Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்ந&a


Discussions on "தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்ந&a" in "Teenagers" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்ந&a

  சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்

  டாக்டர் ஆ. காட்சன்

  ‘அவன்/அவள் ரொம்ப தைரியசாலிப்பா. இதுக்கெல்லாம் கலங்கிட மாட்டாங்க. ஒண்ணும் தப்பா நடக்காது. பார்த்துக்கலாம்’ என்று யாரைப் பற்றியும் தவறாகப் புரிதலை வைத்துக்கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தைரியமானவர்கள்கூடச் சில நேரம் தடுமாறக்கூடும்.

  தற்கொலை முயற்சிக்குப் பல நோக்கங்கள் உண்டு. பெரும்பாலும் மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், உலகப் பிரச்சினைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், வீட்டிலுள்ளவர்களை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துவதுண்டு. சிலவேளைகளில் இந்த மிரட்டல் முயற்சிகள் உயிருக்கு ஆபத்தாகவும் முடிவடையும்.

  எதிர்பாலினத்தின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதற்கு, தற்கொலை முயற்சியை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்திப் பார்ப்பது உண்டு. சிலர் தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே, ‘எதற்கும் ஒரு தற்கொலை முயற்சியைச் செய்துவிட்டால் பாதுகாப்பு’ என நினைத்து விபரீத முயற்சிகளில் இறங்குவார்கள்.

  தற்கொலை ஒரு தியாகமா?
  எமில் டர்ஹெய்ம் என்ற சமூக உளவியலாளர் தற்கொலைகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளார். அதில் ஒருவகை சமுதாய நலனுக்காகவோ, மற்றவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலோகூட சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிவது. சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அப்படிப்பட்டவன்.

  தான் தற்கொலைக்கு முயற்சித்ததற்கு, அவன் சொன்ன காரணம் வித்தியாசமானது. பொதுவாகவே அதிகப்படியான சட்டதிட்டங்களைப் பேசும் அவன், வகுப்பில் ஆசிரியர் மொபைல் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளான். பின்பு, இந்தக் காரணத்தை எழுதி வைத்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொண்டால், தனது சாவுக்குப் பின்னாலாவது இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்படாது என்பதுதான் அவனுடைய எண்ணம்.

  இதுபோலப் பல இடங்களில் விவாதங்களில் ஈடுபடுவது அவனுக்கு வாடிக்கை. விசாரித்ததில் மனநலப் பாதிப்புகளுக்கான பல அறிகுறிகள் அவனிடம் இருந்தன. இன்னொரு சிறுவன் தான் செத்தாலாவது தனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் விஷம் குடித்துள்ளான். இதுபோன்ற விபரீத முயற்சிகள் வளர்இளம் பருவத்தில் சில நேரம் வரலாம். ஆனால், இந்த முயற்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படு வதில்லை என்பதுதான் உண்மை.

  யாருக்குப் பாதிப்பு அதிகம்?
  தற்கொலை எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ‘இவ்வளவு தைரியமானவனா இப்படிச் செய்தான்’ என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படிப்பட்டவரையும் சில வேளைகளில் சாய்த்துவிடும்.

  ஆனால், வளர்இளம் பருவத்தினரில் சிலர் எப்போதும் ஆபத்தின் வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள். படிப்பில் மந்தம், தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை, தேர்வுகளில் அடிக்கடி தோல்வி, போதைப்பொருட்கள் பயன்பாடு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சின்ன வயதில் தாயை இழந்தவர்கள், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல்ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.

  ஏற்கெனவே குடும்ப நபர்கள் யாரேனும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினர் அதிகப் பாதிப்புக்குள்ளாகலாம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் 5 - ஹைடிராக்சி டிரிப்டமைன் (5-HT ) என்ற ரசாயனத்தைத் தீர்மானிக்கும் மரபணுக் கள் முக்கியப் பங்கு வகிப்பதுடன், பரம்பரையாகப் பாதிக்கும் நிலையும் உள்ளது.

  ஒருவர் ஒருமுறை தற்கொலை மிரட்டலோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ வெளிப்படுத்தினால், அவர்கள் எப்போதுமே ஆபத்துக்கு உரியவர்கள்தான். அவர்களுடைய செயல்பாடுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

  குணரீதியான மாற்றங்கள்
  வளர்இளம் பருவத்தினர் சிலருக்கு வேலையே அவ்வப்போதுத் தற்கொலை மிரட்டல்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாகத்தான் இருக்கும்.
  குறிப்பிட்ட குணத்தோடு ஒன்றிப்போன அவர்களிடம், வேறு பல மாற்றங்களும் காணப்படும். யாரிடமும் ஒத்துப்போகாமல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்துவிடுவது, எளிதில் உறவுகளை முறித்துக்கொள்வது, தனக்கு மட்டுமே வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற மனோபாவம், காதல் வலைகளில் மாறிமாறிச் சிக்கிக்கொள்வது, இளம் வயதில் பாலுறவு மற்றும் போதைப் பழக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி தங்கள் கையைப் பிளேடால் கிழித்துக்கொள்வது, சூடுபோட்டுக்கொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஆகிய குணநல மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து காணப்படலாம். இதற்குப் பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு (Borderline Personality Disorder ) என்று பெயர். இவர்களுக்கு மாத்திரைகளோடு மனநல ஆலோசனையும் கட்டாயம் தேவை.

  எந்த வகை ஆபத்தானது?
  விடலைப் பருவத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் இருக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்தால், அவர் செய்த முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கலாம். யாரும் இல்லாத, காப்பாற்ற வழியில்லாத இடங்களைத் தேர்வு செய்வது, ரயில் முன்னால் அல்லது மாடியிலிருந்து விழுவது, கடிதம் எழுதிவைப்பது, விஷம் அருந்தியதைக் கடைசிவரைக்கும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது போன்றவை தீவிரமான தற்கொலை எண்ணங்களின் வெளிப்பாடு.
  ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்க மாத்திரை கேட்டிருக்கிறான்.

  அவர்கள் இரண்டு மாத்திரைக்கு மேல் கொடுக்க மறுத்ததால், பல கடைகளில் இரண்டிரண்டு மாத்திரைகளாக, பல நாட்களாகச் சேகரித்துவைத்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இத்தகைய நபர்கள் கண்டிப்பாகத் தீவிர மனநல ஆலோசனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இவர்கள் மனநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பு அதிகம்.

  கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
  உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 20th Dec 2015 at 07:36 PM.

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்Ī

  தற்கொலை எண்ணம் வரக்காரணம் என்ன?  தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளர்இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். புள்ளிவிவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

  வளர்இளம் பருவத்தினரின் பெரும்பாலான தற்கொலை முயற்சிகளுக்கு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே முக்கிய காரணம். பெற்றோர் திட்டுவதால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது, தாங்கள் கேட்பதை பெற்றோர் வாங்கித்தராத காரணங்கள், கருத்து வேறுபாடு என பல காரணங்கள் இருக்கலாம். அதிலும் வளர்இளம் பருவத்தில் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் அறிவுரைகள், எட்டிக்காயாகக் கசப்பதால் எளிதில் வாக்குவாதம் வெடித்துவிடும். பின்னர் அது முற்றி, தற்கொலை முயற்சியாக மாறிவிடும்.

  நண்பர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல், ஒரு தலைக்காதல், காதல் தோல்வி, படிப்பில் நாட்டமின்மை, தேர்வில் தோல்வி, வாழ்க்கையை வெறுமையாக உணர்வது போன்ற தனிப்பட்ட காரணங்களும் தற்கொலையில் முடியலாம். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அவசரப்பட்டு முடிவெடுக்கும் தன்மை, ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை போன்ற குணரீதியான காரணங்களும் உண்டு.

  விடலைப்பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில், மனநோய்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மனநோய் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பால் நிகழலாம். மன அழுத்த (Depression) நோயின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். வளர்இளம் பருவத்தினரின் மரணங்களுக்கு முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று.


 3. #3
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்Ī

  நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்

  டாக்டர் ஆ. காட்சன்
  ஓவியம்: முத்து
  தற்கொலைகள் பற்றி ஓரளவுக்காவது அறிவியல் பூர்வமான புரிதல் இருக்கிறதோ, இல்லையோ நம்மில் பெரும்பாலான வர்களிடம் மிகவும் தவறான புரிதல் இருப்பது என்னவோ உண்மை.

  தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எல்லாருமே கோழைகள், வாழத் தெரியாதவர்கள்; வேண்டுமென்றே செய்கிறார்கள்; வெறும் மிரட்டல்கள் முயற்சியாக மாறாது; தற்கொலையில் இருந்து ஒருமுறை மீண்டு வந்துவிட்டால் மறுபடியும் அதற்கு முயற்சிக்க மாட்டார்கள்; தற்கொலை எண்ணங்களைப் பற்றி மருத்துவர் சாதாரணமாக விசாரித்தாலே, அந்த எண்ணம் இல்லாதவர்களுக்கும்கூடத் தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் - தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைப் பற்றி நிலவும் தவறான மூடநம்பிக்கைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் இவை.

  ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையே தோற்றுப்போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அதேநேரம் தற்கொலை என்பது ஒரு பிரச்சினையை மறப்பதற்கோ, மாற்றுவதற்கோ உள்ள தீர்வு கிடையாது. அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பதை வளர்இளம் பருவத்தினர் மனதில் கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வர்கள். பல நேரம் அவர்களுக்குச் சிகிச்சையும் தேவைப்படலாம்.

  தடுக்க முடியுமா?
  தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாகத் தடுக்கக் கூடியவைதான். ஏற்கெனவே கூறியதுபோல ஆபத்தான மனநிலை யில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்கொலை எண்ணத்தை, நடத்திப் பார்க்கும் முயற்சியாக மாற்றத் தூண்டும். உதாரணமாக எறும்பு பொடி, வயலுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் போன்றவை இப்படிப்பட்ட நபர்களின் பார்வையில் படாமல் வைத்திருப்பது, நல்ல பலனைத் தரும்.

  கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனையில் தடுப்பு வேலிகள் அமைத்த பின்பு, அங்கு அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. லண்டன் நகரின் தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் உயர்த்திக் கட்டப்பட்ட பின்பு, அங்குத் தற்கொலை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலில் இருக்கும் நபர்களிடம் ‘மது அருந்தினால் நிம்மதி கிடைக்கும்’ என நண்பர்கள் ஆலோசனை கூறித் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். மது, நிச்சயமாக மனநிம்மதிக்கான மருந்தல்ல. சமீபகாலமாக எந்தக் காரணமும் இல்லாமலேயே மது தரும் போதையில், தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம். மதுவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விஷப்பொருள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  என்ன செய்யலாம்?
  கடைசிக் கட்டத்தில் கிடைக்கும், ஒரு சிறிய ஆலோசனையும்கூடத் தற்கொலை முயற்சியைத் தடுக்கும். எனவே, அதைப் பற்றிய லேசான எண்ணங்கள் எட்டிப் பார்த்தால்கூட நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அதைப் பற்றி பகிர்ந்துவிடுவது நல்லது. இதுபோன்ற நேரத்தில் தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது. மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் மாத்திரைகளும் சரியான நேரத்தில் கிடைத்தால், பல தற்கொலை எண்ணங்கள் முயற்சிகளாக மாறுவது தவிர்க்கப் படும். இது போன்ற வர்களுக்கு உதவுவதற்காக, தற்கொலைத் தடுப்பு அவசர உதவி மையங்கள் நிறைய செயல்படுகின்றன.

  சமுதாயம், ஊடகங்களின் பொறுப்பு
  தற்கொலைகளைத் தடுப்பதில் சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தற்கொலை முயற்சி செய்த பின் உளவியல் ஆலோசனை பெற வரும் வளர்இளம் பருவத்தினரிடம் கேட்டதில், அவர்களில் பலரும் சினிமாக்களில் வரும் தற்கொலைக் காட்சிகளை உள்வாங்கிப் பிரதிபலிப்பது தெரியவந்தது.

  பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த வான் கதே என்ற எழுத்தாளர் தனது ‘இளம் வெர்தரின் சோகம்’ (Sorrows of young Werther ) என்ற நாவலில், நாயகனின் ஒருதலைக் காதல் தோல்வியடைந்ததன் விளைவாகத் தற்கொலை செய்துகொள்வதாகச் சித்தரித்திருப்பார்.
  அந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில், நாவலில் வெர்தர் எந்த உடையணிந்து, எப்படித் தற்கொலை செய்துகொண்டாரோ,

  அதுபோலவே ஐரோப்பாவில் தற்கொலை செய்து மடிந்த இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல இன்றும் பல ஊடகச் செய்திகளும் படங்களும் வளர்இளம் பருவத்தினரைப் பாதிப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


  Last edited by chan; 10th Jan 2016 at 08:22 PM.

 4. #4
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்&

  தற்கொலை எண்ணத்தைத் தூர எறிவோம்


  டாக்டர் ஆ.காட்சன்
  ஓவியம்: முத்து
  வளர்இளம் பருவத்தில் ஒரு சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இது இயல்பானதல்ல. இது போன்ற எண்ணங்கள், முயற்சிகளை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம்?

  l வளர் இளம் பருவத்தினர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச்செல்வதே சரி.

  l ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவச் சிகிச்சைக்குப் பயந்து மறுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டார் என்பதும் தவறான நம்பிக்கை. அவர்கள்தான் அதிக ஆபத்தான வட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

  l வீட்டில் பெரியவர்கள் யாராவது மருத்துவச் சிகிச்சைக்காகத் தூக்க மாத்திரை சாப்பிட்டுவந்தால், அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும். பார்வையில் தெரியும்படி வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வைக்கக் கூடாது.

  l வளர்இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால், எல்லா மனநோய்களும் வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதில்லை.

  l தற்கொலை எண்ணங்கள் கொண்ட எல்லோரையும் கவுன்சலிங்கால் மட்டுமே மாற்றிவிட முடியாது. மனநோய்களால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள், காரணமே இல்லாமல் ஏற்படக்கூடியவை. மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.

  l ஊடகங்கள் மற்றும் சினிமாக்களில் காண்பிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் ‘தற்கொலை செய்வது எப்படி?’ என்று தேவையற்ற பாடம் எடுப்பது போலவே பல நேரம் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு மாணவன் ‘3’ படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வதைப் போலவே, முயன்றது ஓர் உதாரணம்.

  l பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை என்பதை மறந்துவிடக் கூடாது. பல வளர்இளம் பருவத்தினர் தங்கள் எண்ணங்களைச் சக மாணவர்களிடமே முதன்முதலில் வெளிப்படுத்துகின்றனர்.

  l காசநோயின் அறிகுறிகள் பற்றியும், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்றும், அவசரத் தேவைக்கு 108-ஐக் கூப்பிடுங்கள் என்றும் செய்யப்பட்ட தொடர் விளம்பரங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்தனவோ அதைப் போலவே தற்கொலைக்கான காரணங்கள், ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் விளம்பரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

  l மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம்கூடத் தற்கொலை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது வேதனையான விஷயம். ஏனென்றால், தற்கொலை முயற்சிக்கான முதலுதவி சிகிச்சை முடிந்ததும், மனநலப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. தற்கொலை முயற்சி என்பதே ஒரு மனநலப் பாதிப்பின் அறிகுறிதான்.

  l இவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும்தான் முதல் தேவையே தவிர, தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

  தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060. நேரடியாகக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ஆலோசனை பெறலாம். முகவரி: சிநேகா, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028 / Sneha India
  மின்னஞ்சல் தொடர்புக்கு: help@snehaindia.org

  இலவச ஆலோசனை
  புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை அணுகலாம். முகவரி: மைத்ரேயி, 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

  கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்


  Last edited by chan; 10th Jan 2016 at 08:25 PM.

 5. #5
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: தற்கொலை-சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்&

  தற்கொலை எண்ணம் வருவது ஏன்?

  டாக்டர் ஆ. காட்சன்

  நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிற்று வலி வந்தால் ‘ அவனுக்குத் தைரியம் இல்லை’ என்றோ, ‘நீ நினைச்சா வயிற்று வலியை நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

  அதைப்போல் மன அழுத்தமும் ஒரு நோய்தான். இது ஒரு நோய் நிலை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாழ்த்துவதும் வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலைவரை இட்டுச் சென்றுவிடுகிறது.

  சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர்தான் இவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியவரும். அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சினையாகத்தான் இன்னமும் இது உள்ளது. எனவே, ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மருந்துகளை உட்கொள்வது பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

  தற்கொலையின் தூதன்
  அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை வளரிளம் பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மன நோய்களைப் பொறுத்தவரை முதல் காரணம், மன அழுத்த நோய்தான். மன அழுத்தம் தீவிரமடையும்போது சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும்படி யாரோ காதில் பேசுவதுபோலக் குரல்களும் கேட்கும். இந்த மாயக் குரலுக்கு ‘ஹாலுசினேசன்’ (Hallucination) என்று பெயர்.

  மன அழுத்த பாதிப்புகள் மட்டும் இருந்தால்கூடச் சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், இப்படி ஒரு குரல் பேசுவதாகச் சொல்லிவிட்டால் பேயோட்டக் கண்டிப்பாகக் கூட்டிச் சென்றுவிடுவார்கள். ஆனால், மன அழுத்தம் மோசமடையும்போது குரல் பேசுவது போன்ற பிரச்சினை ஏற்படலாம். அதேநேரம் மருந்துகள் உட்கொண்ட ஓரிரு நாட்களில் தற்கொலை எண்ணங்கள் மறைந்து, இவர்கள் பழைய மனநிலைக்கு மாறுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

  தாழ்வு மனப்பான்மையா?
  பல நேரம் மன அழுத்தம் என்பது, தாழ்வு மனப்பான்மைக்கு ஈடான ஒன்றாகத் தவறாகக் கருதப்படுவதும் சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்துவதற்கு முக்கியக் காரணமாகிறது. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் குணாதிசயம்தான். ஆனால், மன அழுத்தம் என்பது ஒரு நோய். தாழ்வு மனப்பான்மை என்பது மன அழுத்த நோயின் மற்ற அறிகுறிகளுடன் ஒரு அறிகுறியாக வர வாய்ப்பு இருக்கிறதே தவிர, இரண்டும் ஒன்றல்ல.

  இதனால் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினர் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாகப் பெற்றோரால் கருதப்பட்டுப் பல அறிவுரைகளுக்கும், மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சிகிச்சைகளுக்கும், சிலவேளைகளில் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதுதான்.

  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்ததற்குச் சொன்ன காரணம் வித்தியாசமானது. “அட்வைஸ், அட்வைஸ். ஸ்கூல் போனா டீச்சர் அட்வைஸ், வீட்டுக்கு வந்தா அப்பா அட்வைஸ், வெளியே போனா சொந்தக்காரங்க அட்வைஸ். என் மனநிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான், தற்கொலை முயற்சிக்கு அவன் சொன்ன காரணம்.

  தேவை விழிப்புணர்வு
  புள்ளிவிவரங்களின்படி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்குச் சமம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, கவனத்துக்குரியதும்கூட. ஆனால், நிஜத்தில் சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற வருபவர்களுடன் ஒப்பிடும்போது, மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியே வருபவர்களில் பலரும் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்துச் சிகிச்சைக்கு வரும் அளவுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பது வேதனைக்குரியது.

  சில நேரம், மற்றப் பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்கள்கூட இதை ஒரு நோய்நிலையாக பார்க்காமல் காலம் தாழ்த்துவது மருத்துவக் கல்வி திட்டத்தில் மனநல மருத்துவத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

  சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து மீண்டு வந்ததை வெளிப்படையாகக் கூறியது நல்ல எடுத்துக்காட்டு. உலகில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவதில் தற்போது முதலிடத்தில் உள்ள இதய நோயைப் பின்தள்ளிவிட்டு, 2020-ம் ஆண்டு முதல் முதலிடத்தை ஆக்கிரமிக்கப்போவது மன அழுத்த நோய் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது அதற்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

  தவறான எண்ணங்கள், ‘தவறான நம்பிக்கைகள்’
  # இவர்கள் சோம்பேறிகள், பிரச்சினை களை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்.

  # தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.

  # மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

  # படிப்பில் ஆர்வம் இல்லாததால், வேண்டு மென்றே இப்படிச் செய்கிறார்கள்.

  # பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற் கான ஒரு வழியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

  # அவர்களுடைய குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர் களாக முன்வந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

  # மன அழுத்தத்துக்குச் சிகிச்சை இல்லை.

  # மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகி விடுவார்கள்.

  மேற்கண்ட தவறான கருத்துகளைப் போல மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்க வைப்பதற்குத்தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமே. இதற்கான மாத்திரைகள் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளைச் சமநிலைப்படுத்தவே கொடுக்கப் படுகிறது.


  Last edited by chan; 31st Jan 2016 at 02:46 PM.
  dhasinyasri likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter