Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree162Likes

Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....


Discussions on "Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas....." in "Snacks, Sweets & Festival Recipes" forum.


  1. #1
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    @jv_66 @sumathisrini @gkarti @Angu Aparna @repplyuma @Uma manoj @thenuraj @gloria @PriyagauthamH @stulip0110 @saveetha1982 @kkmathy @chan @ponschellam @girija chandru @smahi @dhivyasathi @nusrath @Deepika mahesh @RathideviDeva @femila @durgasakthi @Eswarisiva @malbha @nesamp @Vaisri02 @spv @sarayu_frnds @kurinji @ramyaraj @selvipandiyan @Subhasreemurali @Sriramajayam @Penmai @narayani80 @Vaisri02 @premabarani @Chill Queen @M.Muthulakshmi @sriju @malathimari @kanihema


    கார்த்திகைப் பொரி உருண்டை - பாரம்பரிய முறையிலும் நவீன முறையிலும்...


    கார்த்திகை பொரி உருண்டை செய்முறை:





    இன்னும் நாலு நாளில் கார்த்திகை தீபம் வந்துவிடும். மழையோ வெயிலோ தீபாவளி முடிந்த கையுடன் அடுத்த பண்டிகையை வரவேற்போம், வாருங்கள்.

    தென்னிந்திய வழக்கப்படி தீபாவளி என்றால் பெயரில்தால் தீபம் இருக்கும். ஆனால் தீபங்களின் ஆவளி, அதாவது தீபங்களின் வரிசையை தீபாவளிக்கு அடுத்த மாதமான கார்த்திகைப் பௌர்ணமிக்குதான் ஏற்றுவது வழக்கம். மழை நின்றதோ இல்லையோ பொரிகடலைக் கடைக்காரர்கள் பிசியாகிவிடுவார்கள்.

    இங்கே சில பாரம்பரிய பொரி உருண்டைகளின் செய்முறையுடன் புதுமையாக வேறென்ன செய்யலாம் என்று எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.

    கார்த்திகைப் பண்டிகைக்கு மிக முக்கியம் என்று எல்லோரும் செய்வது வேர்கடலை உருண்டை, நெல் பொரியுருண்டை மற்றும் அவல் பொரி உருண்டைதான். சிலர் வீடுகளில் தேன்குழல் (உப்பில்லாமல்) போலப் பிழிந்து சிறு துண்டுகளாக உடைத்து அதை உருண்டை பிடிப்பார்கள். இதற்கு மனோகரம் என்று பெயர். கடலை மாவில் செய்யும் பூந்தியை சர்க்கரை பாகிலிட்டு லட்டு செய்வதற்கு பதில் வெல்லப்பாகில் போட்டு உருண்டை பிடிப்பதும் சிலர் வழக்கம்.

    இன்னும் சிலர் வீடுகளில் கடலைப் பருப்பு அல்லது பொட்டுக்கடலையை உருண்டை செய்வார்கள். கொஞ்சம் பசையுள்ளவர்கள் என்றால் முந்திரி, பாதாம் என்று உருண்டை செய்வார்கள்.

    எங்கள் வீடுகளில் (கீழே படத்தில் உள்ளபடி) கூம்பு (கோன்/Cone Shape) வடிவத்தில் ரெண்டு செய்துவிட்டு மீதியை உருண்டையாக செய்வது வழக்கம். பருப்புத்தேங்காய் அச்சு என்று கடையில் இதற்கு mould கிடைக்கிறது (திருமணம் போன்ற வைபவங்களில் இந்த அச்சில் போட்டு செய்வது முக்கியமாக உள்ளது.) என்றாலும் கையால் பிடிப்பதுதான் எங்கள் வீட்டு வழக்கம்.



    இனி ஒவ்வொரு உருண்டையாகப் பார்ப்போம்....

    வேர்க்கடலை உருண்டை:




    ஜன்மாஷ்டமி ரெசிப்பிஸ் என்ற த்ரெட்டில் ரொம்பவும் மேலோட்டமாக இந்த உருண்டை செய்முறையைக் கொடுத்தேன். இங்கே கொஞ்சம் விவரமாகத் தருகிறேன்.

    பச்சை வேர்க்கடலையை வாங்கி வந்து வாணலியில் கருகாமல் வறுக்கவும். இது செய்வதே ஒரு கலை. கடலை ஈவனாக வறுபடவேண்டும். விடாமல் கரண்டியால் திருப்பிக்கொண்டே இருப்பதால் எல்லா பக்கமும் சரியானபடி வறுபடும். நல்ல வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

    (அடுப்பை விட்டு இறக்கலாம் என்று சாப்பிட்டுப் பார்க்காமல் எப்படி தெரிந்துகொள்வது என்பது பலருடைய கேள்வியாக இருக்கும். ஒரு கடலையை மட்டும் வெளியில் எடுத்து கொஞ்சம் ஆறியதும் கையால் கசக்கிப் பிசைந்தால் தோல் தனியாக கழண்டு வரும். இதுதான் சரியான முறையில் வறுபட்டதற்கு அடையாளம்.)

    மைக்ரோவேவ் அவனில் கொஞ்ச கொஞ்சமாக வறுப்பது அடுத்த வழி.

    கேக் செய்யும் அவன் இருந்தால் preheat செய்து அதில் மொத்தமாக போட்டு ஐந்து நிமிடம் வைத்தால் சுகமாக வறுத்துவிடலாம். அந்த trayயிலேயே கொஞ்ச நேரம் வைத்திருக்க பொன்னிறமாக வறுபடும்.

    இப்படி வறுப்பதற்கு பதில் கடையில் வாங்கி விடுவோமே என்பவர்கள் அந்த வழிக்குப் போகலாம்.

    (எங்கள் வீட்டு வழக்கப்படி இந்த பண்டிகைக்கு மட்டும் நெல் பொரி, அவல்பொரி, வேர்க்கடலை எல்லாம் வீட்டிலேயே வறுத்துச் செய்வதுதான் வழக்கம். செய்ய முடியாவிட்டால் அந்த உருண்டை செய்வதையே ஸ்கிப் செய்துவிடுவோம், வெளியில் வாங்குவதில்லை....)

    வறுபட்ட கடலையை ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவிடுங்கள். நன்றாக ஆறியதும் கையால் கசக்கி தோலை நீக்கவும். இது அடுத்த tedious procedure. இதைச் செய்த பின்னும் வேலை முடியாது. ஒரு சப்பாத்தி குழவி அல்லது அம்மி குழவியால் முழு கடலை அரை கடலைகளை லேசாக உருட்டி உடைத்துக் கொள்ளவேண்டும். இது போல் உடைப்பதால் சில சமயம் உருண்டை பிடிக்கும்போது கடலைகள் உதிர்ந்துவிடாமல் இருக்கும்.

    வெல்லத்தைக் கரைத்து பாகு வைக்க வேண்டியது அடுத்த வேலை.

    வெல்லம் அளவுதான் பலருக்கும் பிரச்சனை. (எனக்கும் அதுவேதான்....) இப்போது வரும் வெல்லமெல்லாம் அதிரசம் செய்யவோ, இது போல் உருண்டைகள் செய்யவோ கண்டிப்பாக நன்றாக வரும் என்று சொல்லவே முடிவதில்லை. பாகு வராமல் அடம் பிடிக்கிறது. பாகு வெல்லம் என்று கேட்டு வாங்கினால் கொஞ்சம் வேலைக்காகும். உருண்டை பிடிக்க வராவிட்டாலும் அப்படியே உதிர்த்து வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்ற நிலைமை.

    வெல்லம் அதிகம் எடுக்க, உருண்டை பிடிக்க சரியாக வருகிறது என்று இப்போது தெரிந்துகொண்டுள்ளேன். அதனால் வேர்க்கடலை தோலெல்லாம் நீக்கி லேசாக உடைத்துக் கொண்ட பிறகு அளந்து கொள்ளுங்கள். அதில் உள்ள அளவுக்கு சரி பாதி பொடித்த வெல்லம் எடுத்து (இன்னும் சிலர் கால் கிலோ கடலைக்கு இருநூறு கிராம் வெல்லம் கூட எடுத்து செய்வார்களாம்) மிகவும் குறைவாக நீர் விட்டுக் கரையுங்கள். கரைந்ததும் வடிகட்டி கல், குப்பையெல்லாம் நீக்கின பிறகு அடி கனமான வாணலியில் பாகு காய்ச்சவும். பாகு நல்ல கெட்டிப்பாகாக வர வேண்டும்.
    ரெண்டு கம்பி அல்லது மூன்று கம்பிப்பதம் என்று கணக்கு.

    சர்க்கரையில் பாகு பார்ப்பது போலவே வெல்லத்திலும் பார்க்கலாம் அல்லது ஒரு கப்பில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு பாகு விட்டால் கையில் உருட்ட வர வேண்டும். உருட்டி எடுத்து ஒரு தட்டில் போட்டால் டங் என்று சத்தம் வர வேண்டுமாம்.

    இந்த டெஸ்ட் செய்ததும் அடுப்பை அணைத்துவிட்டு நாலு ஏலக்காயை தோல் நீக்கி உள்ளேயுள்ள விதைகளை பொடித்துப் போடவும். கூடவே கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் சுக்கு பொடியும் போட்டு வேர்க்கடலையையும் கொட்டி கிளறவேண்டும். பாகு கடலைகளில் ஒட்டிக்கொண்டு வந்ததும் கையில் நெய் தடவிக்கொண்டு ஓரங்களில் உள்ளவற்றை முதலில் உருட்ட வேண்டும். கை சூடு பொறுக்காது... என்றாலும் ஓரளவு உருட்டி வைத்தால் இன்னொருவர் (ஒரு அசிஸ்டெண்ட் இருந்தால் ஜாலியா பண்ணிடலாம்) கையில் அரிசிமாவு தொட்டுக்கொண்டு அழுத்தி உருட்டலாம். அல்லது சின்ன பிள்ளைகளிடம் ஒரு தட்டில் அரிசிமாவை தூவி ஆரத்தி சுற்றுவது போல உருண்டைகளை சுற்றிக்கொண்டே இருக்கும்படி சொல்லலாம்.

    குறிப்பு: இப்படி செய்யும்போது ஒரே ஆளாக மாட்டிக்கொண்டால் பாதி பாதியாக கடலையை பிரித்து செய்வது சுலபமாக இருக்கும்.
    ஆறிவிட்டால் மறுபடி அடுப்பில் வைத்து இளக்கி உருட்டலாம்.


    வேர்க்கடலையுடன் ஒரு பிடி முந்திரி அல்லது பல்லாகக் கீறிய தேங்காய் சேர்ப்பது அழகாக இருக்கும். தேங்காயை சேர்ப்பது என்றால் நெய்யில் பொறித்துச் சேர்க்கலாம்.

    வாசனை பிடிக்குமானால் கருப்பு எள்ளை வறட்டு வாணலியில் பொறித்துச் சேர்க்கலாம். இது தனி வாசனை கொடுக்கும்.

    வேர்க்கடலைக் கூம்பு:


    கூம்பு செய்யும் வழக்கம் இருந்தால் உருண்டையாக உருட்டும் முன் ஒரு தட்டில் மாவை பரத்தி அதில் தாராளமாக கலவையை எடுத்துப் போட்டு சிறு பிள்ளைகள் மணலில் வீடு கட்டுவது போல கைகளால் அழுத்த வேண்டும். சூடு தாங்க கையில் நெய் தடவிக்கொள்ள மறக்க வேண்டாம். கூம்பு போல் பிடித்துக்கொண்டே தட்டையும் சுற்றிக்கொண்டே இருக்கலாம். இது சீக்கிரமே வந்துவிடும். உள்ளே சூடு ஆறும்வரை மூடாமல் பேன் அடியில் வைத்து இருந்தால் செட் ஆகிவிடும்.

    Mould இருந்தால் உள்ளே நெய் தடவி கலவையை ஊற்றி gap இல்லாமல் அழுத்தி செட் செய்யலாம். இது இன்னும் சுலபம்.

    Mould இல்லையே என்று கவலை வேண்டாம்... வீட்டிலேயே நாம் தயாரிக்கும் விதத்தை இந்த இடத்தில் பாருங்கள்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by gkarti; 25th Nov 2015 at 11:16 AM. Reason: Text added with Link on How to make cones!
    - Chitra

  2. #2
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    நெல்பொரி உருண்டை:

    முதலில் நெல்லை வாங்கிப் பொரிக்கவேண்டும். கடையில் வாங்காமல் வீட்டில் செய்வதும் நன்றாகவே வரும். வாணலி சூடானதும் ஒவ்வொரு பிடியாக நெல்லைப் போட்டு chopsticks அல்லது கரண்டியால் விடாமல் பிரட்ட ஒவ்வொன்றாக pop ஆகும். எடுத்து வைத்துக்கொண்டு நிதானமாக நெல்லின் தோலை(skin) பொறுக்கி எடுக்கவேண்டும். பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே இந்த வேலைகளையெல்லாம் முடித்துக் கொள்ளவேண்டும்.
    கடையில் வாங்குவது என்றால் ரொம்ப ஈசி.

    இந்த உருண்டைக்கு வெல்லம் அளவெல்லாம் வேண்டாம். நெல் பொரி பார்க்க பெரிதாக தெரிந்தாலும் வெல்லம் அதிகம் தேவைப்படாது. நெல் பொரியை அளந்து கொண்டு அதில் கால் பங்கு வெல்லம் எடுத்து கல் மண் நீங்கியதும் பாகு வைக்கவும். இதற்கும் முற்றிய பாகு வரவேண்டும். பாகு வந்ததும் ஏலக்காய் நறுக்கிப் போடணும். இதற்கு சுக்கு பொடி போடவேண்டிய அவசியம் இல்லை. போட்டாலும் நன்றாகவே இருக்கும்.

    வேர்கடலை உருண்டைக்கு சொன்னபடி பாகில் பொரியைச் சேர்க்காமல் பொரியில் பாகை கொட்டி உருட்ட வேண்டியதுதான். ரொம்ப சுலபமாக உருட்ட வரும். கையும் சுடாது.

    குறிப்பு: ஒரு வேளை பொரி அதிகம் மிஞ்சினால் மறுபடி பாகு வைத்து உருட்டலாம். அல்லது கொஞ்சமாக மீந்தது என்றால் அவல்பொரி உருண்டையுடன் கலந்து புது வித உருண்டை பிடிக்கலாம்.

    டிப்ஸ்: பொரியுடன் ஒரு பிடி முந்திரி அல்லது வேர்க்கடலை வறுத்து சேர்த்து உருண்டை பிடித்தால் அங்கங்கே பருப்புகள் தெரியும். சிலர் தேங்காயை பல்லாகக் கீறி பொரியுடன் கலந்து உருட்டுவார்கள்.

    தேங்காய் சேர்ப்பதாக இருந்தால் நெய்யில் பொறித்து சேர்ப்பது நல்லது.

    நெல் பொரி கூம்பு:

    வீட்டு வழக்கம் உண்டென்றால் மேலே சொன்ன முறையிலேயே கூம்பு பிடிக்கலாம். பிடித்த shapeல் அழகாக வரும் இது.


    அவல்பொரி உருண்டை:

    அவலை வறட்டு வாணலியில் பொரிக்கலாம். அல்லது சுலபமாக கடையில் வாங்கிவிடலாம். நெல் பொரிக்கு சொன்னபடியே கொஞ்சமாக வெல்லப்பாகு வைத்து அவலில் கொட்டி உருட்டவும். கூம்பு செய்யும் வழக்கம் உண்டு என்றால் அதையும் செய்யலாம். பாகு அதிகம் இருந்தால் உருண்டை கண்டிப்பாக வரும். தேவைக்கேற்ப பாகு வைத்தால் மிஞ்சாமல் முடிக்கலாம்.

    டிப்ஸ்:

    அவல்பொரி உருண்டையுடன் ஒரு பிடி முந்திரி அல்லது வேர்க்கடலை வறுத்தது சேர்த்துப் பிடிப்பது அழகாக இருக்கும்.

    கடலைப் பருப்பு உருண்டை:

    இது இந்தக்காலத்தில் செய்யப்படுகிறதா தெரியவில்லை. கல்யாணம் போன்ற வைபவங்களில் பருப்புத் தேங்காய் கூடு (பெயரில்தான் தேங்காய் இருக்கும், பொருளில் இல்லை) என்று செய்வதுண்டு. அதற்கு அந்த நாளில் ஆசாரம் மிகுந்த குடும்பங்களில் பொட்டுக்கடலை சாப்பிட மாட்டார்கள் என்பதால் கடலைப் பருப்பை நன்றாக வறுத்து மேலே சொன்ன முறையிலேயே பாகு வைத்து கூம்பு செய்வார்களாம். இப்போதும் சில குடும்பங்களில் இதற்கு fans உண்டு என்று கேள்விப்பட்டேன்.

    (கடலைப்பருப்பு நன்றாக வறுபட்டிருக்க வேண்டியது அவசியம். கடலைப்பருப்பு சரியாக வறுபடாவிட்டால் பச்சை வாசனை வந்துவிடும்)

    நன்றாக வறுத்த பருப்பை வெல்லப்பாகில் போட்டு உருண்டையோ கூம்பு வடிவத்திலோ செய்யலாம். கடுக் முடுக் பிரியர்கள் விரும்பும் உருண்டை இது.

    பொட்டுக்கடலை உருண்டை:

    செம ஈசி உருண்டை என்றால் இதுதான். எளிமையான, அதே சமயம் வீட்டில் எப்போதும் இருக்கக்கூடிய ஒரு பொருளில் செய்வது என்பதோடு ப்ரோடீன் சத்தும் நிறைந்தது.

    பொட்டுக்கடலையை லேசாக வறுத்து அதில் சில தோலுடன் இருந்தால் அவற்றை நீக்கி சுத்தப் படுத்தவும்.

    வெல்லத்தை (கடலை உள்ள அளவில் பாதி அளவு வெல்லத்தூள்) பாகு வைத்து பருப்பில் கொட்டி ஒரு பிடி வேர்க்கடலையும் சேர்த்து உருண்டை அல்லது கூம்பு வடிவில் செய்யவும்.

    - Chitra

  3. #3
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    முந்திரி உருண்டை:

    புதிதாக திருமணம் ஆனவர்கள் புகுந்த வீட்டாரைக்கவர முந்திரி உருண்டை செய்யலாம்.

    முந்திரியை சிவக்காமல் அதே சமயம் நமுப்பாயில்லாமல் கிறிஸ்ப் ஆகும்வரை வறுக்கவும். வேர்க்கடலைக்கு சொன்ன மாதிரியே ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டால் உருண்டை பிடிப்பது எளிது.

    வெல்லத்தில் பாகு வைத்து முந்திரிகளை போட்டு ஏலத்தூள் சேர்த்து உருண்டையாகவோ கூம்பு வடிவத்திலோ செய்யலாம். இன்றும் திருமணம் போன்ற வைபவங்களில் சீர் பக்ஷணமாக இவை செய்யப் படுகின்றன.

    குறிப்பு:

    வெல்லத்தை விட சர்க்கரை combination இல் முந்திரி உருண்டை நன்றாக இருக்கும். ஒன்றரை கப் முந்திரிக்கு ஒரு கப் சர்க்கரை, ரெண்டு டேபிள்ஸ்பூன் நெய் வேண்டும். வேறு ஒன்றும் வேண்டாம்.

    அடி கனமான வாணலியில் நெய் விட்டு உருகினதும் சர்க்கரையை கொட்டவும். கரண்டி எதுவம் போடாமல் வேடிக்கை பாருங்கள்.... சிம்மில் அடுப்பு இருக்க வேண்டும். சர்க்கரை கரைந்து தேன் போல் ஆகும். முழுக்க கரைந்ததும் ஒரேயொரு முறை கரண்டியால் கலக்கிவிட்டு ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து உடனே வறுத்த முந்திரியையும் கொட்டி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
    சீக்கிரம் கெட்டிப்பட்டுவிடும் என்பதால் உடனடியாக உருண்டை பிடிக்கவும். அல்லது தட்டில் கொட்டி வில்லையாக போட்டுவிடலாம்.

    பாதாம் உருண்டை:

    பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். ஈரமாக இருக்கும்போதே கத்தியால் பாதாம் பருப்புகளை ரெண்டாக நாலாக என்று விருப்பப்படி நீள வாக்கிலோ குறுக்கு வாக்கிலோ வெட்டி ஆறவிடவும். அல்லது கடையில் ரெடிமேட் பாதாம் shaves வாங்கி செய்யலாம்.

    ஆறியதும் ஒரு வாணலியில் அல்லது அவனில் போட்டு சிவக்காமல் க்ரிஸ்ப் ஆகும்வரை வறுத்து வைக்கவும். இதுவும் மேலே முந்திரி உருண்டைக்கு சொன்ன படி சர்க்கரை சேர்த்து செய்யலாம். அதே அளவு அதே செய்முறைதான்.

    மிக்ஸ்ட் நட்ஸ் உருண்டை:



    இதுவும் பணக்கார உருண்டைதான். முந்திரி, பாதாம் (மேலே சொன்ன முறையில் வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி பருப்பை நீளவாக்கிலோ சின்ன துண்டுகளாகவோ செய்து கொள்ளவும்), பிஸ்தா, Macadamia nuts (பார்க்க சன்னா போல இருக்கும் ஒரு Nut), walnuts என்று எல்லா வகை nuts ம் போட்டு செய்யும் உருண்டை இது. வெள்ளரி விதை, Melon seeds (சோன்பப்டியில் போடுவது), Pumpkin seeds என்று கைக்குக் கிடைத்ததை எல்லாம் கூடப் போடலாம்.

    எல்லா பருப்புகளையும் தனித்தனியாக கிரிஸ்பாக சிவந்து கருகாதபடி வறுக்கவும். சர்க்கரையில் உருண்டை செய்வதே நல்ல சுவையைத் தரும். முந்திரி உருண்டையில் சொன்ன அதே அளவு மற்றும் செய்முறையை இங்கேயும் எடுக்கலாம்.

    பிஸ்தா பருப்பு நடுநடுவே பச்சை கலரில் வந்து பார்க்கவும் சுவைக்கவும் நன்றாக இருக்கும். பண்டிகைக்குத்தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு snacks போல எடுத்துச் செல்லவும், வேலைக்குப் போகும்போது காலை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் ஏற்றது இது.

    கலப்பட உருண்டை:

    இதென்ன புது பெயர் என்று பார்க்கிறீர்களா?

    அவல்பொரி, நெல்பொரி, அரிசிப்பொரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் என்று எல்லாவற்றிலும் ஒரு பிடி எடுத்து வெல்லப்பாகு வைத்து உருண்டையாகவோ, கூம்பு வடிவிலோ செய்யலாம்.

    (மேலே சொன்ன உருண்டைகளில் வெல்லப்பாகு வைத்து பத்தாமல் போனால் மிஞ்சின பொரிகளை இப்படி செய்துவிடலாம்.)

    சீரக மிட்டாய்/அரிசிமிட்டாய் என்று கடையில் கலர் கலராக கிடைக்கும் மிட்டாயையும் ஒரு பிடி அளவு சேர்க்கலாம். நடுநடுவே கலர்கலராக attractive உருண்டை இது.

    மனோகரம் என்கிற தேன்குழல் உருண்டை:



    இவ்வளவு நேரம் பொரி வகைகள், Nuts வகைகளில் உருண்டை செய்வதைப் பார்த்தோம். வேர்க்கடலை நெல் பொரி உருண்டை செய்தாலும் இதுவும் சில குடும்பங்களில் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு ஐடெமாக உள்ளது. தென் தமிழ்நாட்டில் திருமண வைபவங்களில் இது must என்றும் கேள்விப்பட்டேன். சுவையில் இது கிங்குதான்....

    தேன்குழல் போலவே நாலு பங்கு அரிசி என்றால் ஒரு பங்கு உளுந்து சேர்த்து மிஷினில் மாவு திரித்து எதுவுமே சேர்க்காமல் ஒரு பின்ச் உப்பு மட்டும் சேர்த்து வெண்ணை போட்டு தேன்குழல் செய்து கொள்ளவும். ஒரு இன்ச் நீளத்துண்டுகளாக உடைத்து வைத்துக்கொண்டு வெல்லத்தில் கெட்டிப்பாகு வைத்து உருண்டை பிடிக்க வேண்டும். இதில் உருண்டையுடன் கூம்பு செய்வதும் முக்கியம்.


    பூந்தி உருண்டை:


    தேன்குழல் செய்ய மாவு அரைக்க வசதி இல்லை என்றால் கடலை மாவில் பூந்தி லட்டு செய்வது போலவே உப்பு இல்லாமல் கரகரப்பாக பூந்தி செய்து வெல்லப்பாகு வைத்து உருண்டை பிடிக்கலாம். சர்க்கரை சேர்க்க விருப்பமில்லாதவர்கள் சாதாரண லட்டுக்கு பதில் வெல்லம் போட்ட இந்த லட்டுதான் செய்வார்கள். இதுவும் யாருக்கும் சிரமமில்லாமல் வரக்கூடிய ஒன்று.

    கடலைமாவு ஒரு கப் என்றால் ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு கொஞ்சம் கர கரப்பாக காரா பூந்திக்கு போல செய்துகொண்டு, வெல்லத்தை கரைய விட்டு வடிகட்டி கெட்டி பாகாக வைத்து பாகை பூந்தியில் கொட்டி உருண்டை பிடிக்கவும். ஒவ்வொரு கப் வெல்லமாக செய்தால் பாகு மிஞ்சிப்போய் என்ன செய்வது என்று கவலைப்படாமல் இருக்கலாம். வெறும் முந்திரி வறுத்து சேர்த்தால் போதும். இது மாதக்கணக்கில் வைத்திருந்தால் கூட கெடாது. ஆந்திராவில் இது பிரபலம்.


    அங்கூரி பூந்தி உருண்டை:


    அங்கூரி பூந்தி என்பது எந்த மாநிலத்து உணவோ தெரியாது. ஆனா செடிகளில் ரெண்டு வகைச் செடிகளை ஒட்டுப்போட்டு (grafting) புது வகை கண்டு பிடிப்பது போல இது லட்டு உருவத்தில் ஜாங்கிரி சுவை கொண்டு இருக்கும். சர்க்கரை, வெல்லம் ரெண்டிலும் செய்யலாம்.

    செய்முறை:

    கால் கிலோ உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடைக்கு அரைப்பது போல கிரைன்டரில் நைசாக அரைக்கவும். இதனுடன் கால் கிலோ மைதாவையும் கட்டியின்றி கலந்து ரெண்டு மணி நேரம் வரை அப்படியே வைக்கவும். (நான் ரெண்டு ஸ்பூன் அரிசிமாவு சேர்ப்பேன், அது கொஞ்சம் கரகரப்பைத் தரும்) நாலு கப் சர்க்கரையை கம்பிப் பாகாக காய்ச்சவும். ஏலத்தூள் சேர்த்து எந்த கலரும் இன்றி அப்படியே வைக்கலாம்.

    மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொண்டு ஜாரணியில் பூந்தி தேய்த்து பாகில் ஊறவிடவும். இதை உருண்டை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. முந்திரி, திராட்சைகள் மட்டும் வறுத்து சேர்க்கலாம்.

    வெல்லத்தில் செய்வதானால் பூந்திகளை கர கரப்பாக பொறித்து (கொஞ்ச நேரம் எண்ணையிலேயே இருந்தால் கரகரப்பாகும், ஆனால் வெளுப்பாக இருக்காது) வைத்துக்கொண்டு ஒரு கப் வெல்லத்தை கெட்டிப் பாகாக காய்ச்சி பூந்தியில் விட்டு உருண்டை பிடிக்கலாம்.

    குறிப்பு: இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கப் எடுத்து முதலில் செய்து பார்க்கலாம். பிடித்திருந்தால் செய்யலாம். அப்படி செய்வதாக இருந்தால் ஒரு கப் உளுந்து அரைத்த மாவு என்றால் ஒரு கப் மைதா, ஒரு ஸ்பூன் அரிசிமாவு என்று கணக்கு. ஜவ்வரிசி போல பார்க்கவே கண்ணைக் கவரும் இது. சிலர் வெறும் மைதாவில் செய்கிறார்கள். அதை விட இது சுவையில் ஒரு பங்கு அதிகம்.

    இதில் ஒரேயொரு குறை என்னவென்றால் பூந்தி செய்வதில் எண்ணெய் இழுக்கும்.



    இனி சில புது முயற்சிகள்......

    பாப் கார்ன் உருண்டை:

    குழந்தைகள் மிக விரும்பும் உருண்டை இது. சாதாரணமா வீட்டில் பாப் கார்ன் பொரிப்பது போல பொரித்துக்கொண்டு வெல்லம் அல்லது சர்க்கரையைப் பாகாக்கி இதில் விட்டு உருண்டை பிடிக்க வேண்டும். சர்க்கரை உபயோகிப்பது என்றால் ஒரு ஸ்பூன் நெய்யில் சர்க்கரையை கரைய விட்டு முழுதும் கரைந்ததும் பாப் கார்ன்னை அதில் போட்டு வேகமாக உருட்டிவிடவேண்டும். பாப் கார்ன் ஒரு கப் பொரித்தது என்றால் அரை கப் சர்க்கரை போதும்.

    குறிப்பு: பாப் கார்ன் பொரித்ததும் அதை மிக்சியில் போட்டு ஒரேயொரு திருப்பு திருப்ப கொஞ்சம் ஒத்தாற்போல வரும். லைட் வெயிட்டில் பார்க்க பெரிதாக வரும் இந்த உருண்டை.

    50 வகை லட்டு த்ரெட்டில் ஏற்கனவே சொன்னவைதான் இதுவும் இதற்கு அடுத்ததும்....


    சோளப்பொரி உருண்டை:

    வெள்ளைச் சோளம் கிடைத்தால் அதை வறட்டாக வாணலியில் வறுக்க, அது பாப் ஆகும். பார்க்க சின்ன சின்ன முத்துக்கள் போல இருக்கும். இதையும் மேலே சொன்ன பாப் கார்ன் போலவே வெல்லம் அல்லது சர்க்கரை பாகில் கலந்து உருண்டை பிடிக்கலாம். கிராமீய உணவு இது. நாம் கார்த்திகைப் பண்டிகைக்கு செய்யலாமே...

    அரிசிப் பொரி உருண்டை:

    நெல்பொரி, அவல்பொரி போன்றவை கிடைக்காவிட்டால் பேல்பூரி செய்யப் பயன்படுத்தும், சாதா பொரிகடலைக்கடையில் கிடைக்கக்கூடிய அரிசிப் பொரியிலும் வெல்லப்பாகு வைத்து உருண்டை செய்யலாம். கையில் ஒட்டாமல் நெல்பொரி போலவே பார்வைக்கு பெரிதாகவும் லைட் வெயிட் உருண்டையாகவும் இருக்கும். இங்கே சிங்கப்பூரில் கூட எல்லாக் கடைகளிலும் உருண்டையாகவே செய்யப்பட்டு கிடைக்கிறது.

    எல்லா வகை உருண்டைகளையும் பார்த்தாச்சு.... சமீபத்தில் ஒரு மாத இதழில் பார்த்து ஆச்சரியப் பட்ட ஒரு உருண்டையும் உள்ளது...

    ஓமப்பொடி உருண்டை:

    தேன்குழல் போலவே கடலை மாவில் ஓமப்பொடி செய்துகொண்டு அதை நொறுக்கி வெல்லப்பாகு வைத்து உருண்டை பிடிப்பதாம்...

    விருப்பமுள்ளவர்கள் இதையும் செய்யலாம்.
    .


    பொதுக்குறிப்பு:

    எந்த வகை உருண்டை செய்தாலும் ஏலப்பொடி, கிராம்பு பொடி, சுக்குப்பொடி என்று விதவிதமாக சேர்க்கலாம்.
    வேர்கடலை உருண்டை என்றால் அதில் ஒரு பிடி முந்திரி சேர்ப்பது, நெல் பொறி என்றால் அதில் பொட்டுக்கடலை சேர்ப்பது என்று ஒரு வகை உருண்டையில் இன்னொரு வகை main ingredientஐ ஒரு பிடி அளவில் சேர்த்துச் செய்தால் பார்வைக்கும் சுவைக்கும் அழகாக இருக்கும். அரிசி மிட்டாய் என்கிற சீரக மிட்டாய்களும் நடுவில் சேர்த்து செய்யலாம்.

    மைசூர் பாகு, தேங்காய் பர்பி போன்றவைகளைக் கூட வில்லைகளாக போடாமல் பருப்புத்தேங்காய் கூட்டுக்குள் அடைத்து செய்வார்களாம். சர்க்கரை சேர்த்து செய்யும் பூந்தி லட்டைக் கூட உருண்டை பிடிக்காமல் பருப்புத்தேங்காய் அச்சுக்குள் வைத்து கூம்பு வடிவத்தில் செய்து திருமணத்துக்கு சீராக தருவது இன்றும் திருநெல்வேலி பக்கத்தில் உண்டாம். உருண்டை பிடிப்பதை விட இது சுலபமாகத் தெரிந்தால் இதையும் செய்து பார்க்கலாம்.


    Attached Thumbnails Attached Thumbnails Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-20121126_195237.jpg   Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-20131118_205531.jpg   Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-20131118_204556.jpg   Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-iphone-04.09.2010-240.jpg  
    - Chitra

  4. #4
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    அப்பம்:

    இதுவும் கார்த்திகை பண்டிகைக்கு கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று. உருண்டை பிடிக்கத் தெரியாவிட்டாலும், வராவிட்டாலும், முடியாவிட்டாலும் அப்பம் மட்டும் செய்து பண்டிகை கொண்டாடுவது சிலர் வழக்கம். அப்பம் செய்முறைக்கு ஏற்கெனெவே தனி த்ரெட் போட்டுள்ளதால் அதை இங்கே Clickகிப் பார்க்கலாம்.....


    கடைசியாக சில கொசுறுச் செய்திகள்.

    சிலர் வீடுகளில் கார்த்திகைப் பொரி உருண்டை எது செய்தாலும் கோலியளவுக்கு சிறியதாக ஒரேயொரு உருண்டை செய்து வைப்பார்களாம். அந்த உருண்டையை சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி நுனியைத் திரிபோல் திரித்து புது அகல்விளக்கில் இந்த மூட்டையை வைத்து எண்ணெய் விட்டு விளக்காக முதலில் ஏற்றி அதிலிருந்துதான் மீதி விளக்குகளை ஏற்றுவார்களாம். பழைய வழக்கங்களெல்லாம் மறந்து அழிந்துகொண்டுள்ளன.




    எங்கள் வீட்டில் இந்த வழக்கம் இல்லை. எல்லா விளக்கையும் வைத்து கூம்பு வடிவத்தில் செய்ததை பெருமாள் தாயார் என்று ஜோடியாக வைத்து சுற்றிலும் உருண்டைகளை வைத்து, அதற்குப் பூ வைத்து கற்பூர ஆரத்தி காட்டிப் பிறகு வீடு முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கிறோம். பித்தளை, வெள்ளி, அகல், மாக்கல் என்று எல்லா வகை விளக்குகளும் இருக்கும். இப்போது candleகளும் ஏற்றி வைப்பது வழக்கமாகிவிட்டது.
    எது எப்படியோ, அவரவர் வீட்டில் என்ன வழக்கமோ அதை முடிந்தவரை பின்பற்றி செய்யலாம்.

    எல்லோருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!



    Attached Thumbnails Attached Thumbnails Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-img-20150829-wa0001.jpg   Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-20131118_183444.jpg   Varieties  of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....-kaarthigai-greetings-2015.jpg  
    - Chitra

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    சூப்பர்.... அசத்திட்டிங்க சித்ரா க்கா @kasri66
    ரொம்ப பிடிச்சது பொரி உருண்டை தான், செய்து பார்த்துடுவோம்...
    அழகான ரெசிபி போட்டோஸ்... & தீபம் ... இப்பவே கார்த்திகை தீபம் வந்தது போல இருக்கு... தேங்க்ஸ்


  6. #6
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    Wow..ithanai variety urundai irukkunu ippa thaan theriyum...kalakiteenga ...ini enna try panna vediyathu thaan...





  7. #7
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    superu superu !!!! @kasri66, chithra dear.... enkaku pori urundai, kadalai rundai, pottukadalai urundai ellaamae pidikkum...(en appan sivan, muruganukkum thaan !!!)

    sumathisrini and Sriramajayam like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #8
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    So Divine Jiii.. படங்களும் தீபங்களும் அசத்தல்!! அதை விட உங்க Ideas Surrender Surrender நிறைய தடவை சொல்லிட்டேன்.. இனி புதுசா ஏதாவது கத்துட்டு வந்து சொல்றேன் Jii BTW செம செம.. எல்லாம் Note பண்ணிட்டேன்.. நானும் try செய்து சொல்றேன்..

    நன்றி நன்றி ஹோய்


  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    Thanks much Chitra for all the recipes of different varieties of urundais and appam.

    Jayanthy





  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Varieties of Karthigai Pori Urundai - Traditional and Novel Ideas.....

    ஹாய் சித்ரா,

    இந்த த்ரெட் பார்த்தவுடனே கார்த்திகை தீபம் களைகட்ட ஆரம்பிச்சாச்சு .

    எப்போதும்போல் நிறைய விவரங்களுடன், உருண்டைகள் செய்முறையுடன் அசத்தி விட்டீர்கள் சித்ரா... மிக்க நன்றி!


    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter