அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன்இந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும் அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!

''மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க. அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய். இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.
தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள். 'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத்துவம். அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல நண்பரே... மருந்து!

நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.

அதேபோல, 'அதிகக் கொழுப்பு அமிலம் உள்ளதப்பா’ என அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட அமிழ்தம் - தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மைகொண்ட லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் உள்ளது. அதன் அற்புதங்களை உணர்ந்த 'வணிக விஞ்ஞானிகள்’ தேங்காய் எண்ணெயில் இருந்து 'மோனோலாரின்’ எனும் பொருளைப் பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிமை பெற்று, மாரடைப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு மருந்தாக விற்கின்றனர். ஆனால், நம் உள்ளூர் மருத்துவர்களோ, 'தேங்காயா... ம்ம்ஹூம்... ஆகவே ஆகாது’ என்று சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

நெல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து பெறப்படும் தவிட்டு எண்ணெய் நல்ல விஷயங்கள் பலகொண்டது. ஜப்பானியரில் பெரும்பான்மையர் இன்றும் உபயோகிப்பது தவிட்டு எண்ணெய்தான். தேவையான அளவுக்கு அத்தனை நல்ல கொழுப்பு அமில வகையறாக்களுடன் இதயத்துக்கு நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள்கொண்ட இந்த எண்ணெய் உள்ளூர் சரக்கு. ஆனாலும், பெரும் உயரத்துக்கு இன்னும் வரவில்லை.

ஆனால், கசக்கிப் பிழியாமல், 'ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து புண்ணாகி வரும் 'மங்குனி எண்ணெய் வகையறாக்கள்’ ஆன ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள் விற்பனையில் பின்னி எடுக்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன?
பசுமைப் போராளி வந்தனா சிவா சொல்லும் உறையவைக்கும் உண்மை என்ன தெரியுமா?

'சூரியகாந்தி, சோயா எண்ணெய் வகைகளைக் களம் இறக்கும் வணிகப் போட்டியில் அமெரிக்காவால் திட்டமிட்டுக் கழுத்தறுக்கப்பட்டதுதான் நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகளின் சந்தை!'

எண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள். பல நூறு ஆண்டுகளைக் கடந்த நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகள் இன்றைக்கு நொண்டி அடிக்கக் காரணம், எண்ணெ யைச் சுற்றி இருக்கும் சந்தை அரசியல் தான். 'ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது’ என்று கூவுகிறார்களே, ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானதுதான்.

ஆனால், அதன் விலை என்ன; நம் ஊர் நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெயின் விலை என்ன? நம் ஊர் செக்கில் ஆட்டிய எண்ணெயே ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் ஏன் வெளிநாட்டு ஆலிவ் ஆயிலை இறக்குமதி செய்து 10 மடங்கு விலை கொடுத்துச் சாப்பிட வேண்டும்? இது தான் கேள்வி. சரி, இந்த நிலை அப்படியே தொடர்ந்தால் என்ன ஆகும்? உள்ளூர் சோடா போய்... கோக், பெப்ஸி வந்த கதைதான் உருவாகும்.

வலுவான இதயத்துக்குக் கொஞ்சம் தவிட்டு எண்ணெய், கொஞ்சம் நல்லெண்ணெய், கொஞ்சம் தேங்காய்எண்ணெய் கலந்து அளவுடன் கொஞ்சமாகப் பயன்படுத்துங்கள் என்கிறார்கள் இதய நோய் வல்லுநர்கள். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், ஒமேகா-3, ஒமேகா-6 எல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளே உங்களுக்குத் தரும். அதே சமயம், சில குறிப்புகளை மட்டும் மனதில்வையுங்கள்.

அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட எண்ணெயை நீண்ட நேரம் வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள். தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் இந்தப் பிரிவு.

குறைந்த புகை எண் கொண்ட எண்ணெயை (றீஷீஷ் sனீஷீளீமீ ஜீஷீவீஸீt) மிளகாய்ப் பொடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடுங்கள். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் இந்தப் பிரிவு.

எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்துங்கள். அதேபோல், வறுக்கும்போது, எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ... அந்த அளவுக்குக் கொழுப்பு அமிலம் அதிகம் உருவாகி உங்கள் ரத்தம் இதயம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.