பிரசவத்துக்குப் பிறகு ரத்தப்போக்கு ஆபத்து?

ஷாஜகானின் மனைவி மும்தாஜுக்கு 14 குழந்தைகள். கடைசிக் குழந்தை பிறந்ததும், அவருக்கு ஏற்பட்ட அதீத ரத்தப் போக்கின் விளைவாகத்தான் அவர் உயிரிழந்தார். சுகப்பிரசவமோ, சிசேரியனோ... பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு அதீத ரத்தப்போக்கு இருந்தால், அது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... - எச்சரித்து ஆரம்பிக்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

ஆயிரத்தில் ஒருத்தருக்கு பிரசவத்துக்குப் பிறகான அதிக ரத்தப்போக்குப் பிரச்னை வருகிறது. பிரசவமான 24 மணி நேரத்துக்குள், சுகப்பிரசவம் என்றால், 500 மி.லியை தாண்டும் ரத்தப்போக்கும், சிசேரியனில் ஒன்றரை லிட்டரை தாண்டும் ரத்தப்போக்கும் அசாதாரணமானவை. போஸ்ட் பார்ட்டம் ஹெமரேஜ் எனப்படுகிற இது 2 விதங்களில் பாதிக்கலாம்.

பிரசவத்தின் போதான கடைசிக்கட்டத்தில், அதாவது, குழந்தை வெளியே வரும் போது உண்டாகிற ரத்தப்போக்கு பிரைமரி பிபிஹெச் எனப்படும்.

சுகப்பிரசவம் ஆகும் என நீண்ட நேரம் முயற்சி செய்து, தலை திரும்பாமலோ, இடுப்பெலும்பு குறுகியிருந்தோ, பிறகு சிசேரியன் செய்யும் போது உண்டாகிற ரத்தப்போக்கு செகண்டரி பிபிஹெச்.

பிரசவத்துக்குப் பிறகு சுருங்க வேண்டிய ரத்த நாளங்கள் சுருங்காமல் போவதாலும், ஆயுதம் போட்டு செய்யப்படுகிற பிரசவத்தின் போது உண்டாகிற காயங்களின் விளைவினாலும்கூட இப்படி நிகழலாம்.

பெண்ணுக்கு ரத்தத்தில் பிரச்னைகள் இருப்பதும் இதற்கொரு காரணம். ஒன்றுக்கும் அதிக குழந்தைகளை சுமப்பதால், வயிறு மிகப் பெரியதாகி, குழந்தையைச் சுற்றியுள்ள தண்ணீரும் அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு சுருங்காமல் போவதும், கர்ப்பப்பையினுள் தொற்று ஏற்படுவதும், நஞ்சுக்கொடி முழுமையாக அகற்றப்படாததும்கூட ரத்தப்போக்கு அதிகரிக்கக் காரணங்கள்.

ரத்தசோகையாலும் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறிய அளவு ரத்த இழப்புகூட இவர்களைப்பெரியளவில் பாதிக்கலாம். சிசேரியன் செய்ய வேண்டி வரும்போது, முதுகுப்பகுதியில் போடப்படுகிற மயக்க ஊசி, பிற்காலத்தில் முதுகுவலியை உண்டாக்கும் என்கிற பயத்தில், அதைத் தவிர்த்து, முகத்தில் வைக்கிற மயக்கத்தையே கேட்கிறார்கள்.

இப்போது முதுகுவலியே வராத அளவுக்கு மிக மெல்லிய ஊசி மூலம் முதுகில் செலுத்தக்கூடிய மயக்க மருந்துகள் வந்து விட்டன. அந்த வகை மயக்க முறையில் இத்தகைய ரத்தப்போக்கு ஆபத்து குறைவு.

கர்ப்பிணியின் ஹீமோகுளோபின் அளவு, ரத்தப் பிரிவு, நஞ்சுக்கொடி இருக்கும் இடம், அதற்கு முன் நடந்துள்ள சிசேரியன் மற்றும் டி அண்ட் சி வரலாறு போன்றவற்றை கவனித்து பிரச்னைகள் வரும் வாய்ப்பு இருப்பதை சந்தேகித்தால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கைகளையும் மருத்துவர் மேற்கொள்வார். மருத்துவருடன் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை... - அக்கறையாக முடிக்கிறார் டாக்டர் மாலா ராஜ்

Similar Threads: