பக்தி கதைகள்
Discuss here on பக்தி கதைகள் within the Spirituality forums, part of the Home forum; அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் ...
-
20th Aug 2011, 05:01 PM #1
பக்தி கதைகள்
அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.
-
20th Aug 2011, 05:09 PM #2
Re: பக்தி கதைகள்
இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.ஒருசமயம், ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை, மற்றொருத்தி, அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள், என்றாள். துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார்.
பின், ஒரு பகுதியை வலதுபுறமாகவும், ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார். உங்களில் வரட்டி தட்டும்போது, விட்டல! விட்டல! என சொன்னது யார்? என்றார். திருட்டுக் கொடுத்த பெண், நான் தான் அவ்வாறு சொன்னேன், என்றாள். அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. ஒரு தொழிலைச் செய்யும் போது, கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ, அது காற்றில் பரவி, அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது, என்றார். திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன், கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக, நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.
-
20th Aug 2011, 05:12 PM #3
Re: பக்தி கதைகள்
அம்மா! நாளை கிருஷ்ண ஜெயந்தி! இன்னைக்கே சீடை தயார் பண்ணிடு! கண்ணனுக்கு நைவேத்தியம் செஞ்சிட்டு, எனக்கு தரணும், என்றான் மகன் கண்ணன். கண்ணா! கண்ணா! என அவனை வாய்நிறைய கூப்பிடுவாள் அம்மா. கண்ணன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. ஒரே பிள்ளை... கேட்கவா வேண்டும் செல்லத்துக்கு! ஆனால், அம்மா தனக்கு கொடுக்கும் செல்லத்தை கண்ணன் ஒருநாள் கூட தவறாக பயன்படுத்தியதே இல்லை. சமர்த்துப்பிள்ளை...பள்ளியில் அவன் தான் பர்ஸ்ட்! அவன் வீடு இருந்த தெருவிலேயே கிருஷ்ணன் கோயில் ஒன்றும் இருந்தது. கண்ணனும், அம்மாவும் வசதிப்படும் நாட்களில் எல்லாம் அங்கு செல்ல தவறியதே இல்லை. அம்மா நெய்யிலேயே சீடை செய்தாள். சீடை மட்டுமா! முறுக்கு, அதிரசம், லட்டு... இத்யாதிகளெல்லாம் தயாராயின. மறுநாள் கண்ணன் திருப்பாத கோலமிட்டாள். மாலையில், பலகாரங்களை நைவேத்யம் செய்து, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, என்ற பாடலை இனிய குரலில் பாடினாள். அன்று உறியடி உற்ஸவத்திற்கு ஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
நேரத்தில் வராமல் போய்விடுவாயோ என பயந்தேன். வா வணங்கலாம்! என்றாள்.
நிஜக்கண்ணன் அவள் அருகே நிற்க, சிலைக் கண்ணனுக்கு பூஜை நடந்தது. நைவேத்யம் முடித்து, கண்ணனுக்கு தட்டு நிறைய அள்ளி வைத்து, ஊட்டினாள் அந்தத்தாய். குழந்தை அதை மென்று சாப்பிட்டான். இன்னும் வேண்டுமென்றான்! அவள் மேலும் ஊட்டினாள். கொஞ்சம் மட்டுமே மிச்சம்! அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு முத்தமும் கொடுத்து,அம்மா! ரொம்ப ருசி! பாவம் உனக்குத்தான் கொஞ்சமா இருக்கு! என்று பரிதாபமும் பட்டுவிட்டு அவன் வெளியேறவும், நிஜக்கண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அம்மா! பூஜை முடித்து விட்டாயா! குழந்தைகள் போட்ட கூச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை போலும்! சரி சரி... பலகாரங்களைக் கொடு, என்றான்.ஏனடா! அவ்வளவையும் நீ தானே சாப்பிட்டாய், என்றாள் தாய் ஆச்சரியத்துடன்! நானா! நான் இப்போது தானே உற்ஸவம் முடிந்தே வருகிறேன், என்றான் மகன். அப்படியானால் வந்தது.... அந்த நிமிடம் அவள் கண்முன் நிஜக்கண்ணன் தோன்றினான். என் தெய்வமே! உன் திருவடிகள் இல்லத்தில் பட்டதா! என்று மகிழ்ந்தாள். பாத்திரத்தில் இருக்கும் மிச்சத்தை எடுக்கப் போனாள். ஆச்சரியம்! பாத்திரங்கள் நிறைந்து போயிருந்தது. அவள் வீட்டுக் கண்ணனும் ஆசை தீர சாப்பிட்டு மகிழ்ந்தான்.
-
20th Aug 2011, 05:13 PM #4
Re: பக்தி கதைகள்
ஒரு கிராமத்தில் வசித்த பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள். ஒருநாள் தந்தை இறந்து விட்டார். அந்தத் தாய் மூவரையும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தாள். நன்றி கெட்ட அந்தப் பிள்ளைகள் பெற்றவளை கவனிக்கவில்லை. மருமகள்களோ மாமியாரை வேலைகளைச் செய்யச் சொல்லி விட்டு, அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விடுவார்கள். வேலை செய்த மாமியாருக்கு வீட்டில் மிஞ்சியதையே சாப்பிடக் காடுப்பார்கள். அவளுக்கு நோய் வந்தால் மருத்துவமும் செய்யமாட்டார்கள். ஒருசமயம், அந்தத்தாயின் உடல் குண்டாக ஆரம்பித்தது. அது ஏதோ ஒரு வகை நோய். ஆனால், மருமகள்கள் தங்கள் கணவன்மாரிடம்,உங்க அம்மா நாங்க சொன்னதையே கேட்பதில்லை. கண்டதையும் சாப்பிடுறதாலே உடம்பு பெருத்துக்கிட்டே போகுது! நீங்க கண்டிச்சு வையுங்க, என்றார்கள்.
உண்மை தெரியாத பிள்ளைகளும் அம்மாவைக் கடிந்து கொண்டார்கள். அவள் தனக்கு ஏதோ நோய் என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. ஒருநாள், மருமகள்களின் தொல்லை தாங்கமுடியாமல், வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் அந்தத்தாய். வழியில் பாழடைந்த மண்டபம் தென்பட்டது. களைப்புடன் உட்கார்ந்தாள். மண்டபத்தில் சிவன், முருகன், பார்வதி சிற்பம் இருந்தது. அதைப் பார்த்து,முருகா, சிவா, தாயே பார்வதி, என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? என் பிள்ளைகளும், மருமகள்களும் பாடாய் படுத்துகிறார்கள். சாப்பிட சோறில்லை, உடுத்த இந்தக் கந்தை தான். என்ன செய்வேன். கண் திறந்து பாரேன், என்றாள். இப்படியே அங்கு நிரந்தரமாக தங்கி அவள் அழுத அழுகையில், பாதி உடல் கரைந்து விட்டது. யாராவது அந்த மண்டபத்திற்கு தங்க வருபவர்கள் தரும் உணவை சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே தங்கினாள். சோகத்தை சுமப்பவர்கள் தங்கள் குறைகளை கடவுளிடமோ, தங்கள் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை சொல்லும் நற்குணமுள்ள பெரியோரிடமே எடுத்துச் சொல்ல வேண்டும். அது மனச்சுமையைப் பெரிதும் குறைக்கும்.
-
5th Jan 2012, 12:46 PM #5
Re: பக்தி கதைகள்
கடவுள் என்ன செய்வார்
ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர், என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே... நீ எப்படி உலகத்தைக் காப்பாய்? என்று புலம்பி அழுதார்.
அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னா... நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக் கொண்ட தெய்வம், இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர, எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல...!
"If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
5th Jan 2012, 12:46 PM #6
Re: பக்தி கதைகள்
இறைவனின் விருப்பம்
ஆசிரமம் ஒன்றில் சீடன் ஒருவன் மௌனமாக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். இரவு நேரம் என்பதால் தவளைகளும், பூச்சிகளும் கத்தத் தொடங்கின. அது சீடனுக்குத் தொல்லையாக இருந்தது. வழிபாட்டில் இருந்து எழுந்து இது என்ன சோதனை... இவை எல்லாம் கத்தாமல் இருக்காதா? என குருவிடம் கேட்டான்.
நீ ஏன் அவை கத்துவதாக நினைக்கிறாய்? அவற்றின் மொழியில் அவை இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இறைவனே உயிர்களின் ஓசையை வரும்புவதால்தானே இவற்றை கத்த வைத்திருக்கிறான்... இதைபோய் இடைஞ்சல் என்கிறாயே...? அமைதியாக சொன்னார் குரு.
இதுவல்லவோ உயர்ந்த செயல்
துறவி ஒருவரை விருந்துக்கு அழைத்த இல்லறவாசி ஒருவன், தன் மனைவி உண்பதையும் உறங்குவதையும் தவிர வேறு எதையும் சிறப்பாகச் செய்வதில்லை என்று குறையாகச் சொன்னான்.
அவன் மனைவியை அழைத்த துறவி விவரத்தைக் கேட்டார்.
அய்யா... நான் துன்பத்தையோ துக்கத்தையோ பெரிதாக நினைப்பதில்லை. இருப்பதை விடுத்து இல்லாததற்கு ஆசைப்படுவதில்லை. அதனால் என்னால் நிம்மதியாக உறங்கவும், இருப்பதையே நிறைவாக உண்ணவும் முடிகிறது. இது தவறா?
அவள் சொல்ல, துறவி எதுவும் சொல்லாமலேயே தன் மனைவியின் உயர்வு அவனுக்கு புரிந்தது.
-
5th Jan 2012, 12:47 PM #7
Re: பக்தி கதைகள்
வேண்டுதல் வேண்டுமா?
மகான் ஒருவரை சந்தித்த அரசன் ஒருவன், "சுவாமி, எனக்காக இறைவனிடம் வேண்டுங்கள்!' எனக் கோரிக்கை வைத்தான்.
"ஆண்டவா... அகிலத்தில் உள்ள அனைவரையும் நன்றாக வை...!' என வேண்டினார் மகான்.
மன்னனுக்கோ தனக்காகத் தனிப்பட்ட முறையில் வேண்டவில்லையே என்று மனக்குறை எழுந்தது.
அதனை உணர்ந்த மகான், "மன்னா, வயலில் நீர் பாய்ச்சும்போது செடிகளின் வேரில்தான் நீர் விடப்படும். ஆனால் அது எப்படி செடியின் முழுமைக்கும் பயன்படுகிறதோ, அப்படித்தான் இதுவும். உலகில் உள்ள எல்லோரும் எனும்போது அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா? அப்புறம் ஏன் தனியாகப் பிரார்த்திக்க வேண்டும்?' சொல்ல, உணர்ந்தான் அரசன்.
ஜி.கே.எஸ். மூர்த்தி, கோபி
-
5th Jan 2012, 12:49 PM #8
Re: பக்தி கதைகள்
அனுமன் பிறந்த கதை!
ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகா
ன இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள்.
எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார்.
புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள். .
""ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள்.
அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற வரம் அளித்தார்.
அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு
"அஞ்ஜனை' என்ற பெயர். "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "மை பூசிய பேரழகி'. ஒருநாள்,
அப்சரஸாக உருமாறி ஒரு மலைச் சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ""ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது,'' என கதறினாள்.
அப்போது வாயுபகவான் காட்சியளித்து""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை. மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார்.
அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.
-
5th Jan 2012, 12:50 PM #9
Re: பக்தி கதைகள்
மனசே! குழப்பம் என்ன இதுதான் வயது இதை படிக்க
வயோதிக விவசாயி, தன் பேரனுடன் குளிர் நகரம் ஒன்றில் இருந்த பண்ணையில் வசித்தார். தினமும் அதிகாலையில், கதகதப்புக்காக அடுப்பின் அருகே அமர்வார். அப்போது பகவத்கீதை படிப்பார். இவர் என்ன செய்கிறாரோ, அதை அவரது பேரனும் அப்படியே செய்வான். ஒரு முறை தாத்தாவிடம், ""உங்களைப்போல் நானும் கீதை படிக்கிறேன். ஆனால், அர்த்தம் புரியவில்லை. இதை இப்படி கஷ்டப்பட்டு படிக்க என்ன தேவை இருக்கிறது?'' என்றான்.
குளிருக்காக அடுப்பில் கரி போட்டுக் கொண்டிருந்த தாத்தா, கரி இருந்த கூடையைச் சிறுவனிடம் தந்து, ""இதை ஆற்றுக்குக் கொண்டு போய் நிறைய தண்ணீர் பிடித்து வா,'' என்றார். பேரனும் தண்ணீர் எடுத்தான். வீடு திரும்புவதற்குள் தண்ணீர் ஒழுகிவிட்டது. தாத்தா அமைதியாக, ""நீ இன்னும் வேகமாக வா,'' எனக்கூறி மறுபடியும் அனுப்பி வைத்தார்.
இம்முறை சிறுவன் ஓடி வந்தான். ஆனாலும், கூடை காலியாகி இருந்தது. அது இயலாத காரியம் என்று புரிந்து கொண்டவன், ""போங்க தாத்தா! இது தேவையில்லாத வேலை,'' என்றான்.
அதற்கு முதியவர், "" எது தேவையில்லாதது? முதலில், நான் கூடையை கொடுத்த போது, கரி ஒட்டிக்கொண்டு மிகவும் கருப்பாக இருந்தது. ஆனால், அடிக்கடி தண்ணீரில் அமிழ்த்தி எடுத்ததால், அது இப்போது சுத்தமாகி விட்டது.
இதே நிலை தான் நமக்கும். கீதையைப்படிக்கும் போது, அதன் அர்த்தம் உனக்கு புரியாமலோ, நினைவில் நிற்காமலோ போகலாம். ஆனால், இளமை முதலே தொடர்ந்து படித்தால், மனதில் குழப்பத்திற்கே இடம் கொடுக்க மாட்டாய். நல்லெண்ணங்களை நிறைத்து சுத்தமாக வைத்திருப்பாய். அதுதான் கீதையின் மகிமை,'' என்றார்.
-
5th Jan 2012, 12:52 PM #10
Re: பக்தி கதைகள்
மனசிருக்குது பச்சை பிள்ளையாட்டம்
சவுபரி மகரிஷி, ஆள் அரவமே இல்லாத இடத்துக்குப் போய் தவம் செய்து கடவுளை அடையலாம் என்ற எண்ணம் கொண்டார்.
காட்டுக்குப் போனால் கூட, அங்கே வசிக்கும் மற்ற ரிஷிகள் ஏதாவது பேச்சுக்கொடுத்து தவத்தைக் கெடுத்து விடுவார்கள். எனவே, தண்ணீருக்குள் தவமிருப்போம் என்று அமர்ந்து விட்டார்.
ஒருநாள், சவுபரி கண்விழித்தார். அப்போது, ஒரு பெரிய மீன் போய்க் கொண்டிருந்தது. பெரிதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் மீன்கள் போய்க் கொண்டிருந்தன.
இதைப் பார்த்ததும், சவுபரிக்கு மனதில் சபலம்.
""ஆஹா...என்ன அழகான குடும்பம். தந்தை மீனும், தாய் மீனும் முன்னே செல்ல, குழந்தை மீன்கள் பின் தொடர்கின்றனவே! எவ்வளவு இனிமையான வாழ்க்கை! தவமிருந்து கிடைக்காத இன்பம், இந்தக் காட்சியைப் பார்த்ததும் கிடைத்து விட்டதே! நமக்கும், மனைவி, மக்கள் என இருந்தால் நன்றாக இருந்திருக்குமே! வெளியே போய் ஒரு பெண்ணைத் தேடுவோம். அவளை மணந்து, பிள்ளை குட்டியுடன் சுகமாக இருப்போம் என்றெண்ணி தண்ணீரை விட்டு வெளியே வந்தார்.
வழியில் மாந்தாதா என்ற மன்னனைச் சந்தித்தார். அவனுக்கு ஐம்பது மகள்கள் இருந்தனர். அதில், யாராவது ஒருத்தியைக் கேட்போமே என அவனிடம் பேசினார்.
""என் மகள்களுக்கு சுயம்வரம் வைத்து, அவர்கள் விரும்பும் மாப்பிள்ளையை தேட முடிவு செய்துள்ளேன். எனவே, பெண்ணைத் தர இயலாத நிலையில் உள்ளேன்,'' என்றான்.
""பரவாயில்லை! என்னையும் அவர்கள் பார்க்கட்டும், யாருக்காவது பிடித்திருந்தால் மணந்து கொள்ளட்டும்,'' என்றார்.
தாடியும், மீசையும், ஜடாமுடியும், கரடு முரடான மேனியும் கொண்டவராய் இருக்கும் இவரை தன் மகள்களில் ஒருத்தி கூட கட்டிக் கொள்ளமாட்டாள் என்ற தைரியத்தில் அவரை மகள்களின் அறைக்கு அனுப்பி வைத்தான் மாந்தாதா.
முனிவர், உள்ளே போனாரோ இல்லையோ, ஐம்பது பெண்களும் ஓடிவந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டனர். ஆம்...அவர் தன் தவவலிமையால் எழில் மிகு இளைஞனாக மாறி உள்ளே சென்றார். ஐம்பது பேரும் அவரைத் தான் கல்யாணம் செய்வோம் என அடம்பிடித்தனர்.
""இதென்ன மாயம்'' என நினைத்த மாந்தாதா, வேறு வழியின்றி எல்லாரையும் திருமணம் செய்து வைத்தான். அவர், அந்தப் பெண்களுக்கு தன் தவவலிமையால், ஐம்பது சிறு மாளிகைகளை உருவாக்கி அதில் தங்க வைத்தார்.
ஒருசமயம், மகள்களைப் பார்க்க மாந்தாதா வந்தான்.
முதல் மகளின் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தபோது, ""அப்பா! அவர் என் மேல் உ<யிரையே வைத்துள்ளார். ஆனால், ஒரே ஒரு கஷ்டம் தான்! அவர் இங்கு மட்டுமே இருக்கிறார். எந்த தங்கையின் வீட்டுக்கும் போகவில்லை,'' என்றாள்.
""அப்படியா!'' என்ற மாந்தாதா, இரண்டாம், மூன்றாம், நான்காம் என ஐம்பது மகள்கள் வீட்டுக்கும் சென்றான். அவர்களும் முதலாமவள் சொன்ன பதிலையே சொன்னார்கள். ஆம்...சவுபரி ஐம்பது இளைஞர்களாக வடிவெடுத்து எல்லா வீட்டிலும் இருந்தது அப்போது தான் தெரிய வந்தது. ஒரு பெண்ணுக்கு இருவர் வீதம் நூறு பிள்ளைகளைப் பெற்றார்.
அவர்களுடன் ஒருநாள் தெருவீதியில் சுற்றி வந்தார். ஓரிடத்துக்கு வந்ததும் ஞானோதயம் வந்தது.
""இவ்வளவு மனைவியர்,இத்தனை பிள்ளைகளைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வந்து விட்டதே! ஐயோ! பழைய வாழ்க்கையே மேலானது. தவமிருக்கவே போய்விடலாம் என்றெண்ணினார். மீண்டும் காட்டுக்கே கிளம்பி விட்டார்.
பெரியவர்களின் மனசும் கூட, குழந்தைகளுடையது போல மாறிக்கொண்டே இருக்கும். அதை ஒருநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
- இனியவன்
Similar Threads
-
நமக்கு பிடித்த வலைபக்கங்களை pdf கோப்புகளாĨ
By sumathisrini in forum ComputerReplies: 5Last Post: 11th May 2012, 07:42 AM -
ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ள
By silentsounds in forum Beauty TipsReplies: 1Last Post: 11th Aug 2011, 04:06 PM -
செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திர
By lathabaiju in forum Interesting FactsReplies: 2Last Post: 10th Aug 2011, 03:43 PM -
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப&
By sumathisrini in forum ParentsReplies: 10Last Post: 7th Aug 2011, 08:32 AM -
பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்!
By silentsounds in forum Nature CureReplies: 0Last Post: 9th Jul 2011, 09:14 AM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks