திரும்பத் திரும்ப பண்றே நீ?


மனம் எனும் மாயாவி

அவசர கதியில் இயங்கும் வாழ்க்கை முறையில் இன்று இளம்வயதினருக்கும் மறதி ஏற்படுவதைப் பார்க்கிறோம். இந்த மறதி சிலருக்கு அளவுக்கு அதிகமாகும் போது வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்.

தங்களுக்கு ஏதோ மனநலப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், மற்றவர்கள் தங்களை கேலி செய்வார்களோ என்று கற்பனை செய்து கொண்டு பயப்படத் தொடங்குகின்றனர். ‘இது தவறான எண்ணம். சூழ்நிலை காரணிகளைச் சரி செய்தால் முழுமையாக குணப்படுத்தலாம்’ என்கிற நம்பிக்கை வார்த்தைகளோடு விளக்குகிறார் மனநல மருத்துவர் பி.பி.கண்ணன்...

``காலை நேர பரபரப்பில், வீட்டை விட்டு வெளியே கிளம்பியதும் பலருக்கும் அடுப்பை அணைத்தோமா, ஃபேனை நிறுத்தினோமா, மோட்டார் ஓடிக் கொண்டே இருக்கிறதோ என்ற ஏகப்பட்ட குழப்பங்கள்... இவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு புறப்படும்முன் பல தடவை சரி பார்ப்பார்கள்.

சரியாக செய்திருந்தாலும், பாதிவழியில் சந்தேகங்கள் கிளம்பும். உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சிந்திக்கத் தொடங்குவார்கள். உடனே வீட்டுக்குப்போய் மீண்டும் அனைத்தையும் சரி பார்ப்பார்கள். எல்லாம் சரியாகத்தான் இருக்கும். சரியென்று, ஆபீசுக்கு கிளம்புவார்கள். ஆனால், பாதி தூரம் வந்தபிறகு மீண்டும் சந்தேகம் வரும். திரும்பவும் வீட்டுக்குப்போய் அனைத்தையும் சரி பார்ப்பார்கள்.

இவ்வாறு, எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு காரணமாக ஒருவர் சரியாக செய்த செயலை யதார்த்தத்தை மீறி பல தடவை சரி பார்ப்பதை எண்ணச் சுழற்சி நோய் (OCD - Obsessive Compulsive Disorder) எனக் குறிப்பிடுவோம். ஒரே வேலையை ஓரிரு முறை திரும்பச் செய்வதை - கவனமாக இருப்பதை பெரிதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். மாறாக அதே செயலை மீண்டும் மீண்டும் செய்வது, அவருக்கும் அவருடன் இருப்பவருக்கும் வித்தியாசமாகத் தெரியும்.

இந்த நோய் வெவ்வேறு வாழ்க்கை சூழலியல் காரணமாக வருகிறது. 5 வயது முதல் 15 வயதுக்குள் மெல்ல ஆரம்பிக்கும். அந்தக் குழந்தை எந்தச் செயலையும் சரியாக செய்வதற்காக இதுபோல நடந்து கொள்கிறான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இது எண்ணச் சுழற்சி நோய்க்கான அறிகுறி. இதனால் மன அழுத்தம், வேலையில் தொய்வு, நாக்கு உலர்தல், குடும்ப உறவில் பிரச்னை, வாழ்க்கையில் தடங்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு எண்ண சீரமைப்பு சிகிச்சை, செயல் சீரமைப்பு சிகிச்சைகளுடன் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படும். எண்ண சீரமைப்பு சிகிச்சை முறையில், இதுபோன்ற தேவையில்லாத எண்ணங்கள் வருவதற்கான காரணங்கள் அறியப்பட்டு, எண்ணங்களை மாற்றும் வழிகள் குறித்து சிகிச்சை தரப்படும். செயல் சீரமைப்பு சிகிச்சை முறையில் தொடங்கிய செயலை முடித்த பிறகு, அடுத்த செயலை தொடங்கு வதற்கான பயிற்சிகள் தரப்படும். நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை எளிதாக குணப்படுத்தலாம்.

நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உளவியல் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். முதலில் நோயாளிக்கும் அவரைச் சார்ந்தவருக்கும் நோயைப் பற்றிய பயத்தைப் போக்கி, குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கூறுவோம். நோயின் ஆரம்ப நிலையில் கவனிக்காமல், தீவிரமானவுடன் மருத்துவர்களிடம் வந்து மாத்திரைகள் இல்லாமல் குணப்படுத்தச் சொல்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான எச்சரிக்கை மற்றும் பதற்ற நிலையில் இருக்கும் இவர்கள் மருத்துவருடன் ஒத்துழைக்கும் போது எளிமையாக குணப்படுத்திவிட முடியும். மருந்து மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன’’ என்று நம்பிக்கையூட்டுகிறார் டாக்டர் கண்ணன்.

ஒரே வேலையை ஓரிரு முறை திரும்பச் செய்வதை - கவனமாக இருப்பதை பெரிதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். ஆனால், அதே செயலை மீண்டும் மீண்டும் செய்வது, எல்லோருக்குமே வித்தியாசமாகத் தெரியும். எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு காரணமாக ஒருவர் சரியாக செய்த செயலையே, யதார்த்தத்தை மீறி பல தடவை சரி பார்ப்பதே எண்ணச் சுழற்சி நோய்.


Similar Threads: