அலர்ட் ஆக வேண்டும் இன்றே!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அலர்ட் ஆக வேண்டும் இன்றே!

குழந்தையின்மைக்கான காரணங்கள், குழந்தை பெறுகிற வயதில் திடீரென முளைப்பதில்லை... குழந்தைகளாக இருக்கும் போதிலிருந்தே ஆரம்பிக்கின்றன என சென்ற இதழில் பார்த்தோம். குழந்தைகள்தானே என நாம் அலட்சியமாக விடும் விஷயங்கள், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்கே பிரச்னைக்கு உரியவையாக மாறும்போது காலம் கடந்திருக்கும். சிறு வயதிலிருந்தே முறைப்படுத்தப்பட வேண்டிய உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் அவற்றுக்கு குழந்தைப் பேற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும்கூட நிறைய பேசினோம்.

தொடர்ச்சியாக, பருவ வயதில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களிடம் காணப்படுகிற ஆரோக்கியத்தைப் பாதிக்கிற விஷயங்கள் பற்றியும், அலர்ட் ஆக வேண்டிய அவசியத்தைப் பற்றியும், அலட்சியப்படுத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் பற்றியும் பேசுகிறார் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் மனுலட்சுமி.முதலில் பெண் குழந்தைகளுக்கு...

இந்தத் தலைமுறைப் பெண்கள் இரண்டு எதிர் எதிர் துருவங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பிரிவினர், சினிமா நடிகைகளையும் மாடல்களையும் பார்த்து சைஸ் ஸீரோ தோற்றம் பெற நினைத்து, சராசரிக்கும் மிகக் குறைவான எடையுடன் இருக்கிறார்கள். இன்னொரு பிரிவினரோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல் எக்குத் தப்பாக உடல் பெருத்து வயதுக்கும் உயரத்துக்கும் மீறிய எடையுடன் இருக்கிறார்கள்.

இந்த இரண்டுமே மிகவும் தவறு. இரண்டுமே மாதவிலக்கு சுழற்சியைப் பாதிக்கும். எனவே, Body Mass Index எனப்படுகிற BMI அளவு சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். உயரத்துக்கு ஏற்ற எடை என்பது பருவ வயது பெண், ஆண் இரு வருமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பெண்கள் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். பருவ வயதுப் பெண்கள் அடுத்து கவனிக்க வேண்டியது PCOS எனப்படுகிற Polycystic Ovary Syndrome...

அதாவது, சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னை. குழந்தையின்மைக்கான பிரதானப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இந்தப் பிரச்னைக்கான முதல் அறிகுறியே முறையற்ற மாதவிலக்கு சுழற்சிதான். குடும்பப் பின்னணியில் யாருக்காவது நீரிழிவு இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை வரலாம் என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. நீரிழிவுக்கும் சினைப்பை நீர்க்கட்டிகளுக்கும் அப்படியொரு நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். இந்தப் பிரச்னைக்கான இன்னொரு அறிகுறி அதிக பருமன். இந்த இரண்டு அறிகுறிகளும் இருக்கும் பெண்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

மாதவிலக்கு முறையாக வந்து கொண்டிருக்கும்வரை பயப்படத் தேவையில்லை. கருமுட்டை உற்பத்தி சீராக இருக்கிறது என்றால் மாதவிலக்கு சுழற்சியும் முறையாக வரும். பொதுவாக பெண்கள் பூப்பெய்திய புதிதில் மாதவிலக்கு சுழற்சி முறை தவறி வருவது இயல்பு. 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட வரலாம். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அந்த சுழற்சி முறைப்பட 3 வருடங்கள்கூட ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் சரிவிகித உணவுடன், போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதீத மன உளைச்சலும் மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். குறிப்பாக பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயாராகும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான டென்ஷனான காலகட்டத்தில், அவர்களுக்கு மாதவிலக்கு முறை தவறிப் போகவோ, அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்படவோ கூடும். அது தற்காலிகமானதுதான் என்பதால், பயம் வேண்டாம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சியும் யோகாவும் செய்யலாம்.மாதவிலக்கு சுழற்சியான 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை வருவது இயல்பானது. ஒருநாளைக்கு 3 முதல் 5 நாப்கின்கள் வரை மாற்றலாம். 3 - 5 நாட்களுக்கு ரத்தப் போக்கு இருக்கலாம். ஒரு நாளைக்கு 8க்கும் மேலான நாப்கின்கள் உபயோகித்தாலோ, 8 நாட்களுக்கும் மேல் ரத்தப் போக்கு நீடித்தாலோ மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

அதிக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். சாதாரண தலைவலி, உடல் வலிகளுக்குக்கூட உடனுக்குடன் பெயின் கில்லர் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்து இளம்பெண்கள் சிலருக்கு சிகரெட், குடிப்பழக்கங்கள் இருப்பதை நிறையவே கேள்விப்படுகிறோம். அந்த இரண்டுமே பிற்காலத்தில் அவர்களது கருத்தரித்தல் திறனை வெகுவாக பாதிக்கும்.

அடுத்தது திருமணத்துக்கு முன்பான செக்ஸ். பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பான செக்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பிரிவினருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பாதுகாப்பற்ற உறவின் மூலம் HIV மற்றும் HBsAG போன்ற பால்வினைத் தொற்றுகள் தாக்கலாம். அதன் விளைவாக கல்லீரல் கெட்டுப்போகலாம். அதே போல Gonorrhoea என்கிற இன்னொரு நோய் தொற்றும் தாக்கலாம். அது பின்னாளில் கருத்தரித்தலைப் பெரிய அளவில் பாதிக்கும்.

எனவே, திருமணத்துக்கு முன்பான உறவுகளில் விழிப்புணர்வு தேவை. தவிர்க்க முடியாத பட்சத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அது நோய்த் தொற்றை மட்டுமின்றி, தேவையற்ற கர்ப்பத்தையும் தவிர்க்கும். அலட்சியமாக இருந்துவிட்டு, கருத்தரித்து, பிறகு அதைக் கலைக்க நினைத்தால் கர்ப்பப்பையில் தொற்று ஏற்படலாம். கருக்கலைப்பின் பாதிப்பால் கருக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அது நிரந்தரமான மலட்டுத் தன்மைக்கும் காரணமாகலாம்.

2 குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால், திருமணமாகி, குழந்தை இல்லாமல் போகும் போது சோதனைக்குழாய் முறை மட்டுமே தீர்வாக இருக்கும். எல்லா அறிவுரைகளும் பருவ வயது ஆண்களுக்கும் பொதுவானவை. சரியான எடை, சரிவிகித உணவுப் பழக்கம், முறையான வாழ்க்கை முறை என எல்லாம் அவர்களுக்கும் அவசியம். சிகரெட், குடி மற்றும் போதை மருந்துப் பழக்கங்கள் அறவே கூடாது. அந்த இரண்டும் ஆண்களின் உயிரணுக்களின் தரத்தைப் பாதித்து, பின்னாளில் குழந்தையின்மைக்கு காரணமாகும். வருமுன் காப்போம் என்பதை இந்த விஷயத்திலும் கவனத்தில் கொள்வோம்!‘

பொதுவாக பெண்கள் பூப்பெய்திய புதிதில் மாதவிலக்கு சுழற்சி முறை தவறி வருவது இயல்பு. 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட வரலாம். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அந்த சுழற்சி முறைப்பட 3 வருடங்கள்கூட ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் சரி விகித உணவுடன், போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவு களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதீத மன உளைச்சலும் மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். குறிப்பாக பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயாராகும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான டென்ஷனான காலகட்டத்தில், அவர்களுக்கு மாதவிலக்கு முறைதவறிப் போகவோ, அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்படவோ கூடும். அது தற்காலிகமானதுதான்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.