ன இது? ஒரு சர்ஜன் அறுவை சிகிச்சைக்குத் தயாராவதுபோல் இருக்கு அறிவுரைகள்’ என்று தனது ஆபரேஷன் தியேட்டர் அனுபவத்தை வெளிப்படுத்தினார் அப்பா!

    ‘ஆமாம்! சிறு குழந்தையைத் தொடுவதற்கு முன் அவ்வளவு சுத்தம் தேவை. குழந்தைக்குப் பகல் நேரத்தில்தான் டவல் பாத் தர வேண்டும். டவல் பாத்துக்கு பிறகு பால் தரலாம்’.

    ‘டவல் பாத்துக்கு என்னென்ன பொருட்களை நான் தயார் செய்துகொள்ள வேண்டும்?’ என்று வியப்பு மேலிட கேட்டாள் மகள்!

    ‘சொல்றேன்… நீ புரிஞ்சுக்கணும்னுதானே இவ்வளவு மெனக்கிடறேன்’ என்று தொடர்ந்தார் டாக்டர் தாய்.




    Last edited by chan; 27th Sep 2015 at 04:50 PM.
    jv_66 likes this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    குழந்தையைக் குளிப்பாட்டும் முறை- How to Bathe the new born baby?

    குழந்தையைக் குளிப்பாட்டும் முறை

    டாக்டர் என். கங்கா



    குழந்தையின் இடுப்புத் துணி (நாப்கின்) மற்றும் பிறப்பு உறுப்பு பகுதி பராமரிப்பு:
    1. குழந்தையின் இடுப்புத்துணி பருத்தியால் ஆனதாக இருக்க வேண்டும்.
    2. இடுப்புத் துணியை (நாப்கின்) அடிக்கடி மாற்ற வேண்டும். சுமார் 2 - 3 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
    3. வீட்டிலேயே சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
    4. கிருமி நாசினிகள் போட்டு அலசக்கூடாது. அப்படி அலசினால், மறுபடி ஒருமுறை வெந்நீரில் அலச வேண்டும்.
    5. அலசிய துணியை நல்ல வெயிலில் காயவைக்க வேண்டும்.
    6. குழந்தையின் நாப்கின் மற்றும் உடைகள் உள்ள பீரோவில் அந்துருண்டை உபயோகிக்கக்கூடாது.

    கிருமி நாசினி மற்றும் அந்துருண்டை, வேதிப்பொருட்கள் கலந்தவை. குழந்தையின் மென்மையான தோலைப் பாதிக்கும்.

    குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதியை, ஒருநாளைக்கு 2 - 3 முறை வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    1. குழந்தை மலஜலம் கழித்தவுடன், வெந்நீரில் நனைத்த காட்டன் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
    2. உலர்ந்த துணியால் மட்டுமே சுத்தம் செய்வதுகூடாது.
    3. அழுத்தி தேய்க்கக்கூடாது. துணியால் துடைத்துவிடலாம்.
    தினமும் குளிக்க வைக்கும்போது, ஒருமுறை தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எதாவது ஒரு எண்ணெய்யை குடும்பத்தின் கலாசாரத்துக்கு ஏற்ப தடவி, பிறகு சுத்தம் செய்யலாம். மருத்துவரின் அறிவுரைப்படி லோஷனும் பயன்படுத்தலாம்.

    குறைமாதக் குழந்தையின் தோல் பராமரிப்பு
    குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் மேல் தோல் (Epidermis), உள்தோல் (Dermis), தோலின் அடிப்பகுதி (Sub cutanious tissue / fat) ஆகியவை, முழு மாதத்தில் பிறந்த குழந்தையைவிட மிகவும் மென்மையாக இருக்கும்.

    தோலின் அடர்த்தியும், சுருங்கி விரியும் தன்மையும் குறைவாக இருக்கும். தாயின் கருவில் 28 - 34 வாரங்களில்தான், தோலின் பகுதிகள் படிப்படியாக முதிர்ச்சி அடைகின்றன. போதுமான நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் வெப்பமும் நீரும் வெளியாவதைத் தடுக்கும் சக்தி ஆகியவை இந்தக் காலகட்டத்தில் ஏற்படுகின்றன.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த சக்திகள் குறைவாக இருப்பதால், உடலில் தண்ணீர், சூடு ஆகியவை அதிகமாக வெளியேறிவிடும். மென்மையான தோலின் மூலம் நோய்க் கிருமிகள் எளிதில் தாக்கக்கூடும். இந்தச் சமயத்தில் தோலின் பராமரிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

    குறைமாதக் குழந்தையை எப்படி சுத்தம் செய்வது?
    1. குழந்தையை சுத்தம் செய்யும் முன், கைகளை சுமார் 1 நிமிடம் எடுத்துக்கொண்டு சோப் போட்டு நிறைய நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
    2. வாட்ச், மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட் போன்ற எல்லாவற்றையும் கழற்றிவிட வேண்டும்.
    3. கைகளை சுத்தம் செய்ய, ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
    4. குழந்தை 2.5 கிலோ எடை வரும்வரை, ஸ்பான்ச் (டவல்) குளியல் மட்டும்தான். பிறகு பேசின் குளியல் செய்யலாம்.
    5. என்ன சோப்? அதிக கலர், வாசனை இல்லாத அமிலத்தன்மை இல்லாத சோப் நல்லது. கட்டி சோப் அல்லது திரவ சோப் பயன்படுத்தலாம்.

    சிறு குழந்தைக்கு ஷாம்பு தேவையா? என்ன ஷாம்பு பயன்படுத்தலாம்?
    குழந்தையின் மென்மையான தலைமுடிக்கு சாதாரணமாக ஷாம்பு தேவையில்லை.

    குளிக்கப் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி முடியையும் சுத்தம் செய்யலாம்.

    அடர்த்தியான முடி அல்லது தலையில் ஏதாவது நோய்த் தொற்று உள்ள குழந்தையின் முடிக்கு ஷாம்பு போட்டு சுத்தம் செய்யலாம்.

    ஷாம்புவில் செயற்கையாக சேர்க்கப்படும் கலர் வாசனை இருக்கக்கூடாது. சல்ஃபேட் வகையான ஆபத்தான பொருட்கள் இருக்கக்கூடாது. ஒவ்வாமை உண்டாக்கும் புரதங்கள், (உ.ம்) சில வகை முட்டை கலந்த ஷாம்பு இருக்கக்கூடாது. தோலின் அமிலத்தன்மையை பாதுகாப்பதாக அவை இருக்க வேண்டும்.

    வைட்டமின் A,C,E போன்றவை, புளிப்புச் சுவை பழங்களின் கொட்டையின் சாறு (Citrus seed extract), பினாக்ஸி எத்தனால் (Phenoxy Ethanol) போன்ற ஏதாவது சேர்க்கப்பட்டு இருந்தால், குழந்தையின் தலைமுடிக்கும் தோலுக்கும் நல்லது.

    குழந்தையைக் குளிக்க வைக்கும் நீரில், கிருமி நாசினிகளான
    1. போவிடோன் அயோடின் (Povidone Iodine)
    2. ஹெக்சா குளோரோஃபீன் (Hexa chlorophene)
    3. குளோர்ஹெக்ஸிடின் (Chlorhexidine)
    போன்றவை சேர்க்கக்கூடாது.

    தோலுக்கு மிருதுத்தன்மை / ஈரத்தன்மை தரும் (emollients) எண்ணெய் / லோஷன்கள் தேவையா?
    சிறு குழந்தையின் தோல் வெகு சீக்கிரம் உலர்ந்துவிடும். அதில் ஈரத்தன்மை இருப்பது அவசியம். எண்ணெய் / லோஷன்கள், தோலுக்கு ஒரு வழுவழுப்பைத் தந்து உராய்வை குறைக்கும்.

    தோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உடலிலிருந்து நீர் / வெப்பம் வெளியேறுவதை தடுக்கும். எனவே, குறைமாதக் குழந்தை எடை குறைந்த குழந்தை, கெடு தாண்டி பிறந்த குழந்தைகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.

    முழு மாதத்தில், 2.5 கிலோவுக்கு மேல் உடை எடையுடன் பிறந்த குழந்தைக்கு, நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு, மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம்.

    குழந்தையின் தலைமுடியை சுத்தமாகப் பராமரிப்பது எப்படி?
    குழந்தையின் தலைமுடிதான் எவ்வளவு மென்மையானது. புசுபுசுவென்று கருமையாக சுருள் சுருளாக கொள்ளை அழகு அல்லவா? சில குழந்தைகள், தலைமுடி குறைவாக கொஞ்சம் வழுக்கையாகக்கூட பிறக்கலாம். ஆனால் அந்தப் பிஞ்சுப் பொதி போன்ற தலைமுடி, 1-2 வயதில் உதிர்ந்து பிறகு ஆரோக்கியமான புது தலைமுடி வளரும்.

    குழந்தை பிறந்தவுடன் லேசான சூட்டில் நனைத்துப் பிழிந்த டவலை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்ய வேண்டும். சிறு குழந்தைக்கு மென்மையான உச்சிக் குழி (Anterior Frontenlle) இருக்கும்.

    இது ஒன்றரை வயதில் எலும்பு வளர்ந்து கெட்டிப்படும். அதுவரை, மிகவும் மென்மையாக குழந்தைகளுக்கான தலைமுடி பிரஷ் கொண்டு தினமும் இரண்டு முறை தலை வாரலாம். நாம் பயன்படுத்தும் கூர்மையான பற்கள் கொண்ட சீப்பு கூடாது.

    தலை வாருவது நிறைய குழந்தைகளுக்குப் பிடிக்கும். இதனை ரசிக்கும் குழந்தைக்கு, ஒரு நல்ல ஊக்குவிப்பு (Touch and Stimulation) கிடைக்கிறது.
    தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313



    டாக்டர் கங்கா


    டாக்டர் என்.கங்கா, தஞ்சை பகுதியைச் சேர்ந்தவர். மருத்துவ உயர்கல்வியுடன், வளர் இளம் பருவத்தினருக்கு (டீன் ஏஜ்) மருத்துவமும் கவுன்சிலிங்கும் தரக்கூடிய PGDAP என்ற படிப்பையும் முடித்துள்ளார். காரைக்கால் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் நலன் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

    1994 முதல், பெண்கள் மாத இதழ்களில் கட்டுரைகள் மற்றும் தொடர்களை எழுதிவருகிறார். டீன் ஏஜ், குழந்தைகள் உணவு முறை, பெண்களே இது உங்களுக்காக, குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி ஆகிய மருத்துவ நூல்களையும், கண்டேன் கயிலையான் பொற்பாதம், அமர்நாத் தரிசனம் ஆகிய ஆன்மிக நூல்களையும் எழுதியுள்ளார். திருச்சி வானொலியில், குழந்தைகள் நலம் குறித்து 35 ஆண்டுகள் பேசியுள்ளார். காரைக்கால் FM-ல், கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தை மருத்துவம் பற்றிப் பேசி வருகிறார்.




    Last edited by chan; 27th Sep 2015 at 05:07 PM.
    jv_66 likes this.

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: குழந்தைக்கு ஆயில் மசாஜும், குளிப்பாட்ட

    Thanks for the suggestions.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter