டீன்-ஏஜ் புரிந்துகொள்வது எப்படி?


‘ஆயிஷா’ இரா. நடராசன்
“டீன்-ஏஜ் பருவத்திற்குத் தக்கபடி பள்ளி வடிவமைக்கப்பட வேண்டும். பள்ளிக்குப் பொருந்தும் வண்ணம் டீன்-ஏஜ் மாணவரையும் சரிசெய்ய வேண்டும். ஓர் ஆசிரியரின் முதல் பணி அதுதான்..!”- ஷ்ரெயில் ஃபைன்ஸ்டீன் (Secrets of the Teen-age Brain)

ஒரு குழந்தையின் மூளை, தனது முக்கிய வளர்ச்சி காலகட்டங்களைக் கடந்து போகும் காலமே டீன்-ஏஜ் பருவம் என மருத்துவ துறையால் அழைக்கப்படுகிறது. ‘உலகை புரிந்துகொண்டு, உறவுச் சிக்கல்களையும் அன்றாட வாழ்வின் புரிதல்களையும் கடந்து செல்லத் தன்னை அப்பருவத்தின் ஊடே ஒரு குழந்தை தயார் செய்துகொள்கிறது’ என்கிறது உளவியல். இந்தப் பருவத்தை சிக்மண்ட் ஃபிராய்டு, ‘கேங்-ஏஜ்’ (Gang-Age) என்று அழைத்தார். அவர்கள் குழுக்களாகவும் குழுக்களின் உறுப்பினராகவும் தங்களை வைத்து உணர்வதைத்தான் அவர் அப்படி அழைத்தார்.

ஆனால் இந்த டீன்-ஏஜ் பருவ மூளையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியவர் தான் ஷ்ரெயில் பைன்ஸ்டீன் (Sheryl Feinstein). 1998ல் தொடங்கி 2004 வரை தனது டீன்-ஏஜ் ஆய்வைத் தொடர்ந்த இந்த ஜெர்மன் தேசத்துப் பெண் உளவியல் அறிஞர் தரும் முடிவுகள் நம்மை அசரவைக்கின்றன.

பொதுவாக, வகுப்பறையில் மாணவர்களை எதற்கெல்லாம் ஆசிரியர்கள் குறை கூறுகிறார்கள் என்பதைப் பட்டியலிடலாம். வீட்டிலும்கூட சற்றேறக்குறைய அதே விஷயங்களுக்காகவே அவர்கள் குறை கூறப்படுகிறார்கள். 13 வயதில் யாராக இருந்தாலும் இது தொடங்கிவிடுகிறது.

‘எதிர்த்துப் பேசுகிறார்’, ‘வேலையில் கவனமின்மை’, ‘தூங்குகிறார்’, ‘சக மாணவர்களைத் தாக்குகிறார்’, ‘பலவிதமாகச் சேட்டை குறும்புகள் செய்கிறார்’, ‘அடுத்தவர் பொருட்களை அபகரிக்கிறார் அல்லது சிதைக்கிறார்’ (கிழித்தல், உடைத்தல் முதலியன), ‘காலந்தாழ்ந்து வருகிறார்’, ‘ஊர் சுற்றுகிறார்’ முதலான இவற்றை நாம் ‘பொறுப்பின்றி நடக்கிறார்’ எனும் பொதுவான தலைப்பில் பட்டியலிட்டு அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறோம். மந்தபுத்தி, எதிலும் கவனமின்மை அல்லது ஒரே விஷயத்தின் மீதே அலாதி கவனம்.

ஆனால் பதின்-பருவ குழந்தைகளே அதிக குழந்தை வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பேங்காக்கிலிருந்து செயல்படும் ‘குழந்தைகள் உரிமைகளுக்கான கண்காணிப்பகம்’ அறிவிக்கிறது. இந்தப் பருவத்தின் பிரதான பிரச்னை ‘பெரியவர்கள் போல நடந்துகொள்ள வேண்டும்’ எனும் மன உந்துதல்தான் என, அண்ணா ஃபிராண்டு போன்ற உளவியலாளர்கள் முன்மொழிகிறார்கள்.

மக்சீம் கார்க்கி நாவலில், சிகரெட் பிடித்து பார்க்க முனையும் ஹுக்காவும், ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகிவா திவாஸ்கோவின், ‘நான்’ கதையில் ஒரு கைத் துப்பாக்கியை போலீசிடமிருந்தே அபகரித்து ஒரு இரவு வைத்திருக்கும் தெல்லியும் பதின்-பருவக் குழந்தை மனநிலைக்குத் தலைசிறந்த உதாரணங்கள்.

பள்ளிக்கூடங்களின் பிரதான அங்கமாகத் திகழும் இந்த டீன்-ஏஜ் பருவக் குழந்தைகளை ஆசிரியர்களான நாம் எந்த அளவிற்குப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பது பில்லியன் டாலர் கேள்வி. பெரும்பாலும் பதின்- பருவ நடவடிக்கைகள் அனைத்தையுமே நம் பள்ளிக்கல்வி குற்றங்களாகவே பார்க்கிறது.

குழந்தைகள் பக்கமிருந்து நியாயங்களை அலச நாம் தயாராக இல்லை. இவ்விஷயத்தில் பள்ளி தனது அன்றாட செயல்முறைகளால், கற்றல் செயல்பாடு என அது அழைத்துக்கொள்ளும் பாடப் பயிற்றுமுறை சார்ந்தவைகளால் பதின்-பருவத்தினரை எதிர்நிலையில் திணற அடிக்கிறது என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.

பாடப்பொருளை எடுத்து இயம்புதல், தேர்வுக்குத் தயார் செய்தல், தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தி வழங்குதல், திரும்பப் பாடப்பொருளை எடுத்து இயம்புதல் என, ஒரு சட்டத்தில் சுழலும் நமது கல்வி, இந்த அன்றாட செயல்பாடு (Routine) தொடர ஒரு இடையூறாகவே பதின்-பருவக் குழந்தைகளின் செயல்களைப் பார்க்கிறது. ‘கற்றலுக்கே லாயக்கு இல்லாதவர்கள்’ என அவர்களில் பலரை தனது கல்வி சாலைகளில் இருந்தே அது துரத்துகிறது.

அதிகநேரம் பதின்-பருவத்தினரோடு அவர்களுக்குப் பலவிதமான கட்டளைகளை இட்டபடியே கழிக்கும் ஆசிரியர்களான நாம், மருத்துவத்துறைப் பதின்-பருவ மூளை வளர்ச்சி பற்றி சொல்வது என்ன என்பதை அறிய வேண்டும்.

டீன்-ஏஜ் மூளையை முழு வளர்ச்சி அடைந்துவிட்ட மனித மூளையிடமிருந்து வேறுபடுத்துவது ‘முன் மூளைப்புரணி’ (Pre-Frontal Cortex) எனும் பகுதி ஆகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல ஒரு வகுப்பறையைப் பின்னாலிருந்து முன்வரிசை வரை நாம் குழந்தைகளால் (உயரப்படி நிற்க வைத்து) நிரப்புவது போலவே தலையில் மூளையும் பின்னிருந்து முன்பாக வளர்ச்சி காண்கிறது.

இறுதி வளர்ச்சி பெறும் அந்தப் பகுதிதான் முன் மூளைப்புரணி. PFC என்று மருத்துவ-உளவியலாளர்களால் அது அழைக்கப்படுகிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது மேல் கதுப்பு (Parietal lobes)கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இது பாதுகாப்பு உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதக் குழந்தைக்கு மட்டுமல்ல பொதுவாக அனைத்துக் ‘குட்டி’களுக்குமே அது ஓரளவுக்கு ஒன்றுபோலவே உள்ளது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள்... குரங்குக் குட்டி முதல் ஆட்டுக்குட்டி வரை தாயின் பார்வையிலிருந்தும் நிழலில் இருந்தும் விலகுவதே கிடையாது. ஆபத்தை உடனே உணர்த்தல் (தாயற்ற தன்மையை அறிதல்) என்பது, உயிர்த்திருத்தலின் அடிப்படை என்பதால் இது புரிந்துகொள்ளத்தக்கதே. 12 வயது பூர்த்தியாகும் வரை, இந்த சிமெண்ட் நிற கூழ்மமான மேல்கதுப்பு முழுதும் வளர்வது கிடையாது.

அதன்பிறகு மொழி மற்றும் தன் உணர்வு சம்பந்தப்பட்ட பக்கக் கதுப்புகள் (Ternporal lobas) அதனிலிருந்து வளர்ச்சி பெறவேண்டும். சிறு வயதில்-அதாவது மழலை வகுப்புக் குழந்தைகள் மொழியைக் கற்க பெரிய ஆர்வம் காட்டுவது எதேச்சையானது அல்ல.

சில சொற்களை விளையாட்டுக்காகவாவது அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வதைக் காணலாம். மொழி மற்றும் உணர்ச்சிப் பெருக்கு தொடர்பான இந்த பக்கக் கதுப்பு அமைப்புகள் முழுமையாக வளர்ச்சி அடைந்து முடிப்பதற்கு 16 வயது வரை ஆகிறது என்பது ஃபைன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு.

பதின்பருவத்தை ஒரு குழந்தை எட்டும்போது, பக்கக் கதுப்புகளின் வளர்ச்சி விகிதம் நாள் கணக்கில் வேகம் பெருகிறது. ஆரம்பத்தில் இந்த வயதுச் சிறார்களுக்குக் குறைந்தபட்சம் ஒன்பது மணி நேர உறக்கம் தேவை என்கிறார் பேராசிரியர் டிரிக் ஜான் ஜிக் (Survey Sleep Research Centre). ‘இண்டி பெண்டன்ட்’ இதழில் (2012) வெளியான பதின்-பருவ உறக்கம் எனும் ஆய்வுக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதுகிறார்.

‘உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளில் சரியாக உறங்க அனுமதிக்கப்படாதவர் பின்நாட்களில் கல்வியில் பின்தங்குவதோடு, 40 சதவிகிதம் உறக்கம் குறைந்த நிலை பதின்-பருவத்தினர், பிற்காலத்தில் மனவீழ்ச்சி (Depression) பெற்று தற்கொலை போன்ற ஆபத்துகளில் சிக்குகிறார்கள்...’

இந்த பக்கக் கதுப்புகளின் வளர்ச்சி முழுமை பெறாத அந்த நிலையில் பதின்-பருவத்தினரின் உளவியல் கண்டிப்பாகப் பெரியவர்களிடமிருந்து வேறுபடுகிறது. PFC-யின் ஒரு பாகமான அவற்றின் வளர்ச்சிப் படிநிலையை உணர ஆராய்ச்சியாளர்கள் ‘முடிச்சிக்கல் குருத்து வளர்தல்’ (Hairy Dendrical Sprouting) என்பதை முன் வைக்கிறார்கள். டீன்-ஏஜ் பருவத்தினரின் வித்தியாசமான நடத்தைகளுக்கு இந்த மூளையின் நரம்புகளில் ஏற்படும் அதிசிக்கல் இணைப்புகள் முழுமை பெறாமை ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

உதாரணமாக ஒரு பெரியவர் ‘கடலில் பிரமாண்ட சுறா மீனோடு சேர்ந்து நீச்சலடித்து நல்ல யோசனையா? இல்லையா?’ என்ற கேள்விக்கு உடனடியாக நேரடியாகப் பதிலளித்துவிடுவார். இந்தக் கேள்வி மட்டுமல்ல. இதுபோன்ற சில கேள்விகள் ஆராய்ச்சியாளர்களால் பல நாடுகளைச் சேர்த்த டீன்-ஏஜ் குழந்தைகளிடம் முன் வைக்கப்பட்டது.

2009ல், ‘A Teen-Age Test’ எனும் தலைப்பில் நியூ ஹாரிசன் டாட் ஆர்க் இணைய இதழ் சார்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் ஒரு முதிர்ச்சி கண்டவர் உடனடியாக, ‘சுறாக்களோடு நீச்சலடிப்பது ஆபத்தானது’ என கூறிவிடுவதையும் டீன்-ஏஜ் பருவத்தினரில் 98% பேர் இக்கேள்விக்கு, நாலைந்து வகையான பதில்களை அடுத்தடுத்து அடுக்கியதையும் பதிவு செய்கின்றன.

‘எந்தக் கடல்..?’, ‘அது குட்டி சுறாவா...?’, ‘எனக்கு நீச்சல் தெரியாது...’, ‘என் நண்பனும் வருவாரா...’, ‘சினிமாவில் அப்படி இதுவரை யாராவது செய்திருக்கிறார்களா...? ‘சுறாவோடு நீந்தினால் பரிசு தருவார்களா...?’ இப்படி ஒருவரே பலவிதமாகக் கேள்வியை எதிர்கொண்டனர். யாருமே தீர்மானமான முடிவுகளை எட்ட முடியவில்லை.

ஆனால் சிறு குழந்தைகளின் எதிர்வினையும், டீன்-ஏஜ் பருவத்தினரின் எதிர்வினையும் வேறுபட்டது. சிறு குழந்தைகளில் சிலர், ‘அந்த சுறாவின் பெயர் என்ன...?’, ‘அதை ஃபிரண்ட் ஆக்க முடியுமா...?’, ‘அதோடு விளையாட முடியுமா..?’ எனக்கூட கேட்டனர்.

ஆனால் பதின்-பருவத்தினர் இப்படி அதை அணுகவில்லை. PFC-யின் வளர்ச்சிப் பாதை, எதையும் சிக்கலானதாக அவர்களுக்கு மாற்றுகிறது. தங்களுக்குக் காட்டப்படும் எல்லா புத்தாடைகளுமே அழகாக இருப்பதாக உணர்வர். அல்லது அனைத்தையுமே ‘சரி கிடையாது’ என்பர். அடுத்தடுத்து தண்டனைகளையே தரும் ஒரு மோசமான கணித ஆசிரியரைப் பொறுக்காமல் அவர்கள் கணித பாடத்தையே வெறுக்கிறார்கள்.

‘முன் மூளைப்புரணி, முழுமை வளர்ச்சி நோக்கி அதிவேகமாக செயலூக்கம் பெறுகிற அந்தக் காலகட்டத்தில் அதிகம் அவர்களின் மனம் நாடுவது அங்கீகாரத்தைத்தான்’ என்கிறார் உளவியல் மருத்துவர் ஃபைன்ஸ்டீன்.

ஊக்கம் என்பதே மந்திரச் சொல் ஆகும். வேறு மருந்துகள் எதுவுமே இல்லை. தான் வரைந்த ஓவியம், தான் எழுதிய கையெழுத்து, தனது பூ வேலை, தன் குட்டிக்கரணம், தன் குரல், தன் எல்லாமும் யாருக்காவது காட்சிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற அந்த டீன்-ஏஜ் மனம் தவிக்கிறது. அதற்குக் காரணம் பைனியல் சுரப்பி (pineal gland)-யில் உற்்பத்தி ஆகும் மெலடோனின் எனும் ஒருவகை ஹார்மோன்.

சில மெலடோனின் எனும் ஹார்மோன், ‘கற்றல் ஹார்மோன்’ என்றே அழைக்கப்படுகிறது. எதையும் கற்றுத் தேர்ந்து பெரியவர்கள் பாராட்டும் வண்ணமும், பெரியவர்கள் போலவும் ஆகிட, அது தூண்டுகிறது. இந்த டீன்-ஏஜ் பருவத்தில்் பெரியவர்களால், ஆசிரி யர்களால் ‘கண்டுகொள்ளாமல்’ விடப்பட்டு விடுவோமோ எனும் பதற்றம் வகுப்பறையில் பலவிதமாக அவர்களைச் செயல்படத் தூண்டுகிறது.

பாராட்டும் அங்கீகாரமும் பெரியவர்களிடமிருந்து கிடைக்காத பற்றாக்குறை சக நண்பர்கள், தான் சார்ந்துள்ள குழுக்களில் தனக்கான இடத்தை அங்கீகாரத்தைத் தேடுபவர்களாக அவர்களை மாற்றுகிறது.முன் மூளைப்புரணி (PFC) மட்டுமல்ல மெலடோனின் ஹார்மோன் குறித்தும் இன்னும் சற்று விரிவாக அடுத்த இதழில் காணலாம்.

எதிர்த்துப் பேசுகிறார்’, ‘வேலையில் கவனமின்மை’, ‘தூங்குகிறார்’, ‘சக மாணவர்களைத் தாக்குகிறார்’, ‘பலவிதமாகச் சேட்டை, குறும்புகள் செய்கிறார்’, ‘அடுத்தவர் பொருட்களை அபகரிக்கிறார் அல்லது சிதைக்கிறார்’ (கிழித்தல், உடைத்தல் முதலியன), ‘காலந்தாழ்ந்து வருகிறார்’, ‘ஊர் சுற்றுகிறார்’ முதலான இவற்றை நாம் ‘பொறுப்பின்றி நடக்கிறார்’ எனும் பொதுவான தலைப்பில் பட்டியலிட்டு அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறோம்.

‘முன் மூளைப்புரணி, முழுமை வளர்ச்சி நோக்கி அதிவேகமாகச் செயலூக்கம் பெறுகிற அந்தக் காலகட்டத்தில் அதிகம் அவர்களின் மனம் நாடுவது அங்கீகாரத்தைத் தான்’ என்கிறார் உளவியல் மருத்துவர் ஃபைன்ஸ்டீன்.

ஊக்கம் என்பதே மந்திரச் சொல் ஆகும். வேறு மருந்துகள் எதுவுமே இல்லை. தான் வரைந்த ஓவியம், தான் எழுதிய கையெழுத்து, தனது பூ வேலை, தன் குட்டிக்கரணம், தன் குரல், தன் எல்லாமும் யாருக்காவது காட்சிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற அந்த டீன்-ஏஜ் மனம் தவிக்கிறது.Similar Threads: