அம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்...

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#1
[h=3]அம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:[/h]
images.jpg

[h=3][/h] ''மம்மிக்கு வேலை இருக்குடா பாப்பா... நீ சமத்தா டி.வி பார்த்துட்டு இருப்பியாம்... நான் வேலை முடிச்சுட்டு வந்துருவேனாம்!'' என்று தங்கள் செல்லங்களை டி.வி முன் அமரவைத்துப் பழகும் அம்மாக்கள் சிறிது காலம் கழித்து, ''என் குழந்தை என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் நைநைன்னு அழுதுட்டே இருக்கு. டி.வி போட்டாதான் அழுகையை நிறுத்துறா!'' என்று புலம்புவார்கள்.

நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், கார் டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம்.

''அப்படியா?'' என்ற ஆச்சர்யத்துடன் குழந்தைகள் உளவியல் நிபுணர் தேவகியிடம் வினவினேன். ஒற்றை வார்த்தையில் 'ஆமாம்’ என்று ஆமோதித்தவர், இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். ''பொழுதுபோக்குச் சாதனம் என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று அலுப்பாக வீடு திரும்பும் இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுக்கே போதுமான நேரம் செலவிட முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் 'எப்படியோ அமைதியாக இருந்தால் சரி’ என்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.

ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் ஃபேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு 'ஸ்பூன் ஃபீட்’ செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்?

'அம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மகூட விளையாட மாட்டாங்க’ என்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், 'வாங்க... வணக்கம்!’ என்று வர வேற்காமல் இருப்பதன் காரணமும் இதுதான்.மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதை கள் போன்றவற்றை சி.டி -யில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தக் கதைகளைச் சொல்ல வேண்டும். பல்லாங் குழி, தாயம், தட்டாங்கல் போன்ற பாட்டிக் காலத்து விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம்.

தொடர் டி.வி பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. 'டி.வி பார்ப்பதைக் குறை!’ என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை, கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலை யைப் பார்த்துக்கொண்டு இருந்தால், 'நம் பாச்சா இவர்களிடம் பலிக் காது’ என்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார் கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், 'அம்மா தெரியாமத் திட்டிட்டேன்... ஸாரிடா!’ என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து. 'தப்பு செய்தாலும், அம்மா மன்னித்துவிடுவாள்!’ என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை... இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டி லும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்... நான் சொல்வது டி.வி ரிமோட் மட்டுமே அல்ல!'' என்று புன்னகைக்கிறார் தேவகி!

நன்றி: கனியன்


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.