ஃபுட் கலர்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கலர்... கவர்ச்சிக்குப் பின் கவலைகள் மறைந்திருக்கு!


கலர் கலர் ஃபுட் கலர்


நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றையும் அது தரமானதா, கலப்படம் இல்லாததா, ரசாயனங்கள் இல்லாததா என்கிற பரிசீலனைக்கு உட்படுத்துகிறோமா? பெரும்பான்மையானோரின் பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். நமக்கு உணவுப் பொருட்கள் மீது எவ்வித அக்கறையுமில்லை. நிறக் கவர்ச்சிக்கும், நா ருசிக்கும் நாம் அடிமையாகியிருக்கிறோம் என்பதுதான் வெளிப்படையான உண்மை.

அடர் சிவப்பு நிறத்தில் பளீரிட்டுக் கொண்டிருக்கும் சில்லி சிக்கனை பார்த்ததும் நம் நாவில் எச்சில் ஊறுகிறது. சுண்டியிழுக்கும் இந்த நிறத்துக்காக என்ன கலந்திருப்பார்கள் என்கிற கேள்வியே இல்லாமல் வாங்கிச் சாப்பிடுகிறவர்கள்தான் இங்கு அதிகம். ஓர் உணவுப் பொருளை சமைக்கும்போது அது தன் நிறத்தை இழந்து விடும் என்பதுதான் இயற்கை. அப்படியென்றால் பளீரிடும் நிறம் எப்படி வருகிறது? காரணம், நிறமூட்டிகள். இது தேவையற்ற கவர்ச்சி என்பதைத் தாண்டியும் பல நோய்களுக்கு நம்மை ஆளாக்குகிறது என்கிற விழிப்புணர்வு உலக அளவில் ஏற்பட்டு வருகிறது.

`உலகமயமாக்கலின் சீர்கேடுகளில் ஒன்றுதான் இந்த நிறமூட்டிகள்’ என்கிறார் இயற்கையியலாளரான நாச்சாள்.‘‘நிறம் என்பது ஒரு பொருளின் அடையாளமாக மாறிவிட்டது. லட்டு என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும், ஜிலேபி என்றால் ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற சிந்தனைக்குள் மக்களை ஆட்படுத்தி விட்டனர்.

நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய நிறமூட்டியான கேசரிப் பவுடரை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ரவை மற்றும் சர்க்கரைதான் கேசரிக்கான மூலப்பொருள். கேசரிப் பவுடர் போடாமல் அதைச் செய்தாலும் அதன் சுவை ஒன்றுதான். ஆனால், யாரும் அதை கேசரி என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மக்களின் இந்த மனநிலைதான் நிறமூட்டிகளின் விற்பனைக்கான ஆதாரம். உணவு நிறுவனங்கள் தங்களுக்கென நிலையான நிறத்தில் உற்பத்தி செய்வதற்காக நிறமூட்டிகளைப் பயன்படுத்துகின்றன.

இயற்கை, செயற்கை, ரசாயனம் என நிறமூட்டிகள் மூன்று வகைப்படுகின்றன. ஆரம்ப காலகட்டங்களில் தாவரங்கள் மற்றும் பூச்சிகளிலிருந்துதான் நிறங்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கின்றனர். மஞ்சள், பீட்ரூட், தாவரங்களில் உள்ள பச்சையம், குடை மிளகாய், குங்குமப்பூ என இயற்கையில் விளையும் பொருட்களிலிருந்தே நிறமூட்டிகளைத் தயாரிக்க முடியும். ஆனால், இவற்றை தயாரிப்பதற்கான கால அளவு அதிகமாவதோடு இதன் தாங்கும் திறன் குறைவுதான். அதோடு, விலையும் அதிகம் என்பதால் பெரும்பாலான மக்களால் இதனைப் பயன்படுத்த முடியாது.

கரிம மூலப்பொருட்களைக் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்படுவதுதான் செயற்கை நிறமூட்டிகள். உலக அளவில் அனைத்து நாடுகளின் உணவுத்தரக்கட்டுப்பாட்டு வாரியங்களும் 9 செயற்கை நிறமூட்டிகளுக்கு மட்டும்தான் அனுமதி அளித்திருக்கின்றன. brilliant blue, indigotin, fast green, erythrosine, allura red ac, tartrazine, sunset yellow fcf, citrus red 2, orange b ஆகிய இந்த செயற்கை நிறமூட்டிகளால் உடனடி விளைவுகள் இல்லையென்றாலும், பல்வேறு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈயம், குரோமியம், பாதரசம் போன்ற அதிக விளைவுகளை ஏற்படுத்தும் உலோகங்கள் செயற்கை நிறமூட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை carcinogen எனப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டவை. இவை வளர்சிதை மாற்றத்தை தடை செய்கின்றன. நல்ல குரோமோசோம்களை oncogene களாக மாற்றக்கூடியவை. மரபியல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

வயிறு மற்றும் நரம்புமண்டலம் தொடர்பான பல விதமான கோளாறுகளுக்கு இவை முக்கியக் காரணியாக இருக்கின்றன. 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் South Hampton பல்கலைக்கழகம் 6 விதமான செயற்கை நிறமூட்டிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அந்த ஆய்வில் இவை குழந்தைகளுக்கு மனக்குவிப்புத் திறன் பாதிப்பு, நுண்ணறிவுத் திறன் குறைபாடு, ADHD போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.

கணையம் மற்றும் பித்தப்பை தொடர்பான புற்றுநோய்களை ஏற்படுத்துவதும் அந்த ஆய்வில் உறுதியானது. இதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு அமெரிக்க உணவுத்தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்விலும் செயற்கை நிறமூட்டிகள்தான் ADHD எனும் மனநலக்குறைபாட்டுக்கு முக்கியக் காரணம் என்பதை உறுதி செய்தது. இதன் பிறகு உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைப் பயன்படுத்துவதை குறிப்பிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இருந்தும் நிறமூட்டிகளின் பெயரைக் குறிப்பிடாமல் அதை எண்ணாக குறிப்பிடுகின்றன உணவு நிறுவனங்கள்.

E என்கிற எழுத்தோடு 102-143 வரை குறிப்பிடப்பட்டிருந்தால் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகளும் விலை கூடுதலானவை என்பதால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகின்றன. சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவகங்கள், உள்ளூர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவது எல்லாமே பல்வேறு விதமான ரசாயன நிறமூட்டிகள்தான்.

அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகளாலேயே இவ்வளவு விளைவுகள் என்றால், உணவுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாத ரசாயன நிறமூட்டிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? azo, xanthene, diphenylmethane, indi gold die போன்ற ரசாயன நிறமூட்டிகள் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கேசரிப் பவுடர் என்பது Red oxide, மஞ்சள் தூளில் yellow oxide கலக்கப்படுகின்றது.

இன்னும் பெயர் தெரியாத ரசாயன நிறமூட்டிகள்தான் சந்தையில் உலவிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத்தான் நாம் பாக்கெட், பாக்கெட்டாக வாங்கிச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். பெயின்ட்டில் பயன்படுத்தும் ரசாயன மூலக்கூறுகள்தான் இவையெல்லாம். கணக்கிட்டுச் சொல்ல முடியாத அளவிலான நோய்களை நமக்குத் தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நமது உணவுப்பழக்கம் மாறியதே நோய்களின் பெருக்கத்துக்குக் காரணம் என்பதை உணர வேண்டும். நிறத்துக்கும் உணவுப்பொருளுக்கும் தொடர்பில்லை என்கிற உண்மையை ஏற்றுக் கொள்வோம். நம் பாரம்பரிய உணவுமுறை நலமான வாழ்வுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்தது. எனவே நம் பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்ப முடிந்த வரை முயற்சிப்போம்’’ என்கிறார் நாச்சாள்.குடிக்கிற தண்ணீரில் கூட நிறமூட்டிகள் கலக்கப்படுகிறது என்று அதிர்ச்சி தருகிறார் பொது நல மருத்துவர் ராம்ராஜேஷ்குமார்.

‘‘இன்றைக்கு நம் குடிநீராக மாறிப்போய்விட்ட சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீர் (Reverse osmosis) மற்றும் மினரல் குடிநீரில் membrane எனப்படும் ரசாயன நிறமூட்டி பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பொருட்களில் தேக்கி வைத்தல், பதப்படுத்துதல், செயல்பாட்டுக்கு உட்படுத்துதல் என எந்த நிலையிலும் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிற சட்டம், அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருக்கிறது. நாம் இன்றைக்கு மேலைநாட்டு மோகத்தில் உட்கொண்டு வரும் உணவுப் பொருட்கள் எல்லாம் மேலைநாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

பாக்கெட் செய்யப்பட்டு வரும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் நிறமூட்டிகள் கலக்கப்படுகின்றன. சாஸ், ஜாம் போன்ற பொருட்களில் முழுக்க முழுக்க நிறமூட்டிகளே பயன்படுத்தப்படுகின்றன. இளம் காக்கி நிறத்தில் இருக்கும் மைதா மாவை வெள்ளையாக்குவதற்காக aflatoxin எனும் ரசாயன நிறமூட்டி பயன்படுத்தப்படுகிறது. சோதனை எலிகளுக்கு நீரிழிவு நோயை உடனே ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தும் ரசாயனம் அது. அப்படிப்பட்ட மைதாவை தொடர்ந்து உட்கொள்ளும்போது நீரிழிவு நோய் ஏற்படும்.

குழந்தைகள் சாப்பிடும் பால் பவுடர், சாக்லெட் மற்றும் நொறுக்குத்தீனிகளில் இதன் கலப்பு இருக்கிறது. கேசரிப் பவுடரை குழந்தைகள் அதிகம் உட்கொள்ளும்போது குடல்வால்வு வீக்கம் (appendicitis) ஏற்படுகிறது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நிறமூட்டிகள் கலந்த உணவைச் சாப்பிடுபவர்களுக்கு சிறுகுடல் மற்றும் பெருகுடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 50 -55 வயதுக்குட்பட்டவர்களுக்கு insominia எனும் தூக்கமின்மை ஏற்படுகிறது. 16 வயதுக்கு உட்பட்ட பருவமடையாத பெண்களுக்கு பிறப்புறுப்பில் நீர்க்கட்டிகள் (polycystic ovary) ஏற்படும்.

எலும்புகள் உடையும் osteoporisis ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காரணமில்லாத பயம், உடலில் வலியிருப்பது போலவே ஒரு எண்ணம் - இவையெல்லாம் நிறமூட்டிகளின் பயன்பாடு அதிகமாகும்போது தெரியும் அறிகுறிகளே. இப்படிப்பட்ட அறிகுறிகள் தெரிந்த உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நிறமூட்டிகள் இன்றைக்கு அத்தியாவசியத் தேவையாக மாறி விட்டன. இருந்தாலும் முடிந்தவரையிலும் அதனை தடுக்க முயற்சிக்கலாம். ஓட்டல் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து விடலாம். பால் பொருட்களை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். குளிர்பானங்களை ஒட்டுமொத்தமாகவே தவிர்த்து விடலாம். கேசரிப் பவுடர் பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம். ஏனெனில் நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் ராம்ராஜேஷ்குமார். தெளிவடைய வேண்டிய நேரம் இது... தெளிவோம்!

மைதா மாவை வெள்ளை யாக்குவதற்காக ரசாயனநிறமூட்டி பயன்படுத்தப்படுகிறது. சோதனை எலிகளுக்கு நீரிழிவு நோயை உடனே ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தும் ரசாயனம் அது. அப்படிப்பட்ட மைதாவை தொடர்ந்து உட்கொள்ளும்போது நீரிழிவு நோய் ஏற்படும்...

செயற்கை நிறமூட்டிகள்தான் ADHD எனும் மனநலக்குறைபாட்டுக்கு முக்கியக் காரணம் என்பது உறுதியான பிறகு, உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைப் பயன்படுத்துவதை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் நிறமூட்டிகளின் பெயரைக் குறிப்பிடாமல் அதை எண்ணாக குறிப்பிடுகின்றன உணவு நிறுவனங்கள்...
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.