ஆண்களின் இதயத்துக்கு ஆபத்து! - Men's heart is in risk!

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
வயதானவர்களைத் தாக்கும் நோய்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மாரடைப்பு, இன்று இளவயதுக்காரர்களிடம் இடம் பெயர்ந்திருக்கிறது. அதிலும் ஆண்களே அதிகம்.

‘ஆம்பிளைங்களுக்கென்ன... பிரச்னையா? கவலையா? வீட்டை விட்டு வெளியேறிட்டா, அவங்க உலகமே வேற... ஃபிரெண்ட்ஸ், ஊர் சுத்தல்னு பிரச்னைகளை மறக்க அவங்களுக்கு ஆயிரம் வழி...’ என்பது பொதுவான கருத்து! உண்மை நிலவரமோ வேறு... வேலையிடத்துப் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாகவும், இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

‘‘ஆமாம்’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார் பிரபல உளவியலாளர் வசந்தி பாபு. ஆண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தம், திடீரென ஏற்படுவதில்லை. அது குழந்தைப்பருவ மன அழுத்தத்தின் தொடர்ச்சி என்றும் சொல்கிற வசந்தி, இதன் பின்னணியை விளக்குகிறார்...‘‘தாழ்வு மனப்பான்மை, தனிமை, குடும்பச்சூழல்னு நிறைய குழந்தைங்களுக்கு ரொம்ப சின்ன வயசுலயே மன அழுத்தத்துக்கான காரணங்கள் ஆரம்பிக்குது. ஒரே குழந்தையா வளர்றாங்க. தாத்தா, பாட்டி, அத்தை, மாமான்னு உறவுகள் தெரியாத தனித்தீவுகளா வாழறாங்க.

இன்னும் சொல்லப் போனா, அம்மா-அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தையை வளர்க்கிற சூழலே மாறி, சிங்கிள் பேரன்ட் எண்ணிக்கை அதிகமாயிட்டிருக்கு. கூடப் பிறந்தவங்களோ, நண்பர்களோ, உறவுகளோ சூழ வளரும் வாய்ப்பு கிடைக்கிற பிள்ளைங்க தப்பிச்சிடறாங்க. இன்னொரு பக்கம் விளையாட வேண்டிய வயசுல, அதை ஊக்கப்படுத்தாம, தன்னோட அந்தஸ்து, கவுரவம், ஆசைகளுக்காக அந்த வகுப்பு, இந்த வகுப்புன்னு 24 மணி நேரமும் குழந்தைங்களை பிசியா வைக்கிற பெற்றோர்கள் பெருகிட்டாங்க.

செயற்கையான மனிதர்களுக்கு மத்தியில, செயற்கையான சூழல்ல அந்தப் பிள்ளை வளர வேண்டிய கட்டாயம். சந்தோஷத்தையோ, சோகத்தையோ பகிர்ந்துக்க ஆள் இல்லாத அவலம்... அங்கே ஆரம்பிக்கிற மன அழுத்தம், குழந்தைங்க வளர வளர, தானும் சேர்ந்து வளர்ந்து, ஸ்கூல், காலேஜ்ல கூடவே வந்து, 30 வயசுல விஸ்வரூபம் எடுக்குது. இந்தக் காலத்து இளைஞர்கள் வெற்றியையோ, சாதனையையோ விரட்ட நினைக்கிறதில்லை. பணம்தான் அவங்களோட ஒரே லட்சியம். தன் நண்பனோ, சக ஊழியரோ வச்சிருக்கிற காஸ்ட்லியான மொபைல், டூ வீலரை உடனே தானும் வாங்கியாகணும், தன்னோட கேர்ள் ஃபிரெண்ட்கிட்ட நல்ல பேர் வாங்க நிறைய சம்பாதிச்சு, அதைவிட அதிகமா செலவழிக்கணும்... வாரக்கடைசின்னா பார்ட்டி போகணும்.

பார்ட்டியில கலந்துக்கிறவங்களோட லட்சணங்களான எல்லா தவறுகளையும் தானும் செய்யணும். ராத்திரியெல்லாம் தூங்காம முழிச்சிருந்து, மத்தவங்க விழிக்கிற நேரம் தூங்கறதும், கண்ட நேரத்துல சாப்பிடறதும், உடற்பயிற்சியே இல்லாததுமா புது வாழ்க்கை முறைக்கு மாறிட்டிருக்காங்க. இப்படி இயற்கைக்கு மாறாக, இன்றைய இளைஞர்கள் செய்யற ஒவ்வொரு விஷயமுமே அவங்க உடல் மற்றும் மன நலத்துக்குப் பெரிய பாதிப்பு...’’ என்கிற வசந்தி, சமீபத்தில் தான் கண்டு மிரண்ட ஒரு சம்பவத்தை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ஒரு பள்ளிக்கூட வாசல்... குழந்தைங்களை ஏத்திட்டு வெளியே வரிசையா வேன் வருதுங்கிறதால, எதிர்ல டூவீலர்ல வந்த 21 வயசு இளைஞரை கொஞ்ச நேரம் வெயிட் பண்ணச் சொன்னார் ஸ்கூல் வாட்ச்மேன். அந்த இளைஞனுக்கு வந்ததே கோபம். வண்டியை நிறுத்திட்டு, பாய்ஞ்சு வந்து, வாட்ச்மேனை அறைஞ்ச அந்தக் காட்சி என்னை மிரள வச்சது. அஞ்சு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாத அளவுக்கு அந்த இளைஞனுக்கு அப்படி என்ன டென்ஷன்? தோண்டித் துருவிப் பார்த்தா, அவனுக்கு வேலையிடத்துல ஏதாவது அவசரமா இருக்கலாம். ப்ராஜெக்ட்டை முடிக்கலைன்னு அவனோட பாஸ் திட்டியிருக்கலாம். இப்படித்தான் இருக்காங்க இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் பலரும்...

புதுசா கல்யாணமான ஜோடி நிறைய பேர் ரெண்டு பேருக்குள்ளயும் பிரச்னைன்னு என்கிட்ட ஆலோசனைக்காக வராங்க. முதல்ல பையன்கிட்ட பேசுவேன். ‘பேசிப் பாருங்க மேடம்... எப்படியாவது சேர்ந்து வாழ அட்வைஸ் பண்ணுங்க’ன்னு சொல்வாங்க. அடுத்து அந்தப் பெண்கிட்ட பேசினா, ‘இது சரியா வராது மேடம்... வெட்டி விட்ருங்க’ம்பாங்க. ‘அவன் ஏமாத்திட்டான்’னு சொல்லிட்டிருந்த காலம் மாறி, இன்னிக்கு ‘அவ ஏமாத்திட்டா’ன்னு சொல்றது அதிகமாயிடுச்சு. காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. வருத்தமான விஷயம்னாலும் சொல்லித்தான் ஆகணும்.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க. இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 பிளஸ்ல ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துது’’ என்கிற வசந்தி, தீர்வுகளாக சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

தனிமையைத் தவிருங்க. அம்மா, அப்பா, ஃபிரெண்ட்ஸ் - இப்படி யார்கிட்டயாவது தினமும் கொஞ்ச நேரம் மனசு விட்டுப் பேசுங்க. பணத்துக்குப் பின்னாடி ஓடற வாழ்க்கையிலேருந்து விலகி இருங்க. பணத்தை விரட்ட, உங்க சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டுத் திணறாதீங்க. எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேலையை மட்டும் செய்யப் பழகுங்க. பிடிச்ச நபர்கள்கூட இருக்கிறது, பிடிச்ச வேலையைச் செய்யறது, பிடிச்ச இடத்துல இருக்கிறதுன்னு உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிற விஷயங்களைச் செய்யுங்க.
சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி ரொம்பவே முக்கியம்.

பாசிட்டிவான மனப்பான்மையை வளர்த்துக்கோங்க. எப்பேர்ப்பட்ட பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கும். அது என்னங்கிறதைக் கண்டுபிடியுங்க. பிரச்னைகளைப் பகிர்ந்துக்க ஆளே இல்லையா? மனநல ஆலோசகர்களை நாடுங்க. உங்களோட பிரச்னைக்கு, நீங்க யோசிக்காத ஒரு கோணத்துல அவங்க தீர்வு சொல்வாங்க. அது உங்களுக்கு மன உறுதியையும், நம்பிக்கையையும் தரும்.


நன்றி-தினகரன்
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
​Migavum nalla thagaval.......Guna. Ellarume ivatrai kadai pidikalaam
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.