கற்றல் குறைபாடு.. களைவது எப்படி?
Discuss here on கற்றல் குறைபாடு.. களைவது எப்படி? within the Schooler forums, part of the Parenting forum; கற்றல் குறைபாடு.. களைவது எப்படி? பள்ளி செல்ல தொடங்கும் முன்பு துறுதுறுவென இருக்கும் சில குழந்தைகள், பள்ளியில் சுறுசுறுப்பு இன்றி போய்விடுகிறார்கள். கற்றல் குறைபாடுகளே இதற்கு காரணம். ...
-
1st Sep 2011, 03:00 PM #1
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,320
- Blog Entries
- 1
கற்றல் குறைபாடு.. களைவது எப்படி?
கற்றல் குறைபாடு.. களைவது எப்படி?

பள்ளி செல்ல தொடங்கும் முன்பு துறுதுறுவென இருக்கும் சில குழந்தைகள், பள்ளியில் சுறுசுறுப்பு இன்றி போய்விடுகிறார்கள். கற்றல் குறைபாடுகளே இதற்கு காரணம். இதுபோன்ற குழந்தைகளை சோம்பேறி, முட்டாள் என்று திட்டி ஒதுக்கி வைக்கும் போக்கு உள்ளது. இது முற்றிலும் தவறானது என்கிறார் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை நடத்தி வரும் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. கற்றலில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க ஆலோசனைகளையும் சொல்கிறார். அவர் கூறியதாவது:
கண்பார்வை, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி எல்லாம் இயல்பாக இருக்கும். ஆனால் கற்பதில் தான் சில குழந்தைகளுக்கு பிரச்னை துவங்கும். படிப்பது, எழுதுவது, படித்ததை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவற்றில் ஆற்றல் குறைந்து காணப்படுவார்கள். இது போன்ற பிரச்னை உள்ள குழந்தைகளை முட்டாள் என்று தள்ளி வைக்கிறார்கள். அதைவிடுத்து இது போன்ற குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்தி பயிற்சிகள் கொடுத்தால் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்.
சின்னச் சின்ன விஷயங்களை வைத்து குழந்தைகளுக்கு இக்குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். வார்த்தைகளை எழுத்துக் கூட்டிப் படிக்க சிரமப்படுவார்கள். அர்த்தம் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். மொழியை கற்பது மற்றும் எழுதும் திறனில் உள்ள குறைபாடு டிஸ்லெக்சியா எனப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து சரி செய்யாமல் விட்டால் அவர்களது திறமை நிரந்தரமாக மங்கிப் போய்விடும் அபாயம் உள்ளது. மூளையின் இரண்டு அர்த்த கோளங்களின் ஒருமைப்பட்டு செயலாற்றும் சக்தி இயலாமையின் விளைவே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மூளைக்கு செல்லும் தகவல்களை உரிய முறையில் தேர்வு செய்ய இயலாமல் போதல் மற்றும் குறுகிய கால நினைவாற்றல் போன்ற குறைபாடுகள் காணப்படும். இதை நோய் என்று சொல்ல முடியாது. இது ஒரு விதமான மனப்போக்கு ஆகும். ஒவ்வொரு குழந்தையின் குறையும் வேறுபட்டு இருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் குறைபாட்டுக்கு தகுந்தாற்போல அணுகுமுறை மாறுபடும். இந்தக் குறைபாடு பரம்பரைக் காரணங்களால் வர வாய்ப்புள்ளது. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு ஏற்படும் விபத்து, பிறப்பு அதிர்ச்சி, தலையில் அடிபடுதல் மற்றும் வலிப்பு நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு வர வாய்ப்புள்ளது.
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு வரை சமாளித்து விடுவார்கள். அதற்கு மேல் இவர்கள் மதிப்பெண் குறைதல், கையெழுத்து மோசமாதல், வயதுக்கு ஏற்ற சொற்கள் தெரியாமல் போதல், வாக்கியம் அமைப்பதில் பிரச்னை, தாமதமாகப் புரிந்து கொள்ளுதல், குழப்பம் அடைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அவற்றை சரியாக அறிந்து பயிற்சிகள் அளிக்க வேண்டும். படிப்பதில் குறைபாடு உள்ள குழந்தைகளை ஒதுக்காமல் காரணத்தை கண்டறிந்து பயிற்சி அளித்தால் அவர்களும் சாதனை படைப்பார்கள். மின்சார விளக்கைக் கண்டு பிடித்த அமெரிக்க விஞ்ஞானி எடிசன் உள்பட பல சாதனையாளர்களுக்கு இந்த கற்றல் குறைபாடுகள் இருந்துள்ளது. இவ்வாறு கூறுகிறார் தேவிப்பிரியா.
பாதுகாப்பு முறை
குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது டாக்டர் ஆலோசனை இன்றி மருந்து எடுத்து கொள்ளக் கூடாது. வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற உணவு வகைகளை தாய் சாப்பிட வேண்டும். பரம்பரையில் யாருக்காவது கற்றல் குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதை கவனத்தில் கொள்வது அவசியம். புரிந்து கொள்வதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க பாடங்களை எளிமையாக பிரித்துக் கொடுத்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பைன் மோட்டார் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு கையெழுத்து கிறுக்கலாக இருக்கும்.
கிராஸ் மோட்டார் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு விளையாடுவதில் குழப்பம் ஏற்படும். இவர்களுக்கு ஆக்குபேஷன் தெரபி மூலம் பிரச்னைகளை சரி செய்ய முடியும். சிறப்புப் பள்ளிகளில் தனிக் கவனம் செலுத்தி பயிற்சி அளிப்பதன் மூலம் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். படிப்பை மட்டும் திணிக்காமல் தொழில் மற்றும் கலைப் பயிற்சிகளும் இடையில் அளிக்க வேண்டும். நாடகங்கள் மூலம் கற்றல், இயற்கை வேளாண்மை, மூங்கில் கலைப் பொருட்கள் தயாரிப்பு, அனிமேஷன், இசை என அவர்கள் விரும்பும் விஷயத்தை கற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
குழந்தைகளின் தனித்திறனை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதில் புரிந்து கொள்ளும் விஷயங்களை குழந்தைகள் படிப்பிலும் வெளிப்படுத்துவார்கள். இதன் மூலம் குழந்தைகள் கவனத்தை ஒருமுகப்படுத்தி படிப்பில் செலுத்தப் பழகுவார்கள். அதே போல் சத்தான உணவுகள், உடற்பயிற்சி, விளையாட்டுகளும் அவசியம்.
ரெசிபி
பனீர் முந்திரி ஜாமூன்: துருவிய பனீர் ஒரு கப், சர்க்கரை இரண்டரை கப், ஏலக்காய் கால் ஸ்பூன், முந்திரி கால் கப், தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் எடுத்துக் கொள்ளவும் சர்க்கரையில் கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும். துருவிய பனீரில் ஏலக்காய், நெய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். முந்திரியை உடைத்து பனீர் மாவின் இடையில் ஸ்டப் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனை சர்க்கரை ஜீராவில் போட்டு குலோப் ஜாமூன் போல சாப்பிடலாம்.
டிரைபுரூட் பணியாரம்: பேரிச்சை,
முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனை இட்லி மாவில் கலந்து நெய் சேர்த்து பணியாரமாக சுட்டு எடுக்கலாம். வழக்கமான பணியாரத்தை விட இது சத்துகள் நிறைந்ததாக இருக்கும்.
வாழைக்காய் கட்லட்: வாழைக்காய் தோலுடன் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். துருவிய கேரட் கால் கப், வெங்காயம், கொத்தமல்லி, புதினா ஆகியவை கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள் மற்றும் மிளகாய்த் தூள் 1/2 டீஸ்பூன். கான்பிளவர் மாவு 1 டீஸ்பூன், பிரட் தூள் எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த வாழைக்காயின் தோல் சீவி மசித்துக் கொள்ளவும். எண்ணெயில் இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட்டை வதக்கவும், இத்துடன் வெங்காயம், புதினா, கொத்தமல்லி மற்றும் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கி மசித்த வாழைக்காயுடன் சேர்க்கவும். கான்பிளவர் மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். அனைத்தையும் கலந்து ரொட்டித் தூளில் பிரட்டி தோசைக்கல்லில் பொரித்து சாப்பிடலாம்.
பாட்டி வைத்தியம்
வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
உலர்ந்த திராட்சை 10 கிராம், அத்திப்பழம் 2 ஆகியவற்றை பாலில் காய்ச்சி தினமும் காலையில் குடித்தால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இரவில் தூங்கும் முன்னர் பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நினைவுத் திறன் அதிகரிக்கும்.
கொத்தமல்லி, உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைத் திசுக்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கருவேப்பிலையுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை மற்றும் சீரகத் தூள் ஒரு சிட்டிகை கலந்து 48 நாட்களுக்கு தொடர்ந்து மோரில் கலந்து குடித்து வந்தால் புத்திக் கூர்மை அதிகரிக்கும்.
கரிசாலை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை சம அளவில் எடுத்து சூரணம் செய்து சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும்.
உணவில் அடிக்கடி சுண்டைக்காய் சேர்த்தால் மூளை பலம் கூடும்.
மோரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் அறிவுத் திறன் அதிகரிக்கும்.
ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பசும் நெய்யில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் புத்திக் கூர்மை அதிகமாகும்.
துளசி இலை 10, ஏலக்காய் 4, சுக்கு சிறிய துண்டு ஆகியவற்றை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றிய பின்னர் அதில் பால் மற்றும் தேன் கலந்து துளசி தேனீர் சாப்பிடலாம். இதனால் மூளையின் செயல்திறன் ஊக்குவிக்கப்படும்.
டயட்
படிப்பில் மந்தம், படித்ததை உடனே மறந்து போதல் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு காரணம் மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் தான். பரம்பரைக் காரணங்களாலும் இது போன்ற பிரச்னை வரலாம். குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஏற்படும் விபத்து, கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தைராய்டு குறைபாடு, சத்துக் குறைபாடு, குறைப்பிரசவம் போன்ற காரணங்களாலும் இந்த பிரச்னைகள் உருவாகலாம். இவற்றை தவிர்க்க ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற மூளைக்குத் தேவையான கொழுப்புச் சத்து அடங்கிய உணவுகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. மேலும் அவர் கூறியதாவது:
மூளையில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதனால் குழந்தைப் பருவத்தில் இருந்து தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தினமும் 600 மிலி அளவுக்கு பழச்சாறுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ, சி, கே, இரும்புச் சத்து, அயோடின் மற்றும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாமிர சத்துகள் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சத்துகள் குறைந்தவர்களுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு, பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய், புரிதல் திறன் குறைதல், மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படும். தினமும் சாப்பிடும் உணவில் 4 வகை பருப்பு மற்றும் தானியங்கள் இடம்பெற வேண்டும்.
3 வகை காய்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். 4 வகை பழங்கள் அல்லது பழச்சாறு குடிப்பதும் அவசியம். அயோடின், மெக்னீசியம் ஆகியவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ள பழ வகைகளில் இருந்து கிடைக்கும். மாம்பழம், பூசணிக்காய், முளைக்கட்டிய பயறு வகைகள், கீரை மற்றும் கீரைத்தண்டில் தயாரிக்கப்படும் சூப் தினமும் எடுத்துக் கொள்ளலாம். பாக்கெட் உணவுகள், ரெடிமேட் உணவு, துரித உணவு மற்றும் செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறுகிறார் சங்கீதா.
-Tamil Murasu
Similar Threads
-
குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்
By lathabaiju in forum ParentsReplies: 0Last Post: 12th Aug 2011, 05:00 PM -
மொபைல் போனை விற்கபோகிறீர்கள? இதை படியுங்
By sumathisrini in forum Mobile PhonesReplies: 0Last Post: 9th Aug 2011, 01:17 PM -
சமையல் குறிப்புகளை தேடித்தருவதற்கென்ற
By silentsounds in forum Forwarded MessagesReplies: 1Last Post: 3rd Aug 2011, 07:56 PM -
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி
By silentsounds in forum New Born BabyReplies: 0Last Post: 18th Jul 2011, 11:25 PM -
குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்
By silentsounds in forum SchoolerReplies: 0Last Post: 16th Jun 2011, 12:00 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks