அசிடிட்டி - Acidity & Remedies

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தொண்டையில் தீ!
உணவே மருந்து
உலகில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மாதம் ஒரு முறையேனும் சந்திக்கும் பிரச்னை அசிடிட்டி. மனித உடலையும் இரைப்பையையும் கிராபிக்ஸில் காட்டி, அசிடிட்டி ஏற்படுத்தும் விளைவையும் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சிரப் குடித்தால் ஏற்படும் மாற்றத்தையும் காட்டும் விளம்பரங்கள் எல்லா சேனல்களையும் நிரப்பியிருக்கின்றன.

அசிடிட்டிக்கான மருந்துக்குப் பின்னால் ஒரு மிகப்பெரும் சந்தை இருப்பதை இதன் மூலம் உணர முடிகிறது. சிரப், மாத்திரைகளாக மட்டுமல்லாமல் பல சுவைகளில் உள்ள தூளை தண்ணீரில் கலக்கிக் குடித்தால் சில நொடிகளிலேயே குணமடையும் என்றும் கவனம் ஈர்க்கின்றன சில நிறுவனங்கள்!


வயிற்று வலியோ, நெஞ்செரிச்சலோ வந்தால் பொத்தாம்பொதுவாக அசிடிட்டி என்று சொல்லி விடுகிறோம். மருந்துக்கடைகளில் அசிடிட்டி மருந்து களை வாங்கி உட்கொண்டு நிவாரணம் தேடிக் கொள்ளும் நமக்கு, ‘அது தற்காலிக நிவாரணமே’ என்பது தெரிவதில்லை. அதாவது... நோய் வரும் பட்சத்தில் மருந்து, மாத்திரை உதவியோடு நோயை தற்காலிகமாக விரட்டி விடு
கிறோமே தவிர, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அசிடிட்டி என்றால் என்ன? இரைப்பை குடலியல் சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் கேட்டோம்.

‘‘அசிடிட்டி என்பதை தமிழில் ‘அமில நிலை’ என்று சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குச் சென்றதும் இரைப்பை யில் உள்ள ஹைட்ரோக்ளோரிக் அமிலமும், பெப்சின் எனும் நொதிநீரும், இன்ன பிற நொதிகளும் இணைந்து உணவைக் கூழாக்குகின்றன. அந்த இரைப்பைக் கூழுக்கு Chyme என்று பெயர். அந்தக்கூழ் சிறுகுடலுக்கு சென்று தேவையான சத்துகள் உறிஞ்சப்பட்டு கழிவுகள் பெருங்குடல் வழியே வெளியேறுகின்றன. அமிலம் உணவை கூழாக்குவதோடு, உணவில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதால், ஃபுட் பாய்ஸன் ஏற்பட வாய்ப்பில்லை. இயற்கையாக நம் உடலின் இயக்கம் இதுதான்.

நமது உணவுக்குழல், குழாய் போன்றவை நேராக இல்லாமல் பல அடுக்குகளைக் கொண்டவை. இதனால் தலைகீழான நிலையில் கூட நம்மால் உணவை உட்கொள்ள முடியும். உணவு செரிமானமான பிறகு இரைப்பையில் இருக்கும் வெற்றிடத்தை காற்று நிரப்பிக் கொண்டிருக்கும். நாம் உணவு உட்கொள்ளும்போது நீரும் உணவும் இரைப்பையை நிரப்பி விடுவதால் காற்று எதிர் வழியில் சென்று ஏப்பமாக வெளி வருகிறது. காற்று எதிர்வழியில் வருவது போல் நொதிநீரோ, அமிலத்தால் நொதித்த உணவோ எதிர்வழியில் எதுக்களிக்கும்போது உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. இதுவே அசிடிட்டி.

பசிக்கும்போது சாப்பிடாமல் விடுவது அசிடிட்டிக்கான காரணங்களில் முக்கியமானது. பசிக்கும்போது ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரக்கும். அப்போது நாம் உணவை உட்கொண்டால் அமிலம் உணவை கூழாக்கி விடும். அந்நேரத்தில் சாப்பிடாமல் இருந்து விட்டால் அமிலம் இரைப்பையின் உட்புறச்சுவரை அரித்து விடும். இப்படியாக தொடர்ந்து சுவர் அரிக்கப்பட்டுக் கொண்டே வந்தால், அது நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது.

நமக்கு சில நேரங்களில் திடீரென தொண்டையில் தீப்பிடிப்பது போன்ற எரிச்சலோடு இருமல் வரும். உடனே தண்ணீரைக் குடித்து அந்த எரிச்சலை போக்குவதற்குப் போராடுவோம். வயிற்றிலிருக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் பீய்ச்சி அடித்து தொண்டைக்கு வருவதால் ஏற்படும் விளைவுதான் இது.

இரைப்பையும் உணவுக்குழாயும் சந்திக்கும் இணைப்புக்கு அமிலம் வரும்போது தசைகள் பிடித்துக் கொள்ளும். இதனால் பயங்கர வலி ஏற்படும். பலர் இதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள். இரைப்பையும் உணவுக்குழலும் சந்திக்கும் இணைப்பு தளரும்போது கூட இரைப்பையில் இருக்கும் உணவுப்பொருள் உணவுக்குழாய்க்குச் செல்லலாம்.

அசிடிட்டிக்கான காரணங்கள்...

*பருமன் உள்ளவர்களுக்கு பொதுவாக செரிமானப் பிரச்னைகள் இருக்கும். இதன் காரணமாக அசிடிட்டி ஏற்படும்.

* காபி, டீ குடிக்கும்போது இரைப்பைக்கும் உணவுக்குழலுக்குமான இணைப்பு தளர்வதால் வரலாம்.

*காற்றடைக்கப்பட்ட பானங்களை பருகும்போது அதில் உள்ள வாயு எதிர் வழியில் வெளியேறும்போது அசிடிட்டி ஏற்படும்.

* ஆல்கஹால் பயன்பாடு மற்றும் புகைப்பிடிப்பதால் உணவுக்குழல் பாதிப்படைவதால் அசிடிட்டி ஏற்படும்.

* ஆஸ்துமா, ரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் கூட அசிடிட்டிக்கு காரணமாக அமைகின்றன.

இப்படி அசிடிட்டி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தவறான உணவுமுறைக்குள் நாம் அகப்பட்டுக் கொண்டதே இதற்கு மூலக்காரணம்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி. ‘‘நமது முன்னோர் காலத்தில் அசிடிட்டி மற்றும் செரிமானப் பிரச்னைகள் அதிகமாக இல்லை. செரிமானத்துக்கான பொருட்களை உணவிலேயே சேர்த்துச் சாப்பிட்டதுதான் நம் உணவுக் கலாசாரம். இன்றைய நவநாகரிக உலகில் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் அவ்வுணவு முறைக்கு மீள்வதுதான் அசிடிட்டியை விரட்டுவதற்கான தீர்வு’’ என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை.

‘‘வாய்ல செரிக்காததா வயித்துல செரிக்கப்போகுது?’ என ஒரு பழமொழி இருக்கிறது. உணவுப் பொருளை அரைத்து நொறுக்குவதற்குத்தான் வாயில் பற்கள் இருக்கின்றன. நாமோ ஏனோதானோவென மென்றுவிட்டு நன்றாக அரைபடாத உணவை இரைப்பைக்கு அனுப்புகிறோம். இரைப்பையில் பல் இருக்கிறதா என்ன?

பிறகு எப்படி அந்த அரைபடாத உணவை செரிமானமாக்கும்? அதிக அளவிலான ஆசிட் சுரந்து அதை கூழாக்குவதுதான் இரைப்பைக்குத் தெரிந்த ஒரே வழி. இப்போது புரிகிறதா அசிடிட்டிக்கான அடிப்படை என்னவென்று? பி.ஹெச். (அமில-காரத்தன்மை) அளவு 7க்கு குறைவாக இருந்தால் அமிலநிலை, 7க்கு அதிகமாக இருந்தால் காரநிலை.

இயற்கையை நாம் அவ்வளவு எளிதில் மதிப்பிட்டு விட முடியாது. இயற்கையைப் புரிந்து கொள்ள எவ்வளவோ மீதமிருக்கிறது. உருளைக்கிழங்கு அமிலநிலை, அதன் தோல் காரநிலை. ஆப்பிள் அமிலநிலை, அதன் தோல் காரநிலை... இப்படியாக அமில நிலையையும் காரநிலையையும் சரிவிகிதப்படுத்துவது தான் இயற்கை. நாமோ தோலை வெட்டி விட்டு கனியை மட்டுமே உட்கொள்கிறோம். நமது அன்றாட உணவு முறையை எடுத்துக் கொண்டால் கூட சாம்பார் அமிலநிலை, ரசம் காரநிலை.

பச்சரிசி அமிலநிலை, புழுங்கல் அரிசி காரநிலை. பிரியாணி அமிலநிலை, தண்ணீர் காரநிலை... இப்படி நாம் பகுத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அமிலநிலையும் கார நிலையும் சரிவிகிதத்தில் இருக்கும்படியான உணவுமுறைகளைத்தான் நாம் பின்பற்றி வந்திருக்கிறோம். நமது உணவில் அறுசுவைகளும் இருந்தன. இப்போது அவற்றை நாம் பின்பற்றுவதில்லை.

உலகிலேயே மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொண்டது நம் தமிழ் உணவுக்கலாசாரம். இருந்தும் நமக்கு ஏன் இத்தனை நோய்கள்? சில்லி சிக்கன் சாப்பிட்டால் கூட அதன் நிறத்துக்காக ரசாயனப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. சரியாக நொதிக்காத மாவுகள்தான் உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களிலோ இன்னும் கொடுமை. இப்படியாக கண்ட கண்ட உணவுப் பொருட்களை நம் வயிற்றுக்குக் கொடுத்தால் ஒன்று வயிற்றுப்போக்காக வெளியேறும்...

இல்லையெனில், எதிர்ப்பாதையில் எதுக்களிக்கும். எந்த உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். அதை எப்படி அரைத்துக் கூழாக்கி இரைப்பைக்கு அனுப்புகிறோம் என்பது அதைவிட முக்கியம். சும்மா சொல்லிவிடவில்லை... ‘அள்ளித் திணிச்சா அற்பாயிசு... நொறுங்கத் தின்னா நூறாயிசு’ என்கிற பழமொழியை!’’ என்கிறார் காசிப்பிச்சை.

பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரந்து இரைப்பையின் உட்புறச்சுவரை அரித்து விடும். இப்படியாக தொடர்ந்து சுவர் அரிக்கப்பட்டுக்கொண்டே வந்தால் நாளடைவில், அது அல்சராக மாறி விடுகிறது...

‘‘சில்லி சிக்கன் சாப்பிட்டால் கூட அதன் நிறத்துக்காக ரசாயனப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. சரியாக நொதிக்காத மாவுகள்தான் உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களை நம் வயிற்றுக்குக் கொடுத்தால் ஒன்று வயிற்றுப்போக்காக வெளியேறும்... இல்லையெனில், எதிர்ப்பாதையில் எதுக்களிக்கும்...’’
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
re: அசிடிட்டி - Acidity & Remedies

Very good info, Latchmy.
Namakku varum noigalukku karaname naamathan.
Thanks for sharing.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
நெஞ்சு கரித்தல் மருந்துகள் Antacids

[TABLE]
[TR]
[TD="colspan: 2"]
நெஞ்சு கரித்தல் மருந்துகள் Antacids


ஒரு காலத்தில் விருந்துகளில் வயிறு புடைக்க உண்ட உணவு ஜீரணிக்க வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என தாம்பூலம் தந்து உபசரித்தார்கள். இன்று ராஜஸ்தானி ஜிப்பாவுடன் தலையில் டர்பன் கட்டியவர் திருமண வீடுகளில் கடைசி உபசரிப்பாளனாக பீடா தருகிறார்.

அதோடு, தொலைக்காட்சி விளம்பரம் பார்த்துவிட்டு Pifizer கம்பெனியின் Gelusil MPS, Abbolt கம்பெனியின் Digene, GSK கம்பெனியின் Eno போன்ற மாத்திரைகளும் மருந்துகளும் தாராளமாக உணவோடு சாப்பிடும் விருந்தாக மாறிவிட்டன.





பொதுவாக நல்ல மனநிலையில் இருப்பவர்களுக்கும் வேளாவேளைக்கு நேரம் தவறாமல் சாப்பிடுபவர்களுக்கும் எப்போதும் அளவோடு உண்பவர்களுக்கும் உணவு ஜீரணமாவது எளிது. திட உணவான சாதம், காய்கறிகள், மாமிச உணவு மற்றும் வறுவல், பொரியல்களுடனான உணவைக் கூழாக்கி, திரவ உணவாக மாற்றி, உணவுக்குழாயின் ரத்தக்குழாய்கள் மூலமாக உறிஞ்ச (Hcl) ஹைட்ரோகுளோரிக் அமிலம் இரைப்பையில் சுரந்து ஜீரணமாதல் நடக்கிறது.

உணவு நேரம் தவறி தாமதமாக உணவு அருந்துவதாலும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் அந்த உணவில் அளவுக்கு அதிகமாக எண்ணெய், காரம், புளிப்பு இருப்பதாலும் வலி மருந்து உட்கொள்ளுவதாலும் அதிகமாக அமிலம் சுரந்து வலி வரலாம். மேலே கூறிய எந்தக் காரணமும் இல்லாமல் இருப்பவர்களுக்குக்கூட மன அழுத்தத்தினால் மட்டுமே இப்
பிரச்னை ஏற்படலாம். எல்.கே.ஜி. குழந்தைக்குக்கூட பரீட்சை நேரத்தில் வயிற்றுவலி ஏற்படுவது இதனால்தான்.

அமிலம் அதிகமாக சுரப்பதனால் நெஞ்சு கரித்தலோடு, நடு நெஞ்சில் வலி, இரைப்பை வலி, மேல் வயிறு வலியும் ஏற்படலாம். இப்பிரச்னையை ஆன்டாசிட் (Antacid) எனப்படும் மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். இது இரைப்பையின் அதிக அமிலத்தன்மையை (Hyperacidity) சமன்படுத்த உதவுகிறது. அமிலத்தன்மை அதிகமானால் அது இரைப்பையின் சுவரை அரித்து புண்ணாக்கும்.

பொதுவாக அமிலத்தன்மைக்கு இரைப்பையின் சுவர்கள் மற்றும் குடலின் ஆரம்பப் பகுதியின் (duodenum) சுவர்கள் பாதுகாப்புத் தன்மை உடையவை. உணவுக் குழாயிலோ (Oesophagus), குடலின் மற்ற பகுதிகளிலோ அமிலத் தன்மைக்கு பாதுகாப்பு கிடையாது.

அதனால், நேரம் தவறி சாப்பிடும்போது அமிலம் அதிகமாக சுரந்து, தாமதமான உணவுடன் உணவுக்குழாய்க்கு வரும்போது நெஞ்சு கரித்தல், ஏப்பம் போன்றவை ஏற்படுகின்றன. உணவுக்குழாயில் அமிலம் படும்போது உணவுக்குழாய் புண்ணாகிறது. இதுவே குடலிலும் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத்தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் போன்ற காரத்தன்மையுடைய உலோகங்களே உள்ளன. இப்போது, ‘ஒரே வேளை’ மருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும் அமிலத் தன்மையை குறைத்து நடுநிலையாக்கும் Digene, Gelusil போன்ற மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

மருத்துவர்கள் இந்த ஆன்டாசிட் (antacid) மருந்து களை, பட்ட இடத்தில் மரத்துப்போகச் செய்யும் நவீன மருந்துகளாக ஓரிருவேளை அல்லது ஓரிரு நாள் மட்டும் உட்கொள்ளத் தருவதால் Digene, Gelusil, Eno போன்ற மருந்துகளை விளம்பரங்கள் வாயிலாக கூவிக் கூவி விற்கிறார்கள்.

ஆனால், மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்க்குக்கூட இதே மாதிரியான நடுநெஞ்சுவலி, எரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற அறிகுறிகளே இருக்கும். இந்த அறிகுறிகளுக்காக கை வைத்தியமும் ஆன்டாசிட் மருந்துகளை மட்டும் உட்கொள்ளுவதும் சரியல்ல. உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிப்பதே நல்லது.

ஆன்டாசிட் மருந்துகளை இரைப்பை, உணவுக்குழாய் புண்ணைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்துவதை குறைத்துள்ளனர். ஏனெனில், இதை ஒரே நாளில் அடிக்கடி அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டி இருப்பதுதான். உணவுக்குழாயின் பாதிப்புகளை குறைப்பதற்காகவே மருத்துவர்கள் இதைத் தவிர்க்கின்றனர். எதுக்களிப்பை ஏற்படுத்தும் (GerdGastroeso phageal Reflux disease) நோயிலிருந்து ஆன்டாசிட் மருந்துகள் விரைவாக குணம் அளித்தாலும் நோயைக் குணப்படுத்துவதில்லை.

பக்க விளைவுகள்?


இதிலுள்ள மெக்னீசியம் வயிற்றுப்போக்கு உபாதையை தரலாம். வயிற்று அசைவைக் குறைக்கும். அலுமினியம் உப்போ மலச்சிக்கலை உருவாக்கும்.வயிற்று அசைவைக் கூட்டும்.ஆன்டாசிட் மருந்துகளை தினசரியோ, அடிக்கடியோ அதிகமாக உட்கொள்ளுவதன் மூலம் பல மருந்துகளின் (இரைப்பையிலிருந்து ரத்தத்தில்) ஊடுருவும் திறன் குறையும்... மற்ற மருந்துகளின் செயல்படும் சக்தி குறையும். அதனால், ஆன்டாசிட் மருந்துகளை வெறும் வயிற்றில் உட்கொண்டு உணவுக்குப்பின் மற்ற மருந்துகளை உட்கொள்ளலாம்.

இந்த மருந்துகளை சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களோ, இதய நோய் உள்ளவர்களோ, உப்பு குறைவாக சாப்பிட அறிவுறுத்துபவர்களோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அலுமினியம், மெக்னீசியம் போன்றவற்றை உள்ளடக்கிய gelusil, digene போன்ற மருந்துகளை பீடா போலவோ, மிட்டாய் போலவோ சாப்பிடுவது மிகப்பெரிய தவறு. சிறுநீரகப் பிரச்னைகளும் வரக்கூடும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளவும்!

மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்க்குக்கூட நடுநெஞ்சுவலி, எரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற அறிகுறிகளே இருக்கும். இந்த அறிகுறிகளுக்காக ஆன்டாசிட் மருந்துகளை உட்கொள்ளுவதும் சரியல்ல. உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிப்பதே நல்லது.

டாக்டர் மு.அருணாச்சலம்

[/TD]
[/TR]
[/TABLE]
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#4
Re: நெஞ்சு கரித்தல் மருந்துகள் Antacids

Thanks for the very useful share, Lakshmi.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டா?

அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டா?


எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உள்ளதா?


அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டு. உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது. அதாவது, அசிடிட்டிக்கான மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொண்டு சரியான நேரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொண்டால் அசிடிட்டியிலிருந்து விடுபடலாம்.

காலையில் டீ சாப்பிட்டவுடன் பித்தவாந்தி வருகிறது. பித்தநீர் குடலில் எதற்காக சுரக்கிறது?

பித்த வாந்தி என்று ஒன்று கிடையாது. பித்த நீரானது கல்லீரலில் சுரந்து பித்தநாளத்தின் வழியாக டியோடினம் என்னும் சிறுகுடலை சென்றடைந்து உணவை செரிப்பதற்கு கீழே வந்துவிடுகிறது. எனவே பித்தநீரானது மேலே வராது.

கல்லையும் செரிக்கிற வயது என்று சொல்லி அடிக்கடி சாப்பிட சொல்கிறார்களே இது சரியா?


இளம் வயதில் ஓடி ஆடுவதால் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். எனவே எளிதில் ஜீரணமாகும். எனவே தான் அப்படி சொல்கிறார்கள். அதற்காக கல்லை சாப்பிட்டுவிடாதீர்கள்.

சமீபத்தில் மதுரையில் செயின் திருடிய பெண் ஒருவர் திருட்டை மறைக்க அதை விழுங்கி விட்டார் என செய்தி வெளியானது. உணவு குடலில் ஜீரணமாக முடியாத பொருட்கள் எத்தனை காலம் அங்கேயே தங்கியிருக்கும்?

எந்த ஒரு பொருளும் வயிற்றுக்குள் சென்றால் அது குறைந்தது 24 மணி நேரம், அதிகபட்சம் 48 மணி நேரத்தில் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும்.

எனது 65 வயது தாய்க்கு சுகர், பிரஷர், ஹார்ட் பிராப்ளம் உள்ளது. திட உணவும் செரிமானம் ஆவதில்லை. பழச்சாறு சுகரை அதிகப்படுத்தும் என்கிறார் மருத்துவர். இனி எந்த வகையான உணவு கொடுக்கலாம்?

வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப், பருப்பு, சப்பாத்தி போன்றவை கொடுக்கலாம். குறிப்பாக மண்ணிற்கு கீழே விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

கணையம், கல்லீரல் இவற்றின் பயன்பாடு என்ன?

கல்லீரலானது பித்த நீரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக டியோடினம் என்னும் சிறுகுடலுக்கு அனுப்பி உண்ணும் உணவை செரிக்க செய்ய உதவுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்தை உறிஞ்சி உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. கணையமானது இன்சுலினை சுரந்து நம் உடலுக்குத்தேவையான சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

கர்ப்ப காலத்தில் விரைவில் உணவு செரிமானம் ஆகாததற்கு காரணம் என்ன?

கர்ப்ப காலத்தில் உணவு சாதாரணமாக செரிமானமாகும். ஆனால் உணவு முக்கால் வயிற்றுக்குத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றினுள் குழந்தை உள்ளதால் அதிகமாக உண்ணும்போது குடல் மேல் நோக்கி தள்ளப்படும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
அசிடிட்டி - Acidity

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி, செய்யலாம். மனதை லேசாக்கும் வகையில் இசையை கேட்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை போக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
...

காய்கறி பழங்கள்

பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் "புரோமிலெய்ன்' ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.

முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதேபோல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம்.

குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச் சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

எதை சாப்பிடக்கூடாது?

அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம்.
அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம். காபின் நிறைந்த சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது குறிப்பாக ஒயின் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
re: அசிடிட்டி - Acidity & Remedies

அசிடிட்டி பிரச்சனைக்கான மிகச்சிறந்த வீட்டு வைத்தியங்கள்!!!

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சனையால் அவதியுற்றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி எனப்படும். நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.

மோசமான உணவுப்பழக்கம், மன அழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். குடும்ப விருந்தின் போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.


வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதிகளவு Ph, குறைவான அமிலத்தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும். மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத் தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த சீதத் தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

துளசி

துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ளவையாகும். இது வயிற்றினுள் சீதத் தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

குளிர்ச்சியான பால்

பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

சோம்பு

இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரிமானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊற விட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

சீரகம்

சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடைபெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும். அதுமட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.

கிராம்பு

இது ஒரு இயற்கையான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக்கத்தை துரித்தப்படுத்துகிறது மற்றும் உமிழ்நீர் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.

ஏலக்காய்

சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங்களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும். இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசிடிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

புதினா

புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவையூட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இது வயிற்றில் அமிலத்தைக் குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்

இஞ்சி

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக்கிறது. உணவிலுள்ள புரதச்சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது. வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.

நெல்லிக்காய்

இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக்குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது. எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்குப் பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சல்

அறிகுறிகள் அறிவோம்

சாப்பிடும்போது, உணவானது உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. உணவு செரிமானம் அடைய இரைப்பையில் அடர் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் உணவுக் குழாய்க்குள் வருவதைத் தடுக்க உணவுக் குழாயில் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. உணவுக் குழாய் விரிவடையும்போதோ, தடுப்பு வால்வு செயல் இழக்கும்போதோ, அமிலம் கலந்த உணவு, உணவுக் குழாய்க்கு வரும். இதையே ‘நெஞ்சு எரிச்சல்’ என்கிறோம்.

இப்படி எப்போதாவது நிகழ்ந்தால,் பிரச்னை இல்லை. வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது அன்றாட வாழ்வையே பாதிக்கும் அளவுக்கோ அமிலம் எதுக்களித்தால், அது ஒரு நோய். உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

அறிகுறிகள்

நெஞ்சு எரிச்சல்

சில சமயம் தொண்டை வரை எரிச்சல், கூடவே வாயில் புளிப்பான சுவை

நெஞ்சு வலி

விழுங்குவதில் சிரமம்

வறட்டு இருமல்

தொண்டைக் கரகரப்பு அல்லது தொண்டையில் புண்

உணவு அல்லது புளிப்புத் திரவம் எதுக்களிப்பு

தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு

காரணம்
உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் அடிப்பகுதி மற்றும் அதனைச் சுற்றி உள்ள தசைகள் விரிந்து உணவானது இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கிறது. உணவு உள்ளே சென்றதும் இது தானாக மூடிக்கொள்கிறது. பின்வரும் காரணங்கள் இந்த அமைப்பைப் பாதிக்கின்றன.
உடல் பருமன்

இரைப்பையின் மேல் பகுதியில் வீக்கம்

புகை பிடித்தல்
கர்ப்பம்

உலர் வாய்

ஆஸ்துமா

சர்க்கரை நோய்

திசுக்களில் ஏற்படும் நோய்கள்

மது அருந்துதல்

தொடர்ந்து அமிலம் வெளியேறும்போது உணவுக் குழாயின் உள் சுவர் பாதித்து, வீக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதில் இருந்து ரத்தக் கசிவு, உணவுக் குழாய் சுருக்கம் ஏற்படலாம்.

தவிர்க்க!
வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

ஆரோக்கியமான உடல் எடைப் பராமரிப்பு: அதிகப்படியான எடை வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த அழுத்தத்தின் எதிர்மறையாக, அமிலம் உணவுக் குழாய்க்கு வருகிறது. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

இறுக்கமான உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்: இடுப்பில் இறுக்கமாக உடை அணியும்போது அதுவும் அழுத்தத்தை அதிகரிக்கும்.

உணவு: கொழுப்பு நிறைந்த, வறுக்கப்பட்ட உணவுகள் நெஞ்சு எரிச்சலைத் தூண்டுகின்றன. மது, தக்காளி சாஸ், சாக்லெட், பூண்டு, வெங்காயம், காஃபின் பொருட்கள் ஆகியவை நெஞ்சு எரிச்சலைத் தூண்டலாம்.

குறைவாக உட்கொள்ளுதல்: அதிக அளவில் வயிறு புடைக்கச் சாப்பிடுவதற்குப் பதில், சிறிது சிறிதாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தூக்கம்: சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. உணவு உண்ட பிறகு குறைந்தது மூன்று மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும்.

படுக்கையின் அளவு: படுக்கையின் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தலைப்பகுதியை 6 முதல் 9 இன்ச் அளவுக்கு உயர்த்துங்கள்.

சிகரெட்: சிகரெட் புகைப்பது உணவுக் குழாயின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
Re: நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?


டாக்டர் கு. கணேசன்
ஓவியம்: வெங்கி
நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.

வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர்.

காரணம் என்ன?
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.

உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது.

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொளதொள'வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.

வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும்.

பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.

தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

என்ன முதலுதவி?
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம். ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.

அலட்சியம் வேண்டாம்!
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.

இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ (Barrett’s Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும்.

தடுப்பது எப்படி?
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.

வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

முக்கிய யோசனைகள்
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.

மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்.


 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.