அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
ஏகாம்பரநாதர் கோயில் இரட்டைத் திருமாளிகை திருப்பணியில் முறைகேடு?! நீதிமன்ற அதிரடி

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டைத் திருமாளிகை சீரமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஏகாம்பரநாதர் கோயிலும் முக்கியமான ஒன்று. ஆன்மிக சுற்றுலாவுக்காகக் காஞ்சிபுரம் வரும் வெளிமாநில பக்தர்கள் ஏகாம்பரநாதரைத் தரிசிக்காமல் செல்லமாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள `சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால், புதிய உற்சவர் சிலையைச் செய்ய கடந்த 2015 இல் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் 50 கிலோ எடையில், 2.12 கோடி ரூபாய் செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இந்தச் சிலையில், `அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளதுபோல், 5 விழுக்காடு தங்கம் கலக்கப்படவில்லை என்றும் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும்' காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரும், அவரது மகன்களான தினேஷ், டில்லிபாபு ஆகியோரும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரத்திலுள்ள சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு நேரடியாக வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோயில் அர்ச்சகர்கள் என 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்தச் சிலைகளில் எள்ளளவும் தங்கம் இல்லை என உற்சவர் சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் டில்லிபாபு.கோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டைத் திருமாளிகை உள்ளது. இப்பகுதி சிதிலமடைந்துள்ள காரணத்தால் இங்கே பக்தர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. கல்வெட்டுகள், கலைநயம் மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டைத் திருமாளிகையில் காணப்படுகின்றன. இரட்டைத் திருமாளிகை சிதிலமடையத் தொடங்கியதையடுத்து, இந்த மாளிகையைச் சீரமைக்க கடந்த 2014 ம் ஆண்டு தமிழக அரசு 79.90 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. மேலும் மாளிகையின் கீழ்ப்பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள்கூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தை நாடி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் டில்லிபாபு.


டில்லிபாபுவின் புகார் மனுவை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபுவிடம் பேசினோம். ``கோயிலின் உட்பகுதியில் இருக்கும் இரட்டைத் திருமாளிகை சிதிலம்
அடைந்ததாகக் காரணம் காட்டி அதை புரனமைப்பதற்காகத் தமிழக அரசுத் தரப்பில், சுமார் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. கோயில் திருப்பணி குறித்துச் சரியான திட்ட அறிக்கை இல்லை. இதனால் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. திருப்பணிக்குத் தேவையான நிதியை தமிழகஅரசு ஒதுக்கிய பிறகும் கோயில் தரப்பில் தனியாக மக்களிடமிருந்து நன்கொடை பெற்றிருக்கிறார்கள். `வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்கள் ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கி உதவவேண்டும். பணம் கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன், டிடி, செக் போன்ற வழிகளில் பணம் கொடுக்கலாம்’ என ஆன்லைனில் விளம்பரம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்களைச் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டோம். `திருப்பணி செலவுக்காக விளம்பரப்படுத்தவோ, நன்கொடை பெறவோ உத்தரவு வழங்கப்படவில்லை. அரசுப் பணத்தில்தான் திருப்பணி செய்கிறோம்’ எனச் செயல் அலுவலர் முருகேசன் பதில் கொடுத்தார்.


இதுவரை கிட்டத்தட்ட 150 புதிய கற்தூண்களை வைத்தார்கள். ஆனால், அகற்றப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் அடங்கிய கலைநயம் மிக்க பழைய தூண்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியவில்லை. அவை கோயிலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு சில தூண்களே கோயிலில் இருக்கின்றன. அதுபோல் மதில் சுவரில் கல்வெட்டுகள் அடங்கிய கற்களையும் காணவில்லை. ஆலய திருப்பணிகளில் தேவையில்லாமல் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக் கூடாது. ஆனால், ஜேசிபி இயந்திரம் வைத்து திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் திருப்பணிக்குத் தலைமை ஸ்தபதியின் அறிக்கையைக்கூட கோயில் நிர்வாகத்தினர் பெறவில்லை. திருப்பணி ஆணையரின் அனுமதியும் பெறப்படவில்லை.


தகவல் ஆணையரிடம் சென்றுதான் நாங்களே திட்ட அறிக்கையைப் பெற்றோம். அதில் பல இடங்களில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நீதிமன்றம் சென்றோம்.” என்கிறார்.


இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பேசினோம். ``திட்ட அறிக்கை பெறவேண்டும் என்பதெல்லாம் 2017 இல்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நிர்வாக ரீதியாக வேலை மட்டும்தான் எங்களுடையது. மற்றபடி அந்தந்தக் கோயிலுக்கென்று உள்ள செயல் அலுவலர்களிடம்தாம் கோயில் பொறுப்பு உள்ளது. தேவையில்லாமல் எங்கள் பெயரை இணைத்து வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.” என்கிறார் விரக்தியாக.

ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், ``கோயில் தரப்பில் எல்லாக் கணக்கு வழக்குகளும் சரியாக இருக்கின்றன. கோயில் பெயரைச் சொல்லி யாராவது வசூல் செய்திருப்பதாக ஆதாரத்துடன் சொன்னால், நாங்களே வழக்குப் பதிய தயாராக இருக்கிறோம். திருப்பணிக்கு அரசுப் பணத்தைத் தவிர வேறு பணத்தைச் செலவு செய்யவில்லை. நீதிமன்றமோ, அதிகாரிகளோ எப்போது கணக்குக் கேட்டாலும் அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இங்கு எடுக்கப்பட்ட எல்லாப் பழைய தூண்களும் இங்கேயே இருக்கின்றன. உடைந்த தூண்களையும் தனியாக எடுத்து வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் தூண்களை எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். ஜேசிபி பயன்படுத்தாமல் பெரிய கற்களைத் தூக்க முடியாது. அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் வேலை செய்தது போல் இப்போதும் வேலை செய்ய முடியாது. நீதிமன்றத்தில் எங்கள் துறையிடம் கருத்துக் கேட்காமல் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். மனசாட்சி விரோதமில்லாமல் பணியைச் செய்கிறேன். நடப்பதை ஏகாம்பரநாதர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.” என்கிறார் ஆதங்கமாக.


யார் சொல்வது உண்மை என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
கோயில் வளாகத்தில் விளக்கேற்றத் தடை..! ரியாக்‌ஷன் என்ன?

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் வளாகங்களில் பக்தர்கள் விளக்கேற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. அதன் சாதக பாதகங்கள் பற்றிய கட்டுரை இது.
மிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் வளாகங்களில் பக்தர்கள் விளக்கேற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அறநிலையத்துறையைக் கண்டித்து ஆங்காங்கே கண்டனக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பூஜைகளும் வழிபாடுகளும் கோயில் குருக்களால் நடத்தப்படும் சூழலில், பக்தர்கள் தாங்களே செய்யும் ஒரே வழிபாடு விளக்கேற்றுவதுதான். அதைப் பறிப்பது நியாயமில்லை என்கிறார்கள் பக்தர்கள். பக்தர்கள் விளக்கேற்றுவதால் கோயில் அசுத்தமாகிறது; தீ விபத்துகள் ஏற்படுகின்றன; போலியான எண்ணெய், நெய் விற்பனையும் அதிகரித்துவிட்டது... அதனால்தான் விளக்கேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிறது அறநிலையத்துறை தரப்பு.
இதுகுறித்து ஆன்மிகப் பெரியவர்கள் சிலரிடம் பேசினோம்.
``கோயிலில் விளக்கேற்றக் கூடாது என்பது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயல்" என்று கொதிக்கிறார் , ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டம் அமைப்பின் தலைவர் திருவடிக்குடில் ஸ்வாமிகள். 'ஆலயங்களில் மீண்டும் தீபமேற்ற வழிவகை செய்ய வேண்டும்' என்று தீவிரமாகப் போராடி வரும் இவரைத் தொடர்புகொண்டு கருத்து கேட்டோம்.``ஜோதி வடிவமாகவே இறைவனை வழிபடுவது நம்வழக்கம். 2000 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் இந்த விளக்கிடுதலை நிறுத்தினால், நமது ஆகம சாஸ்திரங்களையே மீறுவதாகிவிடும். ஆன்மிகப் பெரியோர்கள் 'விளக்கேற்ற ஆலயம் வாருங்கள்' என்று கூறி பக்தர்களைக் கோயிலுக்கு அழைத்தனர். அதன் மூலம் ஆலயங்களைப் பிரபலப்படுத்தினார்கள். 'சரியை' என்று சொல்லப்படும் உடல்மூலம் செய்யப்படும் திருத்தொண்டால் இறைவனை கொண்டாடிய மக்கள், கோயில்களைப் பாதுகாத்தார்கள். கோயிலில் விளக்கேற்ற தன் குருதியைத் தந்த கலிய நாயனார் பிறந்த மண்ணில் விளக்கேற்றத் தடை விதிப்பது சிறிதும் நியாயமில்லை. நமிநந்தியடிகள் நீரெடுத்து விளக்கேற்றிய ஆரூர் கோயிலில் தீபமேற்றத் தடை விதிப்பது தர்மமில்லை. கணம்புல்ல நாயனார் உள்ளிட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் வலியுறுத்துவது விளக்கேற்றுவதைத்தான். அக இருளை நீக்கும் ஆன்ம விளக்குதான் தீபம். விளக்கேற்றுவதன் மகத்துவம் அறிந்துதான் மன்னர்கள் நந்தா விளக்கு ஏற்ற நிவந்தங்கள் அளித்தார்கள். 1,000 ஆண்டுகளைக் கடந்த கோயில்களில் கல்லிலேயே செதுக்கப்பட்ட அகல் விளக்குகளைக் காண முடியும். காலம்காலமாக ஏற்றப்பட்டு வந்த தீபங்களை, 'ஏற்றக் கூடாது' என்று தடை விதிப்பது தெய்வக் குற்றம் மட்டுமல்ல, பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயலும்கூட.

'அணையா விளக்கு' என எல்லாக் கோயில்களிலும் ஒரு விளக்கை வைத்து அதில் எண்ணெய் விட்டுச் செல்லுங்கள் என்று அறநிலையத்துறை கூறுகிறது. ஏற்கெனவே எரியும் விளக்கில் எண்ணெய் மட்டும் ஊற்றினால் மனம் நிறையுமா, அதுபோக அது அணையா விளக்கு அல்ல, கூண்டு விளக்கு. ஆகமப்படி அது தவறு. தீபமேற்றி வழிபட தங்கள் இன்னுயிரை ஈந்து போராடிய வரலாற்று நிகழ்வுகளை அறியாதவர்கள், அதிகார மட்டத்தில் இருப்பதால் வந்த விளைவு இது. 'சாமானிய மக்கள் விளக்கேற்றி கோயிலை அழுக்காகவும் ஆபத்தாகவும் மாற்றுகிறார்கள்' என்று அறநிலையத்துறை கூறுகிறது. மக்கள் அதிகம் புழங்கும் இடங்கள் அசுத்தமாகும்தான். அதைச் சரி செய்வது ஆலய நிர்வாகத்தின் கடமை. யாருமே வந்து போகாமல் சுத்தமாக இருக்கும் ஆலயங்கள் எதற்கு? அறநிலையத்துறையால் முடியாவிட்டால் திருக்கோயில்களைச் சுத்தப்படுத்த பல ஆயிரம் உழவாரப்பணி தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆலய விஷயத்தில் அடிப்படை தெரியாமல் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். இப்படியே போனால் ஒரு கட்டத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் பொங்கல் வைப்பது, குளத்தில் நீராடுவது எல்லாமே நிறுத்தப்படும். எரியும் விளக்கை அணைப்பது தவறென்றால், ஆலயங்களை ஆகமத்துக்கு எதிராக வழிநடத்துவது அநியாய குற்றம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். உணரும்வரை எங்கள் போராட்டமும் சாத்விக வழியில் தொடரும்" என்றார்.

``திருக்கோயில்களில் கண்ட கண்ட இடங்களில் விளக்கேற்றுவதால் அசுத்தம் ஆகிறது, இதனால் கோயில் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை என்பதெல்லாம் சரி. இதையெல்லாம் ஒழுங்குபடுத்ததானே அறநிலையத்துறை இருக்கிறது! ஒழுங்குபடுத்துவதை விடுத்து, ஒழிப்பது எப்படி நியாயம்'' என்கிறார் குமார சிவாச்சாரியார்.


``தூபம், தீபம், கற்பூர ஆரத்தி என்பன இறைவனை வழிபடும் முறைகளாகும். அசுத்தமாகிறது என்று சொல்லி தூபம், கற்பூரம் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது நெய் தீபமும் தடை என்பது நியாயமில்லை. கருவறை அருகே ஏற்றப்பட்டு வந்த தீபம் மெள்ள மெள்ள அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப் பிராகாரம் என மாறி இப்போது ஏற்றவே கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டது. நெய்யில் கலப்படம் என்றால் அதற்குத் தண்டனை கொடுக்கலாம். கோயில்களில் ஆகம விதிகள் மீறாமல் இருக்கத்தான் அறநிலையத்துறை உருவானது. பூஜைகள், வழிபாடுகளில் குறுக்கிடாமல் நன்மைகளைச் செய்யவே அது உருவாக்கப்பட்டது. தனியார் கோயில்களில்கூட, உண்டியல் வைத்துவிட்டால், அது பொதுவான இடமாகிவிடும். அந்தக் கோயிலுக்கு யாரையும் வரக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. பல காலமாகப் பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை. விளக்கேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, சட்டப்படி எதிர்கொண்டால் அறநிலையத்துறை பின்னடவைச் சந்திக்க வேண்டிவரும். அதற்கு முன்பாகத் தனது நிலையை மாற்றிக்கொண்டு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். 'ஆணையர் ஜெயா திருப்பதி சென்றிருக்கிறார்' என்றும், 'கூடுதல் ஆணையர் கவிதா கேம்ப் சென்றிருக்கிறார்' என்றும் , 'தற்போது இதுகுறித்துப் பேச முடியாது' என்றும் தெரிவிக்கப்பட்டது.


ஆன்மிக அன்பர்களின் குரலுக்கு அறநிலையத்துறை செவிசாய்க்குமா?
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால்! - முன் மாதிரியாகும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

கோயிலுக்கு வரும் குழந்தைகளின் பசியைப் போக்க, பசும்பால் வழங்கும் திட்டத்தை முதன்முறையாகச் செயல்படுத்தியிருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்.
`குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...’ என்ற புகழ்பெற்ற பாடல் வரி உண்டு. அப்படி, தெய்வத்துக்கு இணையான குழந்தைகள், இனிமேல் கோயிலுக்கு வரும்போது பசியோடு இருக்க வேண்டியதில்லை. அவர்களின் பசியைப் போக்கும் வகையில், பசும்பால் வழங்கும் திட்டத்தை முதன்முறையாகச் செயல்படுத்தியிருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம். கடந்த சில மாதங்களாக இந்தத் திட்டத்தை அமல்படுத்தி, தாய்மார்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

பாரம்பர்யப் பெருமைமிக்கது தமிழ்நாட்டின் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்தக் கோயிலை தரிசிக்க வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி வருகிற பக்தர்களில் தாய்மார்கள் பலர் கைக்குழந்தைகளோடும் வருவதுண்டு. சில நேரங்களில் அம்மன் தரிசனத்துக்காக அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்கும். அப்போது, பசியால் குழந்தைகள் அழ நேரிடலாம். கூட்ட நெரிசலால், அவர்களால் வெளியே செல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். குழந்தைக்குப் பால் புகட்டுவதற்கான முன்னேற்பாட்டுடன் வராத தாய்மார்கள், குழந்தைகளைச் சமாளிக்க சிரமப்படுவார்கள். தாய்மார்களின் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே, குழந்தைகளுக்குப் பசும்பால் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம்.


குழந்தையின் பசி போக்கும் இந்தத் திட்டம் பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ``கோயிலுக்குள் குழந்தைகள் அழும் சத்தம் இப்போது கேட்பதில்லை. மகிழ்ச்சியாக சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது’’ என்கிறார்கள் பக்தர்கள். ‘தமிழகக் கோயில்களில் இதுதான் முதல் முயற்சி’ என்றும் பக்தர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள்.

சாமி சந்நிதிப் பகுதியில், பெண் பணியாளர் ஒருவர் நன்றாகக் காய்ச்சி எடுத்து வந்த பசும்பாலை கேனில் வைத்திருக்கிறார். குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்களிடம், ``பால் வேண்டுமா?’’ என்று கேட்கிறார். கேட்பவர்களுக்குக் குவளையில் ஊற்றிக் கொடுக்கிறார். நம்மிடம் பேசிய பெண்களில் ஒருவர், ``இந்தச் சேவை சாதாரணமானது அல்ல. குழந்தைகளோடு கோயிலுக்கு வரும் எங்களைப் போன்றவர்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் சேவை. கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் குழந்தைக்குப் பால் புகட்டுவது சிரமமான காரியம். இதனால், சாமி கும்பிட வந்த எங்களுக்கும் நிம்மதியில்லாமல் போய்விடுகிறது. இப்போது அந்தக் கவலை இல்லை, தாய்ப்பாலுக்கு இணையான பசும்பால் தருகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

``குழந்தைகளுக்குப் பசும்பால் வழங்கும் திட்டம்... இந்த யோசனை உங்களுக்கு எப்படி வந்தது?’’ என்று மீனாட்சி அம்மன் திருக்கோயில் இணை ஆணையாளர் நடராஜனிடம் கேட்டோம்...


``இது ஒன்றும் பெரிய திட்டம் இல்லை. இதை, நாங்கள் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. கோயில் பசுமடத்தில் 60 பசுக்கள் இருக்கின்றன. அங்கிருந்துதான் சாமி அபிஷேகத்துக்குப் பசும்பால் பெறுகிறோம். `அபிஷேக, ஆராதனைக்குப் போக மீதமிருக்கும் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவு செய்தோம். சாமி தரிசனத்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் குழந்தைகள் பசியால் அழுதால், தாய்மார்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கும் அது சங்கடத்தை ஏற்படுத்தும்.

இதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்தோம். தினமும் 20 முதல் 25 லிட்டர் வரை குழந்தைகளுக்குப் பால் வழங்குகிறோம். இதற்காக, ஒரு பெண் பணியாளரையும் நியமித்திருக்கிறோம். தாய்ப்பால் புகட்டும் அறையும் தனியாக இருக்கிறது. தினமும் பிரசாதமாக நைவேத்தியம் செய்த பாலையும் வழங்கிவருகிறோம். மார்கழி மாதத்தில் குழந்தைகளோடு, பெரியவர்களுக்கும் பால் வழங்குகிறோம்.


கோயிலிலிருக்கும் பசுமடத்தில் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. அந்தப் பசுக்களுக்கு, எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை. இயற்கையான உணவுகளைக் கொடுத்துத்தான் வளர்க்கிறோம். அதன் மூலம் கிடைக்கும் பசும்பாலும் ஆரோக்கியமானது. இதுபோல், வயதானவர்கள் இளைப்பாற நாற்காலிகள் அமைத்திருக்கிறோம். உடல் பலவீனமானவர்களுக்கு வீல் சேர்கள் கொடுக்கிறோம். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் வேட்டி,சேலை போன்ற வஸ்திரங்களை மூன்று மாதத்துக்கு ஒருமுறை அரசு ராசாசி மருத்துவமனையிலிருக்கும் நோயாளிகளுக்குக் கொடுத்துவருகிறோம்’’ என்கிறார் நடராஜன்.


கோயிலுக்கு வரும் குழந்தைகளின் பசியைப் போக்கும் இந்தத் திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்தலாமே... தமிழக இந்து அறநிலையத்துறை கவனிக்குமா?
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதை அடிப்படையாகக் கொண்டு, கேரள உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை பூசாரியால் தெரிவிக்கப்பட்டுள்ள மக்கும் தன்மைகொண்ட பொருள்களை மட்டுமே, கோயிலுக்கு இருமுடி கட்டிக் கொண்டு வரும் பக்தர்கள் கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. கோயில் மற்றும் கோயில் வளாகங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்த தகவலை, வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மத்தியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் வரும்போது தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்கள், துணிகள் உள்ளிட்டவற்றை வீசி செல்வதாகவும், இதனால் சபரிமலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று மதத்தில் உள்ளதா? உச்ச நீதிமன்றம்


புது தில்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று மதத்தில் உள்ளதா என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் ஏன் அனுமதிக்கக் கூடாது என்றும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்து மதத்தில் உள்ளதா? அல்லது பின்பற்றப்படும் நடைமுறையா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், கோயில்களில் வழிபடுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, அதைத் தடுப்பது அரசியல் சாசன அமர்வை அவமதிப்பதாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
சதுரகிரி மலை கோவிலில் 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி?

1532647198210.png

ஆடி அமாவாசையொட்டி, சதுரகிரி மலை கோவிலில் 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘இந்த ஆண்டு ஆடி அமாவாசையை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் மலை கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கலாம். இது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

மேலும், மலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் மட்டும் எடுத்து வரலாம். மலைக்கோவிலுக்கு 7 கிலோமீட்டர் முன்னதாகவே தனியார் வாகனங்கள் நிறுத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக அங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பாதுகாப்பு பணயில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படவுள்ளது’.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ விழா

1532673440087.png

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி நெல்லையப்பருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
சிதம்பரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பாள் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தினர்.

சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பாலச்சந்தர் மற்றும் டிஎஸ்பி தனிப்படை போலீஸார் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் ரயில்வே பீட்டர் ரோட்டில் ஒரு சாக்கு மூட்டைக் கிடந்துள்ளது. அதை போலீஸார் கைப்பற்றி மூட்டையை அவிழ்ந்து பார்த்த போது அதில் 56 செ.மீ உயரமும் சுமார் 26 கிலோ எடை கொண்ட அம்பாள் சிலை இருந்தது தெரியவந்தது. சிலையின் பீடத்தில் இருந்த எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. நான்கு கைகள் கொண்ட அம்பாள் சிலையில் 2 கைகள் வெட்டப்பட்டுள்ளது. இது குறித்து சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சிலை பழங்கால ஐம்பொன் சிலையாக இருக்கும் என்றும் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். விசாரணை முடிந்த பிறகு இந்தச் சிலை சிதம்பரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன் தெரிவித்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,487
Likes
3,504
Location
India
கோயிலுக்குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ - கங்கை நீரால் சுத்தம்செய்யப்பட்ட கோயில்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ சென்றதால், அந்தக் கோயில் முழுவதும் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள முத்குரா குட் என்ற கிராமத்தில், பழைமைவாய்ந்த கோயில் ஒன்று அமைந்துள்ளது. மகாபாரத காலம்தொட்டு இந்தக் கோயில் இருந்து வருவதாக அந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர். அது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்றும், அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. பெண்கள் வெளியில் நின்று மட்டுமே பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், மனிஷா அனுராகி என்ற பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அவர் உள்ளே வரும்போது யாரும் எதுவும் கூறவில்லை. அவர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பின்பு, கோயில் முழுவதும் கங்கை நீரால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய கோயில் பூசாரி, ‘மனிஷா நுராகி, கோயிலுக்கு வரும்போது நான் இல்லை. அந்தச் சமயம் நான் இங்கு இருந்திருந்தால் அவரை கோயிலுக்குள் அனுமதித்திருக்க மாட்டேன். இந்தக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். அது தெரியாமல் மனிஷா வந்து சென்றதால்தான் கோயிலை சுத்தம்செய்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோயில் சுத்தம்செய்யப்பட்டது தொடர்பாக மனிஷா பேசும்போது, ‘அந்தக் கோயிலினுள் பெண்கள் செல்லக் கூடாது என்ற விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது. இது பெண்களை அவமதிக்கும் செயல்' எனக் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
242 கோயில்களில் பாதுகாப்பு அறைகள்: இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் தகவல்


தமிழகத்தில் உள்ள 242 கோயில்களில் வரும் 2019 -ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் சிலைகளைப் பாதுகாக்கக் கோரி, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன்உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் சிலைகள் உள்ளிட்ட அரிய வகை பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துக் கோயில்களிலும் பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டளைகளைப் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் 11 ஆயிரத்து 512 பாதுகாப்பு அறைகள் உள்ளன. மேலும் 3,000 அறைகள் கட்ட வேண்டியுள்ளது. இதற்காக வரும் 2021-ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

ஆகம விதிகளின்படி: இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரும் 2019 -ஆம் ஆண்டு டிசம்பருக்குள் தமிழகத்தில் உள்ள 242 கோயில்களில் பாதுகாப்பு அறைகள் ஆகம சாஸ்திர விதிகளின்படி கட்டி முடிக்கப்படும்.

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில்: இதன் தொடக்கமாக, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் மூலம் பாதுகாப்பு அறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் மற்ற கோயில்களில் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு அறைகள் உடனடியாக எந்தக் கோயில்களில் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழக கோயில்களில் சிலைகள் மாயமான வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.