ஆசையைத் தூண்டும் `ஆடிப்பால்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
ஆடிப் பண்டிகை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். `ஆடிப் பட்டம் தேடி விதை` என்பது முதுமொழி. விதைப்பதற்கேற்ற பருவம் என்பதால் விவசாயிகள் பயிரிட தொடங்குவார்கள். நல்ல மழை மற்றும் மகசூல் வேண்டி விழாக்கள் கொண்டாடி வழிபாடு செய்வது உண்டு.
விழாக்கள் என்றாலே சிறப்பு பதார்த்தங்கள் செய்து ருசிப்பது நமது மரபல்லவா? ஆடிப் பண்டிகைக்கு ஆடிப்பால் காய்ச்சி உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தவர்களுக்கும் கொடுக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கம் குறைந்துவிட்டாலும் இன்னும் பல இடங்களில் ஆடிப்பால் உபசரிப்பு நடக்கத்தான் செய்கிறது.
இயற்கை நமக்கு அளித்திருக்கும் பொருட்களான தேங்காய், வெல்லம், ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு ஆடிப்பால் செய்வார்கள். சற்றே இனிப்பான சுவையை தன்னிடத்தே அடக்கி உள்ள தேங்காயின் பாலெடுத்து, அதனுடன் இயற்கை இனிப்பான வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து செய்யப்படும் ஆடிப்பால் தனிச்சுவை கொண்டது.
இரும்புச்சத்து நிறைந்த வெல்லம் நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. மேலும் சற்று விஷ முறிவுத் தன்மையும் வாய்ந்தது. அற்புத மணமிக்க ஏலக்காய்த் தூள் இதனுடன் சேர்க்கப்படுவதால் ஆடிப்பால் மணமும், சுவையும் ஒருங்கே கொண்டது.
வாருங்கள், பாரம்பரிய பானமான ஆடிப்பால் தயாரித்து பருகலாம்...
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1
பொடியாக அரிந்த வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீ ஸ்பூன்
செய்முறை
* தேங்காயைத் துருவி, சிறிது நீருடன் மிக்சியில் ஓடவிட்டு, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டியால் நன்கு கசக்கி தேங்காய்ப் பால் எடுக்கவும்.
* உலோக வடிகட்டியில் உள்ள சக்கையுடன் மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து மீண்டும் மேற்கண்ட முறையில் பால் எடுக்கவும். மீண்டும் சிறிது நீர் சேர்த்து சுற்றி மூன்றாம் முறை பால் எடுக்கவும்.
* பொடியாக அரிந்த வெல்லம், மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து அடிகனமான வாணலியில் கொதிக்கவிட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
* அதை சிறிது கொதிக்க விட்டு, இரண்டாம் முறை பிழிந்த பாலைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து இறக்கி வைத்து பரிமாறவும்.
குறிப்பு
* தேங்காய் நன்கு முற்றியதாக இருந்தால் ஆடிப்பாலின் சுவை மிகவும் தூக்கலாக இருக்கும்.
* தேங்காயைப் பூத்துருவலாக வெள்ளை வெளேர் என்று துருவி உடனே பால் எடுத்தால் நல்ல சுவை மிக்க பால் கிடைக்கும்.

கீதா பாலகிருஷ்ணன்


-netsource
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.