மனம் எனும் மாயாஜாலம்

டென்ஷனுக்கு பஞ்சமில்லாத இன்றைய வாழ்க்கையில், மன அழுத்தம் ஏற்படாமல் வாழ்வதெல்லாம் சாத்தியம் இல்லை. அதனால், மன அழுத்தம் ஏற்படும்போது என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பிராக்டிக்கலான ஆராய்ச்சி ஒன்றை செய்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் எக்ஸ்டர் பல்கலைக்கழகம் செய்த இந்த ஆய்வில் எல்லோராலும் பின்பற்ற முடிகிற எளிதான வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘மன அழுத்தம் ஏற்படும்போது அந்த எண்ணங்களை திசை மாற்றம் செய்தால் போதும். அதற்கு எந்த மெனக்கெடலும் தேவை இல்லை. உங்களுக்குப் பிடித்தவரின் ஒற்றைப் புகைப்படமே அந்த மாயாஜாலத்தைச் செய்யும்’ என்று கூறியிருக்கிறார்கள்.மூளையில் இருக்கும் Amygdala என்ற பகுதியை ஆராய்ந்த போதுதான் இந்த விஷயம் தெரிந்துள்ளது.

Amygdalaவின் வலது பகுதி சோகம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகளையும், அதன் இடது பகுதி மகிழ்ச்சி, அமைதி போன்ற நல்ல உணர்வுகளையும் உருவாக்குகிறது. ஆய்வில் கலந்து கொண்டவர்களுடைய கணவர் அல்லது மனைவியின் புகைப்படத்தைக் காட்டியபோது Amygdalaவின் இடதுபக்கம் தூண்டப்பட்டு மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் தோன்றியுள்ளது.

அதனால், உங்கள் பர்ஸிலோ, செல்போனிலோ உங்கள் வாழ்க்கைத்துணையின் படத்தை வைத்துக் கொள்வது பலன் தரும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். குழந்தைகள், அபிமான சினிமா நட்சத்திரங்கள், அருவிகள், பசுமை சூழ் மலைகள் போன்ற படங்களுக்கும் இதே சக்தி உண்டு என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும், லைஃப் பார்ட்னரின் படத்துக்கு என்று ஒரு சக்தி இருக்கிறது. ‘இதைவிடவா நமக்குப் பெரிய கஷ்டம் வந்துரும்’ என்ற ஆறுதலுக்கும் அதில் உத்தரவாதம் உண்டு !உங்கள் பர்ஸிலோ, செல்போனிலோ உங்கள் வாழ்க்கைத்துணையின் படத்தை வைத்துக் கொள்வது பலன் தரும்!