அறிவுத்திறன் குறைபாடு -Intellectual Disability

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)


டாக்டர் சித்ரா அரவிந்த்

அறிவுத்திறன் குறைபாடு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் அதிகமாக காணப்படும் ஒன்று. குழந்தை பிறந்தவுடனோ, வளர் மைல்கற்களில் தாமதம் ஏற்படும் போதோ, பள்ளி செல்லும் போதோ, இது பொதுவாக அறியப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து, வளர்ந்து வரும் போதே, பல்வேறு திறன்களான பேச்சுத்திறன், சமூகத்திறன், இயக்கத்திறன், அறிவுத்திறன் போன்றவற்றில் தன் வயதொத்த குழந்தைகளைவிட பின்தங்கி காணப்படுவார்கள்.உதாரணம்: 10 வயதாகும் போதுகூட 5 வயது குழந்தை போல பேசுவது. வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கும் இக்குறைபாடு, முன்பெல்லாம் ‘மூளை வளர்ச்சி குறைபாடு’ (Mental Retardation) என அழைக்கப்பட்டது. இப்போது, குழந்தைகளின் நலன் கருதி,‘அறிவுத்திறன் குறைபாடு’ (Intellectual Disability) என பெயர் மாற்றி அழைக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மூளை சரியாக வளர்ச்சி அடையாமலோ, இயல்பாக செயல்படாமலோ போய்விடும். குழந்தையின் அறிவுத்திறன் (Intelligence), வாழத் தேவையான திறன்கள் மற்றும் செயல்பாடுகள் (Adaptive functioning) இரண்டுமே பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்தான், ஒருவருக்கு அறிவுத்திறன் குறைபாடு என கூறப்படுகிறது. பகுத்தறிதல், திட்டமிடல், கற்கும் திறன், சிந்தனை, பிரச்னை தீர்க்கும் திறன், அனுபவங்கள் மூலம் கற்றல், முடிவெடுக்கும் திறன் ஆகியவையே அறிவுத்திறன் எனக் குறிப்பிடப்படுகிறது.இவ்வுலகில் தனித்து, யாரையும் சாராமல் வாழத் தேவையான திறன்கள் என்பவை, ஒருவரின் பேச்சுத் திறன், சமூகத்திறன், தன்னைத் தானே பராமரித்துக் கொள்வது (குளிப்பது, ஆடையணிவது, உண்பது...) மற்றும் தினசரி நடவடிக்கைகளான கடைக்குச் செல்வது, மற்றவரிடம் பேசுவது, பேருந்தில் பயணிப்பது போன்றவற்றை பிறரின் வழிகாட்டல் இன்றி செய்வது, பள்ளியில் எல்லோரையும் போல புது விஷயத்தைக் கற்றுக் கொண்டு, அதை வாழ்வில் பயன்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியவை.

இவ்வகை திறன்பாடுகளில், வயதொத்த குழந்தைகளைவிட பின்தங்கியிருந்து மேலும் அறிவுத்திறனும் குறைவாக இருந்து, குழந்தைப் பருவத்திலோ, டீன் ஏஜ் பருவத்திலோ (18 வயதுக்கு முன்) தென்பட்டால் அது அறிவுத்திறன் குறைபாடாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவரின் ஐ.க்யூ. மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் திறன்களின் குறைபாடை அடிப்படையாகக் கொண்டு, அறிவுத்திறன் குறைபாடை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.


1.லேசான அறிவுத்திறன் குறைபாடு (50-55 முதல் 70 வரை)
2.மிதமான அறிவுத்திறன் குறைபாடு (35-40 முதல் 50-55 வரை)
3.கடுமையான அறிவுத்திறன் குறைபாடு (20-25 முதல் 35-40 வரை)
4.ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடு (20 முதல் 25 வரை)

இதில் லேசான அறிவுத்திறன் குறைபாடுதான் பரவலாகக் காணப்படுகிறது. கடுமையான/ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடுகள் பாதிப்பு சற்று அரிதுதான். குழந்தை பிறக்கும் போதே கடுமையான ஆழ்ந்த/அறிவுத்திறன் குறைபாடுகள் எளிதாக கண்டறியப்பட்டுவிடும். லேசான அறிவுத்திறன் குறைபாடானது, குழந்தை பள்ளிக்கு சென்ற பின்னரே கண்டறியப்படுகிறது. அறிவுத்திறன் குறைபாடின் தீவிரத்தைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளும் திறன்களும் வேறுபட்டிருக்கும். அவை...

1. லேசான அறிவுத்திறன் குறைபாடு
*5-6ம் வகுப்பு வரை பயில முடியும்.
*பேசுவதற்கு நாளாகும்... ஆனால், கற்றுக் கொடுத்தால் பேசத் தெரியும்.
*தன்னைத் தானே முழுமையாக பராமரிக்க முடியும்.
*படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம் இருக்கும்.
*எல்லோருடனும் ஒன்றி பழகத் தெரியாது.
*திருமணம்/குழந்தை வளர்க்கும் பொறுப்பு களை சமாளிக்க முடியாது.
*சிறப்பு கல்வித்திட்டம் மூலம் பயனடையலாம்.
*ஆட்டிஸம், வலிப்பு நோய் அல்லது உடல் ரீதியான பாதிப்பு / ஊனம் இருக்கலாம்.

2. மிதமான அறிவுத்திறன் குறைபாடு
*இரண்டாம் வகுப்பு வரை கற்க முடியும்.
*மொழியைப் புரிந்து கொள்வதிலும், அதைப் பயன்படுத்துவதிலும் மந்தம்.
*ஓரளவுக்குத்தான் பேச முடியும்.
*படிப்பது, எழுதுவது, எண்ணுவது போன்றவற்றை அடிப்படை / தேவையான அளவுக்கு கற்றுக் கொள்ள முடியும்.
*கற்கும் திறனிலும் / புரிந்து கொள்வதிலும் மந்தம்.
*தனித்து வாழ்வது முடியாது.
*ஓரளவு இடங்களுக்கு போய் வர முடியும்.

3.கடுமையான அறிவுத்திறன் குறைபாடு
*தனித்து வாழ்வது என்பது சாத்தியமில்லை.
* பலருக்கு பேச்சிலும், இயங்குவதிலும் அதிக பாதிப்பு இருக்கும்.
*பாதுகாப்பான வாழும் சூழ்நிலை மற்றும் மருத்துவ கவனிப்பும் தேவைப்படலாம்.
*மிக முக்கியமான 2-3 வார்த்தைகளை பயிற்றுவித்தால் புரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. உதாரணம்... ‘நில்’, ‘ஆண்’, ‘பெண்’...
*கவனமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பட்டறையில் வேலை பார்க்கலாம்.

4. ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடு
*மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாது.
*பலருக்கு மூளையில் பாதிப்பு மற்றும் குறிப்பிட்ட நரம்பியல் கோளாறு இருக்கும்.
*தனித்து வாழ முடியாது... நகரவும் கூட முடியாத நிலை... அடிப்படையான சுய தேவைகளைக் கூட கவனிக்க முடியாது.
*முழுவதுமாக பிறரை சார்ந்திருக்கும் நிலை... எப்போதும் மற்றவரின் உதவி மற்றும் கண்காணிப்பு அவசியம்.
*பல்வேறு உடல் / மனநலக் கோளாறுகளும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு.
*மிகவும் அடிப்படையான உடல் மொழியை (Body language) மட்டும் உபயோகிக்க முடியும்.

அறிவுத்திறன் குறைபாடின் அறிகுறிகள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும். ஒருவரின் தோற்றத்தை வைத்துக் கூட
அறிவுத்திறன் குறைபாடு உள்ளது என சில நேரங்களில் சொல்லிவிட முடியும்.

எப்படிக் கண்டுபிடிக்கப்படுகிறது?

பொதுவாக, குழந்தை வளரும் பருவத்தில், மொத்த திறன்களான இயக்கத்திறன், சமூகத்திறன், பேச்சு/மொழித்திறன் மற்றும் அறிவுத்திறன் சம்பந்தப்பட்ட வளர் மைல் கற்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் வளர் மைல்கற்களை அடையாவிட்டால், குழந்தையை மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்வது நல்லது.

குழந்தையின் இவ்வித அறிகுறிகளுக்கு வேறு காரணங்கள் (காதுகேளாமை, சில நரம்பியல் கோளாறுகள்) இருக்கிறதா என தெரிந்து கொள்வதும் முக்கியம். குழந்தைக்கு உடல் சார்ந்த கோளாறும் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அது மரபணு/வளர்சிதை கோளாறு காரணியினாலா என உறுதிப்படுத்த சில மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பிறகு குழந்தைக்கு சில உளவியல் பரிசோதனைகளான அறிவாற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கை திறன் மற்றும் சமூகத்திறன்களும் மதிப்பிடப்பட்டு, வயதொத்த குழந்தைகளுடன் ஒப்பிடப்படும் (IQ & Adaptive Tests). ஐ.க்யூ டெஸ்ட்டை மேற்கொள்ள குழந்தைக்கு 5-6 வயது ஆகி இருப்பது அவசியம்.

சில நேரங்களில் குழந்தைக்கு உடல் ரீதியான மற்றும் புலன்களில் கோளாறும் சேர்ந்து இருந்தால் ஐ.க்யூ. சோதனையை மேற்கொள்ள முடியாமலும் போய்விடலாம். அப்போது, இக்குறைபாடு, ‘குறிப்பிடப்படாத அறிவுத்திறன் குறைபாடு’ என வகைப்படுத்தப்படும். எல்லா சோதனைகளுக்கும் பின்னர், சராசரிக்கு குறைவான அறிவாற்றலும் (IQ<70) வாழத் தேவையான ஆற்றல்/திறன் குறைபாடு களும் இருப்பின், அது அறிவுத்திறன் குறைபாடு என மருத்துவரால் நிர்ணயிக்கப்படுகிறது.


காரணி

1.மரபணு
மரபணுக் கோளாறு, அசாதாரண மரபணுக்கள், மரபணு பிறழ்வு போன்றக் காரணத்தினால் அறிவுத்திறன் குறைபாடு
ஏற்படலாம். எ.டு: டவுன்ஸ் சிண்ட்ரோம், ப்ரிஜைல் ‘X’ சிண்ட்ரோம் மற்றும் பிணைல்கிடோனோரியா (Phenylketonuria).

2.கர்ப்ப கால பிரச்னைகள்
கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் நோய் தொற்று (தட்டம்மை, எச்.ஐ.வி.), தாயின் குடிப்பழக்கம், (எ.டு. கரு மது நோய் - Fetal Alcoholic Syndrome), சத்துப் பற்றாக்குறை போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சி யைப் பாதித்து அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தலாம். குறை மாத குழந்தை, பிரசவ வலியின் போது ஏற்படும் ஆக்ஸிஜன்
பற்றாக்குறை போன்ற குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களாலும் ஏற்படலாம்.

3. உடல் நலப் பிரச்னைகள்
பிறந்த பின்னர், குழந்தைக்கு ஏற்படும் கக்குவான் இருமல், மூளைக் காய்ச்சல், அம்மை போன்ற நோய்களும் அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்தின்மை, தகுந்த மருத்துவ உதவியின்மை, காரீயம் / பாதரசம் போன்ற நச்சுப் பொருள் பாதிப்பு, குறைந்த அறிவுத்திறன் மற்றும் படிக்காத பெற்றோர் போன்றவற்றாலும் ஏற்படலாம்.

அறிவுத்திறன் குறைபாடும் பிற பிரச்னைகளும்

அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களின் கற்கும் திறன், பேச்சுத்திறன், சமூகத்திறன், வாழ்வியல் திறன் போன்றவை அதிகமாக பாதிக்கப்படுவதால், பிறரின் உதவியின்றி சகஜமாக வாழ்வது சிரமம். பல நேரங்களில், அறிவுத்திறன் குறைபாடுடன், வேறு பிரச்னைகளான பெருமூளை வாதம் (Cerebral Palsy), வலிப்பு நோய், பார்வைக் கோளாறு, காது கேளாமை, பேச்சு/ மொழி பிரச்னை போன்றவையும் சேர்ந்தே காணப்படும்.

கடுமையான மற்றும் ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உடல் ஊனம், ஆட்டிஸம், மனச்சோர்வு, ஆளுமை கோளாறு போன்ற பல மனநலப் பிரச்னைகளும் சேர்ந்து இருக்கும். அறிவுத்திறன் குறைபாடை எப்படி
வராமல் தடுக்கலாம் மற்றும் இதற்குரிய சிகிச்சை என்னவென்பதைக் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

பொதுவான அறிகுறிகள்

1.குப்புறப்படுத்தல், உட்காருதல், தவழுதல் மற்றும் நடப்பதில் தாமதம்.
2.பேசுவதில் தாமதம் / சிரமம்.
3.உடையணிவது, உண்பது போன்றவற்றை புரிந்து செய்வதில் மந்த நிலை.
4.குறைந்த ஞாபக சக்தி.
5.ஒரு செயல்பாட்டின் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாத நிலை.
6.பிரச்னையை சமாளிப்பதில் சிரமம்.
7.சமுதாய விதிமுறைகளைப் புரிந்து கொள்வதில் சிரமம்.
8.அர்த்தமுள்ள சிந்தனை செய்ய இயலாமை.
9.கற்றுக் கொள்வதில் சிரமம்.
10.ஆர்வமின்மை.
11.இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள இயலாமை (உதாரணம்... பேச முடியாத நிலை, தன்னைத் தானே பார்த்துக் கொள்ள இயலாமை).
12.குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும் சிறு குழந்தையைப் போன்ற செயல்பாடுகள்...

அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு பின்வரும் உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னைகளும் இருக்கும் வாய்ப்பு அதிகம்.

1.ஆக்ரோஷம் (Aggression)
2.சார்பு மனப்பான்மை (Dependence)
3.சமூகத் தொடர்பிலிருந்து விலகுதல்
4.கவனத்தை எதிர்நோக்கும் நடத்தை
5.டீன் ஏஜ் போது காணப்படும் மனச்சோர்வு (Depression)
6.உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாமை
7.மந்தநிலை
8.தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
9.பிடிவாதம்
10.தாழ்வு மனப்பான்மை
11.குறைந்த சகிப்புத்தன்மை
12.கவனம் செலுத்துவதில் சிரமம்.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi @chan ! very good discussion about Intellectual Disability. thank you!!!!!!!!!!!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
[h=1]அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)[/h]
தடுப்பு மற்றும் சிகிச்சை அறிவுத்திறன் குறைபாடு ஒரு வருக்கு வராமல் காக்கும் முயற்சி மற்றும் அறிவுத்திறன் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சியை மூன்று கட்டமாக வகைப்படுத்தலாம்.

1.முதல் கட்ட நடவடிக்கை

(வரும் முன் காப்பது...) குடும்பத்தில், ஏற்கெனவே மரபணு குறைபாடுகள் பிரச்னை இருப்பின், குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கும் பெற்றோர்/கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், மரபணு ஆலோசனைக்கு (Genetic Counseling) செல்வது அவசியம். கர்ப்பத்தின் ஆரம்ப நிலையிலேயே, சில மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கருவிற்கு மரபணு பிரச்னை இருக்கலாம் என சந்தேகம் இருந்தால், அது குறித்து என்ன முடிவு எடுக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்படும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போது, தாய், தன் சேயின் நலன் கருதி தன் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டியது மிக அவசியம். தகுந்த, சத்து மாத்திரைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மற்றும் மது அருந்தாமல் இருப்பது போன்ற விஷயங்களைக் கடைப்பிடித்தால் அறிவுத்திறன் குறைபாடுடன் குழந்தைப் பிறக்கும் ஆபத்து குறையும்.

நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது முக்கியம். ஏற்கெனவே நீரிழிவு மற்றும் பினைல் கீட்டோனூரியா (Phenylketonuria) உள்ள தாய் கர்ப்பத்தின் போது சரியான உணவு பழக்கத்தைக் (Strict diet) கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தைக்குப் பாதகம் விளைவதைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் சரியாக பார்த்துக் கொள்வது மூலம், குறைப்பிரசவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய அறிவுத்திறன் குறைபாட்டையும் தடுக்க முடியும்.குழந்தை பிறந்தவுடன் தகுந்த தடுப்பூசிகள் போடுவது மூலம் மூளைக்காய்ச்சல், அம்மை போன்ற மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கலாம்.

2. இரண்டாம் கட்ட நடவடிக்கை

(தகுந்த சிகிச்சையின் மூலமாக பாதிக்கப்பட்டவரை, நோயின் கடும் விளைவிலிருந்து காப்பது...) சில நேரங்களில் அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தும் கோளாறுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணம்... பினைல் கீட்டோனூரியா பாதித்த
குழந்தைகளை பிறந்தவுடனே சில மருத்துவ சோதனை மூலம் கண்டுபிடித்தால், தகுந்த உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் மூளைக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும்.

3.மூன்றாம் கட்ட நடவடிக்கை

(பாதிக்கப்பட்டவரை அவரவர் ஆற்றலுக்கேற்ப நிறைவாக வாழ வைக்க உதவும் முயற்சி...)

அறிவுத்திறன் குறைபாட்டை பூரணமாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், குறைபாட்டின் தன்மைக்கேற்ப, அவரவர் முழுத் திறமையை உபயோகித்து செயல்பட வைப்பதற்கு சிறப்புப் பயிற்சி (Special education) பெருமளவு உதவும். இதன் மூலம் டவுன்ஸ் சிண்ட்ரோம், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் பலரும் நன்மை அடையும் வாய்ப்புகள் அதிகம்.

ஆரம்ப கால சிகிச்சை

ஏழ்மை மிகுந்த சமுதாயத்தில் வாழும் குழந்தைகளுக்கு லேசான அறிவுத்திறன் குறைபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. அறிவுத்திறன் குறைபாடு ஆபத்திலிருக்கும் இவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே, இவர்களின் அறிவுத்திறனைக் கூட்டும் பயிற்சிகள் கொடுப்பதன் மூலமாக, பெரியவர்களான பின், மற்றவர் போல இயல்பாக, பள்ளியில் சிறப்பாகக் கற்று நல்ல வேலையும் செய்ய முடியும்.குழந்தையின் தேவைக்கேற்ற, பேச்சுப் பயிற்சி (Speech therapy), வேலைப் பயிற்சி (Occupational therapy), உடற்பயிற்சி, குடும்ப ஆலோசனை, தகுந்த ஊட்டச்சத்து போன்ற ஆரம்ப கால சிகிச்சை மூலம் குழந்தையின் அறிவித்திறனைப் பேண முடியும்.

சிறப்புக் கல்வி

அறிவுத்திறன் குறைபாடுள்ளவர்கள், அதன் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு விஷயங்களைக் கற்க முடியும். குறிப்பாக அதிகம் காணப்படும் லேசான அறிவுத் திறன் குறைபாடு உள்ளவர்கள் கற்கவே முடியாது எனக் கூற முடியாது. அவர்களால் நிச்சயம் புது விஷயங்களையும் திறன்களையும் கற்க முடியும். சராசரி மனிதா–்களைக் காட்டிலும் சற்று மெதுவாக கற்க முடியும். பாதிக்கப்பட்டவரின் நிறை குறை அறிந்து, அவரவரின் தேவைக்கேற்ப பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, சிறப்புப் பள்ளியில் (Special school) பயிற்சி அளிக்கப்படுகிறது.

சரியான உதவி, ஆதரவு மற்றும் சிறப்புக் கல்வி மூலம் இவர்கள் யாரையும் சாராமல் தனித்து, வெற்றிகரமாக வாழவும் முடியும். அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள்
அவரவரின் அறிவுத்திறனை (பலம், பலவீனம் அறிந்து) முழுமையாக பயன்படுத்த சரியாக வழிகாட்டினால், அவர்களால் ஓரளவு நிறைவான வாழ்வை வாழ முடியும். வேலை மற்றும் சமூகத்திறன் பயிற்சிவேலை செய்யவும், அதை தக்க வைத்துக் கொள்வதற்கும் தேவையான வாழ்வியல் திறன் (Life Skills) மற்றும் சமூகத்திறன் பயிற்சியும் மிகவும் அவசியம். உதாரணம்... வேலையின் போது ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது மற்றும் கோபத்தை எப்படி சமாளித்தல் போன்றவை.

தங்களின் பாலினத்தூண்டுதல் குறித்து எது சரி, தவறு என இவர்களால் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்துடன் ஒன்றி வாழும் போது, இவர்களின் அறியாமையால், பண ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அலைக்கழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இவற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாப்பது என்பது குறித்த பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை

அறிவுத்திறன் குறைபாடு உள்ள பெரும்பாலானவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் மற்றும் உணர்ச்சி/ நடத்தை பிரச்னைகளும் அதிகம் பாதித்து இருக்கும். அதற்கும் சேர்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இக்குழந்தைகளின் எதிர்காலம் நல்லவிதத்தில் அமைவதற்கு பெற்றோரின் பங்கும் மிகவும் அவசியம்.

பெற்றோர் செய்ய வேண்டியவைஅறிவுத்திறன் குறைபாட்டைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவும். அப்போதுதான் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளைப் புரிந்து அவா்களுக்கு உதவ முடியும்.

1.குழந்தை சுதந்திரமாக இருக்க ஊக்குவியுங்கள். புது விஷயங்களை உங்கள் குழந்தை கற்கும் போது, சரியாக வழிகாட்டி உற்சாகப்படுத்துங்கள். இது அவர்கள் திறமையை வளர்க்க உதவும். அவர்கள், தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள உதவியாக இருங்கள். உதாரணம்... குளிக்க, உண்ண, உடை உடுத்த…

2.வேறு பல வகுப்புகளில் உங்கள் குழந்தையை சேர்த்து விடுங்கள் (ஓவிய வகுப்பு, ஏதாவது விளையாட்டு). இது அவர்களின் சமூகத் திறன் மற்றும் உற்சாகத்தை வளர்க்க உதவும்.

3.குழந்தையின் ஆசிரியரிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது மூலம் குழந்தையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்க முடியும். பள்ளியில் பயின்றதை வீட்டில் பழகி பார்க்க உதவலாம் (உதாரணம்... பணத்தைப் பற்றி பள்ளியில் பயின்றால், அன்றைக்கே கடைக்கு அழைத்துச் சென்று, அதன் உபயோகத்தைப் புரிய வைக்கலாம்).

4.அறிவுத்திறன் குறைபாடுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோரைத் தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாகவும் ஆதரவாகவும் இருக்கும்.

5.குழந்தையின் திறமை மற்றும் ஆர்வத்துக்கேற்ப, அவர்கள் மேலே என்ன படிக்கலாம் மற்றும் என்ன வேலை செய்யலாம் என தேர்ந்தெடுக்க நல்ல வழிகாட்டியாக
இருங்கள்.

6.பொறுமையாகவும் நம்பிக்கையோடும் இருப்பது மிகவும் அவசியம். பெற்றோர் கவலையோ, கோபமோ பட்டால், அது குழந்தையின் தன்னம்பிக்கையையே பாதிக்கும்.

7.குழந்தையின் வயது, திறனுக்கேற்ப, சிறுசிறு வேலைகளைச் செய்யச் செய்யலாம். பெரிய வேலையாக இருந்தால், அதை பகுதியாக பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக, பொறுமையாக அவர்களை தயார் செய்யலாம். செய்ய வேண்டிய வேலையை எப்படி செய்ய வேண்டும் என அவர்களுக்கு செய்து காட்டி, தேவைப்படும்போது
உதவலாம்.

8.எல்லாவற்றுக்கும் மேலாக... உங்கள் குழந்தை உங்களின் அரிய பொக்கிஷம். அவர்களை கடவுளின் குழந்தை என பாவித்து சொத்து போல பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமைதானே!

அதிர்ச்சி மற்றும் மன உளைச்சல் விளைவிக்கும் சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகள் (Trauma and Stressor-related disorders) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

கமலா ஏன் கவனிப்பதில்லை?

கமலாவை 3 வயதில் பள்ளியில் சேர்த்தனர். அப்போது அவளுக்கு சில வார்த்தைகள் மட்டுமே பேசத் தெரிந்திருந்தது. சக மாணவர்களைப் போல, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாததும் தெரிய வந்தது. அவளால் குறைந்த நேரம் கூட எதைக் குறித்தும் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, தாமதமானாலும், நன்றாக புரிந்துகொண்டாள்.

எவ்வளவு முயற்சித்தும், அவளால் ஓரளவுக்கு மேல் கற்க இயலவில்லை. அவள் வளர வளர அவளைக் குறித்த கவலையும் வளர்ந்தது. அவள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு போக வேண்டும் என்ற பிரச்னையும் இப்போது சேர்ந்து கொண்டது. பொதுவாக யார் என்ன கேட்டாலும் கமலாவுக்கு ‘முடியாது’ என்றே கூற தெரியாது. இதனாலேயே, அவளில் இந்த வெகுளித்தனத்தை, அவளை சுற்றி இருப்பவர் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.

கமலாவின் இந்த நிலை சுற்றத்தாருக்கு தெரிந்தால் அவமானம் என கருதி அவளை எங்குமே அழைத்துச் செல்வதில்லை. இதனால், கமலாவுக்கு எப்படி மற்றவரிடம் பழக வேண்டுமென சுத்தமாகத் தெரியவில்லை. ஆலோசனைக்கு வந்த கமலாவின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவளின் அறிவுத்திறன் குறைபாடு பிரச்னை பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னே கமலாவிடம் தங்கள் அணுகுமுறையை மாற்றி, பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர். வீட்டிலும் அவளின் தனித்துவத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவளின் ஆர்வத்தைக் கண்டுபிடித்து, சிறுசிறு வெற்றிகளை ஊக்குவித்து, முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் பொறுமையும் நம்பிக்கையும் வீண்போகாவண்ணம், கமலா இப்போது தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி ஒரு வேலையில் நிலைத்து, மன நிறைவோடு வாழ்கிறாள்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.