Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மனமே நீ மாறிவிடு


Discussions on "மனமே நீ மாறிவிடு" in "Psychological Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  மனமே நீ மாறிவிடு

  மனமே நீ மாறிவிடு

  `ஸ்டார்ட் மீசிக்!’ என்று கவுண்டமணி உற்சாகமாகப் பூமிதிக்குத் தயாராகும் காட்சி உலகத் தமிழர் அனைவரும் அறிந்த காமெடி. காந்தக் கண் அழகியின் சந்தனப்பூச்சுடன் பூமிதிக்குத் தயாராக நிற்கையில், நெருப்பு குண்டம் செக்கச்செவேல் எனத் தெரியும். `ஆ! நெருப்புடோவ்!’ என்று அலறியபடி ஓடுவார் கவுண்டர்.

  நகைச்சுவை இருக்கட்டும். நெருப்பின் மீது நடப்பவர்களுக்கு ஏன் தீக்காயங்கள் ஏற்படுவது இல்லை? கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாக அம்மன் பண்டிகைகளில் பூமிதித் திருவிழாவில் நெருப்பின் மேல் நடப்பார்கள். சில ஊர்களில் கால்நடைகளும் இதைச் செய்யும். `பக்தியோடு செய்தால் தீக்காயம் ஆகாது’ என்பார்கள்.

  ஒரு சிறு தீக்குச்சி நெருப்புப்பட்டாலே தோல் வெந்துவிடுகிறது. அது எப்படி 10 அடிகள் நடந்தும், அடுத்த நாள் இயல்பாக வேலைக்குச் செல்ல முடிகிறது? இதுபோலத்தான் அலகுகள் குத்தி தேர் இழுத்தல் போன்றவையும். மலேஷியா போன்ற நாடுகளில் சீனர்கள்கூட நாக்கில் வேல் குத்திக்கொண்டு, முதுகில் அலகு குத்தி தேர் இழுப்பதைப் பார்க்க முடிகிறது.

  பக்தியினால் மட்டும்தான் சாத்தியமா இந்தச் செயல்கள்? ஆண்டனி ராப்பின்ஸ் எனும் சுய முன்னேற்ற ஆசான் அமெரிக்காவில் மிகப் பிரபலம். அவர் நிகழ்ச்சிகளில் தவறாது உள்ள அம்சம், தீமிதித் திருவிழா. முதல் நாள் இரவில் அமெரிக்க மேளங்கள் முழங்க, பயிற்சிக்கு வந்த அனைவரையும் நெருப்பின் மீது நடக்கவைப்பார். `அனைத்துப் பயங்களையும் வெல்லலாம். யார் வேண்டுமானாலும் எந்தச் செயற்கரிய செயலையும் செய்யலாம்’ என்பார். ‘நியூரோ லிங்க்யூஸ்டிக் புரோகிராமிங்’ மூலம் அனைவரையும் நெருப்பில் நடக்கவைப்பார்; உடைந்த கண்ணாடித் துண்டுகள் மீது நடக்கவைப்பார். காயங்கள் இல்லாமல் செய்து முடிக்கையில், பங்கேற்பாளர்கள் தன்னம்பிக்கை பெற்று, தங்கள் வாழ்வியல் பயங்களை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.


  சரி, இதை அறிவியல் என்றால் அனைவரும் செய்ய வேண்டுமே... முடியுமா? முடியும், முடியாது என்பது ஒவ்வொருவர் மனம் சார்ந்த விஷயம். மனம், உடலை இந்த அளவுக்குப் பாதிக்குமா? அலோபதி மருத்துவர்கள், `இந்த வலி குறிப்பிட்ட காலத்தில் சரியாக வேண்டும். ஆனால், இது நோயாளிக்கு நோயாளி மாறுபடும். சிலர், உடனே குணமாவர். சிலருக்கு, நீண்ட காலம் பிடிக்கும்’ என்று சொல்வார்கள். இதற்கு, உளவியல் காரணங்களும் உண்டு. `இது மிகவும் வீரியமான மருந்து’ என்று சொல்லி, பாதுகாப்பான நீரை ஊசியில் செலுத்தும்போது, அதைப் பெருமருந்தாக ஏற்றுக்கொண்டு பலர் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு `பிளேஸ்போ எஃபெக்ட்’ (Placebo effect) என்று பெயர்.


  உடலுக்குத் தேவைப்படும் ரசாயன மருந்து அளிக்கப்படாமலேயே, உடல் மாற்றத்தை உணர முடிகிறது என்றால், அங்குதான் மனதின் மாய வேலையை உணர வேண்டும். எந்த மருத்துவமும் இல்லாமல் ஒரு வியாதி சரியாவதை, `ஸ்பான்டேனியஸ் ரெமிசன்’ (Spontaneous remission) என்று சொல்வார்கள். மனதின் பாதிப்புகள் பெரும்பாலான நேரங்களில் உடல் உபாதைகள் மூலமாகத்தான் வெளிப்படும். பண்டைய மருத்துவமுறைகள் அனைத்தும் உடலையும் மனதையும் பிரித்து வைத்தியம் பார்க்கவில்லை. இயற்கையின் ஓர் அங்கமாக நம் உயிர், அதன் வெளிப்பாடு உடலிலும் மனதிலும் எப்படி நிகழும், எந்த நோய்க்கு என்ன உடல்கூறு, என்ன மனப் பாதிப்பு என அறிந்து, முழுமையான ஆரோக்கியத்துக்கு வழிசெய்தார்கள். கிரேக்க வைத்தியம் முதல், நம் சித்த மருத்துவம் வரை நோயாளி உடன் பேசி, அவர் ஆளுமை மற்றும் வாழ்க்கைமுறையை தெரிந்துகொள்ளுதல் அத்தியாவசியமாக இருந்தது.

  சீனத்தில் முன்பு ஒரு வழக்கம் இருந்தது. குடும்ப டாக்டர் போல வீட்டுக்கு ஒருவர் இருப்பார். அவர் மருத்துவர், துறவி, ஆலோசகர், தற்காப்புக்கலை நிபுணர் எனப் பல்துறை வித்தகராக ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுபவராக இருப்பார். அவருக்கு, மாதாமாதம் கட்டணம் கட்ட வேண்டும். வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், அந்த மாதம் அவருக்கு கட்டணம் கட். எல்லோரும் நல்லா இருக்கத்தான் அவருக்கு ஃபீஸ். அதனால், அவர் கடமை ஆரோக்கியத்தைப் பேணுவது. நோயைக் குணப்படுத்துவது அல்ல. இரண்டும் ஒன்றுபோலத் தோன்றினாலும், எதிரெதிர் நிலைப்பாடுகள்கொண்டவை.


  இந்த நூற்றாண்டில் எல்லா மருத்துவமும் உடல் நோக்கி நீள்கிறது. ஒரு பௌதீகப் பொருளாக உடலைக் கையாளும்போது, பல முக்கியத் தகவல்கள் விட்டுப்போக வாய்ப்பு உள்ளது. டாக்டர் ஏ.ஆர்.கே தன் 210-ம் நம்பர் நோயாளிக்கு எண்டோஸ்கோப்பி எடுக்கும் முன்னர், `அவர் ஆறு மாதம் முன் மனைவியை இழந்தவர்; வேலை பறிபோகும் சூழலில் உள்ளார்; அடிப்படையில் பதற்றமான ஆசாமி; வாழ்க்கையின் மாற்றங்களைச் சுலபமாக ஏற்காதவர்...’ போன்ற உளவியல் தகவல்கள், அவர் சிகிச்சைக்கு அவசியமானவை. இது அனைத்து உடல் நோய்களுக்கும் பொருந்தும். மனப் பாதிப்புகளால் ஏற்படும் உடல் பாதிப்புகளை இன்று, சைக்கோசொமாட்டிக் மெடிசின் (Psychosomatic Medicine) என வகைப்படுத்தி, அதில் அல்சர், மைக்ரேன், எக்சீமா என்று சிலதைச் சொல்கிறார்கள். ஆனால், எல்லா உடல் நோய்களிலும் சில உளக்காரணங்கள் உண்டு என்பதுதான் நிஜம்.

  இதை 100 ஆண்டுகளுக்கு முன் உணர்த்தியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். அவரின் ‘அன்னா ஓ’ என்ற கேஸ் மிகப் பிரபலம். தன் குரு, ஜோசஃப் ப்ரூயர் சிகிச்சை அளித்துவந்த அன்னாவை, ஃப்ராய்ட் புரிந்துகொண்ட விதம்தான் உளப்பகுப்பாய்வியல் எனும் துறை தோன்ற வழிசெய்தது.

  ஒவ்வொரு நோய்க்கும் ஓர் உளவியல் காரணம் உண்டு என்றால், அதைப் புரிந்துகொள்ளுதல் எவ்வளவு அவசியம்? மாரடைப்பு யாருக்கு வரும்; வயிற்றுப்புண்ணை வரவைக்கும் எண்ணங்கள் எவை; புற்றுநோய் உள்ளவர்களை ஆராய்ந்தால் அவர்களுக்கு உள்ள பொது அம்சங்கள் என்னென்ன; குடும்பஅமைப்பு நோயைப் பாதிக்குமா; இவற்றில் எவ்வளவு அறிவியல் உள்ளது என்றெல்லாம் விவாதிப்போமா?


  மனம் ஒரு மர்ம தேசம். நம்பிக்கையும் நல்லெண்ணங்களும் சுகத்தை அளிக்கவல்லன. உடைந்த உணர்வுகளும், உறவுகளும் நோய்களைத் தோற்றுவிப்பவை. மனம் மாறுகையில் வாழ்க்கை மாறும். மனதை மாற்றும் மந்திரச்சாவி யாரிடம் உள்ளது? சந்தேகமே வேண்டாம். நம்மிடம் மட்டும்தான் உள்ளது. மாற்றுவோம் வாருங்கள்!

  - மாறுவோம்!

  மருத்துவ உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு மன சிகிச்சை, மனிதவளப் பயிற்சி, நிர்வாக ஆலோசனை எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர். ‘கெம்பா’ என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த, 25 ஆண்டுகளில் உளவியல் பயிற்சி, உள ஆலோசனை, மனசிகிச்சை மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தியவர். ‘இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழக’ சென்னைப் பிரிவின் தலைவர். ‘நம் மக்கள் நம் சொத்து’ மற்றும் ‘வேலையைக் காதலி’ என்ற இரு புத்தகங்களின் ஆசிரியர். ‘மனசுபோல வாழ்க்கை’ தொடர் உலகளாவிய தமிழர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, நூலாக வர உள்ளது.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 14th Jan 2016 at 01:20 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter