ஆடும் களம்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#11
டென்னிஸின் முதல் பெண் முகம்
களிர் டென்னிஸின் இந்திய முகமாக சானியா மிர்ஸா இன்று கோலோச்சிக்கொண்டிருக்கிறார். ஆனால், சானியா மிர்ஸா டென்னிஸில் அறிமுகமாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய மகளிர் டென்னிஸின் அசைக்க முடியாத வீராங்கனையாகத் திகழ்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த நிருபமா சஞ்சீவ் (முன்னர், நிருபமா வைத்தியநாதன்). கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சுற்றுப் போட்டி ஒன்றில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற முத்திரையைப் பதித்தவர் இவர்!

ஆறு வயதினிலே

இந்திய டென்னிஸில் ஆண்கள் மட்டுமே ஜொலித்த காலகட்டம் அது. விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி எனப் பெயர் சொல்லும் வீரர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். 1990-கள் வரை இதுதான் நிலை. இந்தியா டென்னிஸில் வீராங்கனைகள் யாருமே இல்லை என்பது நீண்ட காலக் குறையாக இருந்தது. அந்தக் குறையைத் தனது வரவால் தீர்த்துவைத்தார் நிருபமா. சுமார் 10 ஆண்டுகள் இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக ஆதிக்கம் செலுத்தியவர் இவர்.
தமிழகத்தில் கோவையில் பிறந்த நிருபமாவுக்கு டென்னிஸ் மீது கொள்ளைப் பிரியம். கையில் ராக்கெட்டுடன் டென்னிஸ் கோர்ட்டுக்குச் சென்றபோது அவருக்கு ஆறு வயது! தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியில் விளையாடியிருக்கிற அவருடைய தந்தை வைத்தியநாதன்தான் நிருபமாவுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தவர். சிறு வயதிலேயே டென்னிஸ் விளையாட்டின் நுணுக்கங்கள் அவருக்கு அத்துப்படி ஆயின. முதன்முறையாக 12 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் நிருபமா இடம்பிடித்தார். முதல் போட்டியிலேயே அரையிறுதிவரை முன்னேறினார். 14 வயதுக்கு உட்பட்டோர் அணியில்தான் முதல் தேசிய பட்டத்தை அவர் வென்றார். அப்போது அவருக்கு 13 வயது.
தந்தை காட்டிய வழி

1992-ல் டென்னிஸ் உலக இளையோர் கோப்பைக்கான போட்டி நடந்தது. அதில் இந்தியா சார்பாகப் பங்கேற்க நிருபமாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். பொதுத் தேர்வு நேரம் என்பதால் எதற்கு முக்கியத்துவம் தருவது எனப் புரியாமல் நிருபமா தவித்தார். ஆனால், அவருடைய தந்தையோ, ‘முதலில் விளையாடு; பிறகு படித்துக்கொள்ளலாம்’ என வழிகாட்டினார். சிறு வயதிலிருந்தே டென்னிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் அவரது வளர்ச்சிக்கு வித்திட்டது.
ஜூனியர் பிரிவில் மட்டும் 35 ஒற்றையர் ஆட்டங்களிலும் 26 இரட்டையர் ஆட்டங்களிலும் இந்தியாவுக்காக நிருபமா விளையாடியிருக்கிறார். இவற்றில் தாய்லாந்தில் 1993-ல் நடந்த ஐ.டி.எஃப். (இண்டர்நேஷனல் டென்னிஸ் ஃபெடரேஷன்) பெண்கள் ஒற்றையர் பட்டத்தை நிருபமா வென்றிருக்கிறார். அதே ஆண்டில் இந்தியா, வங்கதேசம், இலங்கையில் நடந்த டென்னிஸ் தொடர்களிலும் நிருபமா ஜொலித்தார்.
மூன்று தங்கம்

1994 அவருக்கு மறக்க முடியாத ஆண்டு. வெளிநாட்டில் பயிற்சி மேற்கொண்டு திரும்பிய நிருபமா, தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார். அந்த ஆண்டு ஐரோப்பா டூர் தொடரில் ஆசிய அணியின் சார்பாக அவர் விளையாடினார். 1995-ல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டி, அவரது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது. டென்னிஸ் பிரிவில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற நிருபமா ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளிலுமே சிறப்பாக விளையாடி மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். அதன் மூலம் டென்னிஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் முன்னேறினார். நிருபமாவின் டென்னிஸ் வாழ்க்கையில் இது முக்கிய மைல்கல்.
நாடே கொண்டாடிய சாதனை

டென்னிஸில் கொடிகட்டிப் பறக்கும் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் பெற வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஏதாவது ஒரு போட்டியில் வென்றாலே அது மிகப் பெரிய சாதனைதான். 1998-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நிருபமாவும் பங்கேற்றார். ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இத்தாலியின் குளோரியா பிஷ்ஷிசினியை நிருபமா தோற்கடித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியைப் பொறுத்தவரை இது சாதாரண வெற்றிதான். ஆனால், இந்தியாவில் அந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் சுற்றுப் போட்டி ஒன்றில் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பு நிருபமாவுக்குக் கிடைத்தது.
அதே ஆண்டு இன்னொரு முக்கியமான வெற்றியையும் நிருபமா வசப்படுத்தினார். அப்போது பாங்காங்கில் ஆசியப் போட்டிகள் நடைபெற்றன. அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் கைகோத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். தொடர்ச்சியாக டென்னிஸில் வளர்ந்துவந்த நிருபமா, 2002-ல் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஒதுங்கினார்.
தொடரும் பயணம்

ஓய்வு பெறும்வரை, இந்திய மகளிர் டென்னிஸில் நம்பர் ஒன் வீராங்கனையாகவே நிருபமா நீடித்தார். டென்னிஸிலிருந்து அவர் முழுமையாக வெளியேறிவிட்டார் என்ற நினைத்தவேளையில் 2010-ல் டெல்லி காமன்வெல்த் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். அதன் பிறகு சீனாவில் குவாங்ஸு நகரில் நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் விளையாடினார். தாயான பிறகு காமன்வெல்த் போட்டியிலும் ஆசியப் போட்டியிலும் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் நிருபமா பெற்றார்.
அவரது டென்னிஸ் வாழ்க்கையில் 180 ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடி இரண்டு ஐ.டி.எஃப். பட்டங்களையும் 106 இரட்டையர் ஆட்டங்களில் விளையாடி 10 ஐ.டி.எஃப். பட்டங்களையும் வென்றிருக்கிறார். 1998-ல் ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் ஆட்டத்தில் 2-வது சுற்றுக்கும், 2001-ல் பிரெஞ்சு ஓபன் இரட்டையர் ஆட்டத்தில் 2-வது சுற்றுக்கும் முன்னேறியது இவரது சிறந்த கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகக் கருதப்படுகிறது.
அதன் பிறகு டென்னிஸிலிருந்து விலகியவர் அமெரிக்காவில் செட்டிலானார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘மூன் பாலர்’ என்ற நூலை எழுதினார். வளரும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்காக இதை எழுதினார். நேரம் கிடைக்கும்போது விம்பிள்டன், அமெரிக்க ஓபன், சென்னை ஓபன் போட்டிகளில் வர்ணனையும் செய்திருக்கிறார். தற்போது 41 வயதாகும் நிருபமா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டென்னிஸ் அகாடமி ஒன்றை நிறுவிப் பயிற்சி அளித்துவருகிறார்.
(வருவார்கள் வெல்வார்கள்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#12
பளு தூக்கிய பிதாமகள்!ணிப்பூர் மாநிலத்திலிருந்து ஏராளமானோர் விளையாட்டுத் துறையில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். 1980-களில் நூற்றுக்கணக்கான இளம் வீரர்களும் வீராங்கனைகளும் மணிப்பூரிலிருந்து தேசிய அளவிலான விளையாட்டுகளில் காலடி எடுத்துவைத்தனர். அவர்களில் சர்வதேச அளவில் தனது வெற்றிக்கொடியை உயரப் பறக்கவிட்டவர் குஞ்சராணி தேவி.


பளு தூக்குதலில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், பளு தூக்குதலில் இந்தியாவின் முகமாக நீண்ட காலம் ஜொலித்தவர்.
வித்திட்ட விளையாட்டு

இம்பாலில் பிறந்த குஞ்சராணி தேவிக்குச் சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம். கால்பந்து, தடகளம் போன்றவை பிடித்தமானவை. நேரம் கிடைக்கும்போது, அருகில் உள்ள மையங்களுக்குச் சென்று பளு தூக்குவதை விளையாட்டாகச் செய்துவந்தார். பல விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த குஞ்சராணிக்குத் திடீரெனப் பளு தூக்குதலில் ஈர்ப்பு அதிகமானது. ஒரு கட்டத்தில் பிற விளையாட்டுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பளு தூக்குதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
குஞ்சராணி பளு தூக்கி விளையாடியது வீண் போகவில்லை. பள்ளி வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பே மணிப்பூரில் புகழ்பெறும் அளவுக்குப் பளு தூக்குதலில் முன்னேறியிருந்தார். குஞ்சராணிக்கு 17 வயதானபோது 1985-ல் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் களமிறங்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் போட்டியிலேயே பதக்கங்களை அள்ளினார். 44 கிலோ, 46 கிலோ, 48 கிலோ எடைப் பிரிவுகளில் பங்கேற்று இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றினார்.
அழுத்தமான சாதனை

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு அவரது பளு தூக்கும் பயணம் புதிய பாதையில் விரிந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் பங்கேற்ற பெரும்பாலான பளு தூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைத் தன்வசமாக்கினார். 1987-ல் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய பளு தூக்கும் போட்டியில் அதிகபட்ச எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையைப் படைத்தார். தேசிய அளவில் அவர் நிகழ்த்திய சாதனைகளும் பெற்ற பதக்கங்களும் சர்வதேசப் போட்டியில் அவர் பங்கேற்க உறுதுணையாயின. முதன்முறையாக 1989-ல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் குஞ்சராணி பங்கேற்றார். இந்தத் தொடரில் மூன்று விதமான எடைப் பிரிவுகளில் பங்கேற்றவர் மூன்றிலுமே வெள்ளிப் பதக்கங்களை வென்று முதல் முறையிலேயே அசத்தினார்.
இதன் பிறகு 1993-ம் ஆண்டைத் தவிர தொடர்ச்சியாக ஏழு முறை உலக மகளிர் பளு தூக்கும் போட்டியில் குஞ்சராணி பங்கேற்றிருக்கிறார். இந்தத் தொடர்களில் பதக்கம் பெறாமல் அவர் நாடு திரும்பியதே இல்லை. ஆனால், எல்லாப் போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தங்கம் வெல்லாவிட்டாலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்ற வெள்ளிப் பதக்கங்கள் அவரது பளு தூக்கும் பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.


சர்வதேச வெற்றி

உலகப் பளு தூக்கும் போட்டிகள் மட்டுமல்ல; ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் வெண்கலப் பதக்கங்களோடு திருப்தியடைய வேண்டியிருந்தது. 1990 (பெய்ஜிங்), 1994 (ஹிரோஷிமா) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற குஞ்சராணி, 1998-ல் பதக்கம் வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பினார். ஆசிய விளையாட்டுப் போட்டி ஏமாற்றினாலும் ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி அவரை ஏமாற்றவில்லை. 1989-ல் (ஷாங்காய்) ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் 1991-ல் (இந்தோனேசியா) மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் குஞ்சராணி வென்றார். 1995-ல் (தென் கொரியா) 46 கிலோ எடைப் பிரிவில் இரண்டு தங்கங்களை வென்ற அவர், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். 1996-ல் (ஜப்பான்) இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதங்கங்களை வென்று ஆசிய அளவில் தன் பலத்தை நிரூபித்தார்.
விளையாடத் தடை

1990-களின் இறுதிவரை பளு தூக்கும் போட்டிகளில் ஜொலித்துவந்த குஞ்சராணிக்குப் புத்தாயிரம் ஆண்டு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் அவரது பளு தூக்கும் வாழ்க்கையில் சறுக்கலாக ஒரு நிகழ்வு நடந்தேறியது. 2001-ல் தென் கொரியாவில் நடைபெற்ற சீனியர் ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ஆனால், அந்தத் தொடரின்போது அவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டீராய்டை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வென்ற பதக்கம் பறிக்கப்பட்டது. பளு தூக்கும் போட்டியில் அவர் பங்கேற்க சர்வதேசப் பளு தூக்கும் கூட்டமைப்பு ஆறு மாதங்களுக்குத் தடைவிதித்தது. பளு தூக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்ச்சியாகப் பெருமை தேடித்தந்த குஞ்சராணியின் வாழ்க்கையில் இது ஒரு கரும்புள்ளி.

நிறைவேறாத கனவு

ஆனால், அந்தத் தடை அவரைப் பளு தூக்குதலில் இருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. தடை நீங்கிய பிறகு மீண்டும் களமிறங்கியவர், தேசிய அளவில் முன்னைப் போலவே ஜொலித்தார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆனால், ஒலிம்பிக்கில் அவர் விட்ட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் கழித்து காமன்வெல்த் போட்டியில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
2006-ல் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 166 கிலோ பளுவைத் தூக்கிப் புதிய உலக சாதனையைப் படைத்தார். அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனது ஃபார்மை நிரூபித்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குஞ்சராணி வென்றிருந்தாலும் ஒலிம்பிக் பதக்கத்தை மட்டும் அவரால் வெல்ல முடியவில்லை. பதின் பருவத்தில் தொடங்கிய அவரது விளையாட்டுப் பயணம் 43 வயதில் முடிவுக்கு வந்தது. பளு தூக்குதலில் சிறப்பாகச் செயல்பட்ட குஞ்சராணி தேவிக்கு 1990-ல் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 1996-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கே.கே. பிர்லா ஸ்போர்ட்ஸ் விருதும் 2011-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
தற்போது குஞ்சராணி தேவி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டர் ரேங்கில் பணிபுரிந்துவருகிறார். அவ்வப்போது இந்திய மகளிர் பளு தூக்கும் அணியின் பயிற்சியாளாராகவும் பணியாற்றிவருகிறார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#13
தீபா என்றால் தன்னம்பிக்கை


அப்போது அந்தப் பெண்ணுக்கு 28 வயது. இனி, தன் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிவிடும் என அவர் நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது.
முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு மேற்கொள்ளப்பட அறுவை சிகிச்சைக்குப் பிறகு இடுப்புப் பகுதிக்குக் கீழே உறுப்புகள் செயலிழந்தன. அதைச் சரிசெய்ய மூன்று அறுவை சிகிச்சைகள், 183 தையல்கள் என அவரது உடல் ரணப்பட்டது.


வாழ்க்கையை மாற்றிய விபத்து
இத்தனை சிகிச்சைக்குப் பிறகும் அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. சக்கர நாற்காலியே கதியானது. இந்தத் திடீர் முடக்கம் அவரது தன்னம்பிக்கையை முடக்கவில்லை. தனக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை அவர் உயரப் பறக்கவிட்டிருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்ற தீபா மாலிக்தான் அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.
ஹரியாணாவைச் சேர்ந்த தீபா மாலிக், திட்டமிட்டு விளையாட்டு வீராங்கனையானவர் அல்ல. உடலில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு ஓரிடத்திலேயே முடங்கிப் போய்விடாமல் இருப்பதற்காகத் தனக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வரவே விளையாட்டு வீராங்கனையானார்.
தீபா மாலிக், ராணுவ வீரர் விக்ராம் சிங் மாலிக்கை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்துவந்தவர்தான். 1999-ல் அவருக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டது. முதுகு தண்டுவடக் கட்டியால் அவர் அவதிப்பட்டபோது, அவருடைய கணவர் கார்கில் போரில் ஈடுபட்டிருந்தார். மகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தக் கடுமையான தருணங்களிலிருந்து மீண்டுதான் இன்று விளையாட்டில் முத்திரை பதித்திருக்கிறார் தீபா மாலிக்.
36 வயதினிலே
உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவதற்கு முன்பே நீச்சல், தடகளம், சவால் நிறைந்த பயணம் போன்றவற்றில் தீபா ஈடுபட்டிருந்தார். இவற்றையெல்லாம் குடும்ப வாழ்க்கை கட்டிப்போட்டிருந்தாலும் சக்கர நாற்காலி வாழ்க்கை அவரது மனத்தைப் பெரிய அளவில் பாதித்தது. அதிலிருந்து மீண்டுவர தீபா விரும்பினார். தனக்குப் பிடித்த நீச்சல், தடகளம், சாகச கார் பயணம் போன்றவற்றில் ஈடுபட முடிவுசெய்தார். அதற்கு அவருடைய கணவரும் துணை நின்றார். பாரா விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கியபோது அவருக்கு 36 வயது. பொதுவாக, விளையாட்டு வீராங்கனைகள் ஓய்வை அறிவிக்கும் வயதில்தான் தீபா விளையாட்டில் காலடி எடுத்துவைத்தார்.

வரலாற்றுச் சாதனை
தன் திறமையை நிரூபிக்க வயதைப் பொருட்படுத்தாமல் மாவட்ட, மாநில அள விலான போட்டிகளில் ஈடுபடத் தொடங்கினார். குண்டெறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் ஆகியவற்றில் தேசிய அளவில் விளையாடினார். தேசிய அளவில் செய்த சாதனைகள் அவரை, சர்வதேசப் போட்டிகளுக்குச் அழைத்துச் சென்றன. 2011-ல் நியூசிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார். குண்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டி அவரது திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. குண்டெறிதல் எப்.53 பிரிவில் பங்கேற்ற தீபா, பஹ்ரைன், கிரீஸ் வீராங்கனைகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிகழ்த்தினார்.
2011-12-ம் ஆண்டில் உலகத் தரவரிசைப் பட்டியலில் குண்டெறிதலில் இரண்டாம் இடத்தையும் ஈட்டி எறிதல், வட்டெறிதலில் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினார். அதே ஆண்டில், ஆசிய தரவரிசைப் பட்டியலில் குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல் மூன்றிலுமே முதல் இடத்தைப் பிடித்து அவர் சாதனை படைத்தார். வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் என மூன்று வகையான போட்டிகளில் ஈடுபட்டுத் தேசிய அளவில் 45 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை தீபா வென்றிருக்கிறார். இதே போட்டிப் பிரிவுகளில் சர்வதேச அளவில் 13 பதக்கங்களையும் குவித்துள்ளார்.
புதிய பாதையில் பயணம்
தீபா மாலிக், மோட்டார் பைக் பிரியை. இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிவருபவர். கார் பந்தயத்திலும் ஆர்வம்கொண்டவர். மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் ஹிமாலயன் மோட்டார் ரேஸில் இவர் பங்கேற்றிருக்கிறார்.
இந்தியாவிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் இது. பாலைவனம் தொடங்கி இமயமலைவரை சுமார் 1,700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட, சவால்களும் ஆபத்தும் நிறைந்த பந்தயம் இது. கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்திலும் கார் ஓட்டக்கூடிய பாதை இது. இந்த கார் பந்தயத்திலும் தீபா கலந்துகொண்டு சாதனை படைத்திருக்கிறார். இவருக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கார்களில்தான் பங்கேற்கிறார்.
மோட்டார் பிரியையான இவர் ‘ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ இந்தியா அமைப்பிடமிருந்து சிறப்பு லைசென்ஸ் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனையும்கூட. 2008-ல் யமுனை ஆற்றில் எதிர் நீரோட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீச்சலடித்து லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.
இது போல நான்கு முறை லிம்கா சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 2011-ல் இந்தியாவின் உயரமான ஒன்பது இடங்களை ஒன்பது நாட்களில் கடந்த முதல் மாற்றுத் திறனாளிப் பெண் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். 2013-ல் அதிகத் தொலைவு பயணம் செய்த மாற்றுத் திறனாளிப் பெண் (சென்னை - டெல்லி 3,278 கி.மீ.) என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.
2012-ல் மத்திய அரசு தீபா மாலிக்குக்கு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனையும் இவர்தான். 2017-ல் பத்ம விருதையும் இவர் பெற்றார். தற்போது 47 வயதாகும் தீபா மாலிக் அடுத்தடுத்த பாரா போட்டிகளில் களமிறங்கிப் பதக்கங்கள் வெல்ல உழைத்துக்கொண்டிருக்கிறார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#14
தொடுபுழா எக்ஸ்பிரஸ்


முப்பது ஆண்டுகளுக்கு முன் கேரளத்திலிருந்து தடகள வீராங்கனைகள் பலர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தனர். அவர்களில் ஷைனி வில்சனும் ஒருவர். 1992-ல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவர் இவர்.
நிற்காத ஓட்டம்

கேரள மாநிலம் தொடுபுழாவில் பிறந்த ஷைனிக்குச் சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம். அவர் ஏழாம் வகுப்பு படித்தபோது, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்குத் திரும்பினார் ஷைனி. அதைப் பார்த்த அவருடைய பெற்றோர் பூரிப்படைந்தார்கள். உடனே ஷைனியைக் கோட்டயத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
கேரளத்தில் பல்வேறு விளையாட்டுப் பயிற்சி மையங்களில் ஷைனி பயிற்சி பெற்றுத் திறமையை வளர்த்தெடுத்தார். இவர் பயிற்சிபெற்ற அதே காலகட்டத்தில்தான் பி.டி. உஷா, வல்சம்மா போன்ற தடகள வீராங்கனைகளும் பயிற்சிபெற்றார்கள். பி.டி. உஷாவோடு சேர்ந்துதான் ஷைனியின் கால்களும் மைதானங்களில் ஓடத் தொடங்கின.
சர்வதேசக் கவனம்
பல்வேறு தேசியத் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஷைனி 1981-ல் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய தடகள சாம்பியனாக உருவெடுத்திருந்தார். அந்தப் பெருமையோடு 1982-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது பயணத்தை ஷைனி தொடங்கினார். 1984-ல் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி தடகளத்தில் அரையிறுதிவரை முன்னேறி கவனத்தை ஈர்த்தது. அந்தக் குழுவில் ஷைனியும் இடம்பெற்றிருந்தார்.
1985-ல் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி ஷைனியின் வாழ்க்கையில் மைல்கல். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஷைனி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். ஷைனியின் ஆகச் சிறந்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. தடகளத்தில் தொடர்ந்து முத்திரை பதித்துவந்த அவர், 1986-ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அவரால் தகுதி பெற முடியாமல் போனது.
தடையில்லா வெற்றி
விளையாட்டில் முத்திரை பதித்துவந்த தருணத்திலேயே அவர் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். நீச்சல் வீரர் வில்சனை 1988-ல் கரம்பிடித்தார். இருவருமே விளையாட்டுத் துறையில் இருந்ததால் திருமண வாழ்க்கை ஷைனியின் தடகள வாழ்க்கைக்குத் தடையாக இல்லை. தொடர்ந்து பயிற்சிகளுக்குச் சென்றுவந்தார். திருமணமான ஓராண்டுக்குள்ளாகவே 1989-ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று மூன்று பதக்கங்களை ஷைனி கைப்பற்றினார்.
இதே போல 1990-ல் அவருக்குக் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்த நிலையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதைத் தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்று ஓடினார். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்து மூன்றாவது மாதமே அவர் பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்ததுதான். திருமணமோ குழந்தையோ உடல்நிலையோ அவரது தடகள வாழ்க்கையைக் கொஞ்சமும் அசைத்துப் பார்க்கவில்லை. குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் அவரால் ஜொலிக்க முடிந்தது.

1992-ல் ஷைனியின் தடகள வாழ்க்கையில் பரவசமான நிகழ்வு அரங்கேறியது. அந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு ஷைனிக்குக் கிடைத்தது. தடகள அணியின் கேப்டனாகத் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பு ஷைனியின் வசமானது. 1995-ல் சென்னையில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது குழந்தை பிறந்த சில மாதங்களில் இந்தப் போட்டியில் பங்கேற்றார்.
800 மீட்டர் தூரத்தை 1:59:85 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். 1996-ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிதான் அவர் பங்கேற்ற மிகப் பெரிய கடைசித் தொடர். அதே ஆண்டில் சென்னையில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஷைனி.
15 ஆண்டுகள் நீடித்த அவரது தடகளப் பயணத்தில் 75-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கம் வெல்லாவிட்டாலும் ஆசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்திருக்கிறார். ஷைனியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் 1984-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதையும் 1998-ல் பத்மஸ்ரீவிருதையும் வழங்கிக் கவுரவித்தது.
தற்போது 53 வயதாகும் ஷைனி வில்சன், இந்திய உணவுக் கழக அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். கடினமான விளையாட்டுத் துறையில், பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்த வெகுசிலரில் தடகள வீராங்கனை ஷைனி வில்சனுக்கும் இடமுண்டு.
(வருவார்கள் வெல்வார்கள்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#15
தேசிய விளையாட்டின் சாதனை மகள்


அந்தச் சிறுமியின் அம்மாவுக்குத் தன் மகள் ஹாக்கியில் கோலோச்ச வேண்டும் என்பது தீராத ஆசை. ஆனால், எப்போதும் பரபரவென ஓடிக்கொண்டே, பந்தைத் துரத்திக்கொண்டே தனது மகள் ஓடுவதை அவர் விரும்பவில்லை. பாதுகாப்பாக ஹாக்கியை விளையாட வேண்டும் என்றும் அந்தச் சிறுமியின் அம்மா நினைத்தார். அதற்கு ஒரே வழி தன் மகளை கோல் கீப்பராக ஆக்குவதுதான் என்று முடிவெடுத்தார்.
அதன்படியே அந்தச் சிறுமியும் ஹாக்கி கோல் கீப்பராக உருவெடுத்தார். அவர், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வெற்றிக்கரமான கோல் கீப்பர்களில் ஒருவராக வலம்வந்த ஹெலன் மேரி.

கேரளத்தில் பிறந்த ஹெலன் மேரி, சிறு வயதிலேயே வீதியில் ஹாக்கி விளையாடத் தொடங்கிவிட்டார். பெரும்பாலும் சிறுவர்களுடன் சேர்ந்துதான் ஹாக்கி விளையாடினார். ஹாக்கி மீதான விருப்பமும் ஈர்ப்பும் அதைத் தொடர்ந்த கடின உழைப்பும் விரைவாகவே அவரைச் சிறந்த வீராங்கனையாக அடையாளம் காட்டியது.
கேரளத்தில் பிறந்திருந்தாலும், ஹெலனின் ஹாக்கி வாழ்க்கை பெங்களூருவில்தான் தொடங்கியது. விரைவில் அவருக்கு கர்நாடக ஹாக்கி அணியில் இடம் கிடைத்தது. அவரது உயரமும் பந்தைத் தடுக்கும் லாவகமும் தேசிய ஹாக்கி தேர்வாளர்களைக் கவர்ந்தன. 15 வயதிலேயே இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். மிக இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்த வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.
முதல் தொடர்
தேசிய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் குழுவில் சேர்த்துக்கொள்ளப்படாமல் புதுமுக ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் பெஞ்சில் அமர வைக்கப்படுவார்கள். அதுவும் ஜூனியர் என்றால் ஆடும் வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். ஹெலனுக்கு இது போன்ற இடர்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை. 1992-ல் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜெர்மனிக்குச் சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
அந்தத் தொடரிலேயே இந்திய அணியின் கோல் கீப்பராக ஹெலன் மேரி அறிமுகமானார். எப்போதும் ஹாக்கி அணிக்கு இரண்டு கோல் கீப்பர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலும் எல்லாத் தொடர்களிலும் இரண்டு கீப்பர்களில் ஒருவராக ஹெலன் மேரியும் இடம்பிடித்துவந்தார்.
1992 முதல் அவர் ஹாக்கி விளையாடிவந்தாலும், 2002-ல்தான் ஹெலன் மேரிக்கு முதல் சர்வதேசப் பதக்கம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் சேலஞ்ச் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அதுவே அவரது முதல் சர்வதேசப் பதக்கம்.
தடுப்பால் கிடைத்த தங்கம்
அதே ஆண்டில், மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாகத் தங்கப் பதக்கம் வென்று, மற்றுமொரு முக்கியமான சாதனையை இந்திய மகளிர் ஹாக்கி அணி படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், சவாலான கோணத்தில் இங்கிலாந்து அணி வீராங்கனையால் அடிக்கப்பட்ட ஒரு கோலை ஹெலன் மேரி தடுத்ததால்தான் இந்திய அணியின் அந்த வெற்றி உறுதியானது.
சர்வதேச அங்கீகாரம்
ஆப்ரோ - ஆசிய விளையாட்டுப் போட்டி, 2003-ல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டிவரை ஹாக்கி அணி முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் பலம்மிக்க தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. தென் ஆப்பிரிக்க அணியைவிட சற்றுப் பலவீனமாக இருந்த இந்திய அணி பதக்கம் வெல்வது கேள்விக்குறியாகவே இருந்தது.
ஹெலன் மேரியின் உத்வேகம் அளிக்கும் ஆட்டம், மற்ற வீரர்களையும் தொற்றிக்கொண்டதால் அந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் ஹெலன் மேரி என்றால் அது மிகையல்ல.

வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் அந்தத் தொடரின் இறுதியாட்டம் நீடித்தது. ஆட்டத்தின் இறுதியில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால், பெனால்டி மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பில் தென் ஆப்பிரிக்க அணி அடித்த இரண்டு கோல்களை அநாயாசமாகத் தடுத்தார் ஹெலன் மேரி. இந்திய அணியின் வெற்றிக்கு அவரது கோல் தடுப்பே காரணம். இந்தத் தொடர் ஹெலனின் புகழைச் சர்வதேச அளவுக்கு எடுத்துச் சென்றது.
வலியை மீறிப் பெற்ற வெற்றி
2004-ல் டெல்லியில் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. ஆசியக் கோப்பை இறுதியாட்டத்தில் ஹெலன் மேரிக்குக் கைவிரலில் முறிவு ஏற்பட்டது. பொதுவாக, எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, முழு உடற்தகுதியோடு இருந்தால் மட்டுமே விளையாட முடியும். ஆனால், வலியை மீறி வலி நிவாரணி மருந்து ஐஸ் ஒத்தடத்துடன் ஹெலன் தொடர்ந்து விளையாடினார்.
அந்தப் போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஜப்பான் வீராங்கனைகள் வெளிப்படுத்தினர். ஹெலன் அதை வலியுடனும் நாடு ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் சமாளித்தார். இந்திய அணியும் தங்கப் பதக்கம் வென்றது. ஆசியக் கோப்பையில் ஹெலன் மேரி பெற்ற முதல் தங்கப் பதக்கம் அதுவே. வலியைத் தாண்டி, தன்னம்பிக்கையுடன் ஹெலன் வெளிப்படுத்திய அந்த ஆட்டம் இன்றும் புகழப்படுகிறது.
ஓய்வுக்குப் பின்
கோல் கீப்பராக மட்டுமல்லாமல், சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் ஹெலன் மேரி இருந்துள்ளார். 2006-ல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருடன் ஹெலன் மேரி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 1992 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் ஹெலன் மேரி 15 சர்வதேசத் தொடர்களில் பங்கேற்றிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் அவர் தனதாக்கியுள்ளார். 2004-ல் மத்திய அரசு ஹெலன் மேரிக்கு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. 41 வயதாகும் ஹெலன் மேரி, ஹாக்கி நினைவுகளை அசை போட்டபடி ரயில்வே துறையில் தற்போது பணியாற்றிவருகிறார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.