தயக்கமும் தாமதமும் வேண்டவே வேண்டாம்!
மாறிவிட்ட நம் வாழ்க்கை முறை, வேலைப் பளு போன்ற காரணங்களால் சமீபகாலமாக மனம் சார்ந்த பிரச்னைகளும், அதற்காக மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களைத் தேடிச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன என்கிறது ஓர் ஆய்வு.

இன்றைய மக்களில் 75% பேர் மனம் சார்ந்த பிரச்னைகளில் சிக்கியுள்ளார்கள். அதில் சிலர் மட்டுமே தயக்கமின்றி, தாமதமின்றி மருத்துவரை நாடுகிறார்கள். மற்றவர்களோ, அது ஒரு பிரச்னை என்றே தெரியாமலும், `இதற்கெல்லாம் எதற்கு மருத்துவரிடம் போக வேண்டும்?’ என்றும், `வெளியில் தெரிந்தால் என்ன பேசுவார்கள்’ என்று பயந்தும், மூடி மறைத்து மேலும் பிரச்னைகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்துவருகிறார்கள்.


உடை தொடங்கி, உணவு வரை வெளிநாடுகளைப் பார்த்து எத்தனையோ விஷயங்களைப் பின்பற்றும் நாம், மனம் சார்ந்த பிரச்னை வந்தவுடன் தயக்கமும் தாமதமும் இன்றி மருத்துவரிடம் சொல்லும் நல்ல பழக்கத்தை மட்டும் இன்னமும் வெளிநாட்டினரிடம் இருந்து பின்பற்றாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. விதிவிலக்காக, நம் நாட்டில் மும்பையில் மனம் சார்ந்த பிரச்னை வந்தவுடன் உடனடியாக மருத்துவரை நாடிச் செல்வதை லைஃப் ஸ்டைலின் ஒரு அங்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது ஆறுதல்.கிராமங்களில் மனநோயாளர்களை இன்னமும் ‘பைத்தியம்’ என்பது போன்ற சொல்லக்கூடாத வார்த்தைகளால் பரிகசிக்கும் நிலைதான் உள்ளது. இதை கட்டாயம் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், மன அளவில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதற்கான தீர்வை உடனடியாக வழங்காமல்... பேய் ஓட்டுவது, கோயில் கோயிலாக அழைத்துச் செல்வது என பிரச்னையை அதிகமாக்குவது வேதனையான விஷயம்.

மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து, முக்கிய மருந்து... அவர்களது குடும்பத்தின் ஆதரவுதான்! யாரேனும் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டால், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, ‘ஜஸ்ட் ஒரு சிட்டிங் போயிட்டு வந்துடலாம். உடம்பு சரியில்லைன்னா டாக்டரை பார்க்கப் போற மாதிரி, மனசு சரியில்லைன்னு டாக்டரைப் பார்க்கப் போறோம். இதுல தயங்க என்ன இருக்கு?’ என்று எடுத்துச் சொல்லி, அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு கேலி, கிண்டல் நேராமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம்.

உடல் பிரச்னைகளுக்கான சிகிச்சை போன்று கிடையாது மனதுக்கான மருத்துவம். மனநல சிகிச்சை என்பது ஒருவரது பிரச்னையை அவரிடமே கேட்டுத் தெரிந்து, அதற்கான தீர்வுகளை அவரிடம் சொல்லிப் புரியவைத்து, அவரையே சரியான தீர்வைத் தேர்வு செய்யவைத்து, பிரச்னையில் இருந்து அவரை வெளிவர வைப்பது. நம் பிரச்னையை நாம்தான் எதிர்கொள்ள வேண்டும் என்றாலும், நம்மைத் தாண்டி அதை ஒருவரின் ஆலோசனையோடுதான் எதிர்கொள்ள முடியும். அப்படி ஒரு நண்பராக, நிபுணராக அந்த மனநல மருத்துவர் இருக்க வேண்டும்.

இங்கு மனநல மருத்துவருக்கும், உளவியல் நிபுணருக்கும் வித்தியாசம் அறிய வேண்டியதும் அவசியம். மனநல மருத்துவர் ஆலோசனையோடு மருந்து, மாத்திரைகளை வழங்குவார். உளவியல் நிபுணர் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் சில மருந்துகளை பரிந்துரை செய்வார்.

ஆரம்பகட்ட மனப் பிரச்னைகளான... தினசரி பிரச்னைகள், கணவன் - மனைவி சண்டை, குழந்தைகளின் படிப்பு சார்ந்த பிரச்னை, கோபம், விரக்தி, பதற்றம், மனச்சோர்வு, தூக்கமின்மை, பயம் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் உளவியல் நிபுணரிடம் செல்லலாம். அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் நிலையைத் தாண்டியவர்கள், வெறிபிடித்த நிலையில் இருப்பவர்கள், பித்துப்பிடித்த நிலை எட்டியவர்கள் என மனதளவில் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்லலாம்.

மனநல மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த பின்... படிப்பு, தரம், ரகசியம் காக்கும் நம்பகத்தன்மை, அனுபவம் என பல காரணிகளையும் ஆலோசித்து ஒரு மனநல மருத்துவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், மூட்டு வலிக்காக நாம் ஒரு மருத்துவரிடம் சென்று அது சரியாகவில்லையென்றால், இன்னொரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து சரிசெய்துவிடலாம். ஆனால், மனம் சார்ந்த பிரச்னைக்கு ஒரு மருத்துவரிடம் செல்லும்போது அவரிடம் சரியான தீர்வு கிடைக்காத விரக்தியில் அல்லது பாதிப்பில் அதன் விளைவு சிக்கலை மேலும் வளர்க்கும்.

75% மக்கள் மனம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்தி பணம் பார்க்க சில போலி மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் தயாராக இருக்கிறார்கள். அவர்களைக் களைந்து, கடந்து நல்ல மருத்துவர்களிடம் செல்ல வேண்டியதில் கவனமாக இருங்கள்.

பெற்றோர் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே உளவியல் சார்ந்த ப்ளஸ், மைனஸ்களை சொல்லிக்கொடுத்து வளர்க்கலாம். ஒரு பிரச்னை என்றால் அதற்கு என்ன தீர்வு இருக்கும் என்பதைச் சொல்லி, அவர்களிடமே அதற்கான தீர்வை தேர்வு செய்யும் உரிமையைக் கொடுக்கலாம். இதனால் அவர்கள் வருங்காலத்தில் மிக எளிதில் மனம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து மீளமுடியும்.

Similar Threads: