குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்போம்

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்போம-images.jpg

வளரும் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களின் இல்லங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி இப்போது பார்ப்போம் . ஒரு குழந்தை, தன்னம்பிக்கை மற்றும் சுய உரிமை உடைய மனிதனாக வளர வேண்டுமெனில், அதற்கேற்ற தைரியமான வகையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தை தைரியமற்ற முறையில் வளர்க்கப்பட்டால், கூச்ச சுபாவம், தன் கருத்துக்களை தெளிவாக கூற இயலாத தன்மை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இடைஞ்சல்களை எதிர்கொள்வதற்கான தைரியமின்மை போன்ற குணாதிசயங்களை எதிர்காலத்தில் பெற்று தன்னம்பிக்கை அற்றவர்களாகிவிடுவர்.

இருபத்தோராம் நூற்றாண்டுப் பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளின் மனதில் என்னால் முடியும் என்ற எண்ணத்தை விதைக்க விரும்புகின்றனர். அதைபோன்று வளர்க்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தின் சவால் மிகுந்த வாழ்விற்கு தயாராகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனக்கென தனி வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், தன்னம்பிக்கை தொடர்பான சில பொதுவான வழிகாட்டுதல்களை அனைத்து குழந்தைகளிடமும் பின்பற்றலாம்.பெற்றோர்கள் தொடர்ந்து வார்த்தைகளால் உற்சாகப்படுத்துவதாலேயே மட்டும் ஒரு குழந்தையின் தன்னம்பிக்கை வளர்ந்து விடுவதில்லை, மாறாக, அந்த குழந்தை ஏதேனும் ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போதுதான் தன்னம்பிக்கை, உண்மையிலேயே அதிகரிக்கிறது.


அதேசமயம், உற்சாக வார்த்தைகள் என்பது எப்போதுமே நல்லதுதான். அந்த வார்த்தைகள், குழந்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்திருக்கும்போது பயன்படுத்தப்பட்டால் பயன்விளைவுகள் அதிகமாக இருக்கும்.ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போதுதான், தங்களால் எது முடியும் , முடியாது என்பதை குழந்தைகள் உணர்கிறார்கள். ஒரு குழந்தை மிக சிறிதாக இருக்கும்போதே,உதாரணமாக, நடை பழகும்போதோ அல்லது ஒரு புத்தகத்தின் பக்கங்களை பிரிக்க ஆரம்பிக்கும்பொழுதோ அவர்களுக்கு உற்சாக வார்த்தைகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் குழந்தைகள் தங்களின் திறனை வளர்ப்பதற்கான போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதிகமான வாய்ப்புகள், நல்ல ஆலோசனைகள், நிறைய பொறுமை போன்றவை பெற்றோர்களிடமிருந்து கிடைத்தால், குழந்தை தனது அடிப்படை திறமையை நன்றாக வளர்த்துக் கொள்ளும். இதனால், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். எனவே, எப்போதும் குழந்தைகளின் பின்னால் நின்று, உங்களின் அசாத்திய பொறுமையின் மூலம் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.குழந்தைகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அதில் தவறுகள் ஏற்பட்டால், அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.


ஒரு பள்ளிச்சீறுடையில் அறுந்த பட்டனை தைக்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்தால், அதை முழுமையாக அனுமதிக்க வேண்டும். நடுவிலேயே தலையிட்டுவிட்டால், அந்த செயலை செய்துமுடிக்க தனக்கு தகுதி இல்லையோ என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டுவிடும்.குழந்தை ஒரு செயலில் வெற்றியடைந்தால், உங்களின் பாராட்டானது, முடிவை மட்டுமே குறிப்பிடுவதாக இருக்கக்கூடாது. அந்த செயலுக்கான மனோதிடத்தையும் பாராட்ட வேண்டும். மேற்சொன்னதைப் போல, சீறுடைக்கு பட்டனை வெற்றிகரமாக தைத்தால், அதற்கடுத்து மீண்டும் ஒரு புதிய பொறுப்பை கொடுக்கலாம். அந்த புதிய பொறுப்பு பெரிதாக இல்லாமல் தோன்றினாலும், உங்கள் குழந்தை சரியான திசையில் அடியெடுத்து வைக்கும்.

சிறுவயதாக இருக்கும்போதே, தங்களின் குழந்தைகள், தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் திறனை பெறுமளவிற்கு, அவர்களை தயார்படுத்த வேண்டும். குழந்தைகளுடனான பெற்றோர்களின் உறவானது,குழந்தைகளின் வயது ஏற ஏற, அதிக முதிர்ச்சியும், அறிவும் தேவைப்படுவதாக மாறும்.எனவே, பெற்றோர்கள் காலத்திற்கேற்ப தாங்களும் மாறிக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் சூழ்நிலைக்கேற்றபடி வளர்க்க வேண்டும்.


Similar Threads: