தாய்ப்பால் சில சந்தேகங்கள்...பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் சீம்பால் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த தாய்ப்பாலைத்தான் புகட்ட வேண்டும். ஆனால், 'சீம்பால் கெட்டுப்போன பால்; குழந்தைக்கு நல்லது அல்ல என்ற நம்பிக்கையின் பெயரில் சிலர் அதனைப் பீய்ச்சி வீணடித்துவிடுகிறார்கள்.

கிராமப்புறங்களிலோ, பிறந்த குழந்தைக்குச் சிலர் கழுதைப்பாலைப் புகட்டுகிறார்கள். இவை இரண்டுமே தவறு. இதனால், குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுவதோடு, பாலில் கலந்திருக்கும் கிருமிகளால் குழந்தையின் உடல் நலனும் பாதிக்கப்படும்.


வேலைக்குச் செல்லும் சில தாய்மார்கள், சாயங்காலம்கூட குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது இல்லை. காலையில், வேலைக்குச் செல்லும்போது சுரந்த தாய்ப்பால் கெட்டுப்போயிருக்கும் என்ற நம்பிக்கையில் அதனைப் பீய்ச்சி எடுத்துவிடுகிறார்கள். இதுவும் தவறான நம்பிக்கையே.

கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பால்போல தாய்ப்பால் ஒரு நாளும் கெட்டுப்போகாது. விரைந்து ஓடினால், உடல் எங்கும் சுரக்கும் வியர்வைபோல், குழந்தை குடிக்கக் குடிக்கத்தான் தாய்ப்பாலும் சுரக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையிலும் கட்டாயம் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகும் சிலர், திட உணவு கொடுக்காமல் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவருவதும் தவறானதே.

இரண்டரை வயது வரையிலும் தாய்ப்பாலோடு அரிசி சாதம், வேகவைத்த பருப்பு - முட்டையின் மஞ்சள் கரு எனத் திட உணவு வகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்க வேண்டும்.


நோய்வாய்ப்பட்டு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் தாய்மார்களும் மார்பகத்தில் புண் உள்ளவர்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் பாலாடையைக் குழந்தைக்கு உண்ணக் கொடுக்கலாம் அல்லது பசும்பாலை ஸ்பூன் மூலமாக குழந்தைக்குப் புகட்டலாம். பால் புட்டியில் பயன்படுத்தப்படும் பாட்டில் ரப்பர்களை சுடுதண்ணீரில் கழுவினாலும்கூட கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுமானவரை அதைத் தவிர்த்துவிடுங்கள்.

Similar Threads: