அட்ரினல் சுரப்பி - Adrenal gland

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அட்ரினல் சுரப்பி​
உஷா ஶ்ரீராம்
நாளமில்லா சுரப்பி நிபுணர்
அட்ரினல் சுரப்பி
அட்ரினல் என்ற வார்த்தைக்கு, சிறுநீரகத்துக்கு அருகில் என்று பொருள். இரண்டு சிறுநீரகங்களுக்கு மேற்பகுதியில் தொப்பி போன்று அமைந்திருக்கிறது இந்தச் சுரப்பி. உருவத்திலும் எடையிலும் மிகச் சிறியதாக இருந்தாலும், உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குப் பெரிதும் துணைபுரிகிறது. அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி ‘அட்ரினல் மெடுலா’ என்றும், சுற்றுப்புறப்பகுதி ‘அட்ரினல் கார்டெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

மெடுலா பகுதியில் இருந்து கேட்டேகொலோமின்ஸ் (Catecholamines) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல் சுரப்பியின் சுற்றுப்புறப் பகுதியில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன. ஒவ்வோர் அடுக்கிலும் வெவ்வேறு ஹார்மோன்கள் சுரக்கின்றன. அட்ரினல் கார்டெக்ஸ் வெளிப்புற அடுக்கு ‘ஜோனா குலோமெருலோசா’ (Zona glomerulosa) சுரப்பி, இரண்டாவது அடுக்கு ஜோனா ஃபாசிகுலாட்டா (Zona fasciculata) சுரப்பி, உள் அடுக்கு ஜோனா ரெட்டிகுலாரிசிஸ் (Zona reticularis) சுரப்பி.

ஜோனா குலோமெருலோசா
இந்தச் சுரப்பியில் இருந்து வெளிவரும் ஹார்மோன்களில் முக்கியமானது ‘அல்டோஸ்டீரோன்’ (Aldosterone). உடலில் பொட்டாசியம் அளவு சீராக இருக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்தாலோ, சுரக்காமல் போனாலோ, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சமச்சீராக இல்லை எனில், தசைப்பிடிப்பு முதலான பிரச்னைகள் வரலாம். அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் இருந்தால், அல்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன், பொட்டாசியம் சிறுநீரில் அதிகளவு வெளியேறும். இதனால், உடல் பலவீனம் அடையலாம். ரத்தப் பரிசோதனை மற்றும் சி.டி ஸ்கேன் மூலம், அட்ரினல் சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் இருப்பது தெரிந்தால், அந்தக் கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படும்.

ஜோனா பாசிகுலாட்டா
இந்தச் சுரப்பியில் இருந்து கார்டிகோஸ்டீரோன், கார்டிசால் என இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. உடலில் புரதம், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு சீராகவும், சரியான விகிதத்தில் இருக்கவும் உதவுகிறது. இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்பட்டால், உடல் எடை குறைதல், எலும்பு மெலிதல் போன்ற பிரச்னைகள் வரும். கார்டிசால் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், வாந்தி வரும். ரத்தஅழுத்தம் மிகவும் குறையும். மாத்திரைகள், ஊசிகள் மூலமாக, இதனைக் குணப்படுத்த முடியும்.

சுரப்பியில் கட்டி இருப்பதன் காரணமாக, அதிக அளவில் கார்டிசால் ஹார்மோன்கள் சுரந்தால், குஷிங் சின்ட்ரோம் (Cushing syndrome) என்னும் பிரச்னை வரும். ரத்தஅழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். காசநோய் வரும். இவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் கட்டி அகற்றப்படும்.

ஜோனா ரெட்டிகுலாரிசிஸ்
இந்தச் சுரப்பியில் இருந்து வெளிவரும் ஹார்மோன்கள் ‘செக்ஸ் ஸ்டீராய்ட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. உடலில் உள்ள இனப்பெருக்க மண்டலங்களில் ஹார்மோன் சீராகச் சுரப்பதற்குத் துணைபுரிகிறது. ஆண்களின் ஹார்மோன்களான டைஹைட்ரோபியன்டிரோ ஸ்டீரான் சல்பேட் (Dihydroepiandrosterone sulfate), ஆன்ட்ரோஸ்டீனிடியோன் (Androstenedione) மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஆகிய ஹார்மோன்களும், பெண்களுக்கு செக்ஸ் ஸ்டீராய்ட்ஸ் ஹார்மோன்கள், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஆகியவையும் இந்த சுரப்பியில் இருந்தும் சுரக்கின்றன. அதிகப்படியான ஹார்மோன் இந்த சுரப்பியில் இருந்து வெளிவந்தால், சிறிய வயதிலேயே பெண்கள் பூப்பெய்துவார்கள். குறைவாகச் சுரந்தால், நேர்மாறாகப் பூப்பெய்துவது தாமதமாகும். சுரப்பியில் என்ன பிரச்னை என்பதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

அட்ரினல் மெடுலா
இதிலிருந்து மிக முக்கியமான ‘கேட்டேகொலோமின்ஸ் ஹார்மோன்’ சுரக்கிறது. கோபம் அடையும்போது, இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால், இதயத்துடிப்பு, ரத்தஅழுத்தம் அதிகரிக்கும். பதற்றம் ஏற்படுவதால், அதிகளவு வியர்வை வெளியேறும். மனஅழுத்தம் ஏற்படும் போது, இந்த ஹார்மோன் சமச்சீரின்றி சுரப்பதால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்தப் பகுதியில் கட்டிகள் உருவாகும்பட்சத்தில், கோபம் அடையாமலே இதயத்துடிப்பு அதிகரிக்கும். ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவையும், தேவைப்பட்டால் எம்.ஐ.பி.ஜி ஸ்கேன் ஆகியவையும் எடுக்கப்படும்.கட்டிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து, அறுவைசிகிச்சை செய்து, கட்டிகள் நீக்கப்படும். இந்த ஹார்மோன் சீராகச் சுரக்கவும், கோபம், எரிச்சலைத் தடுக்கவும் தியானம் செய்வது நல்லது.

அட்ரினல் சுரப்பியைப் பொருத்தவரை, பிட்யூட்டரி சுரப்பி இந்தச் சுரப்பியைக் கட்டுப்படுத்தும். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்கூட, அட்ரினல் சுரப்பியில் பிரச்னை வரலாம். அட்ரினல் சுரப்பி சீராகச் செயல்படுவதை அறிய, சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமருத்துவம் கூடாது.
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.