ஃபேமிலி ஹெல்த் - Family Health

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஃபேமிலி ஹெல்த்
ஆண்கள்​
அலுவலகமும் ஆரோக்கியமும்!
'உடம்பெல்லாம் அடித்துப் போட்டமாதிரி வலிக்கிறது. அலுவலகத்திலும் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை பார்க்க முடியவில்லை. கண் எரிச்சல், கழுத்து வலி, முதுகுவலி பாடாய்ப் படுத்துகிறது’ போன்ற வேதனைக் குரல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருன்றன! விஞ்ஞான உலகில், உடல் உழைப்பையும் மிஞ்சி விட்டது மூளை உழைப்பு! பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி, நிதி நிர்வாகம்.... என்று அலுவலக வேலைகள் அனைத்தும் ரிமோட் சிஸ்டமாகிப் போனது. இப்படி ஒரே இடத்தில் ஆணியடித்தாற்போல் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு நேரும் உடல் ரீதியானப் பிரச்னைகளையும், அதனைத் தவிர்க்கும் எளிய முறைகள் குறித்தும் பேசுகிறார் பொது மருத்துவர் டாக்டர் ராமநாதன்.

''பணி நிமித்தமாக தினமும் எட்டு மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். கம்ப்யூட்டர் திரையின் ஒளி அளவானது கண்களை உறுத்தாமலும், அதே சமயம் அறையின் வெளிச்சத்துக்கு ஏற்பவும் மாற்றியமைத்துக் கொள்வது முக்கியமானது. கணினித் திரையின் ஒளியளவு அதிகப் பிரகாசமாகவோ அல்லது மிகக் குறைந்த ஒளியிலோ இருக்கும்போது நம் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடக் கூடும். கழுத்தை மேல் நோக்கி உயர்த்திப் பார்ப்பதோ அல்லது குனிந்து பார்க்கும் விதமாகவோ கணினித் திரையை வைத்துக் கொண்டால், விரைவில் கழுத்து எலும்புத் தேய்மானப் பிரச்னை வந்துசேரும்.

கண்கள் வறட்சியடைந்துவிடாமல் பாதுகாக்கும் விதமாகத்தான் இமையானது அடிக்கடி மூடித் திறக்கிறது. இப்படி சிமிட்டும் ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் போன்ற ஈரத் தன்மை படியும். இந்த ஈரம் வழியாகத் தான் கண்ணின் கருவிழிக்குத் தேவையான ஆக்ஸிஜன் செல்கிறது. எனவே கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால், தொடர்ச்சியாக கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு வேலையின் தீவிரத்தால், இமையின் சிமிட்டல் எண்ணிக்கையானது மிகவும் குறைந்துவிடும். எனவே, கண்கள் வறட்சியடைந்து கண் எரிச்சல் உண்டாகும். இதனைத் தவிர்க்க ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை மூடிய நிலையில் நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும்.

கணினித் திரையில் மட்டுமே நமது பார்வை நிலைக்குத்தி இருப்பதால், கண் எரிச்சல், தலைவலி என்று பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்த்து கண்களுக்கு புத்துணர்வு கூட்ட '20-20-20’ என்ற ஒரு சுலபமான பயிற்சியை அவ்வப்போது செய்துகொள்ளலாம். அதாவது, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை கணினித் திரையில் இருந்து பார்வையை விலக்கி இருபது அடி தூரத்தில் உள்ள பொருட்களை இருபது நொடிகள் வரை பார்த்து கண்சிமிட்டிக்கொள்வதுதான் இந்தப் பயிற்சி.

'முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு அமர்ந்தால்தான் முதுகுவலி வராது’ என்று சிலர் அட்டென்ஷன் போஸில் அமர்ந்திருப்பார்கள். கூன் போட்டு இருப்பதைக் காட்டிலும் இப்படி 90 டிகிரி கோணத்தில் இருப்பது நல்லதுதான். ஆனாலும்கூட தொடர்ந்து இதே நிலையில் அமர்ந்திருக்கும்போது 'micro trauma’ என்ற பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அவ்வப்போது உங்களுக்கு வசதியான நிலையில் அமர்ந்துகொள்வதில் தவறேதும் இல்லை. கட்டாயம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து காலாற நடந்துவிட்டு வந்து அமர்ந்து கொள்வது நல்ல சுறுசுறுப்பைத் தரும். அவ்வப்போது ஏ.சி. அறையில் இருந்து வெளியே சென்று இயற்கைக் காற்றை சுவாசியுங்கள்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொழுது இடுப்பும், கால் மூட்டுக்களும் சரி சம நிலையில் இருக்குமாறு அமர்வதுதான் சரியான முறை. மேலும், கால் பாதங்கள் முழுவதும் நன்கு தரையில் பதிந்து இருக்க வேண்டும். கீபோர்டும், கைகளும் சமமான நேர்க்கோட்டு நிலையில் இருந்தால் மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டு வலிகள் வராது.

பெரும்பாலான அலுவலகங்களில், சாப்பாட்டு அறை தனியாக இருக்கிறது. ஆனாலும்கூட சிலர் தாங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி, மேஜையிலேயே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். இது நல்லதல்ல. ஏனெனில், அலுவலகப் பயன்பாட்டில் இருக்கும் நாற்காலி, மேஜை, கணினி, தொலைபேசி.... போன்ற பொருட்களில் மற்ற இடங்களைக் காட்டிலும் கிருமிகளின் எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும். கழிப்பறை சுவரில் ஆரம்பித்து கதவு, ஜன்னல், கைப்பிடி மற்றும் உபயோகப் பொருட்கள் வரை குடிகொண்டிருக்கும் நச்சுக் கிருமிகளுக்கு இணையாக அலுவலகப் பொருட்களிலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உண்டு. எனவே, அலுவலகப் பொருட்களை அவ்வப்போது 'கிருமி நாசினி’களைக் கொண்டு சுத்தம் செய்துகொள்வது முக்கியமானது.

எந்த வேலை செய்தாலும் முழு விருப்பத்துடன் செய்பவர்களுக்கு பிரச்னை எதுவும் வருவதில்லை. ஆனால், அலுவலக வேலையைக் கடமையாக நினைத்து செய்யும்பொழுதுதான் புதிது புதிதாக பிரச்னைகளும் உருவாகின்றன'' என்று தத்துவார்த்தமாக முடித்தார் டாக்டர் ராமநாதன்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பெண்கள்​
குழந்தைக்காக 10,000 அடிகள் நடக்கலாம்!

குழந்தையின்மை போயே போச்சு[TABLE="align: left"]
[TR]
[/TR]
[/TABLE]
[TABLE="align: left"]
[/TABLE]
'

உலக அளவில் 100 தம்பதியரில் 12 பேருக்குக் குழந்தையின்மைப் பிரச்னை இருக்கிறது!’ என்று அதிர்ச்சிப் புள்ளிவிவரம் தருகிறது, கொலம்பியா மருத்துவப் பல்கலைக்கழகம்.

இந்தத் தகவல் உண்மைதானா, குழந்தையின்மைப் பிரச்னைக்கு நவீன சிகிச்சை முறை என்ன அறிமுகமாகி இருக்கிறது என்று செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜிடம் கேட்டோம்.

''இந்தப் புள்ளிவிவரம் உண்மைதான் என்பதற்கு மருத்துவமனைகளில் வந்து குவியும் கூட்டமே சாட்சி. குழந்தையின்மை என்ற குறைபாட்டை, கடவுள் கொடுத்த தண்டனை என்பதாகவே நம் நாட்டு மக்கள் நினைப்பதால், திருமணம் முடித்துப் பல ஆண்டுகள் கழித்தே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதனால் குழந்தைப் பேறு கிடைப்பதும் தாமதமாகிறது. தம்பதியில் எவருக்கு என்ன விதமான குறைபாடு இருந்தாலும் குழந்தைப்பேறு பெற்றுவிட முடியும் என்ற அளவுக்குத் தற்போது இந்தத் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு, 1978-ம் ஆண்டு ஏற்பட்ட மருத்துவப் புரட்சியே காரணம்
எனலாம். அந்த வருடம்லூயிஸ் பிரௌன் என்கிற முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தவுடன், மகப்பேறு மருத்துவத் துறையின் சரித்திரம் மாறத் தொடங்கியது.

1992-ம் ஆண்டு அறிமுகமான இக்ஸி சிகிச்சை முறை குழந்தையின்மை குறைபாட்டுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த சிகிச்சை முறையில், கணவனின் விந்துத் திரவத்தில் உள்ள உயிர் அணுக்களை எடுத்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தி கரு உருவாக்கப்படும்.

இதையடுத்து 2000-ம் ஆண்டு அறிமுகமான 'லேசர் அசிஸ்டெட் ஹெட்சிங்’ என்கிற நவீன முறை, வயதான பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. வயதான பெண்களுக்கு கருமுட்டையின் வெளி ஓடு அடர்த்தியாக இருக்கும். இதனால் கருமுட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஆண்களின் உயிர் அணுக்கள் நுழைய முடியாது. இந்த சிகிச்சையில் லேசர் மூலம் நுண்துளையிட்டு, வயதான பெண்களின் கருமுட்டையின் வெளிப்புற ஓட்டை மெலிதாக்குவதால், கருத்தரிப்பு எளிதாகிறது.

முன்பு இக்ஸி முறையில் ஒரு குறைபாடு இருந்தது. அதாவது ஊசி மூலம் செலுத்தப்படும் விந்து அணுக்களில் குறைபாடு இருந்தால்கூட, கண்டறிய முடியாது. குறையுள்ள விந்து அணுவால் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் சிகிச்சை அளித்தும் பயன் இருக்காது. இந்தக் குறைபாட்டைக் களைந்து நவீனத்துவம் பெற்றிருப்பதுதான், இம்ஸி சிகிச்சை. இந்த நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு விந்து அணுவையும் 4,000 மடங்கு
உருப்பெருக்கிப் பார்க்கமுடியும். அதனால் குறைபாடு உள்ள விந்து அணுக்களை நீக்கிவிட்டு நல்ல ஆரோக்கியமான விந்து அணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து, கருக்குழாயில் செலுத்த முடியும். இதனால் வெற்றி வாய்ப்பும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

ஆண்களில் சிலருக்கு விதைப் பையில் உள்ள அனைத்து விந்து அணுக்களுமே குறையுடன் இருப்பது உண்டு. இவர்களால் என்றுமே குழந்தை உருவாக்க முடியாத நிலை இருந்தது. இதற்கும் தீர்வு வந்துவிட்டது. விதைப் பையில் விந்து அணு உருவாவதற்கு முற்பட்ட நிலையிலேயே, அதனைப் பலமானதாக மாற்றிக் கருவினை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
அதே போன்று பெண்ணின் கருவறையில் இருந்து வெளிவரும் கரு முட்டைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அதில் விந்து அணுக்களை செலுத்திக் கரு உருவாக்க முடியும்.

ஆனால், இப்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து உறை நிலையில் வைத்து முறைப்படி பாதுகாத்துப் பின்னர் கருத்தரிக்க வைக்கும் அளவுக்கு, சிகிச்சை வளர்ந்துவிட்டது. இது தவிர, வளராத கருமுட்டையைப் பெண்ணின் கருப்பையில் இருந்து எடுத்து, கணவனின் விந்து அணுவுடன் சேர்த்து வெளியில்வைத்து ஒன்றாக்கிய பிறகு, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்தும் 'மெச்சூரேஷன் ஆஃப் ஓசிஸ்ட்’ என்ற சிகிச்சை முறையும் இப்போது பயனுள்ளதாக இருக்கிறது.

வயதான பெண்களுக்கு கரு முட்டைகள் இருக்கும் என்றாலும் சிலருக்கு அந்த கரு முட்டைகள், கருவாகும் தன்மையில் இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் வயதான பெண்ணின் கரு முட்டையை எடுத்து, இளம் பெண்ணின் கரு முட்டையில் இருந்து சைட்டோபிளாசம், மைட்டோகாண்டிரியா போன்றவற்றைப் பிரித்து எடுத்து, வயதான பெண்ணின் கரு முட்டைக்குள் செலுத்தி கருவினை உண்டாக்க முடியும். ஒருவேளை கரு முட்டையே உற்பத்தி ஆகாமல் இருந்தால், கரு முட்டைகளை வேறு ஒரு பெண்ணிடம் இருந்து தானமாகப் பெற்று, குழந்தை இல்லாத பெண்ணின் கணவரின் விந்து அணுவோடு சேர்த்தும் கருவினை உருவாக்க முடியும். அதனால் இனி குழந்தையின்மை என்ற குறையே இல்லாமல் போகும் காலம் நிச்சயம் வரும்...'' என்றவர் இந்தப் பிரச்னை தீர வழிவகைகளும் சொல்கிறார்.

''நிறையக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பது, தினமும் குறைந்தபட்சம் 10,000 அடிகளாவது நடப்பது, புகை - மது பழக்கம் இல்லாமல் இருப்பது போன்றவை குழந்தையின்மைப் பிரச்னையை பெருமளவு குறைக்கும். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், உடனே மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். மிக நீண்ட காலம் குழந்தைக்காகக் காத்திருப்பது பல எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும்!'' என்கிறார்.

குழந்தையின்மை என்ற குறைபாடு, இனி இல்லாது போகட்டும்!
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
டீன்
தடுமாற வைக்கும் தற்கொலை எண்ணம்...தீர்வு என்ன ?

எங்கள் ஹாஸ்டலில் ஒரு மாணவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாள். அவளுக்கும் எனக்கும் பெரிதாக தொடர்பு இருந்திராத போதிலும், சமீப நாட்களாக அவளது தற்கொலை முடிவு, என்னையும் துரத்துவதாக உணர்கிறேன். அற்பக் காரணங்களுக்குகூட 'தற்கொலை செய்துகொண்டால், பிரச்னைக்கு வாய்ப்புஇருக்காதே' என்று எண்ண ஆரம்பித்து விடுகிறேன். இது விபரீதத்தில் கொண்டுபோய் விடுவதற்குள் விடுபட வழி காட்டுங்களேன்...''

- பெயர் குறிப்பிடாமல் கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அனுப்பியிருக்கும் நீண்ட கடிதத்தின் சாராம்சம் இது. அவருக்கு வழிகாட்டுகிறார், தற்கொலை தடுப்புக்காக திருச்சியில் செயல்படும் 'நம்பிக்கை’ மையத்தின் மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரன்தீப் ராஜ்குமார்.

''இந்த வயதினருக்கே உரிய இயல்பான ஆளுமை சம்மந்தப்பட்ட குறைபாடு இது. கொஞ்சம் ஸ்ட்ராங்காக யோசித்தால்.. சுலபமாக இதிலிருந்து விடுபடலாம்.

தோல்விகளைச் சந்திக்காத ஜீவன்களே உலகத்தில் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் வெற்றியைப் போல தோல்வியும் உங்களுக்கு உதவுவதற்காக நிகழக்கூடியதுதான். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு வெற்றியின் பாதையிலும் ஏராளமான தோல்வித் தடங்கள் தென்படுவதே யதார்த்தம்!
ஆனால், குழந்தை வளர்ப்பில் இருந்தே 'தோல்வியே கூடாது; எப்போதும் எதிலும் வெற்றியே வேண்டும்’ என்ற திணிக்கப்பட்ட மனநிலையில் வளர்த்தெடுக்கப்படுகிறோம்.

எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தோல்வி வழியில் இடறும்போது, பதறிப் போகிறோம். அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாகவும், காரணங்களைக் கற்பித்துக் கொள்ளும் முயற்சியாகவும் எதையேனும் பற்றிக்கொள்ளத் தேடுகிறோம். சிலருக்கு அப்படியான காரண கற்பிதங்களில் ஒன்றுதான்... தற்கொலை முயற்சி. விபரீதம் புரியாது இந்த புதைகுழி மனப்பான்மையில் கால் வைப்பவர்கள், தம்மை அறியாது ஒரு கட்டத்தில் புதைந்துபோவதும் உண்டு.

இல்லை என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால், 'எனக்கு மட்டும் எதுவுமே இல்லை' என்கிற எண்ணம் கூடாது. பிரச்னைகள் சிறிதோ, பெரிதோ... அல்லது நீங்கள் குறிப்பிடுவதுபோல அற்பமானதோ... நேரடியாகச் சந்திப்பதும், போராட முயல்வதுமே ஆரோக்கியமான குணம். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதும், விடுபட்டு ஓட முயற்சிப்பதும் எதிர்மறை விளைவுகளையே தரும்.

பொதுவாக, பிளஸ் டூ படிப்புவரை பெற்றோரின் கதகதப்பான அரவணைப்பில் வளர்பவர்கள், திடீரென கல்லூரிச் சூழல் தரும் சுதந்திரத்தை எதிர்கொள்ள முடியாது தடுமாறுவார்கள். தன்னுடைய வயதுக்கு இயல்பான செய்கைகள்கூட குற்ற உணர்வைத் தோற்றுவிக்க, உள்ளுக்குள் குமைந்து போவார்கள். தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள ஏதேனும் அற்ப காரணங்களைக் கற்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். மிதமிஞ்சிய கட்டுப்பாடான வளர்ப்பு, அளவுக்கு மீறிய ஆன்மிக நம்பிக்கைகள் போன்றவையும்கூட அதிகப்படியான குற்ற உணர்வுக்கு காரணமாகக் கூடும். வெளியில் அதிகமாகப் பிறரிடம் பழகினால், இந்த சூழ்நிலை மாற்றம் சரியாக வாய்ப்புண்டு.
இன்னொரு பக்கம், இம்மாதிரி எண்ண விபரீதங்கள் மனநிலை பலவீனமானவர்களுக்கு மட்டுமே அதிகம் இருக்கும். எனவே, எண்ணங்களை வலுப்படுத்த உடலுக்கும் மனதுக்குமான பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பரந்துபட்ட வாசிப்பு, அறிவான ஆன்மிகம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை இதற்கு உதவும்.

இந்த வயதில் மற்றவர் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்பும் மனப்பான்மை இயல்பானது. இந்த மனப்பான்மையில் சற்று தூக்கலாக, தன்னைப்பற்றிய எண்ணம் மட்டுமே இருப்பவர்கள்... ஏதாவது ஏடாகூடத்தைச் சொல்லியோ, செய்தோ மற்றவர் கவனம் தன் பக்கம் இருந்தாக வேண்டும் என்கிற பிரயாசையுடன் செயல்படுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளிலும் தற்கொலை பிரயோகமோ, முயற்சியோ தென்படலாம்.

ஒரு எண்ணம் தவறென்று தெரிந்த பின்னரும் அதிலிருந்து விடுபடமுடியாது, திரும்பத்திரும்ப தலைகாட்டும் அந்த எண்ணங்களால் நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் தென்பட்டால், அது எண்ண சுழற்சி நோயாக இருக்கவும் வாய்ப்புண்டு.

இந்த இரண்டு சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கும் உடனடி மனநல ஆலோசனை அவசியம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பருடன் மனநல மருத்துவரையோ, கவுன்சிலரையோ அணுகினால் சுலபத்தில் பிரச்னையிலிருந்து விடுபட அவர்கள் உதவுவார்கள்.

எப்போதுமே, ஒரு எண்ணம் விபரீதமாக நெருடினால், உங்கள் மனதுக்கு நெருக்கமான, சற்று பக்குவமான நபரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது ஆரோக்கிய மானது. அது பாரத்தைக் குறைக்கும். அவர்கள் தரும் அனுபவ ஆலோசனைகளேகூட சில சமயம் தீர்வைத் தந்துவிடும். இதுதவிர, சூழ்நிலை மாற்றமும் அவசியம். தனிமையைத் தவிர்க்க வேண்டியதும் கட்டாயம். போன் மூலமாவது உங்களுக்கு நெருக்க மானவர்களுடன் தொடர்பில் இருங்கள். யோகா, தியானம், கல்லூரி குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது, மற்றவர்களுக்கு உதவுவது போன்றவை நல்ல மனநிலைக்கும், நிம்மதிக்கும் உத்தரவாதம் அளிக்கும்.''

 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.