'அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்'...

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
'அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்'...


மூலிகை மகிமைகள்!

உடல்நலம்

ர்ப்பகாலம் மற்றும் மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் நம் முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகளை பயன்படுத்தினர். அதை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக வழங்கும் வகையில் ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்ட’த்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜனவரி 11-ம் தேதி தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.‘அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்’ குறித்து விளக்கமளிக்கிறார், தமிழ் நாடு சித்த மருத்துவ அலு வலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், இந்தத் திட்டத் தின் நிபுணர் குழுவைச் சேர்ந்தவருமான டாக்டர் எம்.பிச்சையா குமார்.

மசக்கை மாதங்களுக்கு!


“முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் மற்றும் மகப்பேறுக்குப் பிறகு என 4 வகையாகப் பிரிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக மகப்பேறின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றைத் தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும் கறிவேப்பிலை பொடியும் முதல் பருவத்தில் வழங்கப் படும். மாதுளை மணப்பாகு என்பது கற்கண்டு, பன்னீர், மாதுளம் பழச்சாறு, தேன் ஆகியவை கலந்தது. 5 முதல் 10 மில்லிவரை தினமும் ஒரு வேளை உணவுக்குப் பின் வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உணவில் விருப்பமின்மையைப் போக்கலாம். ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலைப் பொடியைச் சாதத்துடனோ, மோருடனோ கலந்து தினமும் இருவேளை உட்கொள்ளலாம். இதன் மூலம் கர்ப்பிணிகளின் ரத்தச் சோகை, செரியாமை, மந்தம், மலக்கட்டு ஆகியவை நீங்கும்.

இரண்டாவது பருவம்!


இரண்டாவது பருவ மான அடுத்த மூன்று மாதங் களின்போது கர்ப்பிணிக்கு ஏற்படும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சத்துக் குறைபாட்டை நீக்க அன்ன பேதி செந்தூர மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி


சூரண மாத்திரை போன்றவை வழங்கப்படும். அன்னபேதி மற்றும் எலுமிச்சை சாற்றைக்கொண்டு பல பரிசோதனை களை மேற்கொண்டு தயாரிக்கப்படுவதே அன்னபேதி செந்தூர மாத்திரை. நெல்லிக்காய் வற்றல், இலவங்கப்பத்திரி, இலவங்கப் பட்டை, ஏலம், திப்பிலி, குமிழ், பாதிரி, முன்னை, நெருஞ்சில், பேராமுட்டி, ஆனைச்சுண்டை, வில்வம், சித்திரப்பாலாடை, புள் ளடி, சிற்றாமுட்டி, சன்ன இலவங்கப்பட்டை, சர்க்கரை, தேன் ஆகியவை கலந்தது நெல்லிக்காய் லேகியம். தினமும் காலை 5 கிராம் அளவு லேகியத்தை உட் கொண்டால் ரத்த சோகை நீங்குவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், எலும்புகள் வலுப்பெறும்.ஏலாதி சூரணம் என்பது ஏலம், கிராம்பு, மிளகு, சுக்கு, கூகை நீறு சிறுநாகப்பூ, தாளிபத்திரி, சர்க்கரை ஆகியவை அடங்கியது. ஒரு மாத்திரையை தினமும் இருவேளை உணவுக்குப் பின் உட்கொள்ள வேண்டும். இது செரிமானத்துக்கு உதவும். வாந்தி, கிறு கிறுப்பு, நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.

நிறைமாத மருந்துகள்!


மூன்றாவது பருவமான மகப்பேறின் கடைசி மூன்று மாதங்களின்போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றைக் குறைக்க உளுந்து தைலமும், சுக மகப்பேறுக்கு குந்திரிக்க தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலமும் வழங்கப்படுகிறது. உளுந்து தைலம் என்பது உளுந்து, வெள்ளாட்டுப்பால், நல்லெண்ணெய், பூனைக் காலி, சதகுப்பை, பேரரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, வெட்பாலைபட்டை, அதிமதுரம், இந்துப்பு, வசம்பு ஆகியவை கொண்டது. தினமும் இரவு உறங்கும் முன்பு கர்ப்பிணிப் பெண்கள் வயிறு, இடுப்பு மற்றும் அடிவயிற்றுப்பகுதியில் இதை மென்மையாகத் தடவ, தசைகளின் இறுக்கம் தளர்வதுடன் வலிமை பெறும்.

குந்திரிக்க தைலம் என்பது பூனைக்கண் குங்கிலியம், நல்லெண்ணெய் ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி 9-வது மாதத்திலிருந்து பிறப்புறப்பில் சுத்தமான பருத்திப் பஞ்சில் தேய்த்துப் பயன்படுத்த வேண்டும். இது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்.


சோற்றுக்கற்றாழைச் சாறு, ஆமணக்கு எண்ணெய், இளநீர் ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு பாவன பஞ்சாங்குல தைலம் தயாரிக்கப்படுகிறது. தினமும் 10 துளிகளை 100 மில்லி சூடான பாலில் கலந்து இரவு மட்டும் சாப்பிட வேண்டும். இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்த்தாரைத் தொந்தரவுகளிலிருந்து விடுதலை தரும். மேலும் சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும்.

மகப்பேறுக்குப் பின்!ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்புக்குப் பிறகு தாய், சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்த சதாவேரி லேகியம், இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம் வழங்கப்படும்.

சதாவேரி லேகியம் என்பது சுக்கு, ஏலம், நிலப்பனைக்கிழங்கு, நெருஞ்சில், பாடாகிழங்கு, நன்னாரி, பால்முதுக்கன் கிழங்கு, திப்பிலி, அதிமதுரம், கோமூத்திர சிலாசத்து, மூங்கிலுப்பு, சர்க்கரை, பசுநெய், பனை வெல்லம், சதாவரி சாறு ஆகியவை கொண்டது. 5 கிராம் அளவு தினமும் உணவுக்குப் பின் இருவேளை சாப்பிட்டு, சிறிது பால் அருந்த வேண்டும். தாய்ப்பால் பெருகும், கருப்பைக்கும், இடுப்புக்கும் வலிமை தந்து உடலைத் தேற்றுவதோடு மலச்சிக்கலை நீக்கும்.

மலைநன்னாரி, மஞ்சிட்டி, குங்கிலியம், தேன்மெழுகு, வேம்பாடம்பட்டை, நல்லெண்ணெய் ஆகிய மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுவது பிண்டதைலம். இதைத் தேவையான அளவு வெளிப்பிரயோகமாக வலியுள்ள இடங்களில் தடவ, குழந்தை பெற்றபின் தாய்க்கு ஏற்படும் உடல்வலி, முதுகுவலி, கை, கால் வலி நீங்கும்.

குழந்தைக்கும் கைவைத்தியம்!


குழந்தையின் ஆரம்பகால நோய்களைச் சமாளிக்க, உரை மாத்திரை வழங்கப்படும். இந்த உரை மாத்திரை என்பது சுக்கு, அதிமதுரம், வசம்பு சுட்டகரி, சாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், பெருங்காயம், வெள்ளைப் பூண்டு, திப்பிலி ஆகியவை கலந்து தயாரிக்கப்படும். ஒரு மாத்திரையை தினமும் ஒரு வேளை, 7-வது மாதம் முதல் 12-வது மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் புகட்ட வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குழந்தைக்கு உண்டாகும் செரியாமை, மாந்தம், எதிரெடுத்தல், வயிற்றுவலி, சளி போன்றவை வராமல் தடுக்கும்.

இந்த 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்’ ஒரு முழுமைபெற்ற மருத்துவப் பொக்கிஷம். இந்த பெட்டகம், அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்’’ என்றார் பிச்சையா குமார்.

வரவேற்கிறோம்!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.