அத்தி - Fig

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அத்தி​
ஹெல்த்
பைபிள், குரான் இன்னும் அதற்கு முந்தைய கிரேக்க, லத்தீன் இலக்கியங்களிலும் பேசப்பட்ட கனி அத்திப்பழம். மரபாகப் பிணைந்து நிற்கும் நம் ஊர் நாட்டு மருத்துவத்திலும் இந்தக் கனிக்கு ஒரு தனி இடம் உண்டு. `அத்தி பூத்தாற்போல’ எனும் சொல்லாடல் தமிழ் இலக்கியத்தில் மட்டும் அல்ல, அநேகமாக அத்தனை இந்திய மொழி வழக்கிலும் இருக்கும். அதற்காக அத்தி, பூக்காத தாவரம் அல்ல. பிற தாவரங்கள்போல இதழ் சிரித்துப் பூத்துக் குலுங்காத தாவரம். இறுக்கமான முகத்தோடு இருந்தாலும், சிலர் இனிப்பான வார்த்தை பேசுவார்களே... அதுபோல அத்தி பூத்துக் குலுங்குவது நம் கண்களுக்குத் தட்டுப்படவில்லை என்றாலும், அதன் இனிப்பும் சுவையும் பல ஆயிரம் ஆண்டாக இந்த மண்ணுக்குப் பழக்கம்.

பைபிளின் வாசகமான `அவனவனுக்கென சில துளி திராட்சை ரசமும் அத்தியும் இந்த உலகில் உண்டு’ எனும் வாசகத்தைப் பயன்படுத்தாமல் சமத்துவம் பேசும் அமெரிக்க, ஐரோப்பியத் தலைவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அத்தி அங்கேயும் பிரபலம். அழகான அத்திப்பழத்துக்குள் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் புழுவைவைத்து, `எந்தப் பொருளையும் புறத்தோற்றத்தை வைத்து முடிவுக்கு வந்துவிடாதே’ எனும் சொல்லாடலும் நம்மிடையே உண்டு.

அத்தியில் அப்படி என்ன சிறப்பு? அத்திப்பழம் அத்தனை கனிமங்களையும் உயிர்ச்சத்துக் களையும் கொண்டது. வைட்டமின்கள் பி2, பி6, சி, கே மற்றும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, சோடியம் போன்ற தாதுஉப்புக்களின் ஒரு நாள் தேவையில் பெரும ளவைத் தன் நான்கைந்து கனிகள் மூலமாகத் தரக்கூடியது. குறிப்பாக, இதில் உள்ள இரும்புச்சத்துக்காகவும், நார்ச்சத்துக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அன்றாடம் சாப்பிட வேண்டிய கனி இது.

துவர்ப்புச் சுவை உள்ள அத்தியின் பிஞ்சு, அனேக மருத்துவக்குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் பரிபாஷையாக பாடப்பட்ட அத்திப்பிஞ்சு குறித்த ஒரு பாடல் மிகப் பிரபலம்.

`ஆனைக்கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம்பிஞ்சும் கானக்குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும் தாயைக் கொன்றான் தனிச்சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிபீரேல் மானே பொருதும் விழியாளே, வடுகும் தமிழும் குணமாமே’
- இந்தப் பாடலை மேலோட்டமாகப் படித்தால், மண்டையைப் பிசையவைக்கும் இந்தப் பாடல் சொல்வது இதுதான். அத்திப்பிஞ்சு, வேலம்பிஞ்சு, மாம்பட்டை, சிறு செருப்படை ஆகியவற்றை வாழைப்பூச் சாற்றில் கஷாயமிட்டுக் குடிக்க வயிற்றுக்கழிச்சல், சீதக் கழிச்சல் வயிற்று வலி போகும் என்பதுதான். ஆம், அத்திப்பிஞ்சின் துவர்ப்புத்தன்மை எந்த வயிற்றுப்போக்கையும் நிறுத்தக்கூடியது.

அத்திக்காய் ஆறாத நாள்பட்ட ரணத்தையும் ஆற்றக்கூடியது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் (Leucorrhea) நோய்க்கு இதன் பிஞ்சு ஒரு நல்ல செயல்படு உணவு (Functional food). காய் அளவுக்கு இல்லை என்றாலும், பழத்துக்கும் இதே புண்ணாற்றும் குணம் உண்டு.

இன்றைக்கும் நம் ஊர் பெண்களில் 75 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தசோகை சரியாக இளவயதில் தீர்க்கப்படாதபோது, அது நம் நோய் எதிர்ப்பு சக்தியைச் சீர்குலைத்து, பல்வேறு நோய்களுக்கும் படிக்கட்டு அமைக்கும். ரத்தசோகையை நீக்கி, உடலை வலுப்படுத்தும் கனி அத்தி. சாதாரணமாக, எந்த இரும்புச்சத்து மருந்தும் மாத்திரையும் ஒருபக்கம் ரத்தத்தில் இரும்பைக் கொடுத்தாலும், தொடர்ந்து அந்த மருந்தைச் சாப்பிடுவதால், வயிற்றில் அல்சரை தானமாகத் தந்துவிட்டுச் சென்றுவிடும்.

ரத்தசோகையைக் குறைக்கப் பயன்படும் அத்திப்பழம் அதற்கு நேர் எதிர். குளிர்ச்சியையும் அதிக நார்சத்தையும்கொண்ட அத்திப்பழம், இரும்புச்சத்தைத் தருவதோடு, மலத்தையும் எளிதாகக் கழியவைக்கும். மகப்பேறு காலத்தில் இயல்பாக வரும் மலச்சிக்கலுக்கும், லேசாக எட்டிப்பார்க்கும் மூலநோய்க்கும் அத்திப்பழம் முதல் தேர்வு. சித்த மருத்துவத்தில் செய்யப்படும் அத்திப்பழ மணப்பாகு, மூலநோய்க்கும், பிரசவகால ரத்தசோகைக்கும் மிகச் சிறந்த மருந்து.

ஆல், அரசு, அத்தி, இத்தி, நாவல் எனும் ஐவர் கூட்டணி, சித்த மருத்துவத்தில் ‘பஞ்ச துவர்ப்பிகள்’ எனும் செல்லப் பெயரில் மிகச்சிறப்பாகப் பேசப்படுவது. இந்த ஐந்து பட்டைகளையும் கஷாயமிட்டுச் சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மொத்தத்தில், அத்தி நாவுக்கு மட்டும் அல்ல, வாழ்வுக்கும் சுவைகூட்டும் அற்புத மருந்து.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.