அவசியம் கற்க வேண்டிய பாடம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அவசியம் கற்க வேண்டிய பாடம்

டாக்டர் ஆ. காட்சன்

வயது ரீதியான சாதாரண உடல், மன மாற்றங்களைப் பற்றி அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் விடலைப் பருவத்தினர் தொடர்ந்து உழன்றுகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையும், வெளியில் சொல்ல வெட்கப்படுவதும்தான். சிறுநீரகத்தில் கல்லடைப்புக்கு எந்த மருத்துவரைப் பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று அது தொடர்பாகச் சிகிச்சை பெற்ற ஒருவரிடம் கேட்கலாம். ஆனால், பாலியல் சந்தேகங்களை யாரிடம் கேட்பது? பலருக்கும் இப்படிச் சந்தேகங்கள் நீண்டுகொண்டே போகும்.

கடைசியில் முறைசார்ந்த பயிற்சி பெற்ற மருத்துவருக்குப் பதிலாக, விளம்பரங்களால் கவரும் போலி மருத்துவர்களிடம் சரணடைந்து விடுவதுதான் பலரும் சென்றடையும் தவறான பாதையாக இருக்கிறது. வளர்இளம் பருவத்தினரிடம், பெற்றோர் நல்ல நண்பனைப்போல நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் வலைதளங்கள் பல நேரங்களில் அவர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்த அதிக வாய்ப்புண்டு.

பொது மருத்துவரிடம் வேறு ஏதாவது நோய்க்குச் சிகிச்சை பெறச் செல்லும்போது, சந்தேகம் நாக்கின் நுனிவரை வந்துவிடும். ஆனால், அவர் ஏதாவது தப்பாக நினைத்துவிடுவாரோ என்ற பயம். சில நேரம் நோய்க்கான காரணங்களை அறிய, இது குறித்துக் கேட்கத் தோன்றி, மருத்துவரும் கேட்காமல் விடலாம். இந்தத் தடைவேலி அறுக்கப்பட்டால்தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

பாலுணர்வு வெட்கத்துக்குரியதா?

பத்தாம் வகுப்பில் உயிரியல் புத்தகத்தை வாங்கிய உடன், இனப்பெருக்க உறுப்புகளின் வரைபடங்களும் அது சம்பந்தப்பட்ட விளக்கங்களும் கடைசிப் பாடமாக இருந்தால்கூடப் பலரும் ஆர்வத்துடன் படித்து முடித்துவிடுவார்கள். வகுப்பில் காதல் சம்பந்தப்பட்ட இலக்கியம் பாடமாக நடத்தப்படும்போது மாணவர்களுக்குள்ளே நமுட்டுச் சிரிப்பும், குசுகுசு சத்தங்களும் கேட்கும்.
இத்தனை ஆர்வம் உள்ள விடலைப் பருவத்தினருக்கு, அதைப் பற்றித் தெளிவான கல்வி விளக்கங்கள் அரிதாகவே கிடைக்கின்றன.

இதைப் பற்றிய பேச்சு என்றாலே சிலர் கூச்சமாகவும் வெட்கமாகவும் நினைக்கிறார்கள். மற்றொரு சாரார் இதைப் பற்றி பேசுவதே பாவம், தவறு என்று நினைக்கிறார்கள். ஏன், நோயாளிகளிடம் நோய் வரலாறு கேட்டு எழுதும் படிவத்தில் ‘செக்ஸுவல் ஹிஸ்ட்ரி’ என்ற பகுதியை, மருத்துவ மாணவர்கள்கூட எழுதாமல் விட்டுவிடுகிறார்கள்.

கல்வியின் அவசியம்

பாலியல் குறித்த இத்தனை பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், பள்ளி சார்ந்த பாலியல் விழிப்புணர்வுக் கல்வி பாலியல் சார்ந்த புரிதலில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமூக ரீதியான குழுக்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளும் விடலைப் பருவத்தினர் மத்தியில், இளம்வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் கர்ப்பம் போன்றவை பெருமளவு குறைந்திருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஐந்து வருடங்களில் உலக மக்களின் ஆரோக்கிய வாழ்வைத் தீர்மானிக்கும் பத்து முக்கியக் காரணிகளுள் ஒன்றாக, வளர்இளம் பருவத்தில் ‘நிதானமான மற்றும் ஆரோக்கியமான பாலியல் அணுகுமுறைகள்’ என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எனவே பெற்றோர், அரசு, கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் இதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு செயல் பட வேண்டிய அவசியம் உள்ளது.

பாலியல் சந்தேகங்கள்: பெற்றோர் கவனத்துக்கு

# "இந்த வயதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான், நாங்களும் அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம்" என்று கூறி ‘தாங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படுகிறோம்’ என்ற உணர்வை விடலைப் பருவத்தினரிடம் ஏற்படுத்துங்கள்.

# செக்ஸைப் பற்றி பேசித் தேவையில்லாமல் நாமாகவே அந்த எண்ணத்தை விதைத்துவிடுவோமோ என்ற பயம் வேண்டாம். அது இயல்பானது. அந்த வயதுக்குரியது.

# வாரிசுகளின் சங்கோஜமான அல்லது முரண்பாடான கேள்விகளாலோ கருத்துகளாலோ கோபமோ பதற்றமோ அடையாதீர்கள். மாறாக "நீ இப்படி வெளிப்படையாகக் கேட்பது எனக்குப் பிடித்திருக்கிறது. பிரச்சினையைத் தீர்க்க இதுதான் முதல் படி" எனப் பாராட்டுங்கள்.

# பாலியல் குழப்பங்கள், பாலியல் சார்ந்த வன்முறைகளால் ஏற்படும் மன உளைச்சல்கள், இளம் வயது கர்ப்பம், பால்வினை நோய்கள், சமூகரீதியான பாதிப்புகள் பற்றி உங்கள் வாரிசுகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். இது பிரச்சினைகளை மோசமடையாமல் தவிர்க்க உதவும்.

# பாலியல் சம்பந்தப்பட்ட விளக்கங்களைத் தனி வகுப்புபோல் நடத்த வேண்டாம். அவ்வப்போதுக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாகச் சினிமாவில் பாலியல் சம்பந்தப்பட்ட கவுரவமான காட்சிகள் வரும்போது ‘இந்தக் காட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று ஆரம்பிக்கலாம். அல்லது ‘இப்படித்தான், நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நண்பன் இதுபோன்ற பாலியல் குழப்பத்தில் மாட்டிக்கொண்டான்’ எனக் கற்பனையாகக்கூடச் சூழ்நிலையை உருவாக்கிப் பேச ஆரம்பிக்கலாம்.

# எதிர்பாலினரிடம் பழகும்போது நல்ல தொடுதல் எது, தவறான நோக்கத்துடன் கூடிய தொடுதல் எது என்பதைத் தெளிவுபடுத்துங்கள். தவறு என்று தோன்றும் செயல்களுக்குத் தைரியமாக ‘நோ’ சொல்லக் கற்றுக்கொடுங்கள்.

# சில நேரங்களில் தன்பாலின உறவு பற்றிய எண்ணங்களோ தொடுதல்களோ இந்த வயதில் வர வாய்ப்பு உண்டு என்பதையும், அது செக்ஸைத் தவிர்ப்பதற்கான மாற்றுவழி அல்ல என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.

# மதரீதியான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் ‘செக்ஸ் என்பது ஒரு பாவச் செயல்’ என்று போதிப்பதைவிட, ‘செக்ஸ் என்பது கடவுள் தந்தவற்றுள் அற்புதமான, உன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று பேசுங்கள்.

# உங்கள் கருத்துகளைத் திணிக்கும் களமாகப் பாலியல் கல்வியைப் பயன்படுத்தக் கூடாது. தங்கள் பாலியல் உணர்வு பெற்றோரால் தீர்மானிக்கப்படுகிறது என மகனோ / மகளோ நினைத்துவிட்டால் சகஜமாகப் பேச மாட்டார்கள்.

# பாலியல் என்பது மறைமுகமாகவோ, குத்திக்காட்டியோ, மழுப்பலாகவோ பேச வேண்டிய விஷயம் அல்ல. தெளிவாக, வெளிப்படையாகப் பேசப்பட வேண்டியது. பெற்றோர் அதைப் பேசக் கூச்சப்பட்டால், வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

# கடைசியாக, ஆனால் முக்கியமாகப் பாலியல் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.