குழந்தைகளுக்கு சுததம், நன்னடத்தை, கல்வி போன்றவற்றை பெற்றோர்களும், ஆசிரியரும் கற்றுக்கொடுத்தல் அவசியம்.

எதை கற்றுக்கொள்வது? எப்படிக் கற்றுக்கொள்வது? என்பதை கற்றுக்கொடுப்பது அதை விட அவசியம்.

உங்கள் மகன் அல்லது மகளை சுற்றி அன்றாடம் ஏராளமான சம்பவங்கள் க்கின்றன.ஒவ்வொன்றிலும் அவர் கற்றுக்கொள்ள ஏராளமான் விஷயம் இருக்கிறது. சூழ்நிலைகளில் இருந்து கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறனை அவருக்குள் வளர்க்க வேண்டும். பள்ளியை காட்டிலும் வீட்டில் பெற்றோர்களுக்குத்தான் இந்த திறனை வளர்ப்பதில் அதிக பங்கு உள்ளது.

சில குழந்தைகள் இயல்பாகவே நாம் சொல்லாமலே தனது வேலைகளை செய்வார்கள். அத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். ஆர்வம் உடையவர்கள். பரீட்சை வந்துவிட்டால் சில குழந்தைகள் தாங்களாகவே பாடங்களை எப்படி முடிப்பது என
திட்டவிட்டுக் கொண்டு முடித்து விடுவார்கள். சிலருக்கு கடைசி நிமிடம் வரையில் படி படி என நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

இத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் குறைந்தவர்கள்.இத்தகைய குழந்தைகளுக்கு சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க வேண்டியது அவசியம்.சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க தேவையானவை.சுயகட்டுப்பாடு, உறுதி, விடாமுயற்சி.

உங்கள் குழந்தையை ஓர் இலக்கை தீர்மானிக்க செய்யுங்கள். அந்த இலக்கை நோக்கி செல்லும்போது மனம் அலைபாயக் கூடாது.

தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்ற சுயகட்டுபாடு வேண்டும்.
இலக்கை அடையும் வரையில் சோர்ந்து போகக்கூடாது. இலக்கை அடையும் வரையில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திப் போடக்கூடாது. எத்தனை நாளில் இலக்கை அடைவது என தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் என்ன செய்வதால், இலக்கௌ அடையலாம் என தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த தீர்மானத்தின்படி ஒவ்வொரு நாளும் உறுதியாக செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.இந்த வழிமுறைப்படி உங்களது மகன் அல்லது மகளை இயக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய கடமைகள் இது இது என தீர்மானிக்கும்போது உங்களது குழந்தையால் ஒரு நாளில் எவ்வளவு வேலையை செய்து முடிக்க முடியும் என அறிந்து, அதற்கேற்றார்போல் வேலைகளை திட்டமிடுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக சிரமம் இல்லாமல் முடிப்பது குழந்தைகளுக்கு வேலை மீது ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தும். மொத்தமாக ஏராளமான வேலைகளை குழந்தைகளின் தலையில் சுமத்தினால், குழந்தைகளுக்கு மலைப்பு ஏற்படும். அதன் காரணமாக செய்யும் வேலையை அறைகுறையாக செய்ய நேரிடலாம். அல்லது எதையுமே செய்யாமல் ஒதுங்க தொடங்கிவிடலாம்.இது இரண்டுமே ஆபத்தானது. எனவே உங்களது குழந்தையின் சக்திக்கு ஏற்ற கடமைகளை அவர்களது தலையில் சுமத்துங்கள்.

குணாவை பற்றி அவனது அம்மா எப்போதும் கவலைப்படுகிறாள். குணா 7&ம் வகுப்பு படிக்கிறான். அவனது அண்ணன் சிவா 8&ம் வகுப்பு. சிவாவிடம் படிக்க வேண்டும் என்று சொல்லவே வேண்டியதில்லை. அவனே தனது வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து விடுவான். அன்றாட பாடங்களைப் படித்து விட்டுத்தான் விளையாட செல்வான்.


ஆனால், குணா அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் அவனது அம்மா படி படி என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மாலை 5 மணிக்கு அம்மா காப்பி போட்டுக்கொடுத்து படிக்க உட்காரச் சொல்வாள். இரண்டு பேரும் ஒரே சமயத்தில்தான் உட்காருவார்கள்.

ஒரு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் சிவா மட்டும்தான் உட்கார்ந்து படித்துகொண்டுருப்பான். குணா எங்காவது விளையாடப் போய்விடுவான். அம்மா குணாவை அடித்து, மிரட்டி மீண்டும் படிக்க உட்கார வைப்பார்.சிறு சிறு தண்டனைகளுக்குப் பயந்து சில குழந்தைகள் படிக்க தொடங்கும். பிறகு அதுவே பழக்கமாகி ஒழுங்கா படிக்க ஆரம்பித்து விடும். இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தாது.


பெரும்பாலும் அம்மாவின் கண்டிப்பில் பயப்படும் குழந்தை காலப்போக்கில் புத்தகத்தைப் பார்த்தே பயப்படும் அளவிற்கு சென்றுவிடும்.

எனவே கண்டிப்பின்போது நாம் கவனமாக் இருக்க வேண்டும். பயமுறுத்தலாம். அதே சமயத்தில் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அண்ணனைப் பார். யாரும் சொல்லாமல் தானாகவே படிக்கிறான். நீயும் அப்படி படிக்க வேண்டும். உனது கடமைகளை யாரும் சொல்லாமல் நீயே செய்து கொள்ள வேண்டும்.அண்ணன் அப்படி செய்வதால் அப்பாவிடமும் அவனது ஆசிரியர்களிடமும் பாராட்டை பெறுகிறான். உன்னையும் அண்ணனைபோல அவர்கள் பாராட்ட வேண்டாமா?உன்னுடைய வேலையை நீ சரியாக முடித்து விட்டால் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை என்று குணாவிடம் அவரது அம்மா கூறுவார்.இது சரியானது. குழந்தைகளை மிரட்டுவது ஓரளவுக்குத்தான் வேலை செய்யும். தங்களது பொறுப்பை அவர்களே உணரும்படி செய்வதுதான் முழுமையாக அவர்களை வளர்க்கும்.குழந்தைகளை சுயமாக தங்களது வேலைகளை செய்ய வைப்பது பள்ளிகளால் இயலாது. பள்ளி ஆசிரியரகளுக்கு அதற்கான நேரம் இருப்பதில்லை. அதை பெற்றோர்தான் செய்ய வேண்டும்.

ஒரு குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது எது தெரியுமா?வீடுகள்தான்.

சுயமாக கற்றுக்கொண்டால் தேவைகள் தெரியும்

ஒரு குழந்தை தனது தேவை என்ன என்பதை தானாக தெரிந்து கொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.

ராஜாவுக்கு இரண்டு வயது. தினமும் காலையில் அம்மா அவனை குளிப்பாட்டுவாள். தானாக சோப்பு போட கற்றுக்கொடுத்தாள். குளித்து முடித்தததும், ட்ரவுசர் சட்டையை மாட்டி விடுவாள். எந்த ட்ரவுசர் எந்த சட்டை என்பதை சொல்லிக் கொடுத்து மாட்டி விடுவாள்.

கொஞ்சநாட்கள் கழித்து அவனாகவே தனக்கு உரிய சட்டை ட்ரவுசரை தேர்வு செய்ய
ஆரம்பித்தான்.காலையில் எழுந்ததும் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவது என்ற பழக்கம் அவனுக்குள் உருவானது. ஒரு நாள் கூட அவன் குளிப்பதற்கு சோம்பேறித் தனப்பட்டதை இல்லை.10 வயது ஆனபோது அவன் படிக்க வேண்டிய புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லி பழக்கப்படுத்தினாள் அம்மா. புத்தகம் படிக்கும் பழக்கம் உருவாக ஆரம்பித்தது.

இப்படி ஒவ்வொரு வயதிலும் நாம் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தால், அது அவர்களது தேவையாக மாறிவிடும்.பிறகு, யாருடைய கட்டாயமும் இன்றி அவர்களது கடமையை செய்வார்கள். அவர்களது தேவையை அவர்கள் அறிவார்கள். அதை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பார்கள்.

தேவிக்கு வயது 9. அவளது அம்மாவுக்கு ஒரு நாள் திடீரென்று தலைவலி வந்தது. தலைவலி தைலத்தை எடுத்து கொடுக்குமாறு தேவியிடம் சொன்னாள். தேவி அலமாரியில் இருந்த தைலத்தை எடுத்து கொடுத்தாள்.


தைலத்தை நெற்றியில் தேய்த்து விடு என்று தேவியிடம் அம்மா சொன்னாள். எப்படி தேய்ப்பது என்று தேவி கேட்டாள். தைலம் பாட்டில் வைத்திருந்த சிறு அட்டை பெட்டியில் ஒரு துண்டுக்காகிதம் இருந்தது. அதை எடுத்து தேவியிடம் படிக்கச் சொன்னாள் அம்மா.

அந்த துண்டுக்காகிதத்தில் தைலத்தை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம்? ஜலதோஷம், தலைவலி, கால் வலி என்று எத்தனை நோய்களை அந்த தைலம் போக்கும் என்பதெல்லாம் விபரமாக எழுதி இருந்தது.அதற்கு பிறகு தேவி பெரிய பெண்ணானதும், செல்போன், கம்ப்யூட்டர், சிடி, பிளேயர், டி.வி. பெட்டி என எந்த பொருள் புதிதாக வீட்டிற்கு வாங்கினாலும், அந்த பொருட்களுடன் கொடுக்கும் குறிப்புகளை (கேட்லாக்) ஒரு வரி விடாமல் படித்து விடுவாள்.அந்த குறிப்புகளின்படி பொருட்களை இயக்குவாள். ஒவ்வொன்றிலும் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் உள்ளன. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் நமக்கு முக்கியம். அந்த ஆர்வத்தைத்தான் தேவியின் அம்மா அவளுக்கு 9 வயதில் வளர்த்தாள். அது வாழ்நாள் முழுவதும் தேவிக்கு உதவியாக இருந்தது.

தேவிக்கு இப்படி ஒர் ஆர்வத்தை வளர்த்ததற்குக் காரணம் இருந்தது. தேவியின் அம்மாவை அவர்களது அம்மா இப்படித்தான் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.அதே பழக்கத்தில் வளர்ந்த அம்மா தனது மகளையும் வளர்த்தாள். தேவியும் நாளைக்கு அவளது குழந்தையை இப்படித்தான் வளர்ப்பாள். எனவே, நீங்கள் உங்களது குழந்தைக்கு ஒன்றை கற்றுக்கொடுத்தால், ஒரு பரம்பரைக்கே அதை கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.குழந்தைகளுக்கு டிக்ஷனரி பார்க்க கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க எளிமையான ஒரு வழி. ராதாவின் அம்மா நிறைய கதைகள் படிப்பார். ஆங்கிலமும் அவருக்கு நன்றாக தெரியும். ராதா நான்காம் வகுப்பு படிக்கும்போது சில ஆங்கில வார்த்தைகளுக்கு அம்மாவிடம் அர்த்தம் கேட்பாள். ஆனால் நீயே டிக்ஷனரி பார்த்து தெரிந்துக்கொள் என்று அம்மா சொல்லிவிடுவாள்.

ஆரம்பத்தில் ராதாவுக்கு இது எரிச்சலாக இருந்தாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தானே டிக்ஷனரி பார்க்க கற்றுக்கொண்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் பொழுதும் ராதாவுக்கு அளவிட முடியாத ஆனந்தமாய் இருக்கும், யாருடைய உதவியும் இல்லாமல் நானே கண்டுபிடித்தது என்ற நினைப்பு அவளுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது, புதிய விஷயங்களை தன்னால் சுயமாக கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

புதிய விஷயங்களை தன்னால் சுயமாக கற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தை சின்ன வயதில் குழந்தைகளுக்கு உருவாக்குவது அவசியம். அவர்கள் பிற்காலத்தில் தங்களுக்குப் பொருத்தமான வேலை, சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்ய aந்த எண்ணம் உதவும்.

மூத்த குழந்தைகள் பொறுப்பானவர்கள்

வீட்டிற்கு மூத்த குழந்தைகள் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். இரண்டாவது மூன்றாவது குழந்தைகளைக் காட்டிலும் மூத்த குழந்தைகள் தங்களது வேலைகளை சுயமாக செய்ய சுலபமாக கற்றுக்கொள்வார்கள் என்பது பொதுவான விதி.

தம்பியை பார்த்துக்கொள் என்று பொறுப்பை அக்கா விடமோ அண்ணனிடமோ ஒப்படைப்பதை எத்தனையோ வீடுகளில் நம்மால் பார்க்க முடியும்.

9வயது அக்கா 4 வயது தம்பியை பொறுப்பாக பள்ளிக்கு அழைத்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். சின்ன வயதில் இருந்து மூத்தகுழந்தைகளிடம் இத்தகைய பொறுப்புகள் கொடுக்கப்படுவதால், அவர்கள் மற்ற குழந்தைகளை விட மிகவும் பொறுப்பு வாய்ந்தார்களாக வளர்கிறார்கள்.இதனால் படிப்பு, வேலை போன்ற ஒவ்வொன்றிலும் அவர்கள் அதிக கவனமுடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் இரண்டாவது மூன்றாவது குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களும் படிப்பார்கள்.


ஆனால், பொதுவாக மூத்த குழந்தைகளை காட்டிலும் அடுத்தடுத்த குழந்தைகள் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் சுயமாக தங்களது கடமைகளை செய்ய நமது கூடுதல் வழிகாட்டுதல் அவர்களுக்குத் தேவையாக இருக்கும்.

குழந்தைகளுக்கு இலக்கு

பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கிறது. ஏதேனும் ஓர் இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதை அடைய வேண்டும் என்றுதான் நாம் செயல்படுகிறோம். குழந்தைகளுக்கான இலக்கை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வளர்க்க வேண்டும். அவர்கள் தேர்வு செய்யும் இலக்கை அடைய அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

பொதுவாக நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் குழந்தைகளுக்கான நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கை அவர்களே சொந்தமாக அடைவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

விமானப்பள்ளியில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், விதிகளையெல்லாம் கற்றுக்கொடுத்து விட்டு இயக்குவதற்கு விமானத்தையும் தைரியமாக கொடுக்க வேண்டும். அவன் மாணவன், அவனிடம் கொடுத்தால் விபத்து ஏற்படும் என்று பயந்தால் அவன் எப்போதுமே விமானம் ஓட்ட முடியாது.
அதுபோலத்தான் உங்களது குழந்தைகளுக்குப் பறக்க கற்றுக் கொடுப்பதோடு உங்களது வேலை முடிந்தது. பறப்பது அவர்கள் பாடு. அவர்களது சொந்த சிறகுகளோடு அவர்களை பறக்கவிடுங்கள்.

குழந்தைகளின் படிப்பில் இலக்குகள் வேண்டும். எனது வீட்டுப்பாடத்தை யாரும் எனக்கு நினைவுபடுத்தாமலே நானே செய்து விட வேண்டும் என்று நினைப்பது கூட ஓர் இலக்குதான்.

பெரிய இலக்கை அடைவதற்கு சின்ன சின்ன இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை ஒவ்வொன்றாக அடைய வேண்டும்.

Similar Threads: