குழந்தைகள் விளையாட்டில் என்ன கற்றுக்கொள்கிறார்கள்?


குழந்தைகள் என்றவுடனே நினைவுக்கு வருவது அவர்களின் சேட்டைகளும் விளையாட்டுகளும்தான். ஆனால் 'விளையாடியே நேரத்தை வேஸ்ட் பண்றான்; அதுக்கு பதில் பாடத்தைப் படிக்கலாம்ல' என்று பெற்றோர் புலம்புவதையும் கேட்க முடிகிறது. உண்மையில் விளையாடும் நேரம் வேஸ்ட்தானா... பள்ளிகளுக்குச் சென்று மறைந்துவரும் விளையாட்டுகளை அறிமுகப் படுத்தும் பல்லாங்குழி அமைப்பைச் சேர்ந்த இனியனிடமே கேட்கலாம்!

புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கு விளையாட்டைப் போல வேறொன்றைச் சொல்லவே முடியாது. இதை நானாக சொல்வதை விடவும் சிறுவர்களே சொன்னதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதே சரியானதாக இருக்கும். பள்ளிகளில் என்னோடு விளையாடி களைத்து, அப்பாடா என ஓய்வெடுக்கும்போது அவர்கள் சொன்னதிலிருந்து சில:

ஆடு புலி ஆட்டம்:
3 புலிகள் 15 ஆடுகளை வெட்டும் ஆட்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆட்டத்திற்கான கட்டங்களை மைதானத்தில் பெரியதாக வரைந்து, ஆடுகளுக்கும் புலிகளுக்கும் பதில் சிறுவர்களை நிற்கச் செய்து ஆடச் செய்தேன். ஆட்டம் முடிந்து அவர்கள் சொன்னது. என்னதான் புலிகளாக இருந்தாலும் ஆடுகள் ஒற்றுமையாகவும் சரியாக திட்டமிட்டாலும் புலிகளால் ஆட்டை எதுவும் செய்ய முடியாது. மேலும் ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அது எந்த விளைவை ஏற்படுத்தும் என யோசிக்க்க வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டோம்.


கொலை கொலையா முந்திரிக்கா:
சிறுவர்கள் வட்டமாய் உட்கார்ந்திருக்க, ஒருவர் கையில் துணி அல்லது பந்தை வைத்துகொண்டு பாட்டுப்பாடி சுற்ற வேண்டும். சுற்றிக்கொண்டே உட்கார்ந்திருப்பவர் மீது பந்தைப் போட்டததும் அவர் எழுந்து வந்து, இவரைத் தொடுவதற்குள் ஒரு சுற்று சுற்றி வந்து எழுந்தவர் இடத்தில் உட்கார்ந்துவிட வேண்டும். இதை விளையாடியதும் சொன்னது: ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட திறன்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம். ஓடிக்கொண்டே பாட வேண்டும். யார் மீது பந்தைப் போட வேண்டும் என யோசிக்க வேண்டும். பின் அவரிடமிருந்து தப்பிக்க எப்படி ஓட வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.

100 குச்சி ஆட்டம் :
100 ஈக்குச்சிகளைக் கலைத்துப்போடவேண்டும். குச்சிகள் ஒன்றின்மேல் ஒன்றாக கிடக்கும். இப்போது ஒரு குச்சியை வைத்து ஒவ்வொரு குச்சியாக மற்ற குச்சிகள் ஆடாமல் எடுக்க வேண்டும். இதை முடித்தபிறகு சொன்னது: யோகா, தியானத்தில் சொல்லிக்கொடுக்கும் மனதை ஒருமுகப் படுத்துவதை கற்றுக்கொண்டோம். நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படும் சின்ன கேலி, வருத்தம் அவர்களை ரொம்பவே பாதிக்கும் என்பதையும் புரிந்துகொண்டோம்.


இந்த மூன்றுமே போதும் என நினைக்கிறேன். இவை எல்லாமே மனதளவில் அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களைதான் சொல்லியிருக்கிறேன். குழந்தைகள் விளையாடி முடித்ததும் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்களே.
உங்கள் செல்லக் குழந்தைகளின் விளையாட்டுக்குத் தடைப் போடாதீர்கள்.