மனது வைத்தால் எடையை குறைக்கலாம்!

மாறி வரும் உணவுப்பழக்க வழக்கம், உடல் உழைப்பு குறைவான பணிச்சூழல் காரணமாக, உடல் எடை அதிகரிப்பு, தவிர்க்க முடியாமல் போகிறது. உடலை குறைக்க, இன்று பல ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், நாம் மனது வைத்தால் மட்டுமே அதிகப்படியான உடலின் எடையை படிப்படியாக குறைக்க முடியும். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க, பல வழிகள் உள்ளன.

உடல் எடையை குறைக்க வேண்டும் என, நம் மனதில் வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, நாவை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கண்ட நேரத்தில் கண்டதை விழுங்கி விட்டு, உடல் எடை குறையவில்லையே என்றால் பயனில்லை. உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும். நம் உடலுக்கு ஆரோக்கியமான உணவு, எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ருசிக்காக கொழுப்பு நிறைந்து உணவுகளை உட்கொள்ளாமல், சத்தான குறைந்த கலோரிகளை உடைய உணவுகளை உண்ண வேண்டும். அப்போது தான், உடல் எடை குறையும். ராகி, கோதுமை, ஓட்ஸ் உட்பட நார்ச்சத்துகள் மிக்க உணவுகளை உண்ண வேண்டும். இது, உடலுக்கு தேவையான சக்தியை நீண்ட நேரம் அளிக்கவல்லது. பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

தண்ணீரை அதிகளவு குடிப்பது நல்லது. குறிப்பாக, உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு கட்டுப்படும். இதனால், உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். உணவை நன்றாக அரைத்து மெதுவாக உண்ண வேண்டும். ஜீரணத்துக்கு தேவையான என்சைம்கள் நாவில் இருந்து தான் உருவாகின்றன. உணவை மெதுவாக அரைத்து உண்ணுவதால், அதிகளவு உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் எடையும் கட்டுப்படும்.

நொறுக்குத்தீனிக்கு குட்பை சொல்வது நல்லது. குறிப்பாக, சாக்லேட், குக்கீஸ், சிப்ஸ் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை குறைத்து கொள்வது நல்லது. சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும். ஜூஸ், காபி போன்றவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்காமல், பருகுவதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

உடல் எடையை குறைக்க, எளிமையான உடற்பயிற்சிகளை தினசரி வீட்டில் மேற்கொள்வது நல்லது. தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடை குறைந்து, ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அருகேயுள்ள கடைகளுக்கு செல்ல, இரு சக்கர வாகனத்தை எடுக்காமல், நடந்து செல்வது நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, புரதச்சத்து மிகுந்த உணவுகளை தவிர்ப்பது கூடாது. நல்ல சத்தான உணவுகளை உட்கொள்வது நல்லது. குறிப்பாக, முட்டையில் மஞ்சள் கருவை தவிர்த்து உண்பது சாலச்சிறந்தது.