அந்த நாள்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1
குழலியையும் செழியனையும் பற்றி உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். அதே நேரம், குழலி சமீபத்தில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்த கீழடி தொல்லியல் அகழாய்வு பற்றியும் செழியன் புதிதாகச் சேர்ந்துள்ள ரோபாட்டிக்ஸ்-3டி பிரிண்டிங் கூட்டுத் தொழில்நுட்பத் திட்டம் குறித்தும் கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.
இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது இருவருமே தங்கள் துறை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

பண்டைத் தமிழ் நாகரிகத்துக்கும் உலகின் மற்ற பகுதி நாகரிகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வது குழலியின் வாழ்நாள் இலக்கு. அதேநேரம், இன்றைக்கு ராக்கெட் வேகப் பாய்ச்சலில் வளர்ந்துவரும் ரோபாட்டிக்ஸ் - 3டி பிரிண்டிங் என இருவேறு அறிவியல் பிரிவுகளை இணைத்து, உலகுக்குப் பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டுமென்பது செழியனின் நோக்கம். இருவரும் தங்கள் துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு தீவிரமாக இயங்கிவருகிறார்கள்.
லண்டனில் இருந்து விடுமுறைக்காக சமீபத்தில் சென்னை வந்த செழியன், குழலியைச் சந்தித்தான். "என்னப்பா, சோதனைச் சாலைக்குள்ளேயே அடைந்து கிடக்கும் எலி. இப்போ என்ன செஞ்சுகிட்டிருக்க?" என்று கேட்டாள் குழலி.
"இயந்திர மனிதனைப் போல இயந்திரச் சிலந்தி, இயந்திரத் தேனீ போன்றவற்றை உருவாக்கப் போறேன்" என்றான் செழியன்.
"அவற்றை வைத்து என்ன செய்ய முடியும்?"
"மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு இந்த செயற்கைப் பூச்சிகளை அனுப்பி நமக்குத் தேவையான வேலைகளைச் செய்துகொள்ளலாம்"
"ஓ! நல்ல விஷயமா இருக்கே."
"அது சரி, எப்பப் பார்த்தாலும் இப்படிக் கல்லையும் மண்ணையும் நீ தோண்டிக் கொண்டிருக்கிறாயே. மண்ணுக்குள்ளேயும் கட்டிடங்களுக்குள்ளேயும் அப்படி என்னதான்பா இருக்கு?" என்று குழலியைப் பதிலுக்குச் சீண்டினான் செழியன்.
"எதிர்காலத்தை உருமாற்றப் போகும் அறிவியல் துறையில் நீ வேலை பார்க்கிற செழியன். கடந்த காலத்தில் மனிதர்கள் எப்படி அறிவுபூர்வமாக வாழ்ந்தார்கள், அதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதைச் சொல்றதுதான் வரலாறு. வரலாற்று ஆராய்ச்சி எவ்வளவு கடினம் என்பது உனக்குப் புரியாது. ரொமிலா தாப்பரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா? மாமன்னர் அசோகரைப் பற்றி ஆராய்ந்து ஆதாரங்களுடன் அவர் எழுதிய நூல்கள், உலகப் பார்வையையே மாற்றின.
இந்த மனிதர்களுக்கு எவ்வளவு அறிவு வளர்ந்தாலும், கடந்த கால அனுபவங்களை, வரலாற்றை அவர்கள் மதிக்கிறதே இல்லை. அப்படி மதிச்சிருந்தாங்கன்னா, நிச்சயமா இன்னும் நல்ல நிலைமைல இருந்திருப்பாங்க."
"அதெப்படிச் சொல்ல முடியும்? எத்தனையோ சிக்கலான பிரச்சினைகளுக்கு விஞ்ஞானிகள் தீர்வு கண்டிருக்காங்களே. அதோட, கற்பனை செய்து பார்க்க முடியாத முன்னேற்றங்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிகள்தாமே காரணம்"
"அதெல்லாம் உண்மைதான். ஆனால், ஏற்கெனவே அனுபவப்பட்டதிலிருந்து, காலம்காலமாகப் பரிசோதித்து வெற்றி கண்டதிலிருந்து, குறிப்பா வரலாற்றிலிருந்து மனிதர்கள் அதிகம் கற்றுக்கொள்வதில்லை. செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்."
"உன்னால் உதாரணம் காட்ட முடியுமா?"
"சமீபத்தில் கேரளம் அலைக்கழிக்கப்படக் காரணமாக இருந்த பெருவெள்ளத்தையே எடுத்துக் கொள்வோமே. அது ஓர் இயற்கைச் சீற்றம்தான். ஆனால், நம் அனுபவத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் கற்றுக்கொண்டிருந்தால், இத்தனை மோசமான உயிர், பொருள் இழப்பை சந்தித்திருக்க மாட்டோம்."
"நீ சொல்வதை முழுசா இல்லாவிட்டாலும், அதன் அடிப்படையை ஏற்றுக் கொள்கிறேன்."
"முழுசா ஏற்றுக்கொண்டுதான் ஆகணும். 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பண்டை நாகரிகமும் உலகின் புகழ்பெற்ற நதிக்கரை நாகரிகங்களில் ஒன்றுமான சிந்துவெளி நாகரிகம் ஏன் அழிஞ்சது, தெரியுமா இளம் விஞ்ஞானியே?"
"காடழிப்போ வெள்ளமோதான் காரணம்னு சொல்றாங்க"
"அப்படி வாங்க வழிக்கு. திடீர் வெள்ளமாவோ, அவர்களோட முந்தைய அனுபவத்தை மீறிய வெள்ளமாவோ இருந்திருந்தா, நிச்சயமா சிந்துவெளி மக்களால் எதுவும் செய்திருக்க முடியாது. அதேநேரம், செங்கல் சூளைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் காட்டை அழிச்சதும் அந்த நாகரிகம் அழிந்ததற்கு ஒரு காரணமா சொல்லப்படுது. ஒருவேளை அது நிஜமா இருந்தா, அந்த வரலாற்றிலிருந்து நாம கத்துக்கிட்டது என்ன?"
"உன் கருத்தை இப்போ நான் ஏத்துக்கிறேன் குழலி" என்று சட்டென்று சரண் அடைந்துவிட்டான் செழியன்.
அப்புறம் சொல்ல மறந்துவிட்டேனே, குழலி வரலாற்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளரும்கூட. பள்ளிக் காலத்திலிருந்தே கதை எழுதுவது, மாணவப் பத்திரிகையாளர் பணி போன்றவற்றில் எல்லாம் பயிற்சி பெற்றவர். அடுத்த வாரத்திலிருந்து குழலியின் எழுத்துகளில் அந்தக் கால வரலாற்றுக்குள் பிரவேசிப்போம்.
ஆதி வள்ளியப்பன்
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#4
சிந்துவெளி சொல்லும் ரகசியம்


“வணக்கம் குழலி, தமிழ் நாகரிகத்தைப் பத்தி விரிவா ஆராய்ச்சி செய்றதுதான் உன்னோட நோக்கம்கிறது எனக்குத் தெரியும். சரி, அதற்கு இருக்கும் வரலாற்று ஆதாரங்கள் பத்தி நீ என்ன நினைக்கிறே?
“சிந்துவெளி நாகரிகம் பத்தி போன வாரம் பேசிக்கிட்டிருந்தோம் இல்லையா. சிந்துவெளி நாகரிகம் பத்தி பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகத்துல படிச்சிருப்ப. ஆனா, அதுல அழுத்தம் தரப்படாத முக்கியமான விஷயம், சிந்துவெளிக்கும் திராவிடப் பகுதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு. அதேநேரம், புதிதாக வெளியாகியுள்ள 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகம் அதை மாத்திருக்கு. அதுல இது பத்தி குறிப்பு இருக்கு”

“அந்த விஷயம் பாடப்புத்தகத்துல இடம்பெறுவது நல்லதுதான். சரி, இரண்டு நாகரிகங்களுக்கும் அப்படி என்னதான் தொடர்பு?”
“அந்தத் தொடர்புகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பா, சிந்துவெளி மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிகள் அவற்றில் முக்கியமானவை”
“ஆனா, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி எது, அவர்களுடைய சித்திர எழுத்துகளுக்கான அர்த்தம் என்ன என்றெல்லாம் கண்டறிவது ரொம்பக் கஷ்டமா இருக்கிறதா ‘நேஷனல் ஜியாகிரஃபிக்' இதழ்ல படிச்சேனே”
“பரவாயில்லையே! அறிவியலைத் தாண்டியும் படிக்கிறியா செழியன். நல்ல பழக்கம்தான். நீ சொல்றது உண்மைதான். ஆனா, ஆராய்ச்சிகள் ஒரு சில அம்சங்களோட தேங்கிடறது இல்லைங்கிறது, இளம் விஞ்ஞானியான உனக்கும் நல்லாத் தெரியுமே”
“சிந்துவெளிப் பண்பாட்டை ஆராயப் பழந்தமிழ் இலக்கியங்கள் பயன்படும் என்ற கருத்தை ஐராவதம் மகாதேவன், அஸ்கா பர்போலா, கமில் சுவலபில் உள்ளிட்ட அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
அதிலும் ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற ஐராவதம் மகாதேவனின் நூல் சிந்துவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். சிந்து வெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பத்தி அந்த நூலில் அவர் விரிவா எழுதியிருக்கார். சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடுதான் என்ற கருதுகோளை வலுப்படுத்தும் திசைநோக்கியே அவருடைய ஆய்வுகள் அமைஞ்சிருக்கு."
“ஓ! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா, எனக்கு ஆச்சரியமா இருக்கு”
“உன் ஆச்சரியத்துக்குக் கொஞ்சம் அணை போட்டு வை செழியன், இன்னும் நான் முழுசா சொல்லி முடிக்கலை”
“மொஹஞ்சதாரோ, ஹரப்பா எல்லாம் 5,000 ஆண்டுகளுக்கு முன் செழித்திருந்த சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள். இந்த நாகரிகத்தின் பெரும்பகுதி இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் இந்தப் பகுதிக்கும் தமிழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுதான் பொதுவா எல்லோரும் நம்புவோம். ஆனா, அது முழுத் தப்பு.
கோட்டை, ஊர் போன்ற தமிழ்ப் பெயர்கள் வட இந்தியாவிலும் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது ஏற்கெனவே பதிவாகியிருக்கு. ஐராவதம் மகாதேவனின் வழிவந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் இந்தப் பின்னணியில் முக்கியமான கண்டறிதலை முன்வைத்திருக்கிறார்.”
“அப்படியா, அவர் என்ன சொல்லியிருக்கார்?”

“புகழ்பெற்ற சங்க காலத் தமிழ் நகரங்களான கொற்கை, வஞ்சி, தொண்டி பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பே. அந்த ஊர்ப் பெயர்கள் சிந்துவெளி, ஆப்கானிஸ்தான், ஈரான் வரையிலான பகுதிகளில் இன்றுவரை நிலைத்துள்ளன. குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, தங்கள் ஊர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பெயர்களையே குடிபெயர்ந்த புதிய பகுதிகளிலும் பயன்படுத்தினார்கள் என்பதுதான் அவர் முன்வைத்திருக்கும் கருதுகோள்.”
“இதெல்லாம் நிஜம்தானா?”
“பாண்டிய வம்சப் பெயரை வைத்திருக்கும் நீ, இப்படியெல்லாம் சந்தேகப்படுறது தப்பு செழியன்.கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை (மதுரை), உறை (உறையூர்), கூடல்கர் (கூடல்நகர்) போன்ற பெயர்களைக் கொண்ட ஊர்கள் பாகிஸ்தானில் இன்றைக்கும் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள், துறைமுகங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளுக்கு காவ்ரி (காவிரி), பொருண்ஸ் (பொருணை), பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரிவாலா (காவிரி), பொருணை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.”
“இவ்வளவு நேரடியான ஒற்றுமைகளா, என்னால ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்தவே முடியலை”
“இது தொடர்பான அவருடைய ஆராய்ச்சியை ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற தமிழ் நூலில் விரிவா வாசிக்கலாம்.”
“குழலி, உன் ஆராய்ச்சிகளையும் வாசிப்பையும் நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. அப்புறம் என்னோட விடுமுறை முடியுற நேரம் வந்தாச்சு, லண்டன் புறப்படுறதுக்கான நாள் நெருங்கிடுச்சு”
“அதனால என்ன செழியன், இன்னைக்கு இருக்குற தொழில்நுட்ப வசதிகளுக்கு எங்க இருந்தாலும் ஒவ்வொரு விநாடியும்கூட நாம பேசிக்கொள்ள முடியுமே!”
“நிச்சயமா. ஆனா நீ நல்லா எழுதுவேன்னு தெரியும். பள்ளிக்கூட காலத்திலேயே 'பொன்னியின் செல்வ’னைக் கையில் வைச்சுக்கிட்டு சுத்துன ஆளாச்சே. உன்னோட பேச்சு மாதிரியே எழுத்தையும் வாசிக்கக் காத்திருக்கேன். பார்ப்போம்”
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#5
நாட்டுக்குப் பெயர் தந்த நாகரிகம்


(வலது) சிந்து சமவெளி கண்டறிதல்கள் குறித்து ‘தி இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்’ இதழில் 1924-ல் வெளியான படக் கட்டுரை.
அன்புள்ள செழியா,
வணக்கம்.

லண்டனுக்குப் பத்திரமா போய்ச் சேர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன். உன் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிகளில் சீக்கிரம் முழுகிவிடுவாய். அதற்கு முன் நீ சென்னை வந்திருந்தப்ப பேசின விஷயங்களை மறந்திடாதே. தமிழ் நாகரிகத்துக்கும் சிந்துவெளிக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி நாம பேசிக்கிட்டிருந்தோம், இல்லையா?
21-ம் நூற்றாண்டின் அதிநவீன விஞ்ஞானியா நீ இருக்கலாம். சிந்துவெளி மக்கள் நமக்கு 4000-5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவங்க. ஆனா, அறிவில் சிறந்தவங்க. அவங்களைப் பத்தி ஒவ்வொரு விவரமா தெரிஞ்சுக்கும்போது, உனக்கே அது புரியும். அது மட்டுமில்ல, வரலாறும் வரலாற்று ஆராய்ச்சிகளும் ஏன் முக்கியம்கிறது உனக்கு நிச்சயமாப் புரியும்னு நம்புறேன்.
உலகின் ஆதி நதிக்கரை நாகரிகங்களில் ஒன்று சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilization). இதற்கு மொஹஞ்சதாரோ நாகரிகம், ஹரப்பா நாகரிகம்கிற வேறு பெயர்களும் உண்டு.
இந்த நாகரிகம் செழித்திருந்த காலம், பொது ஆண்டுக்கு முன் (பொ.ஆ.மு.) 3300 - 1900. இன்னைக்கு 2018-ன்னா, அதிலிருந்து குறைந்தபட்சம் 4000, அதிகபட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்னாடிக் காலம். விஞ்ஞானியான நீ, உடனே அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்பாய். அறிவியல்பூர்வமாத்தான் இந்தக் காலத்தை முடிவு செய்றாங்க. அந்த வகையில அறிவியலும் வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவியிருக்கு. ‘கதிரியக்கக் கார்பன் ஆயுள் கணிப்பு’ முறை மூலம்தான் மேற்கண்ட காலம் முடிவு செய்யப்பட்டிருக்கு.
அதற்கான தொல்லியல் பொருட்கள் கிடைச்சது, சுவாரசியமான ஒரு கதை. இன்றைய பாகிஸ்தானின் சிந்து, மேற்கு பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளில் ஆங்காங்கே செங்கற்கள், உடைந்த சுவர்கள் குவியல் குவியலா இருந்துச்சு. அ
ந்தச் செங்கற்களும் சுவர்களும் ரொம்பப் பழமையானவையாக இருந்தன. செங்கற்களைக் கொண்டு அந்த வீடுகளை யார் கட்டினாங்க, எப்போது கட்டினாங்க, அப்புறம் எப்படி அவங்க காணாமப் போனாங்க என யாருக்கும் எதுவுமே தெரியலை. மர்மமான இந்தச் செங்கல் குவியலுக்கு அருகே வாழ்ந்த கிராம மக்கள், அந்தப் பகுதியை 'மொஹஞ்சதாரோ'ன்னு சிந்தி மொழியில் அழைச்சாங்க.
இன்றைக்கு நாமும் அந்தப் பகுதியை அப்படித்தான் அழைக்கிறோம். மொஹஞ்சதாரோன்னா, 'இறந்தவர்களின் மேடு'ன்னு அர்த்தம்.
இன்றைக்குப் பல நடிகர், நடிகைகள் டி.எம்.டி. கம்பி, சிமெண்ட் பத்தி எல்லாம் வீராவேசமாக விளம்பரப்படுத்துறாங்களே, அதெல்லாம் இந்தச் செங்கற்களின் பக்கத்துலகூட நிற்க முடியாது. அந்தச் செங்கற்கள் 4000-5000 ஆண்டுகளைக் கடந்திருந்தும்கூட உறுதியாக இருந்தன.
இலவசமா கிடைச்ச அந்தச் செங்கற்களை எடுத்துட்டுப் போய் உள்ளூர் மக்கள் வீடு கட்டப் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க. அந்தச் செங்கல் குவியல் ஆதி நாகரிகத்தின் எச்சம் என்று யாருக்குமே தெரியலை.
சொல்லப் போனா ரயில்தான் மொஹஞ்ச தாரோவைக் கண்டறிஞ்சது. பல பழைய திரைப்படங்கள்ல ரயில் வந்த பிறகு, புதிய மாற்றங்கள் வரும். இந்திய சினிமாவில் நவீனத்தின் குறியீடு ரயில். இந்தியாவின் ஆதி நாகரிகங்களைக் கண்டறிஞ்சது, அந்த ரயிலுக்கு அம்மாவான ரயில்பாதை. அந்தப் பகுதில ரயில்பாதை அமைக்கப் போன ஆங்கிலேயப் பொறியாளர்களுக்கும் இந்தச் செங்கற்கள் கிடைச்சது. அந்தச் செங்கற்களே சிந்துவெளி நாகரிகத்தைக் காப்பாற்றின.
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி வாழ்ந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான். அதேநேரம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி, வரலாற்று ஆராய்ச்சி போன்ற துறைகள் சார்ந்து நிறையவே அவங்க பங்களிச்சிருக்காங்க. மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற பண்டைய அற்புத நகரங்களைக் கண்டறிஞ்சதில் ஆங்கிலேயர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1861-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை இதற்கெல்லாம் அடிப்படையா இருந்துச்சு.
1920-கள்ல காக்கி அரைக்கால் சட்டை, வெயிலில் இருந்து காப்பாத்தும் 'சோலா தொப்பி'களுடன் அந்தப் பகுதிக்கு எங்களைப் போன்ற தொல்லியல் - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் போனாங்க. அந்தச் செங்கற்கள் சாதாரண செங்கற்கள் அல்ல, அவை ‘வரலாற்றின் மதிப்புமிகு ஆதாரங்கள்' என்பதைக் கண்டறிஞ்சாங்க. நாங்க கல்லையும் மண்ணையும் தோண்டிக்கிட்டு இருப்பது இதற்காகத்தான்.
விடுதலைப் போராட்ட காலம் பத்தின முக்கியமான தமிழ்ப் படமான கமல் ஹாசனின் 'ஹேராம்' படத்தைப் பார்த்திருக்கியா? காந்தியை யார் கொன்றார்கள், எதற்காகக் கொன்றார்கள் என்று அந்தப் படம் கேள்வி கேட்டுச்சு. அதில் கமல்ஹாசனும் (சாகேத் ராம்) ஷாருக் கானும் (அம்ஜத் அலி கான்) தொல்லியல் ஆராய்ச்சியாளர்களாக மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தேடிச் செல்வார்கள். இருவரும் வங்கத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டப்பட்டிருப்பார்கள். இது நிஜத்தின் பிரதிபலிப்பு.
1921-ல் ஹரப்பாவில் அகழாய்வு நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் வங்கத்தைச் சேர்ந்த தயா ராம் சாஹ்னியும், ஆங்கிலத் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஜான் மார்ஷெல்லும். சாஹ்னியைப் போலவே வங்கத்தைச் சேர்ந்த ரகால் தாஸ் பானர்ஜியும் ஆங்கிலத் தொல்லியல் ஆராய்ச்சியாளர் மார்டைமர் வீலரும் சிந்துவெளி நாகரிக எச்சங்களைக் கண்டறிஞ்சதில் முக்கியமானவர்கள்.
சிந்து நதியின் கரையில் இந்த நாகரிகத்தின் எச்சங்கள் கிடைத்ததால், சிந்து (Indus) சமவெளி நாகரிகம் என்று அது அழைக்கப்பட்டது. ‘இந்தியா' (India) என்ற பெயர் 'சிந்து' (Indus) என்ற நதியின் பெயரில் இருந்து உருவானதே.
சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையான காலத்தில் இன்றைய ஈராக் பகுதியில் மெசபடோமிய அல்லது சுமேரிய நாகரிகம், நைல் நதி நாகரிகம் போன்ற ஆதி நாகரிகங்கள் தழைத்திருந்தன. அந்த நாகரிகங்களில் நகர அமைப்பு இல்லை. ஆனா, சிந்துவெளியில் உலகின் முதல் நகரங்கள் கட்டப்பட்டிருந்தன.
உலகின் ஆதி நகரங்களும் ஆதி நாகரிகமும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவை என்பதில் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரா பெருமைப்படுறேன். நான் மட்டுமில்ல, இது நாம எல்லோருமே பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
அன்புடன்
குழலி

யாருக்கு உதவும்?
போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#7
நம்மை வெட்கப்பட வைக்கும் சிந்துவெளி


அன்புள்ள குழலி,
‘கதிரியக்க கார்பன் ஆயுள் கணிப்பு முறை’ (Carbon dating, Radiocarbon dating) பற்றிப் போன கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாய். அது இயற்கைப் பொருட்களின் ஆயுளைக் கணிக்கும் முறை. இந்த முறையைப் பயன்படுத்தி 60,000 ஆண்டுகள் வரையிலான பொருட்களின் ஆயுளைக் கணிக்க முடியும். இந்த முறையை 1940-களில் வில்லார்டு லிப்பி என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். அதற்காக வேதியியலுக்கான நோபல் பரிசும் அவருக்குக் கிடைத்தது.


அண்டக் கதிர்களுடன் (cosmic ray) வளிமண்டல நைட்ரஜன் வினைபுரிவதால், கதிரியக்க கார்பன் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களும் தாவரப்பொருட்களும் பிறகு அவற்றின் வழியாக மற்ற உயிரினங்களும் கதிரியக்க கார்பனைப் பெறுகின்றன. ஒரு தாவரமோ உயிரினமோ இறக்கும்போது, சுற்றுச்சூழலுடனான இந்த கார்பன் பரிமாற்றம் நின்றுபோகிறது. அதற்குப் பிறகு, கதிரியக்க கார்பன் அளவு அவற்றில் குறையத் தொடங்குகிறது. மிகவும் பழைய மாதிரியில் கதிரியக்க கார்பன் குறைந்த அளவிலேயே காணப்படும்.
சரி, ஒரு கேள்வி. சிந்துவெளி மக்களின் மொழியும் தெரியாது, கல்வெட்டு போன்ற ஆதாரங்களும் அவர்கள் காலத்தில் உருவாகியிருக்கவில்லை. அப்புறம் எப்படிச் சிந்துவெளி நகரங்கள், கட்டிடங்கள் பற்றியெல்லாம் நமக்குத் தெரிய வந்தது?
அன்புடன்,
செழியன்
அன்புள்ள செழியா,
‘கதிரியக்க கார்பன் ஆயுள் கணிப்பு முறை’ குறித்து விளக்கியதற்கு நன்றி. அப்புறம், சிந்துவெளி நகரங்களுக்கான ஆதாரங்கள் பற்றியெல்லாம் கேட்டிருந்தாய். சிந்துவெளி நகரங்கள் தொல்லியல் பகுதிகளாக இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றன. அந்தக் கட்டிடங்களை இப்போதும்கூட நேரடியாகப் பார்க்கலாம். நீ விரும்பினா, அடுத்த விடுமுறைக்கு நாம ரெண்டு பேரும் சிந்துவெளி நகரங்களுக்கு ஒரு உலா போகலாமே.
சிந்துவெளியின் சிறப்பே அதன் கட்டிடங்களும் நகரமைப்பும்தான் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன். அவை எவ்வளவு நேர்த்தியானவை தெரியுமா? சிந்துவெளி நாகரிகத்தின் பெரும்பாலான நகரங்கள் ஒரே மாதிரி திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தன. தெருக்கள் நேர்கோடுகளைப் போல உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் ஊரிலும் இரண்டு முதன்மைச் சாலைகள். ஒன்று வடக்கிலிருந்து தெற்காகவும் மற்றொன்று கிழக்கிலிருந்து மேற்காகவும் போயின. இன்றைய மூன்றுவழி நெடுஞ்சாலைகள் அளவுக்கு, அவை அகலமாக இருந்தன. அவற்றின் இரு புறங்களிலும் சிறிய தெருக்கள் கிளைத்தன. தெருக்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் கிணறுகள், நிழல் தரும் மரங்கள் இருந்திருக்கின்றன.
முதன்மைச் சாலைகளில் மாட்டு வண்டிகள், ஒட்டக வண்டிகளுடன் மக்களும் சென்றிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் ஆதாரம் என்னன்னு உன் மனசுக்குள்ள கேள்வி வரும். சிந்துவெளி நாகரிகத்தினர் உருவாக்கி, அந்தக் காலக் குழந்தைகள் விளையாடிய களிமண் மாட்டு வண்டி பொம்மைகள் கிடைத்துள்ளன. இன்றைக்கும் கோயில் திருவிழாக்கள்ல பார்க்கிறோமே, அதே மாதிரி பொம்மைகள்.
மொட்டை மாடி, குளியலறை
சிந்துவெளியில் எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருந்துள்ளன. ஒரு சதுர முற்றம், அதைச் சுற்றி மற்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போதும் மரபார்ந்த நமது வீடுகளில் இந்த அம்சத்தைக் காண முடியும். முற்றம் வைப்பதற்கு முக்கியக் காரணம், சூரிய வெளிச்சத்தை வரவேற்கத்தான். மேற்கூரைக்குச் செல்ல படிகள் இருந்துள்ளதால், மொட்டை மாடியையும் அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.
இன்றைக்கு இருப்பதுபோல் கட்டிடக் கலை நிபுணர்களும் வடிவமைப்பாளர்களும் அன்றைக்கு இல்லை. எந்தப் பெரிய அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்திலேயே இந்த வீடுகள் திட்டமிட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்ததை நினைத்து ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளரா வியந்து போகிறேன்.
வெப்பமண்டலப் பகுதியில் வாழ்ந்த அம்மக்கள் குளிப்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குளியலறை இருந்துள்ளது. அத்துடன் பெருமளவிலான மக்கள் குளிப்பதற்காக மொஹஞ்சதாரோவில் பெரிய குளமும் இருந்திருக்கு.
தூய்மையின் காவலர்கள்
இவை எல்லாவற்றையும் தாண்டி, கழிவுநீரை வெளியேற்றத் திட்டவட்டமான வடிவமைப்பு அந்தக் காலத்திலேயே இருந்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். வீட்டிலிருந்து நிலத்தடி சாக்கடை வழியாகக் கழிவுநீர் வெளியேறியது. இதற்காகச் சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்தக் கழிவுநீர் அமைப்புகளில் ஏற்படும் அடைப்பை நீக்க, தற்போது உள்ளதைப் போலவே சாக்கடைத் திறப்புகளும் இருந்திருக்கு. அவற்றின் வழியா சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன.
உலகின் முதல் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்பு இதுதான். சிறந்த பொறியியல் அறிவைக் கொண்ட சமூகத்தால்தான் இதுபோன்ற அமைப்பைச் சிந்தித்து உருவாக்கியிருக்க முடியும். இதையெல்லாம் படித்து நீ ஆச்சரியப்பட்டுக்கிட்டு இருப்ப, இன்னொன்னும் சொல்றேன்.


21-ம் நூற்றாண்டு மனிதர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் வாழைப்பழத் தோலையோ காபி கோப்பையையோ உணவுப் பொட்டலங்களையோ பார்க்கும் இடங்களில் எல்லாம் விட்டெறிந்துகொண்டு இருக்கிறோம். ஆனால், திடக்கழிவைச் சேகரிக்கவும் அந்தக் காலத்தில் செங்கல் தொட்டிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் சிந்துவெளி மக்கள். அவற்றில் சேகரமான திடக்கழிவை ஊருக்கு வெளியே கொட்டியிருக்கிறார்கள்.
அதனால், குப்பையும் நாற்றமும் இல்லாமல் ஊர் சுத்தமா இருந்திருக்கு. ஆனா, நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், குப்பையள்ளும் இயந்திரம் நம்மைக் கடந்து போகும்போது என்ன செய்கிறோம்? துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை மூடிக்கொள்கிற நிலையில்தான் இன்னும் இருக்கோம்.
குப்பையை முறைப்படி அகற்ற வேண்டியது, அரசோட கடமை. ஆனா அதைச் செய்றதை விட்டுட்டு, 'ஸ்வச் பாரத்'னு மக்கள்ட்ட கூடுதல் வரி வசூலிச்சு குப்பை அள்ளுறதை ஃபேஷனா செய்ற நாடு, உலகத்துலயே நம்ம நாடு மட்டும்தான். சிந்துவெளி மக்கள் நம்மைவிட ஏன் சிறந்தவங்க அப்படிங்கிறதுக்கு, இந்த ஒரு உதாரணம் போதும்.
அன்புடன்,
குழலி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.