மாசி மகத்தின் மகத்துவம்

எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து, துன்பக் கடலில் இருக்கும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பாகும். இதை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வதுண்டு.

masi magam

ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் நிலை ஏற்பட்டது. உயிர்களை காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ ராசிகளின் ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரித்தார் சிவபெருமான். அதற்கு பாதுகாப்பாக நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து மேரு மலையில் வைக்கும்படி சொன்னார்.

பிரளயம் வந்து அனைத்து உயிர்களும் அடித்து செல்லப்பட்டன. அமுதம், ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தடைபட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்கச் செய்தார். பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் எனப்படுகிறது. உயிர்களை காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசி மக விழாவும், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.