அவரைக்காயின் பயன்கள்

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
[h=1]மூலிகை மந்திரம் அவரை[/h]


நன்றி குங்குமம் டாக்டர்

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

சுவை மிக்க காய்கறிகளில் ஒன்று அவரை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மருந்துமாகிப் பயன் தரும் அளவு பல சத்துகளைக் கொண்ட புதையல் பெட்டகம் அவரை என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதன் மருத்துவ சக்தியை உணர்ந்துதான் நோயுற்ற காலங்களில் பத்திய உணவாகவும் நம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.கொடி வகையைச் சேர்ந்த தாவரமான அவரை, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை உணவுக்கென வீட்டிலும் வளர்க்கப்படும் பெருமைக்குரியது.

பெரும்பாலும் ஆடி மாதத்தில் விதைக்கப்படும் அவரை, சுமார் 6 மாத காலத்தில் (அதாவது, மார்கழி, தை மாத காலங்களில்) கொத்துக் கொத்தான காய்களுடன் வெள்ளை மற்றும் நீலநிறப் பூக்களும் கொண்டு அழகான தோற்றத்துடன் வளர்ந்திருக்கும். கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக்கொம்பு அவரை, வெள்ளவரை என அவரையில் பல வகைகள் உள்ளன.

நாம் சமையலில் அதிகமாகப் பயன்படுத்துவது கொடி அவரை என்பது குறிப்பிடத்தக்கது. Indian butterbean என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அவரையின் தாவரப்பெயர் Lablab purpureus என்பது ஆகும். சமஸ்கிருதத்தில் அவரைக்கு நிஷ்பவா என்று பெயர் உண்டு. இது தவிர சிம்பை, சிக்கிடி, நகுனி என்பவற்றைக்கூட அவரையின் பெயர்களாகக் குறிப்பர்.

அவரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள் உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் மருந்தாகவும் பயன்தரும் பொருட்கள் அவரையில் நிறைந்துள்ளன. ஒரு கப் அளவுள்ள அவரையில் புரதச்சத்து 12.9 கிராம், நீர்ச்சத்து 122 கிராம், சாம்பல் சத்து 1.4 கிராம், நார்ச்சத்து 9.2 கிராம், கொழுப்புச்சத்துகள் 1.2 கிராம், எரிசக்தியான கார்போஹைட்ரேட் 569 கலோரி அடங்கியுள்ளது. இதனுடன் நார்ச்சத்து, சர்க்கரைச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், நியாசின், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து, செலினியம், சோடியம், கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியனவும் மிகுதியாக அடங்கியுள்ளன.

அவரையின் சிறப்பைப் போற்றும் பாடல்கள் அதிசார பேதியையும் நீண்டகாலமாக ஆறாத புண்ணையும் குணமாக்கும் தன்மையுடையது, பசியைத் தூண்டக்கூடியது என்று அவரை இலையைப் பற்றி அகத்தியர் பாடியுள்ளார். குறிப்பாக, அவரையைப் பற்றி தேரையர் பாடியிருப்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்.

கங்குலுணவிற்குங் கறிக்கும்
உறைகளுக்கும்
பொங்குதிரிதோடத்தோர் புண்சுரத்தோர் -
தங்களுக்குங்கண் முதிரைப்பில்ல
நோய்க் காரருக்குங் காமுறையா
வெண்முதிரைப்பிஞ்சாம் விதி.
- தேரையர் பாடல்.

இரவிலும் உண்ணத் தகுந்த, முத்தோடம் எனப்படும் வாத, பித்த, சிலேத்தும நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்ற, ஆறாப் புண்ணுடையோர்க்கு அருமருந்தாக விளங்குகிற, அடங்காக் காய்ச்சல் உற்றோர்க்கும், கண்ணின் விழிக்குள் ஏற்படும் நோய்களுக்கும் ஏற்ற பத்திய உணவாக விளங்குவது அவரையாகும். மருந்துண்ணும் காலத்தும், உடல் தேற்றும் காலத்தும் உண்ணுவதற்கேற்ற மிகச்சிறந்த மருந்து அவரை என்கிறார் தேரையர்.
ஆச்சரியம் தரும் அவரையின் பயன்கள்

ஒரு கப் அவரையில் நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான Folate எனும் வைட்டமின்சத்து 44% உள்ளது. இந்த Folate சத்துதான் மரபணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச்சிக்கும், அமினோ அமிலங்களின் தயாரிப்புக்கும் உதவுகிறது. கருவில் வளர்கிற குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தினை தருவதற்கு Folate அவசியம் என்பதை மருத்துவர்கள் அறிவார்கள். இதனால் கரு உருவாவதற்கு முன்போ, கருவுற்ற பின்போ தாய்மார்கள் அவரைப் பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.

குறைப் பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றை இதனால் வராமல் தடுக்க முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும் உணவு அவரை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். Folate சத்து நிறைந்திருப்பதைப் போலவே, நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவைப்படும் இரும்புச்சத்திலும் 33% அளவு ஒரு கப் அவரையில் இருக்கிறது.

இதனுடன் உடல் முழுவதும் பிராண வாயுவைக் கொண்டு செல்லும் பணிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி தரவும், உடல் உஷ்ணம் பெருக்கவும், மூளையினின்று செல்லும் மின் சமிக்ஞைகளை சீராகச் செலுத்தவும் அவரை முக்கிய காரணியாக விளங்குகிறது என்று கூறினால் அது மிகையில்லை. மேலும், அவரையில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகவும் பெரும் உதவி செய்கிறது.

பாக்டீரியா எனும் நோய் செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும் பணிக்கு உதவும் ரத்த வெள்ளை அணுக்களுக்குப் புத்துணர்வு தருவதாகவும் இரும்புச்சத்து விளங்குகிறது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான என்ஸைம் எனும் மருத்துவ வேதிப் பொருட்கள் துத்தநாகச்சத்தை அடிப்படையாகக்
கொண்டுதான் இயங்குகின்றன.

இதனால்தான் சீரான வளர்ச்சி பெறுவதுடன், உடல் ஊனம் மற்றும் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் வராமல் காப்பதற்குத் துத்தநாகச்சத்து உதவுகிறது. அந்த துத்தநாகம் அவரையில் மிகுந்து உள்ளது.இறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்குத் தேவையான 15% சத்தினை பெறலாம் என்பது ஆய்வுகளின் முடிவு. ஒரு கப் அவரையில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது எனத் தெரிய வருகிறது. இந்த நார்ச்சத்து உறுப்புகளைச் சீராக இயங்க வைக்க உதவுகிறது.

இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதோடு, உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு நாளடைவில் புற்று நோயாக உருவாகும் மாசுக்கள் உடலில் தங்காத வண்ணம் வெளியேற்ற உதவுகிறது.சர்க்கரை நோயாளிகளுக்கே உரித்தான மலச்சிக்கல் தீரவும் அவரை அருமருந்தாகிறது.அவரையில் பொதித்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச்சத்தை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகிறது.
அவரை மருந்தாகும் விதம்

* அவரை இலையைச் சாறு எடுத்து அதை ஒரு துணியில் நனைத்து நெற்றிப் பற்றாகப் போட்டு வைத்திருக்க சிறிது நேரத்தில் தலைவலி தணிந்து போகும்.

* அவரை இலையை அரைத்துப் பசையாக்கி நாட்பட்ட ஆறாப் புண்களின் மேல் பற்றாகப் போட்டு வைத்தாலோ அல்லது அவரை இலையைச் சாறு பிழிந்து புண்களைக் கழுவி வந்தாலோ புண்கள் விரைவில் ஆறிப் போகும்.

* அவரை இலைச்சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாகக் கலந்து அதனோடு போதிய விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், வீக்கங்கள் இவற்றின் மேல் பூசி வைக்க விரைவில் வந்த வடு தெரியாமல் காயங்கள் மறைந்து போகும்.

* அவரை இலையைச் சாறு பிழிந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து இனிப்பாக்கி 10 முதல் 15 கிராம் அளவுக்கு உள்ளுக்கு அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டுவர ஓரிரு நாட்களில் சீதபேதி, நாட்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும்.

* அவரை இலையை நசுக்கிச் சாறு பிழிந்து அதனோடு சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்துப் பூசி வைக்க நமைச்சல், எரிச்சல், சிவந்த நிறம் போன்ற தொல்லைகள் தருகிற சரும நோய்கள் பலவும் குணமாகும்.வேர்க்குரு போன்ற துன்பங்கள் கூட விலகி ஓடும்.

* அவரைக்காயைச் சமைத்தோ அல்லது சூப்பாகவோ செய்து வளரும் இளஞ்சிறார்களுக்குக் கொடுத்து வர நல்ல ஞாபகசக்தியும் உடல் ஆரோக்கியமும் பெற்று வளர்வார்கள்.நம் வீட்டுத் தோட்டத்தில் சாதாரணமாக செழித்து வளரும் அவரைக்கு இத்தனை சக்தியா என்று ஆச்சரியம் எழுகிறதுதானே?!
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.