அழகு q & a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,631
Location
chennai
#1
அழகு

1. எனக்கு அக்குள் பகுதியில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது. உடைகளில் வழிந்து, எப்போதும் அந்தப் பகுதி ஈரமாகவே இருக்கிறது. சில நேரங்களில் வியர்வை வாடையும் வருகிறது. புடவை, ஜாக்கெட் அணிகிற போது மிகவும் தர்மசங்கடமாக உணர்கிறேன். இதற்கு என்ன செய்யலாம்?

அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

எடை அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும் என்பதால், அதை முதலில் கவனிக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டைகளில் அதிக பருமன் சேராமலிருக்க கைகளை தினமும் சில முறைகள் கடிகாரச் சுழற்சியிலும் அதற்கு எதிர் சுழற்சியிலும் சுற்ற வேண்டும். 100 சதவிகித காட்டன் உடை மற்றும் உள்ளாடைகளே அணிய வேண்டும். அக்குள் பகுதியில் உள்ள ரோமங்களை நீக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

கோரைக்கிழங்கு - 50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்,
வெட்டிவேர் - 50 கிராம்,
பூலாங்கிழங்கு - 100 கிராம் எல்லாவற்றையும் நைசாக அரைத்து, சிறிது எடுத்து வெந்நீரில் குழைத்து அக்குள் முதல் முழுக்கைகளுக்கும் தடவி 5 நிமிடங்கள் ஊறிக் குளிக்கலாம்.

மரிக்கொழுந்து - 200 கிராம்,
வெள்ளரி விதை- 50 கிராம்,
பயத்தம் பருப்பு- 100 கிராம் மூன்றையும் நைசாக பொடித்து, அக்குள் பகுதியில் பேக் போல போட்டுக் குளித்தால் அந்த இடம் மென்மையாகும். நாற்றம் நீங்கும்.

குப்பை மேனி இலை,
வில்வ இலை,
துளசி, பூலாங்கிழங்கு - தலா 100 கிராம்,
வேப்பந்தளிர் - 25 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து அக்குள் பகுதியில் தடவி ஊறிக் குளித்தால் அந்தப் பகுதியில் ரோம வளர்ச்சி குறையும். சருமம் மென்மையாகும். வியர்வை கட்டுப்படும்.

குளி்க்கிற தண்ணீரில் துளசி, வேப்பிலை, லவங்கம் சேர்த்தரைத்த பொடியை கடைசியாக கலந்து குளிக்கலாம். 3 டீஸ்பூன் பார்லி பவுடருடன், அரை டீஸ்பூன் பச்சை கற்பூரத்தைப் பொடித்து, பாலில் குழைத்து அக்குள் பகுதியில் தடவிக் கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவினாலும் நாற்றமும் வியர்வையும் கட்டுப்படும்.

2. என்னுடைய டீன் ஏஜில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு அடிக்கடி கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், ஸ்மூத்தனிங் என நிறைய கெமிக்கல் சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கிறேன். இப்போது என் கூந்தல் தேங்காய் நார் போல மிகவும் பாதிக்கப்பட்டுக்காணப்படுகிறது. என் கூந்தலை பழைய நிலைக்குக் கொண்டு வர முடியுமா?

அழகுக்கலை நிபுணர் விஜி கே.என்.ஆர்.

கெமிக்கல் சிகிச்சை செய்த கூந்தலை ஒரே நாள் இரவில் பழைய நிலைக்கு மாற்றிவிட முடியாது. புதிதாக வளரும் முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யலாம். ஏற்கனவே உள்ள முடியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம்.உங்களுக்கு உடனடியாகத் தேவை ஸ்பா சிகிச்சை. பார்லர்களில் செய்யப்படுகிற ஹேர் ஸ்பா சிகிச்சைகளின் மூலம் உங்கள் மோசமான கூந்தலை சரி செய்யலாம். குறைந்தது 5 சிட்டிங் தேவைப்படும். வாரம் ஒருமுறை செய்து கொள்வது நல்லது. இது கூந்தல் உதிர்வையும் நிறுத்தும். நம்பகமான பார்லர்களில் கூந்தலுக்கான கெராட்டின் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்கள் கூந்தலை மிருதுவாக்கும்.

கறிவேப்பிலை சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயை மிதமான சூடாக்கி, கூந்தலுக்கு மசாஜ் செய்து குளிக்கலாம். 250 கிராம் கறிவேப்பிலை, 8 பல் பூண்டு, 8 டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். தினமும் இதில் 1 டீஸ்பூன் அளவை வெந்நீருடன் சாப்பிடவும். 3 மாதங்களுக்குச் செய்து வர, கூந்தல் வளர்ச்சி அதிகமாகும். கூடவே தினமும் ஒரு நெல்லி–்க்காய் சாப்பிடுகிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. நான் பல வருடங்களாக ஹெர்பல் ஃபேஷியல்தான் செய்து வருகிறேன். சமீப காலமாக ஃபேஷியல் செய்தாலுமே, என் முகம் பொலிவிழந்து காணப்படுவதை உணர்கிறேன். ஒவ்வொரு முறை பார்லருக்கு போகும் போதும் ஏதேதோ புதிய ஃபேஷியல்களை பற்றிச் சொல்லி அதைச் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். பல வருடங்களாக பழகிப் போன ஹெர்பல் ஃபேஷியலை தவிர்த்துப் புதிதாக முயற்சி செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

நம் உடல் உறுப்புகளுக்கு எப்படி வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, தாதுச்சத்து என எல்லாம் தேவையோ, அப்படித்தான் சருமத்துக்கும். ஃபேஷியல் என்பது ஒவ்வொருவரின் வயது, சருமத்தின் தன்மை, அவரது தேவை ஆகியவற்றுக்கேற்ப செய்யப்பட வேண்டியது. ஒரே ஃபேஷியலை பல வருடங்களாகச் செய்து, இப்போது அதில் பலனில்லை என்கிறீர்கள்.

சருமம் எண்ணெய் பசையானதா, வறண்டதா, இரண்டும் கலந்த காம்பினேஷன் சருமமா என்பதைப் பொறுத்து, அதற்கேற்ற ஃபேஷியல் செய்யும்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும். உங்கள் சருமத்தை டெஸ்ட் செய்து, அதற்கு என்ன தேவை என்பதை அறிந்து உங்களுக்கான சரியான ஃபேஷியலை ஓர் அழகுக்கலை நிபுணரால்தான் சொல்ல முடியும்.

சருமத்தின் தன்மையும் சீசனுக்கு தகுந்தபடி மாறும். வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால் பிசுபிசுப்புத் தன்மை அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் சருமம் வறண்டிருக்கும். எல்லா சீசனிலும் ஒரே ஃபேஷியல் என்பது பொருத்தமாக இருக்காது. இது தவிர சிலருக்கு முதுமையைத் தள்ளிப் போட ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியல் தேவைப்படும். மணப்பெண்களுக்கு அதிக பளபளப்பைக் காட்டக்கூடிய பிரைடல் ஃபேஷியல்கள் செய்யப்படும். எனவே, நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டு அழகுக்கலை நிபுணரை அணுகி, உங்கள் சருமத்தை டெஸ்ட் செய்யுங்கள். பிறகு அதற்கேற்ற ஃபேஷியலை செய்து கொள்ளுங்கள். சருமம் மிக மோசமான நிலையில் உள்ளவர்கள் 15 நாட்களுக்கொரு முறையும், மிக ஆரோக்கியமான சருமம் கொண்டவர்கள் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆனால் ஃபேஷியலின் பலனைத் தக்க வைத்துக் கொள்ள தினமும் கிளென்சிங், டோனிங், மாயிச்சரைசிங் செய்து கொள்ள வேண்டும்.

4. நிறைய அழகுக் குறிப்புகளில் குங்குமாதி தைலம் பற்றிப் படித்திருக்கிறேன். அது என்ன? நிறத்தை அதிகரிக்க உதவுமா? எப்படி உபயோகிப்பது?

ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி லேபம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்தஉதவக்கூடியதுதான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவி விடலாம். எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.

குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது சருமத்திலுள்ள இறந்த செல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம்.மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.

5. என்னுடைய நகங்கள் எப்போதும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படுகின்றன. அதை மறைக்க நெயில் பாலிஷ் போட வேண்டியிருக்கிறது. நெயில் பாலிஷ் இல்லாதபோது மஞ்சள் தடவினது போலக் காட்சியளிக்கின்றன. சரி செய்ய முடியுமா?

அழகுக்கலை நிபுணர் லட்சுமி


பெரும்பாலும் நகங்களில் ஏற்படுகிற இன்ஃபெக்*ஷனே மஞ்சள் நிறத்துக்குக் காரணம். ரொம்பவும் அதிகமான அடர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது தைராய்டு, சோரியாசிஸ், நீரிழிவு, கல்லீரல் கோளாறு போன்றவற்றின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். டெஸ்ட் செய்து பாருங்கள். எப்போதும் பளீர் நிறங்களில் நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த நெயில் பாலிஷ் சாயத்தின் விளைவாகவும் இப்படி நகங்கள் மஞ்சளாகலாம். நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் பேஸ் கோட் போட்டுவிட்டு பிறகு கலர் பாலிஷ் போடலாம். நெயில் பாலிஷை அகற்ற அசிட்டோன் கலந்த ரிமூவர்களை உபயோகிப்பதாலும் நகங்கள் மஞ்சளாகலாம். அசிட்டோன் இல்லாத ரிமூவரை உபயோகியுங்கள். வைட்டமின் ஈ ஆயிலில் டீ ட்ரீ ஆயில் கலந்து நகங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்தால் இன்ஃபெக்*ஷனும் குறையும். நிறமும் மாறும். எலுமிச்சைச் சாற்றில் நகங்களை சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினாலும் மஞ்சள் நிறம் மாறும்.

6. என்னுடைய தோழி தானாகவே வீட்டில் ரெடிமேட் கொலாஜன் மாஸ்க் வாங்கி முகத்துக்கு உபயோகிக்கிறாள். அது முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என்கிறாள். கொலாஜன் ஷீட் பற்றி மேலும் தகவல்கள் சொல்ல முடியுமா?

அழகுக்கலை நிபுணர் மேனகா

கொலாஜன் மாஸ்க் மற்றும் கண்களுக்கான பேடுகள் பியூட்டி பார்லர்களில் அழகுக்கலை நிபுணர்களால் பயன்படுத்தப்படுபவை. இந்த மாஸ்க்குகள் மெல்லிய பேப்பர் மாதிரி இருக்கும். கெமிக்கலோ, கலரோ, வாசனையோ சேர்க்கப்பட்டிருக்காது. முகத்தில் போட ஏதுவாக கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகளில் இடைவெளி விடப்பட்டிருக்கும். அதை முகத்தில் வைத்து, லேசாக ஈரப்படுத்தினால், அது மென்மையான ஜெல் போல மாறி, அப்படியே முகத்தில் படியும். மற்ற மாஸ்க்குகள் போல இது சுருங்கிப் போகவோ, கிழியவோ வாய்ப்பில்லை. சிறிது நேரத்தில் அந்த ஜெல் முழுவதும் சருமத்தினுள் ஊடுருவி, மெல்லிய கோடுகளையும் சுருக்கங்களையும் சரியாக்கும். சருமம் இளமையாகக் காட்சியளிக்கும்.

கண்களுக்கு அடியில் காணப்படுகிற சுருக்கங்கள், கருவளையங்களுக்கான சிகிச்சையிலும் கொலாஜன் ஐ பேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கொலாஜன் மாஸ்க்குகளை அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் உபயோகிப்பதுதான் சிறந்தது. சுய மருத்துவம் போல சில வித சுய அழகு சிகிச்சைகளும் ஆபத்தானவையே.7. எப்போது மெஹந்தி போட்டாலும் எனக்கு நல்ல நிறம் பிடிப்பதே இல்லை. என்ன கோளாறாக இருக்கும்? கடைகளில் ஸ்பெஷலாக ஏதேனும் கலப்பார்களா நிறம் வருவதற்கு?

மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன்

கல்யாண பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்வது என்பது நம் நாட்டில் ஒரு சடங்காக ஆகிவிட்டது. அந்த மணப்பெண்ணின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தால், அப்பெண்ணின் வருங்கால கணவன் அவளை மிகவும் நேசிப்பான் என்பது பழமொழி. நல்ல கலர் வருவதற்கான சில உத்திகளையும் சொல்ல வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு சிறிது மெஹந்தி ஆயில் தடவவும். மெஹந்தி போட்டு சிறிது உலரத் தொடங்கும் முன், லெமன் ஜூஸ் + சர்க்கரை கரைசலை சிறிது பஞ்சினால் நனைத்து டிசைன் மேல் தடவ வேண்டும். இதே போல 7 -8 முறை செய்யவும். மருதாணி டிசைன் குறைந்தது கைகளில் 6-7 மணி நேரம் இருக்க வேண்டும். பிறகு முனை மழுங்கிய கத்தியால் சுரண்டி எடுத்த பிறகு, ஒரு இரும்பு தவாவில் 10 கிராம்பு போட்டு வதக்கவும். அப்போது வரும் புகை மேல் மருதாணி இட்ட கைகளை காண்பிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கையில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (குறைந்தது 5-6 மணி நேரம்). ஆரஞ்சு கலரில் இருந்த மருதாணி டிசைன் சிறிது சிறிதாக சிவப்பு நிறம், பிறகு டார்க் பிரவுன் ஆக மாறும். இதுதான் ரியல் மருதாணி கலர். குளிர்ச்சியான உடல்வாகு இருப்பவர்க்கு மெஹந்தி டார்க் ஆக சிவக்காது. ஆனால், மேற்சொன்னபடி செய்தால், கண்டிப்பாக நல்ல கலர் வரும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை!

ப்ளீச், எண்ணெய், சோப்பு போன்றவற்றை மெஹந்தி போட்ட கைகளில் உபயோக படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும் கடைகளில் விற்கும் மெஹந்தி கோன்களில் தரம் பார்த்து வாங்கவும். சில மெஹந்தி பேஸ்டில் நல்ல கலர் வருவதற்காக சில கெமிக்கல்ஸ் கலப்பதாக சொல்லப்படுகின்றன. ரோட்டில் இருக்கும் மெஹந்தி வாலாக்கள் சிலர் சுண்ணாம்பு கரைசலை மெஹந்தியில் கலப்பதாகவும் வதந்தி இருக்கிறது. இதனால் சரும அலர்ஜி வர வாய்ப்புகள் அதிகம்.

8. அடிக்கடி கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்தால்தான் நன்கு வளரும் என்பது உண்மையா?

ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாவித் ஹபீப்

கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் எந்த விதத்திலும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுவதில்லை. எந்த எண்ணெயும் கூந்தலை வளரச் செய்யாது. எண்ணெய் தடவுவதன் மூலம் மண்டைப் பகுதியில் ஒருவித வழுவழுப்புத் தன்மை ஏற்படும். சிறிது நேரத்துக்கு கூந்தலை மென்மையாக வைக்கும். அவ்வளவுதான்.

ஆயில் மசாஜ் செய்யும் போது நீங்கள் ரிலாக்ஸ்டாக உணர்வீர்கள். அந்த எண்ணெய் உங்கள் மண்டைப் பகுதிக்குள் இறங்கி வேலை செய்வதாக நினைப்பீர்கள். உண்மையில் எண்ணெய் என்பது மண்டைக்குள் இறங்காது. அது ஒருவித வெளிப்பூச்சு. அவ்வளவே! ஆயில் மசாஜ் செய்ததும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும். அதனால் மசாஜ் செய்த எண்ணெய் தவிர, மண்டைப் பகுதியில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையும் சேர்ந்து போவதால், கூந்தல் இன்னும் அதிகம் வறண்டுதான் போகும். கூந்தல் வளர்ச்சி என்பது எண்ணெய், ஷாம்பு போன்ற வெளிப்புற சிகிச்சைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளே போகிற ஊட்டத்தைப் பொறுத்தது.

9. தினமும் சிம்பிளாக மேக்கப் செய்து வேலைக்குச் செல்கிறேன். நான் உபயோகிக்கிற காம்பேக்ட் திட்டுத்திட்டாகத் தெரிகிறது. லிப்ஸ்டிக் சீக்கிரம் நீங்கிவிடுகிறது. காஜல் கண்களுக்கு அடியில் வழிகிறது. சரியான முறையில் மேக்கப் போடும் எளிமையான டிப்ஸ் சொல்லுங்களேன்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீதேவி ரமேஷ்

கன்சீலரையோ, ஃபவுண்டேஷனையோ இமைகளின் மேல் போடாதீர்கள். அது ஐ மேக்கப் செய்த பிறகு அங்கே மடிப்பு மடிப்பாக கோடுகளைக் காட்டும். உங்கள் முகத்தில் அதிக எண்ணெய் பசையான பகுதியில் (பெரும்பாலும் T ஸோன் எனப்படுகிற நெற்றியும் மூக்கும் இணைகிற இடமாகவே இருக்கும்) பவுடரை முதலில் டஸ்ட் செய்யுங்கள். பிறகு மற்ற இடங்களில் பிரஷ் கொண்டு டஸ்ட் செய்யுங்கள்.

உதடுகளுக்கு முதலில் ஒரு கோட் லிப்ஸ்டிக் தடவிவிட்டு, பிறகு அதன் மேல் கொஞ்சம் பவுடரை டஸ்ட் செய்யுங்கள். அதற்கு மேல் இரண்டாவது கோட் லிப்ஸ்டிக் தடவுங்கள். இது உங்கள் லிப்ஸ்டிக் சீக்கிரம் அழியாமல் காக்கும். வாட்டர் ப்ரூஃப் போன்றும் இருக்கும். கண்களின் வெளியே வழியாத காஜல் வகைகளை உபயோகிக்கலாம். அதே கலரில் ஐ ஷேடோவை அதன் மேல் தடவுவதும் காஜல் வழியாமல் காக்கும். ஸிக்ஸாக் பொசிஷனில் மஸ்காரா தடவலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.